ஜனவரியில் கனமழை...என்ன காரணம்?



தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தைக் கடந்தும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும்; சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்துவருகிறது.
மட்டுமல்ல... திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இப்படி மழை பெய்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாகவே ஜனவரி மாதத்தில் மழை பெய்வது வழக்கமாகியுள்ளது. இதுவொரு புதிய இயல்பா?, இதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணமா? விவசாயிகள், பொதுமக்கள் இதற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டுமா என்ற கேள்விகள் இதையொட்டி எழுகின்றன.

லா நினோ காரணமா?

இதுதொடர்பாக, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சோஷியல் மீடியாவான ‘எக்ஸ்’ (டுவிட்டர்) தளத்தில், ‘‘கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் மழை பெய்வது வழக்கமாகிவிட்டது. தமிழ்நாட்டுக்கு அருகே கிழக்கு நோக்கி வீசும் காற்று, மேற்கு நோக்கி வீசும் காற்றுடன் தொடர்புகொள்வதால் இந்த மழை பெய்துவரு
கிறது...’’ என பதிவிட்டிருந்தார்.ஜனவரி மாதத்திலும் தமிழகத்தில் ஏன் மழை பெய்கிறது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

‘‘கடந்த 2 - 3 ஆண்டுகளாக லா நினோ விளைவு இருந்தது. அப்படியிருந்தால் பருவமழை சிறிது தாமதமாகத்தான் முடிவுக்கு வரும். இப்போது ஜனவரி முதல் வாரம்தான். அதனால் இதனை டிசம்பர் கடைசி வாரம் என்றே எடுத்துக் கொள்ளலாம். மேலும் பருவமழை தாமதமாகத் தொடங்கியதும் ஜனவரி மாதமும் பெய்யும் இந்த மழைக்குக் காரணமாக இருக்கலாம்...’’ என்கிறார்கள் வானியல் ஆர்வலர்கள்.

மேலும், 2022ம் ஆண்டும் ஜனவரி இரண்டாம் வாரத்திற்குப் பிறகும் மழை தொடர்ந்தது என இதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டுபவர்கள் அப்படியொரு நிலை இந்தாண்டு ஏற்படாது என்கிறார்கள். 1964ம் ஆண்டில் தனுஷ்கோடியில் டிசம்பர் இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் 2011ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘தானே’ போன்ற புயல்களை இதற்கெல்லாம் எடுத்துக்காட்டாக முன்வைக்கிறார்கள்.

‘தானே’ புயலின் போது லா நினோ விளைவு இருந்ததாகக் குறிப்பிடும் வானியல் ஆர்வலர்கள், லா நினோ இருந்தால் டிசம்பர் இறுதி, ஜனவரி முதல் வாரத்தில் மழை தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

லா நினோ என்பது என்ன?

லா நினோ என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் வெப்பநிலை குறைந்து, மழைக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் நிலவும் வானிலை. வெப்ப மண்டலக் காற்றுக்கூறுகள், மெதுவாகத்தான் பூமத்திய ரேகைக்கு தெற்கே நகரும். பூமத்திய ரேகையை நெருங்கிச் சென்றால்தான் மழை குறையும். லா நினோ வானிலையின்போது இந்தச் செயல்முறை மெதுவாக நடக்கும். இதுதான் லா நினோ எனப்படுவதுஆனால், இந்த ஜனவரியில் பெய்த மழை, லா நினோவால் ஏற்பட்டதல்ல என்கிறார்கள்.

ஜனவரி மழைக்கு என்ன காரணம்?

வடகிழக்குப் பருவ மழை மற்றும் தென்மேற்குப் பருவமழை ஆகிய இரு காலத்திற்கும் இடைப்பட்ட காலங்களில் மேற்கத்திய கலக்கம், மேடேன் ஜூலியன் ஒத்த அலைவு (MJO) மற்றும் வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதி (ITCZ) ஆகிய இயற்கையின் நிலையே மழைக்கான முக்கிய காரணிகள். இந்த மூன்று காரணிகளில் ஏதேனும் ஒன்று சாதகமான சூழலில் இருந்தால் குளிர்கால / வெப்ப சலன மழை தென் இந்திய பகுதியில் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும்.

இதில், மேற்கத்திய கலக்கம் (Western disturbance) என்ற வானிலை நிகழ்வு, மழையை ஏற்படுத்தி வெப்பநிலையைக்குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.மேடேன் - ஜூலியன் ஒத்த அலைவு ( MJO ) என்பது வெப்பமண்டல வளிமண்டலத்தில் உள்ள பருவகால மாறுபாட்டின் முக்கிய அங்கம்.தற்போது தமிழகத்தில் பெய்த மழைக்கு எம்.ஜே.ஓ, மேற்கத்திய கலக்கம் போன்ற இரு சூழல்களும் சாதகமாக இருப்பதே காரணம் என்கிறார்கள்.

இந்த சாத்தியக்கூறுகள் இல்லையென்றால் இம்மழை இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தென் தமிழகத்தில் மட்டும் ஒருவேளை மழை பெய்திருக்கலாம் என்கிறார்கள்.
கடல் வெப்பம் அதிகமானால் மழையின் தன்மையில் இத்தகைய மாறுதல்கள் ஏற்படலாம் என வானியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.இப்படி பருவமழை அல்லாத காலங்களில் பெய்யும் மழையை ஓரளவு கணிக்க முடியும் எனக் கூறும் வானியல் ஆர்வலர்கள், எந்தப் பகுதிகளில் அதிக மழை இருக்கும் என்பதை சொல்ல முடியாது என்கிறார்கள்.

புதிய இயல்பா?

காலநிலை மாற்றம்தான் இதற்குக் காரணமா என்ற கேள்வியும் எழுவது இயல்புதான். இதற்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பதில் வைத்திருக்கிறார்கள்.‘‘கடந்த நான்கு ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஜனவரி மாதமும் மழை பெய்துவருகிறது. 

இதுவொரு புதிய இயல்புதான். பருவமழை தன்மைகள் மாறுபடுவதே காலநிலை மாற்றத்தால்தான். வளைகுடா நீரோட்டம், எம்.ஜே.ஓ போன்றவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.அரபிக் கடலிலும் வெப்பம் அதிகரித்து அங்கேயும் பல புயல்கள் உருவாகி வருகின்றன. இந்த வானிலை மாறுதல்கள், இந்திய பருவமழையில், குறிப்பாக வடகிழக்குப் பருவமழையில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்...’’ என்கிறார்கள்.

பாதிக்கப்படும் விவசாயிகள்

இப்படி பருவம் தப்பிய மழையால் விவசாயிகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஜனவரி மாதம் பெரும்பாலான பகுதிகளில் அறுவடைக் காலம். மழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைவதை தவிர்க்க முடியாது.இவற்றில் இருந்து எப்படி மீள்வது அல்லது ஜனவரியில் பெய்யும் மழையை எப்படி சமாளிப்பது என்பது விவசாயிகள் முன் இருக்கும் பெரிய சவால்.

மொத்தத்தில் குளோபல் வார்மிங் உலகை அச்சுறுத்துகிறது என்பதும், இயற்கையை மீற நினைக்கும் மனிதன் அதற்கான விலையை மனிதகுலத்துக்கே வழங்குகிறான் என்பதும் சத்தியமான உண்மை.என்ன செய்ய வேண்டும்? இதற்கான விடையை காலம் வழங்கும் என நம்புவோம்.

என்.ஆனந்தி