விஜய்யின் ஜோடி
மீனாட்சி சவுத்ரி... இணைய வைரல் பெயர் இதுதான். இயக்குநர் வெங்கட் பிரபு - விஜய் இணையும் முதல் படமான தளபதி 68 படத்தின் பூஜை வீடியோக்கள், படங்கள் வெளியானது முதலே இணையவாசிகளின் கண்கள் மீனாட்சி சவுத்ரி மீது விழுந்துவிட்டன.  படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்தாலும் அனைவரின் கண்களுக்கும் பளிச்சென தென்பட்டவர் மீனாட்சி. படத்தில் விஜய் அப்பா - மகனாக நடிக்க இருப்பதாக பேசப்படும் நிலையில், நடிகை மீனாட்சி சவுத்ரி ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 
இந்நிலையில், யார் இந்த மீனாட்சி சவுத்ரி, இவரது பின்னணி என்ன என்று நெட்டிசன்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் தேடத் துவங்கிய நிலையில் நாமும் நம் பங்குக்கு கூகுள் அங்கிளைத் தட்டினோம். 26 வயதா ன மீனாட்சி சவுத்ரியின் பூர்வீகம் அரியானா.  மாநில அளவில் நீச்சல் வீராங்கனையாகவும், பேட்மின்டன் வீராங்கனையாகவும் திகழ்ந்த மீனாட்சி, செயின்ட் சோல்ஜர் இன்டர்நேஷனல் கான்வென்ட் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார். பஞ்சாப் நேஷனல் டென்டல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல் மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அப்பா பி.ஆர். சவுத்ரி, மறைந்த இராணுவ கர்னல். படிக்கும் போதே மாடலிங் ஆர்வம் காரணமாக பல போட்டிகள், விளம்பரங்கள் எனத் தனது பயணத்தைத் துவக்கினார். 2017ல் மிஸ் ஐஎம்ஏ (Miss IMA - Indian Military Academy), 2018ல் மிஸ் அரியானா, பிரின்ஸஸ் 2018, ஃபெமினா மிஸ் இந்தியா, அதே வருடம் மிஸ் கிராண்ட் இந்தியா மற்றும் யுனிவர்ஸ்... உள்ளிட்ட பட்டங்களை வென்றுள்ளார்.
 இதனைத் தொடர்ந்து, ‘அவுட் ஆஃப் லவ்’ என்ற வெப் சீரிஸ் மூலம் திரைத்துறையில் காலடி பதித்தார். அதுமுதல், மூன்று தெலுங்குப் படங்களில் நடித்த இவர், விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்ததாக ‘சிங்கப்பூர் சலூன்’ என்கிற படத்திலும் நடித்து முடித்து அப்படமும் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது.
இதோ வெளியாகியிருக்கும் தெலுங்கு பொங்கல் சிறப்பு மாஸ் மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ படத்திலும் இரண்டு நாயகிகளில் ஒருவர். ரவி தேஜாவுடன் ‘கில்லாடி’, ஆத்வி சேஷுடன் ‘ஹிட்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த மீனாட்சி, விஜய்யின் ‘த கோட்’ படத்திலும் இன்னொரு நாயகியாக இணைந்ததன் மூலம் தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிகம் கவனம் ஈர்த்திருக்கிறார். விஜய்யின் தீவிர ரசிகை என்று அவரே பேட்டிகளில் கூறிய வீடியோக்கள் தற்போது வைரலாகியுள்ளன.
தமிழ்ப் படங்கள் அதிகம் பார்த்து, அதில் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்கிற கனவுடன் சினிமாவில் கால் பதித்த மீனாட்சிக்கு அடுத்தடுத்து கிடைத்திருக்கும் தமிழ்ப் படங்கள் கனவு போல் உள்ளது என்கிறார்.
தெலுங்கில் ‘விஎஸ்10’, ‘மட்கா’, துல்கர் சல்மானுடன் ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்கள், தமிழில் ‘சிங்கப்பூர் சலூன்’ மற்றும் ‘த கோட்’ என கைகளில் சுமார் அரை டஜன் படங்களுடன் மாஸ் காட்டும் மீனாட்சி சவுத்ரியின் கால்ஷீட்டிற்காக தமிழ், தெலுங்கு, ஏன்... பல மொழி தயாரிப்பாளர்களும் காத்திருக்கிறார்கள். இது தவிர ஒரு பக்கம் மெடிக்கல் படிப்பும் முடிந்துவிட்டதால், விரைவில் சொந்தமாக கிளினிக் ஆரம்பிக்கும் முயற்சியும் எடுத்து வருகிறார் டாக்டர் மீனாட்சி சவுத்ரி.
ஷாலினி நியூட்டன்
|