ஃபிரான்ஸின் முதல் கே பிரதமர்!
நம்மூரில் இதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதுவும் 34 வயதில் பிரதமராகும் வாய்ப்பு என்பது சாத்தியமே இல்லை. ஆனால், ஃபிரான்சில் நடந்திருக்கிறது. ஃபிரான்சில் 34 வயதே நிரம்பிய கேப்ரியல் அட்டல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஃபிரான்ஸ் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் பிரதமராக நியமிக்கப்பட்டவர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் அவர்.
 இதைவிட பேசுபொருளான விஷயம் கேப்ரியல் அட்டல் ஓர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதும், அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்த முதல் ‘கே’ என்பதும்தான். தற்போது ஃபிரான்சில் இம்மானுவேல் மாக்ரோன் அதிபராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2017ல் அதிபர் பதவிக்கு வந்தவர் மாக்ரோன். பின்னர் 2022ல் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது எலிசபெத் போர்ன் பிரதமாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சில காரணங்களால் ஃபிரான்ஸ் அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ இருந்த நேரத்தில் எலிசபெத் போர்ன் திடீர் ராஜினாமா செய்தார். இதனால், கல்வி அமைச்சராக இருந்த கேப்ரியல் அட்டல் பிரதமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த கேப்ரியல் அட்டல்?
கேப்ரியல் அட்டல் அதிபர் மாக்ரோனுக்கு நெருக்கமானவர். கோவிட் காலத்தில் அரசாங்க செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றியவர். நாட்டின் பிரபலமான அரசியல்வாதியாக விளங்கியதுடன் அறிவார்ந்த அமைச்சர் என்கிற பெயரையும் பெற்றவர். 2017ம் ஆண்டு ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018ம் ஆண்டு தேசிய கல்வி மற்றும் இளைஞர் நலன் துறையின் ஜூனியர் மினிஸ்டராக நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத்தின் இளம் அமைச்சர் என்கிற பெயரையும் பெற்றார். 2020ல் இருந்து 2022 வரை அரசாங்க செய்தித் தொடர்பாளராக இருந்தார்.
பின், 2022ல் புதிதாக அரசு மீண்டும் பொறுப்பேற்ற போது பப்ளிக் ஆக்ஷன் அண்ட் அக்கவுன்ட்ஸ் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். கடந்த ஜூலையில்தான் அவரிடம் கல்வித் துறை ஒப்படைக்கப்பட்டது. இப்போது கேப்ரியல் அட்டல் பிரதமராகி இருக்கிறார். அதுமட்டுமல்ல. வரும் 2027ல் அவர் மாக்ரோனுக்குப் பிறகு அதிபர் வேட்பாளராக இருப்பார் என ஆரூடம் சொல்கின்றது.
பி.கே
|