சிறுகதை - விடுதலை



ஆபீசில் கம்ப்யூட்டரில் அக்கவுண்ட்ஸ் ஸ்டேட்மென்ட்டுக்காக மல்லுக்கட்டிக் கொண்டிருந்த போது அண்ணா போன் பண்ணினான். ‘‘அம்மா மயங்கி விழுந்துட்டா. பேச்சு மூச்சில்ல. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா...’’

தூக்கி வாரிப் போட்டது எனக்கு. ‘‘என்னாச்சி? இப்ப எப்படி இருக்கா?’’ என்றேன் பதற்றமாக. ‘‘கூப்பிடறதுக்கு எந்த பதிலும் இல்ல. நினைவும் இல்ல. மூச்சு மட்டும் பெரிசா வந்துக்கிட்டிருக்கு...’’
‘‘சரி... தைரியமா இரு. ஒண்ணும் ஆகாது. நான் ஒடனே கிளம்பறேன்...’’ அவனுக்கு தைரியம் சொல்லிவிட்டு ஃபோனை வைத்த நான், மேனேஜரிடம் இரண்டு நாட்கள் லீவு சொல்லிவிட்டு கிளம்பினேன்.

அண்ணா அம்மாவுடன் கிராமத்தில் இருக்கிறான். நான் சேலத்தில். எங்கள் கிராமத்துக்கு இங்கிருந்து செல்ல மூன்று மணி நேரத்துக்கு குறையாமல் ஆகும்.கிடைத்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டேன். எனக்கும் அதிர்ச்சிதான். ஏனெனில் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்ற ஞாயிறுதான் குடும்பத்துடன் போய் அம்மாவைப் பார்த்துவிட்டு வந்தோம். அப்போதும் காய்ச்சல் என்று சொன்னாள். வழக்கமாக வரும் காய்ச்சல்தான் என்று நினைத்தேன்.

அம்மாவுக்கு பேரப் பிள்ளைகள் என்றால் ரொம்ப ஆசை. என் மகன்களிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். நான் வெளியில் உட்கார்ந்திருந்தேன்.ஒரு மணி நேரம் கழிந்ததும் அம்மா தனியாக இருந்தபோது அவளிடம் ரெண்டு ஐநூறு ரூபாய் தாள்களைக் கொடுத்து ‘‘வச்சிக்கோ...’’ என்றேன்.
‘‘எனக்கெதுக்குப்பா?’’

‘‘வச்சிக்கோம்மா. மாத்திரை, வேற எதாச்சும் வாங்கிக்கோ...’’என்னை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவள், ‘‘நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டியே...’’ என்றாள்.
‘‘சொல்லு...’’ ‘‘நான் இன்னும் அதிக நாள் உயிரோட இருக்க மாட்டேன். நான் செத்தப்பறமும் நீங்க இப்படியே ஒத்துமையா இருக்கணும்...’’தூக்கி வாரிப் போட்டது. ‘‘என்ன வார்த்தை இது? வாய கழுவு. உனக்கென்ன நீ இன்னும் ரொம்ப வருஷம் இருப்பே. இன்னொரு முறை இப்படி சொல்லாத. அத விடு. மீன் கொழம்பு எப்படி இருந்துச்சி?’’

அம்மா போன முறை நான் வந்தபோதே சொன்னாள். ‘‘சுந்தரு மீன் கொழம்பு சாப்புடணும்னு ஆசையா இருக்குப்பா. மலர்கிட்ட சொல்லி செஞ்சு அடுத்த முறை பார்க்க வர்றப்ப கொண்டு வர்றியா?’’ என்றாள்.அப்படியே செய்து எடுத்துக் கொண்டு வந்திருந்தோம்.‘‘ரொம்ப டேஸ்ட்டா இருந்துச்சி. 

ரொம்ப நாளைக்கப்புறம் இன்னிக்குதான் வாய்க்கு ருசியா சாப்பிட்டேன். உங்க அண்ணிகிட்ட கேட்டா எங்க செஞ்சி தர்றா? வறட்டி மாதிரி வாயில வக்க முடியாத மாதிரி சப்பாத்தி. இல்லனா அதே சோறு. வாயில வக்க முடியறதில்ல. எத்தனையோ நாள் கீழ கொட்டிட்டு பட்டினியா இருந்துருக்கிறேன். ஏதாவது கேட்டா சண்டை. அதுக்கு பயந்துகிட்டே அமைதியா இருந்துடுவேன்...’’ அம்மாவின் கண்களில் கண்ணீர்.

