Must Watch
அடி
‘ஜீ 5’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘அடி’. திருமணத்தைப் பதிவு செய்துவிட்டு மனைவி கீதிகாவுடன் காரில் பயணித்துக்கொண்டிருக்கிறார் சஜீவ். தாலி கட்டுதல், திருமண வரவேற்பு என நிறைய நிகழ்வுகள் காத்திருக்கின்றன. இந்நிலையில் சஜீவ்வின் காரின் மீது மோதுவதைப் போல இரு சக்கர வாகனத்தில் வருகின்றனர் ஜோபியும், அவனது நண்பனும். காரை நிறுத்திவிட்டு, அவர்களை நோக்கி சத்தம் போடுகிறான் சஜீவ். கோபமடையும் ஜோ காரை நோக்கி வந்து கீதிகாவின் முன்பு சஜீவை அடித்துவிடுகிறான்.
 அடிபட்ட சஜீவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறான். திருமண நிகழ்வுகள் நடக்கின்றன. ஆனால், அந்த அவமானத்திலிருந்து சஜீவ்வால் வெளியேற முடியவில்லை. ஜோபியைப் பழிவாங்கக் கிளம்புகிறான் சஜீவ். ஜோபிக்கும் சஜீவ்விற்கும் இடையிலான பிரச்னை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதே மீதிக்கதை.
 இரண்டு ஆண்களுக்கு இடையிலான பிரச்னையை ஒரு பெண் எப்படி லாவகமாக தீர்த்து வைக்கிறாள் என்பதை நன்றாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப்படம். சஜீவ்வாக சைன் டாம் சாக்கோ வித்தியாசமான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். படத்தின் இயக்குநர் பிரசோப் விஜயன்.
ஹாய் நான்னா
‘நெட்பிளிக்ஸி’ல் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் தெலுங்குப் படம், ‘ஹாய் நான்னா’. தமிழிலும் பார்க்க கிடைக்கிறது. மும்பையில் பிரபலமான ஃபேஷன் போட்டோகிராபராக வலம் வருகிறார் விராஜ். அவருக்கு ஆறு வயதில் மகி என்ற மகள் இருக்கிறாள். விராஜின் மனைவி அவர்களுடன் இல்லை. கடுமையான நோயினால் அவதிப்படுகிறாள் மகி. தினமும் ஒரு கதையைச் சொல்லி மகியை உறங்க வைக்கிறான் விராஜ். அம்மாவைப் பற்றிய கதையைக் கேட்டுக்கொண்டே இருக்கிறாள் மகி.
முதல் ரேங்க் எடுத்தால் அம்மாவைப் பற்றிய கதையைச் சொல்கிறேன் என்று மகியிடம் சொல்கிறான் விராஜ். மகியும் முதல் ரேங்க் எடுத்து அம்மாவின் கதையைக் கேட்க ஆவலுடன் இருக்கிறாள். ஆனால், கதையைச் சொல்லாமல் ஏமாற்றிவிடுகிறான். இந்நிலையில் வெளியே செல்லும் மகி, வீடு திரும்புவதில்லை. மகியைத் தேடிச் செல்கிறான் விராஜ். ஒரு ஆபத்திலிருந்து மகியைக் காப்பாற்றி தன்னுடன் வைத்திருக்கிறாள் இளம் பெண் யஷ்னா.
சில நிமிடங்களிலேயே யஷ்னாவும் மகியும் நண்பர்களாகிவிடுகின்றனர். யார் இந்த யஷ்னா, விராஜ் மகிக்கு அம்மாவின் கதையைச் சொன்னானா... போன்ற கேள்விகளுக்கு நெகிழ்ச்சியாக பதில் தருகிறது ‘ஹாய் நான்னா’. நெகிழ்ச்சியான இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சௌர்யவ்.
மங்களவாரம்
ஒரு வித்தியாசமான திரில்லிங் அனுபவம் வேண்டுமா? உங்களுக்காகவே ‘ஹாட்ஸ்டாரி’ல் வெளியாகியிருக்கிறது, ‘மங்களவாரம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்த தெலுங்குப் படம். மகாலட்சுமிபுரம் எனும் ஒரு கிராமத்தில் படத்தின் கதை நிகழ்கிறது. 1996ம் வருடம். அந்த கிராமத்தில் உள்ள ஒரு சுவரில் எல்லோருக்கும் தெரிந்த இரண்டு நபர்கள் கள்ளத் தொடர்பில் இருப்பதாக ஒரு தகவல் எழுதி வைக்கப்படுகிறது. அடுத்த நாள் கள்ளத்தொடர்பில் இருந்த இரண்டு பேரும் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
இதை விசாரிப்பதற்காக வருகிறார் சப்-இன்ஸ்பெக்டர் மாயா. தற்கொலை செய்துகொண்டவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக கேட்கிறார் மாயா. ஊர்த்தலைவர் மறுத்துவிடுகிறார். அது கொலையா தற்கொலையா என்ற சந்தேகம் மாயாவிற்கு எழுகிறது. அடுத்த சில நாட்களில் முன்பு நடந்ததைப் போலவே வேறு இரண்டு நபர்களைப் பற்றி சுவரில் எழுதப்படுகிறது.
அந்த இரண்டு நபர்களும் பிணமாகத்தான் கிடைக்கிறார்கள். இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை திரில்லிங்காக சொல்லியிருக்கிறது திரைக்கதை. துணிச்சலாக ஒரு பெண்ணின் பாலியல் பிரச்னையுடன், திரில்லிங்கையும் இணைத்துச் சொல்லியிருப்பது சிறப்பு. படத்தின் இயக்குநர் அஜய் பூபதி.
டைகர் 3
அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தியப் படங்களில் ‘டைகர் 3’யும் ஒன்று. ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்த இந்திப்படம்.பாகிஸ்தானின் ரகசிய திட்டங்களை உளவு பார்ப்பதற்காகச் சென்ற கோபி என்பவரை ஆப்கானிஸ்தானில் பிடித்து வைத்திருக்கின்றனர்.
கோபியை மீட்பதற்காகச் செல்கிறார் ரா அமைப்பைச் சேர்ந்த ஏஜெண்ட்டான டைகர். கோபியை மீட்கிறார் டைகர். பாகிஸ்தானின் திட்டத்தில் ஜோயாவும் பங்குபெற்றிருப்பதாக டைகரிடம் சொல்லிவிட்டு இறந்துபோகிறார் கோபி. பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ அமைப்பைச் சேர்ந்த ஏஜெண்ட்டான நாசரின் மகள்தான் ஜோயா. தனது தந்தை குண்டு வெடிப்பில் இறந்ததை நேரடியாகப் பார்த்ததிலிருந்து ஜோயாவும் ஐஎஸ்ஐ-யில் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டாள். அத்துடன் அவள் இந்திய உளவாளியான டைகரின் மனைவியும் கூட. கோபியின் மரண வாக்குமூலத்துக்குப் பிறகு மனைவி ஜோயாவையே உளவு பார்க்க ஆரம்பிக்கிறான் டைகர். சூடுபிடிக்கிறது திரைக்கதை.
லாஜிக்கை மறந்து ஆக்ஷனை மட்டுமே விரும்புபவர்களுக்கு செம விருந்து வைத்திருக்கிறது இந்தப் படம். டைகராக சல்மான் கானும், ஜோயாவாக காத்ரீனா கைப்பும் கலக்கியிருக்கின்றனர். படத்தின் இயக்குநர் மணீஷ் சர்மா.
தொகுப்பு: த.சக்திவேல்
|