சத்தம் இல்லாத தூக்கம் வேண்டும்..!‘‘அவருக்கு என்னங்க... படுத்த உடனே தினமும் நல்லா குறட்டை விட்டுத் தூங்குவாரு. நமக்குத்தானே அத்தனை அவஸ்தையும்...’’ என்று பொதுவாக மனைவியர், குறட்டை விடும் தம் கணவரைக் குறை கூறுவது இயல்பான ஒன்றுதான்.சமீபத்தில் வந்த ‘குட்நைட்’ திரைப்படம் கூட குறட்டை காரணமாக கதாநாயகன் நன்றாக உறங்குவதாகவும், அதனால் உறக்கம் பாதிக்கப்படும் தனது மனைவி குறித்து அவன் கொள்ளும் கவலைகளைப் பற்றியும்தான் பேசுகிறது.

ஆனால், உண்மையில் குறட்டை விடுபவர்களின் அருகில் உள்ளவர்கள் மட்டுமல்ல, குறட்டை விடுபவர்களும்தான் நிம்மதியாகத் தூங்குவதில்லை. அதிலும் அவ்வப்போது குறட்டை விடுபவர்களைக் காட்டிலும் அன்றாடம் குறட்டை விடுபவர்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரியது என்பதுடன், இவர்களில் அதிக சப்தத்துடன் குறட்டை விடுபவர்களின் நிலை உண்மையில் ஆபத்தானது என்றால் நம்ப முடிகிறதா..?ஆனால் அதுதான் உண்மை. குறட்டை..!

பொதுவாக, வயது மூத்தவர்களில் 44% ஆண்களும், 28% பெண்களும் குறட்டை விடுபவர்கள் எனும் நிலை மாறி இப்போது வயது வரம்பேயில்லாமல் குறட்டை விடுகிறார்கள் என்பதை ஒரு எச்சரிக்கையாகவே கூறுகிறது மருத்துவ உலகம். நீண்டநாட்கள் தொடர் குறட்டை என்பது வெறும் உபாதை மட்டுமல்ல, உடலுக்குள் உள்ள நோய்களைக் குறிக்கும் இண்டிகேட்டராகவும் இருக்கலாம் என்று குறிப்பிடும் காது மூக்கு தொண்டை மருத்துவர்கள், ஒரு வாகனத்தில் சப்தம் வந்தால் அது சக்கரத்தில் இருந்து வருவதற்கும், எஞ்சினிலிருந்து வருவதற்கும் எப்படி வேறுபாடுகள் உள்ளதோ, அதைப்போலவே குறட்டை ஏற்படுவதற்கும் நமது உடலுக்குள் வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம் என்பதுடன் அவற்றைக் கண்டறிந்து குணப்படுத்துவது அவசியமான ஒன்று என்று கூறுகின்றனர்.

சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது, நமது சுவாசப்பாதையில் தடைகள் ஏதாவது இருந்தால் ஏற்படுவதுதான் குறட்டை ஒலி. குறிப்பாக நமது உள்நாக்கு, தொண்டை, மேலண்ணம், நாக்கின் பின்பகுதி ஆகியவற்றிலிருந்து வருவதுதான் இந்தக் ‘கொர் கொர்’ சத்தம் எனப்படுகிறது. பொதுவாக சளி, இருமல், தொண்டைப்புண், டான்சில் அல்லது அடினாய்டு வீக்கம் உள்ளவர்கள் அந்த பாதிப்புகள் உள்ளபோது மட்டும் குறட்டை விடுவார்கள் என்றால் - அதிக எடை உள்ளவர்கள், மூக்கு தாடை மற்றும் பற்கள் இயல்பாக இல்லாதவர்கள், குறுகிய தடிமனான கழுத்து உள்ள ஆண் பெண்கள், புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள், வயதானவர்கள், தூக்க மருந்து உட்கொள்பவர்கள் ஆகிய அனைவருக்கும் நாக்கு மற்றும் கழுத்துத் தசைகள் சரியாக செயல்படாமல் போவதால் இவர்கள் தொடர்ச்சியாக குறட்டை விடுபவர்கள் ஆகிறார்கள்.

