பில்கிஸ் பானு வழக்கு பாஜகவுக்கு எதிராக திரும்புமா?



2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினமாக மட்டும் கொண்டாடப்படவில்லை; விவாதிக்கப்படவுமில்லை.அதே நாளில், 2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்முறை மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 பேர், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு குஜராத்தில் உள்ள கோத்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பில்கிஸ் பானுவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்ததை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன்மூலம் அவர்கள் 11 பேரும் மீண்டும் சிறை செல்லவுள்ளனர்.

*பில்கிஸ் பானு வழக்கின் பின்னணி

2002 குஜராத் கலவரத்தின்போது, அகமதாபாத்துக்கு அருகில் இருக்கும் ரந்திக்பூர் கிராமத்தில் ஐந்து மாதக் கர்ப்பிணியான பில்கிஸ் பானு 11 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தின்போது அவரது மூன்று வயது மகளும் கொல்லப்பட்டார்.இந்த சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் சிலர் பில்கிஸ் பானுவை மிரட்டி ஆதாரங்களை அழிக்க முயன்றனர். பில்கிஸ் பானுவுக்குக் கொலை மிரட்டல்களும் வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இதற்கெல்லாம் பயப்படாத பில்கிஸ் பானு, தனக்கு நியாயம் கிடைக்க தொடர்ந்து போராடினார். மனித உரிமை ஆர்வலர்கள் பலர் அவருக்கு துணையாக இருந்தனர்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியுடன், பில்கிஸ் பானு வழக்கு குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. 2008ம் ஆண்டில் வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

*விடுதலை செய்த குஜராத் அரசு

பதினான்கு ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் சிறையில் இருந்த நிலையில், 1992ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ், குஜராத் அரசு அவர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கியது.

இதையடுத்து 11 பேரும் கடந்த 2022 ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. 11 பேருக்கும் குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியதற்கு எதிராக பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லோல், லக்னோ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரூப் ரேகா வர்மா மற்றும் திரிணாமுள் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

*உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ‘‘குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், அம்மாநில அரசுதான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும்.

எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும்...” என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

*பாஜகவுக்கு எதிராக திரும்புமா?

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பில்கிஸ் பானு வழக்கில், இந்த 11 குற்றவாளிகளும் மீண்டும் சிறைக்கு செல்வது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இந்த முடிவு பாஜகவுக்கு ஒரு அடியாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கேற்ப ‘‘உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு ரத்து செய்யப்பட்டது ஒரு பெரிய விஷயம்...’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
‘‘மன்னிப்பு கிடைத்த போது, ​​மக்கள் திகைத்துப் போனார்கள். இன்று மத்தியிலும் குஜராத்திலும் பாஜக அரசு உள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்பு குஜராத் அரசுக்கு நிச்சயம் பெரிய அடிதான்.

ஆகவே இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக முட்டுக்கட்டை போடுமா என்ற கேள்வி எழுவது இயல்புதான்.  நிச்சயம் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக முட்டுக்கட்டை போடுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. 

ஆனால், கிடைத்த வாய்ப்புகளை அவர்களால் சாதகமாக்கிக் கொள்ள முடியவில்லை. குஜராத்தில், எதிர்க்கட்சிகள் அதை ஒரு பிரச்னையாக மாற்றலாம். அங்கு பாஜக மிகவும் வலுவாக இருப்பதால், அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறிதான்.

இதுகுறித்து இப்போது விவாதிப்பது சரிதான் என்றாலும் மோடி தலைமையிலான பாஜக, மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வருமா என்று ஆராய்வது சுவாரஸ்யமாக இருக்கும்.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை அடுத்து முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரை புதிய வழியில் சென்றடைய பிரதமர் மோடி முயற்சிப்பாரா என்று பார்க்க வேண்டும்.

ஆம். மோடி உயர்மட்ட முஸ்லிம்களின் ஆதரவைப் பெற முயற்சிப்பதற்குப் பதிலாக என்ன செய்யப்போகிறார் என கவனிக்க வேண்டும். ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு அவர் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். இதை வைத்துதான் இத்தீர்ப்பு இவ்வாண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்குமா என்பதை கணிக்க முடியும்...’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.நீதி கிடைத்திருக்கிறது. அது தற்காலிகமானதா அல்லது நீண்டகால அமைதிக்கு அச்சாரமாக அமையுமா என்பது போகப் போகத் தெரியும்.

ஜான்சி