‘‘அண்ணன் எதுவும் கேக்கறதில்லையாம்மா?’’
‘‘அவனா? பொண்டாட்டி பேச்சிதான் அவனுக்கு வேத வாக்கு. உங்கப்பா போன பின்னாடி இந்த ரெண்டு வருஷமா ரொம்ப கஷ்டப்படறேம்பா...’’
‘‘விடும்மா. அதுக்குதான உனக்கு போன் வாங்கிக் கொடுத்திருக்கேன். என்ன வேணுமோ போன் பண்ணி கேளு. வாங்கிட்டு வர்றேன்...’’நான் பேசிக் கொண்டிருந்தபோதே அண்ணி வந்தாள். ‘‘மீன் கொழம்பு எதுக்கு எடுத்துட்டு வந்தீங்க? சாப்ட்டுட்டு ஏதாவது ஆச்சின்னா யார் பார்க்கறது?’’ என்றாள் கோபமாக.‘‘விடுங்க. ஒரு நாள்ல ஒண்ணும் ஆயிடாது...’’

‘‘எப்படியோ போங்க. நான் சொன்னா யார் கேக்கறீங்க...’’ கோபமாக சொன்னவள் உள்ளே போய்விட்டாள்..அம்மாவின் அறையில் இருந்து வெளியே வந்தேன். அண்ணன் நின்று கொண்டிருந்தான்.அம்மா சொன்னதை சொன்னேன். ‘‘அம்மா இப்படி சொல்றாண்ணா. எனக்கு என்னமோ ஒரு மாதிரியா மனசுக்கு படுது...’’என் பேச்சை பொருட்படுத்தாதவன் ஏளனமாகப் பார்த்தபடி சொன்னான். ‘‘யாரு இவளா? நம்ம எல்லாரையும் அனுப்பிட்டுதான் இவ போவா...’’ என்றான் அலட்சியமான குரலில்.அதிர்ந்து போனவன் எதுவும் பேசத் தோன்றாமல் வெறுப்பாக அவனைப் பார்த்துவிட்டுக் கிளம்பினோம்.

அன்று முழுவதும் மனம் ஒரு நிலையில் இல்லை.அப்பா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்பா இருந்தவரை அப்படி ஒரு கம்பீரமாக இருப்பாள் அம்மா. அப்பா இறந்தபின் இடிந்துபோய்விட்டாள். உடம்பும், உள்ளமும் தளர்ந்துபோய்விட்டதை அவள் தோற்றமே காட்டியது.உள்ள வேதனை உடல் வேதனையைக் காட்டிலும் அதிகமாக இருந்ததை ஒவ்வொரு முறையும் சொல்வாள் அம்மா. ‘‘வர்றப்ப வாய்க்கு ருசியா ஏதாச்சும் வாங்கிட்டு வாப்பா...’’ என்பாள்.நான் ஸ்வீட்டோ, காரமோ, பழமோ எது வாங்கிக்கொண்டு போனாலும் அண்ணி ஆரம்பித்து விடுவாள்.

‘‘சின்னப் பிள்ளை பாருங்க. இன்னும் வாய்க்கு ருசியா கேக்குது. இந்த வயசுல இதெல்லாம் சாப்புடணுமா?’’ ‘‘அதானே. நீ எதுக்குடா இதெல்லாம் வாங்கிட்டு வந்த? பாரு... நாங்களே சாப்பிடறதில்ல. டயட். அம்மாவுக்கென்ன?’’ என்பான் அண்ணன்.‘‘வயசானா சாப்பிடக் கூடாதா? வயசானவங்களும் குழந்தை மாதிரிதாண்ணா. நீதான் வாங்கித் தர்றதில்ல. நமக்கே வாய்க்கு ருசியா சாப்பிடணும்னு தோணும். அப்படி இருக்கறப்ப அம்மாவுக்கு தோணாதா?’’ என்பேன்.ஒரு முறை நான் பார்க்கப் போனபோது மணி மதியம் மூன்றுக்கு மேல் இருக்கும்.

