20 ஆயிரம் பசுக்கள்... தினமும் 4 லட்சம் லிட்டர் பால்...



கலிபோர்னியாவின் நம்பர் ஒன் பால் பண்ணை!

அமெரிக்காவின் மிகப்பெரிய பால் பண்ணைகளில் ஒன்று, ‘டுல்ஸ் பால் பண்ணை’. நூறு வருடங்களுக்கும் மேலாக, நான்கு தலைமுறைகளாகத் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பண்ணை இது. தினமும் 50 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் ‘டுல்ஸி’ன் பாலையும், அதன் பால் பொருட்களையும் நுகர்கின்றனர். இதை நிர்வகித்து வருகிறார் டொட் டுல்ஸ். 
கலிபோர்னியாவில் பாரம்பரியமாக பால் பண்ணைத் தொழிலைச் செய்து வந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர் டொட் டுல்ஸ். எழுபதுகளின் ஆரம்பத்தில் டொட்டின் வயது 10. ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது கலிபோர்னியாவில் உள்ள சினோ நகரில் டொட்டின் தந்தையும், தாத்தாவும் 400 ஹோல்ஸ்டீன் பசுக்களுடன் ஒரு பால் பண்ணையை நடத்தி வந்தனர். தினமும் குறைந்தபட்சம் 1000 லிட்டர் பாலை உற்பத்தி செய்த பண்ணை அது. விடுமுறை நாட்கள் மற்றும் பள்ளி முடிந்த மாலைப் பொழுதுகளில் பண்ணையிலிருந்த 100 கன்றுக்குட்டிகளுக்கு உணவு கொடுத்து, பார்த்துக்கொள்வதுதான் சிறுவன் டொட்டிற்குக் கொடுக்கப்பட்ட முதன்மையான பணி.

அப்பாவும், தாத்தாவும் ஒரு வேலையைக் கொடுத்துவிட்டார்கள் என்று கடமைக்குத்தான் கன்றுக்குட்டிகளைக் கவனித்து வந்தார் டொட். ‘‘என் இரத்தத்திலேயே ஊறிப்போன ஒரு தொழில் பால் பண்ணை. பத்து வயதிலேயே இந்தத் தொழிலுக்குள் வந்துவிட்டேன். ஒரு தொழிலைத் தாண்டி பால் பண்ணையை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் மகிழ்ச்சி...’’ என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் டொட்.

ஒரு நாள் ஏனோதானோவென்று கன்றுக்குட்டிகளைக் கவனித்து வந்த பேரன் டொட்டிடம், ‘‘தரமான, ஆரோக்கியமான பாலை உற்பத்தி செய்வதும், பசுக்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வதும் ரொம்பவே பெருமையான விஷயம்...’’ என்று தாத்தா சொல்லியிருக்கிறார்.

இதை வேதவாக்குப் போல கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் டொட். ஆம்; இன்று கலிபோர்னியாவில் தரமான பாலைக் கொடுப்பதில் முன்னணியில் இருப்பது ‘டுல்ஸ் பால்பண்ணை’தான். அன்றிலிருந்து மிகுந்த சிரத்தையுடன் கவனிக்கத் தொடங்கினார். இதற்காக நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதைக்கூட தவிர்த்தார். பசுக்களும், கன்றுகளுமே அவரது நண்பர்களாக மாறின.

டொட்டின் செயல்பாட்டைக் கவனித்த தாத்தா, கன்றுகளைக் கவனிப்பதிலிருந்து பெரிய பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்லும் பணியை பேரனுக்குக் கொடுத்தார்.
தாத்தா மற்றும் அப்பாவிடமிருந்து 13 வயதிலேயே பால் பண்ணை நிர்வாகத்தையும், அதன் செயல்பாடுகளையும், பிசினஸையும் கற்றுக்கொண்டார் டொட். தனியாளாக 500 பசுக்களைக் கவனித்துக்கொள்ளும் அளவுக்கான அனுபவங்களைப் பெற்றுவிட்டார் டொட்.