உறங்கும்போது வாயை மூடியபடி குறட்டை விடுபவர்களுக்கு நாக்கு அல்லது காற்று செல்லும் பாதையில் பிரச்னைகள் இருக்கலாம். அதுவே வாயைத் திறந்தபடி குறட்டைவிட்டால் மூக்கடைப்பு மற்றும் தொண்டைத் திசுக்களால் பிரச்னை என்பதையும் நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற தடைகளுடன் உறங்குபவர்கள்தான் பொதுவாகக் குறட்டை விடுகிறார்கள் என்றாலும், நாம் உறங்கும்போது மூளையால் சுவாசிப்பதைக் கட்டு்ப்படுத்த முடியாமல் போவதாலும் குறட்டை (central snoring) வரலாம் என்று கூறப்படுகிறது.

இப்படிக் குறட்டை விடுபவர்களின் குறட்டைச் சத்தத்தால் பல வீடுகளில் மனக்கசப்புகளும், அழுத்தங்களும், சமயங்களில் பிரிவுகளும் கூட ஏற்படுகின்றது என்பதுடன் ‘sleep divorce’ எனப்படும் குறட்டை விவாகரத்துகள் அண்மைக் காலத்தில் உலகெங்கும் பெருமளவு அதிகரித்து வருகிறது என்பதும் இதில் கவனிக்கவேண்டிய ஒன்றாகும்.

அமெரிக்காவில் மட்டும் குறட்டை விடுபவர்கள் 37 மில்லியன் மக்கள் என்றும், அவர்களில் 25% பேர்களுக்கு குறட்டை விவாகரத்து வழங்கப்படுகிறது என்றும் கூறும் அமெரிக்கத் தூக்க அமைப்பு, இவர்களுக்கு ஏற்படும் obstructive sleep apnea (OSA) எனப்படும் மூச்சுத்தடை இந்த விவாகரத்துகளைக் காட்டிலும் கவனிக்கப்பட வேண்டிய பெரிய விஷயம் என்கிறது.  

Primary snorers, Mild snorers என அழைக்கப்படும் அவ்வப்போது மெல்லிய குறட்டை விடுபவர்களுக்கு உடலளவில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை என்றாலும், Secondary snorers, Deep snorers எனப்படும் எப்போதும் உரக்கக் குறட்டை விடுபவர்களில் கிட்டத்தட்ட 25சதவீதத்தினருக்கு ஏற்படுவதுதான் இந்த ஸ்லீப் அப்னியா எனும் மூச்சுத்தடை.

பொதுவாக நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நமது மூளைக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்கி நம்மை அடுத்தநாள் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவும் நமது நுரையீரலானது, இந்த சுவாசத்தடை அதிகரித்து இரண்டாம் கட்ட தொடர் குறட்டையாக மாறும்போது,  மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனை வழங்கத் தடுமாறுகிறது.

இதனால் உறங்குபவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன், அவர்களின் ஆழ்ந்த நித்திரை தொலைந்து, தினசரி ஏழெட்டு முறை இரவில் விழிக்கவும் நேர்கிறது. ஓரிரு நாளில் இது முடியாமல், இதுவே தினசரி நடவடிக்கையாக மாறும்போது ஒவ்வொரு நாளும் காலை கண்விழிக்கும் போதே தலைவலி, சோர்வு, பகல் தூக்கம், கவனமின்மை, மறதி, மன அழுத்தம் எனத் தொடங்கி, அல்சர், அதிக சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், இருதய நுரையீரல் நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் என நீள்வதுடன் சமயங்களில் மரணம் வரைக் கூட அழைத்துச் செல்கிறது ஒரு சாதாரண குறட்டை.

தங்கள் நாட்டில் நூற்றில் 65% வாகன விபத்துகள் இரவில் தூங்க சிரமப்படுபவர்களால்தான் நிகழ்கிறது என்றுகூறும் ஓர் அமெரிக்க ஆய்வையும் நாம் இங்கு கவனத்தில் கொள்வது நலம்.  
இதய நோயாளிகளில் 75% குறட்டை விடுபவர்களாக இருக்கிறார்கள் என்று இன்னொருபக்கம் குறிப்பிடும் மருத்துவர்கள், இவர்கள் குறட்டையைக் குறைக்க எடுத்துக்கொள்ளும் சிகிச்சையே இவர்கள் இதயத்தை சீராக்கும் மருந்து என்று கூறுகிறார்கள்.

ஆக - குறட்டை என்பது உடலுக்குள் ஏற்பட இருக்கும் அல்லது ஏற்பட்டிருக்கும் ஒரு ஆபத்தான நோயின் ஆரம்ப அறிகுறி என்று கூறும் தூக்க வல்லுனர்கள், அதைக் குறைப்பதற்கான வழிமுறைகளையும் பரிந்துரைக்கின்றனர்.எப்போதாவது குறட்டை விடுபவர்களுக்கும், லேசாக குறட்டை விடுபவர்களுக்கும் வீட்டு வைத்தியமே போதுமானது.