அண்ணா, அண்ணி இருவரும் இல்லை. ஏதோ ஃபங்ஷனுக்காக வெளியே சென்றிருந்தார்கள்.‘‘சுந்தர் ரொம்ப பசிக்குது. சாப்பாடு வாங்கிட்டு வர்றியா?’’ அம்மாவின் வாடிய முகத்தை அப்போதுதான் கவனித்தேன். தூக்கி வாரிப் போட்டது. ‘‘ஏம்மா சாப்பிடலையா?’’ ‘‘காலையில பழைய சாப்பாடு கொஞ்சம் இருந்துச்சி. 

அத சாப்பிட்டுக்க சொல்லிட்டு ரெண்டு பேரும் போயிட்டாங்க. மதியானம் வர்றப்போ வாங்கிட்டு வர்றதா சொன்னாங்க. மூணாச்சி.இன்னும் வரலைப்பா...’’எனக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. அவசரமாக ஹோட்டலில் சாப்பாடு வாங்கி வந்தேன். அரக்கப் பரக்க சாப்பிட்டாள். அவ்வளவு பசி போல.

அப்போதுதான் கவனித்தேன். அவள் போட்டிருந்த ஜாக்கெட் நாலு இடங்களில் கிழிசல்.‘‘ஏம்மா... வேற ஜாக்கெட் இல்லையா?’’
‘‘இருக்கறதிலயே கம்மியா கிழிஞ்சிருக்கறது இதுதாம்பா...’’‘‘என்னம்மா நீ? அண்ணன்கிட்ட சொல்ல வேண்டியதுதான?’’‘‘எத்தன முற சொல்றது? ‘வீட்ல இருக்கறவங்களுக்கு இது போதாதா? புதுசு போட்டுக்கிட்டு எங்க போகப் போறீங்க’னு கேக்கறா உங்க அண்ணி. ‘அதானேம்மா... கிழிசல் கொஞ்சமாத்தானே இருக்கு. சும்மாத்தான இருக்க? தச்சி போட்டுக்கம்மா’னு சொல்றான் உங்கண்ணன்...’’

‘‘எங்கிட்ட சொல்ல வேண்டியதுதான?’’
‘‘பாவம் நீயே கஷ்டப்படற...’’‘‘என்னம்மா நீ... நான் கஷ்டப்படறேன்னு யார் சொன்னது? பெத்தவளுக்கு நாலு ஜாக்கெட் எடுத்துக் கூட தரமுடியாத அளவுக்கு நான் வக்கத்து போயிடல. நான் உங்கிட்ட பல முறை சொல்லிட்டேன். எங்கூட வந்துடு, ராணி மாதிரி பார்த்துக்கறேன்னு. நீதான் வரமாட்டேன்னு பிடிவாதமா இருக்கே. இந்த பட்டிக்காட்டுல அப்படி என்னதான் வச்சிருக்கியோ?’’ ஆற்றாமையுடன் சொன்னேன்.

‘‘இது நானும் என் புருஷனும் வாழ்ந்த வீடு. இந்த வீடு முழுசும் இன்னும் அவரின் மூச்சுக் காத்தும், அவரின் வாசனையும் நிறைஞ்சிருக்கு. அவர்கூட ஒண்ணா வாழ்ந்த இந்த வீட்ல இருக்கறப்ப அவர் என்கூடவே இருக்கற மாதிரி, அவர்கூடவே வாழற மாதிரி ஒரு நிறைவு எனக்கு.

இன்னும் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி... அவர் நினைவுகளோட நான் இங்கதான் இருப்பேன். அவர் மூச்சுக் காத்து நின்ன இதே வீட்லதான், நானும் மூச்சை விடுவேன். நான் எங்கயும் வரமாட்டேன்...’’அயர்ந்து போனேன். இப்படிப் பேசுபவளை என்னதான் செய்வது? நான் வரும்போது அம்மா ஆசைப்பட்டு கேட்பதை வாங்கித் தருவதைத் தவிர.

அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டு விமலா, ‘‘வாங்க தம்பி... ஒண்ணு சொன்னா தப்பா நினைச்சிக்க மாட்டிங்களே? பாவம்பா உங்கம்மா. உங்க அண்ணிகிட்ட உங்க அம்மா படற அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்ல. நல்ல சாப்பாடு கூட தர்றதில்ல. அது பரவால்ல. டைமுக்கு தரலாமில்ல? பசி தாங்க முடியாம எங்கிட்ட பல முறை கேட்டிருக்கா. உங்க அண்ணண் பொண்டாட்டிய எதிர்த்து ஒரு வார்த்த பேசறதில்ல. 

சில சமயங்கள்ல ரெண்டு பேரும் எப்படி திட்டுவாங்க தெரியுமா? போன வாரம் ஏதோ உடம்பு சரியில்லனு அவ துணிகள ரெண்டு நாள் துவைக்காம விட்டிருக்கா. அதுக்கு போய் ‘வீணா அழுக்கு துணி சேர்க்கறீங்க. ஒரே நாத்தம் வீசுது. உள்ளயே நுழைய முடியல’னு ரெண்டு பேரும் ஒரே சத்தம். நாந்தான் போய் அவங்களை அடக்கிட்டு வந்தேன். பார்க்கவே பாவமா இருக்கு...’’ என்றார்.

‘‘என்கூட வரச் சொல்லி பல முறை கூப்பிட்டுட்டேன். மாட்டேன்னு சொல்றவளை என்னதான் பண்றது சொல்லுங்க...’’பேசிக் கொண்டே இருந்ததில் மணி ஐந்தாகி விட்டது .அப்போதுதான் இருவரும் வந்தார்கள். ‘‘கொஞ்சம் லேட்டாயிடுச்சிடா. வர முடியல...’’ அண்ணன் சொன்னான்.‘‘அம்மா சாப்பிடாம இருப்பானு தெரியும்தான? என்னண்ணா இது? நான் வராம இருந்திருந்தா பட்டினியாத்தான இருந்திருப்பா?’’ வெறுப்பாகக் சொல்லிவிட்டு அங்கு இருக்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டேன்.

அடுத்த முறை வந்தபோது ஐந்து ஜாக்கெட்டுகள் எடுத்து வந்து கொடுத்தேன்.பஸ் பிரேக்கிட்டு நின்றது. பாப்பிரெட்டிப்பட்டி. செல் ஒலிக்க எடுத்தேன். அண்ணன்தான். ‘‘எங்க இருக்கே?’’‘‘பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட்...’’‘‘அப்படியே இறங்கிக்க. ஹாஸ்பிடல் வந்துட்டோம்...’’ எந்த ஹாஸ்பிடல் என்று கேட்டுவிட்டு, பஸ்ஸை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

ஹாஸ்பிடல். அண்ணன் வெளியே இருந்தவன் அழைத்துக் கொண்டு போனான். அம்மா வாயிலும், மூக்கிலும் ட்யூப். மூச்சு இரைத்துக் கொண்டிருந்தது.
‘‘அப்பருந்து இப்படிதான் இருக்கு. கூப்பிட்டுப் பார்த்தோம். எந்த அசைவும் இல்ல. நீ வேணும்னா கூப்பிட்டுப் பாரு...’’உள்ளே நுழைந்தேன். நாற்றம் குடலைப் பிடுங்கியது. உடம்பில் புண்ணாகி அதிலிருந்து சீழ் வடியும் நாற்றம்.பக்கம் போய் ‘‘அம்மா... அம்மா...’’  என்றேன்.