அதனால் 1979ம் வருடம் பசுக்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்பட்டது. தாத்தா, அப்பாவுடன் சேர்ந்து டொட்டும் பால்பண்ணையை நிர்வகிக்கத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 17தான். ஒரு நாள் டொட்டின் அப்பாவும், தாத்தாவும் பண்ணைக்கு வெளியில் நின்று புகைபிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்திருக்கிறார் டொட். 10 பசுக்களுடன் பண்ணை ஆரம்பித்ததாக தாத்தா சொல்ல, நான் 1000 பசுக்கள் கொண்ட ஒரு பண்ணையாக மாற்றிவிட்டேன் என்று டொட்டிடம் ஜாலியாக சொல்லியிருக்கிறார் அவரது அப்பா.

அப்போது, ‘‘நான் 20 ஆயிரம் பசுக்களைக் கொண்ட பெரிய பண்ணையாக மாற்றிக்காட்டுவேன்...’’ என்று சவால் விட்டிருக்கிறார் டொட். அன்றிலிருந்து தனது சவாலை ஜெயித்துக் காட்டும் நோக்கத்தில் இறங்கிவிட்டார்.

எண்பதுகளில் கலிபோர்னியா மட்டுமல்லாமல் நெவாடா மற்றும் கான்சாஸிலும் ‘டுல்ஸி’ன் பால்பண்ணை கிளை பரப்பியது. பசுக்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்தது.

டொட்டும் கல்லூரிப்படிப்பை முடித்தார். தாத்தாவும், தந்தையும் வழிகாட்ட  குடும்பத்துக்குச் சொந்தமான பால்பண்ணைகளைத் தனியாக நிர்வகிக்க ஆரம்பித்தார் டொட். அவர் நிர்வாகத்துக்கு வந்த ஐந்து வருடங்களிலேயே பசுக்களின் எண்ணிக்கை 3,800 ஆக உயர்ந்தது. கலிபோர்னியாவின் மிகப்பெரிய பால் பண்ணைகளில் ஒன்றாக வளர்ந்தது ‘டுல்ஸ் பால் பண்ணை’.

டொட்டிற்குத் திருமணம் நடந்தது. டி.ஜே.டுல்ஸ் என்ற மகன் பிறந்தார். 2000ல் அவரது குடும்பம் நெப்ராஸ்காவிற்கு இடம் பெயர்ந்தது. அங்கே அருகருகே ‘டபுள் டச்’ மற்றும் ‘பட்லர் கவுண்டி’ என்ற இரண்டு பால் பண்ணைகளைப் பிரமாண்டமாக ஆரம்பித்தார் டொட். இந்த இரண்டு பண்ணைகளிலும் சேர்த்து 10 ஆயிரம் பசுக்கள் பாலை உற்பத்தி செய்தன. பசுக்களின் மீது இயற்கையாகவே வெளிச்சம் விழும்படியாகவும், நன்றாக சுவாசிக்க இடம் இருக்கும்படியாகவும் பண்ணைகள் அமைக்கப்பட்டன.

பசுக்களைப் பராமரிக்கவும், மேய்ச்சல் விடுவதற்காகவும், இயந்திரங்களின் மூலம் பால் கறப்பதற்காகவும், பாலை விநியோகிக்கவும் நூற்றுக்கும் மேலானோர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

பால் மட்டுமல்லாமல் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாக பரிணமித்தது ‘டுல்ஸ்’. மகன் டி.ஜே.வும் குடும்ப பிசினஸில் இணைந்தார். ஜேனஸ்வில்லி என்ற இடத்தில் சுமார் 5000 பசுக்களுடன் மகனுக்காக ஒரு பண்ணையைத் திறந்தார் டொட். இந்தப் பண்ணையை மகனுடன் சேர்ந்து டொட்டும் கவனித்துக்கொண்டார்.

2011ல் மேலும் இரண்டு பண்ணைகள் திறக்கப்பட்டன. தனது அப்பாவிடம் விட்ட சவாலை வென்றுவிட்டார் டொட் டுல்ஸ். ஆம்; இன்று அமெரிக்காவில் ஏழு இடங்களில் இருக்கும் அவரது பால் பண்ணைகளில் 20 ஆயிரத்துக்கும் மேலான பசுக்கள் இருக்கின்றன. தினமும் குறைந்தபட்சம் 4 லட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்கிறது ‘டுல்ஸ் பண்ணை’.   

த.சக்திவேல்