பக்கவாட்டில் படுப்பது, தலையணையை சிறிது உயர்த்திப் படுப்பது, படுப்பதற்கு முன் மூக்கடைப்பைப் போக்க நீராவி பிடிப்பது, வெந்நீரில் தொண்டை கொப்பளிப்பது, உறங்குவதற்கு குறைந்தது இரண்டு மணிநேரம் முன்னரே உணவை உட்கொள்வது, வீட்டை தூசுகளின்றி சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற எளிய வழிமுறைகள் நன்கு பயனளிக்கும்.

அத்துடன் தினமும் உடற்பயிற்சி, யோகா மற்றும் மூச்சுப்பயிற்சியை மேற்கொள்வதும், மூச்சுப்பயிற்சியில் குறிப்பாக ஸ்பைரோமீட்டர் கொண்டு பயிற்சிகள் செய்வது, பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியனவும் நிச்சயம் குறட்டையைக் குறைக்கும் என்பது அறிவியல் உண்மை.இவற்றுடன் இரவில் மது அருந்துதல் மற்றும் தூக்க மருந்துகளைத் தவிர்த்தல், புகைப்பழக்கத்தைக் கைவிடுதல், முக்கியமாக உடல் பருமனைக் குறைத்தல் ஆகியன நிச்சயம் பலனளிக்கும். மேலும் உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் குறட்டை ஏற்படலாம் என்பதால் குறைந்தது நான்கு லிட்டர் நீராவது குடிப்பது குறட்டையுடன் சேர்த்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் காக்கும் என்பதும் நிச்சயம்.

ஆனால், செகண்டரி ஸ்நோரர்ஸ் எனப்படும் அதிகக் குறட்டை விடுபவர்களுக்கு இந்த வழிமுறைகள் மட்டுமன்றி, ‘Sleep Study’ எனப்படும் உறக்கத்தின்போது மூளை இயக்கம், இருதய இயக்கம் மற்றும் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் ‘உறக்க ஆய்வு’ மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகளைக் கொண்டு அடுத்தகட்ட சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான், CPAP  (Continuous positive airway pressure device) எனப்படும் சுவாசப்பாதையை அடைக்காமல் இருக்க உதவும் கருவி.

மூக்கு மற்றும் வாயில் பொருந்தக்கூடிய மாஸ்க்குடன் கூடிய இந்தக் கருவி காற்றிலுள்ள ஆக்சிஜனை ஃபில்டர் செய்து தேவையான ஈரப்பதம் மற்றும் அழுத்தத்துடன் நுரையீரலுக்குத் தடையின்றி வழங்குவதால் பயனருக்கு மட்டுமின்றி பக்கத்தில் இருப்பவருக்கும் நல்லுறக்கத்தை தந்து அவர்களது மேற்சொன்ன பல வாழ்க்கை முறை நோய்களைத் தவிர்க்கவும் உதவுகிறது.

அத்துடன் மவுத் கார்ட், ஹிஞ்சஸ் போன்றவை தற்காலிகமாக தடையை நீக்க உதவுவதால் அவையும் பரிந்துரைக்கப்படுகிறது.இப்படி அனைத்து முறைகளும் பலனளிக்காதபோது, இறுதித் தீர்வாக மேற்கொள்ளப்படுவதுதான் லேசர் உள்ளிட்ட சில சீரமைப்பு அறுவை சிகிச்சைகளும், உடற்பருமனைக் குறைக்கும் அறுவை சிகிச்சைகளும்.யோசித்துப் பார்த்தால் நாம் அன்றாடம் நகைக்கும், நம்மை நகைப்புக்குள்ளாக்கும் ஒரு சிறிய பிரச்னைதான் குறட்டை. ஆனால், அதற்குள் பூதாகரமாக ஒளிந்திருப்பது நமது வாழ்க்கைதான்.

அதேசமயம் நமது வாழ்க்கை முறையை மாற்றியமைத்தாலே சத்தம் இல்லாத உறக்கம் எப்போதும் சாத்தியம் என்பது புரிகிறது. ‘குட் நைட்’ படத்தில் உள்ள மோட்டார் மோகனை மட்டுமல்ல... நம் அனைவரையும் கலங்கடிக்கும் இந்தக் குறட்டையைக் கட்டுப்படுத்தும் வித்தையும் நமது கைகளில்தான் உள்ளது..!

டாக்டர் சசித்ரா தாமோதரன்