எந்த அசைவும் இல்லை.உள்ளுக்குள் ஏதோ உடைவது போலிருந்தது. ஒரு பந்தம் அறுந்து போவது போல. தொப்புள் கொடி அறுபடுவது போல. கண்ணீரை அடக்கிக் கொண்டு வெளியே வந்துவிட்டேன்.ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் என்னைப் பார்த்ததும் ‘‘நீங்க?’’ என்றார்.‘‘அவங்க மகன்...’’‘‘என்ன பார்த்துக்கிட்டீங்க? அந்தம்மா பின்னாடி பக்கம் எல்லாம் புண்ணாகி இருக்கு. நாத்தம் குடல பிடுங்குது பார்த்தீங்களா? பாக்டீரியா ரத்தத்துல கலந்து மூளைக்கு தாக்கிடுச்சி. இப்படியா அக்கறை இல்லாம இருப்பீங்க? உயிர் எப்ப வேணும்மா போகலாம். வீட்டுக்கு கொண்டு போயிடுங்க...’’ கோபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஆம்புலன்ஸ் பிடித்தோம். மலருக்கு பிள்ளைகளுடன் உடனே கிளம்பி வரச் சொல்லி போன் செய்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினோம்.‘‘புண்ணுக்கு ரெண்டு முறை மருந்து வாங்கிட்டு வந்து தந்தேன். அது முடிஞ்சிருக்கும். உங்கிட்ட ஒண்ணும் கேக்கலியாண்ணா அம்மா?’’ என்றேன்.
‘‘கேட்டா. எங்க ஆபீஸ் டென்ஷன். மறந்தே போயிடுச்சி...’’ என்றான்.

கோபமாக தலையைத் திருப்பிக் கொண்டேன்.அன்று இரவு முழுவதும் அப்படியே இருந்தாள் அம்மா. யார் கூப்பிட்டும் நினைவு திரும்பவே இல்லை. இரவு முழுவதும் நாங்கள் யாரும் தூங்கவும் இல்லை.அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. சரியாக ஒன்பது மணிக்கு இறந்து போனாள் அம்மா.எல்லோருக்கும் தகவல் சொன்னோம். ஷாமியானா, மேளம், சங்கு ஊத ஆள் எல்லாம் ஏற்பாடானது.யார் யாரோ வந்தார்கள், போனார்கள். கை கொடுத்தார்கள். பாதிப் பேர் நிஜ துக்கத்துடன், பாதிப் பேர் கடமைக்காக.

எதுவும் மனதில் பதியவில்லை. அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். வெளியே பறை மேள சத்தமும், சங்கு, சேகண்டி சத்தமும் சாவு வீட்டுக் களையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.சோர்ந்து போய் தனியாக உட்கார்ந்திருந்தேன். பக்கத்து வீட்டு விமலா அக்கா பக்கம் வந்து உட்கார்ந்தார். ‘‘கஷ்டம்தாம்பா. மனச தேத்திக்க. அம்மா இப்ப கையும், காலும் நல்லா இருக்கறப்பவே போயிட்டா. ஆனா, இந்த ஒரு வருஷமா ஏகப்பட்ட சித்திரவதைய அனுபவிச்சிட்டா. ஒருவகைல இது அவளுக்கு விடுதலைதான். இருந்திருந்தா இன்னும் பல சித்திரவதைய அனுபவிச்சிருப்பா.

நீ மனசு கஷ்டப்படுவேனு எதையும் சொல்லலை. என்னையும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டா. நீ வந்து போயிட்டு இருந்ததுதான் ஒரே ஆறுதல் அவளுக்கு...’’மனதைப்  பிசைவது போலிருந்தது எனக்கு. திடுக்கிட்டு அவரைப் பார்த்தேன். அதே நேரம் மனதில் ஏதோ இனம் புரியாத நிம்மதி பரவியது போல உணர்ந்தேன்.என்னமோ தெரியவில்லை. இவ்வளவு நேரம் மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரமும், துக்கமும் குறைவது போல இருந்தது.

அண்ணனும், அண்ணியும், என் மனைவியும், சொந்தங்களும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்க, என் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லை.‘‘டேய்... நானும் பார்க்கறேன்.எல்லோரும் எப்படி அழறாங்க துக்கம் தாங்காம. உன் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வரலை. செத்தது உன் அம்மாடா! உனக்கென்ன கல் மனசா?’’ மாமா பையன் கேட்டான்.
அவனை சில வினாடி உற்றுப் பார்த்தேன். ‘‘இது சாவு இல்லடா. விடுதலை. அம்மாவுக்கு நிம்மதி. நான் எதுக்கு அழணும்? மனசுக்கு கொஞ்சம் சந்தோஷமாகூட
இருக்குடா...’’நான் சொன்னது அவனுக்கு பைத்தியக்காரத்தனமாக இருந்திருக்கக் கூடும்.

கே.ஆனந்தன்