நண்பகல் நேரத்து இலக்கியம்!
ஆரம்பித்த சில நாட்களிலேயே ஆரவாரமான வரவேற்பைப் பெற்ற தொடர், ‘இலக்கியா’. இப்போது ஆறு மாதங்களைக் கடந்து இன்னும் நிறைய ஆதரவுடனும் பாராட்டுகளுடனும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங் வந்திருக்கிறது. இந்நிலையில், ‘இலக்கியா’ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்தோம். ஹீரோயின் இலக்கியாவும், வில்லி பைரவியும் வார்த்தைகளில் மோதிக் கொள்ளும் பரபரப்பான காட்சி எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதை கவனித்தபடியே அடுத்த காட்சிக்காக தயாராகி நின்றார் ஹீரோவின் அப்பாவான வெங்கட்ராமன் கேரக்டரில் நடிக்கும் பரத் கல்யாண். அவரிடம் இலக்கியா ஜர்னி எப்படியிருக்கு எனக் கேட்டதும் மனம் நிறைய உற்சாகமானார். ‘‘நான் பல ஆண்டுகளுக்கு முன்னாடி சரிகம தயாரிச்ச சீரியல்ல நடிச்சேன். இப்ப நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சரிகமவிற்குப் பண்றேன். இது மதிய ஸ்லாட் சீரியல் என்றாலும் நல்ல வரவேற்பு கிடைச்சிருப்பது ரொம்ப சந்தோஷம் தருது’’ என்றவர், ‘‘இதுல நான் மூன்று பசங்களுக்கு அப்பாவாக நடிக்கிறேன். இந்த டீம் ரொம்ப ஜாலியானது. எல்லா ஆர்ட்டிஸ்ட்ஸும் சிறப்பாக நடிக்கிறாங்க. இந்த சீரியலை முதல்ல சாய்மருது சார் இயக்கினார். அவர் எல்லா விஷயங்களையும் விரல்நுனியில் வச்சிருப்பார். கேப்டன் ஆஃப் த ஷிப் மாதிரினு சொல்லணும்.
இப்ப இயக்குகிற ஸ்டாலின் சார் எப்படினா ரொம்ப ஜாலியான டைப். ஆனா, அதிகமாக பேசிக்கமாட்டார். என்ன வேலை வாங்கணுமோ அதை சரியாக வாங்கிடுவார். அதனால, தொடர்ந்து நல்லா போயிட்டு இருக்கு...’’ என மகிழ்ச்சியுடன் பரத் கல்யாண் குறிப்பிட, அவரின் மனைவியாக ஜானகி கேரக்டரில் கலக்கும் காயத்ரி தொடர்ந்தார். ‘மெட்டிஒலி’ சரோவாக, ‘ரோஜா’ கல்பனாவாக ரசிகர்களின் அன்பைப் பெற்றவர்.
‘‘நான் கடந்த மாசம்தான் ‘இலக்கியா’ டீம்ல சேர்ந்தேன். நான் ஏற்கனவே சரிகம நிறுவனத்துல ‘ரோஜா’ சீரியல்ல நான்கரை ஆண்டுகள் வொர்க் பண்ணியிருக்கேன். இதுல என் கேரக்டரை ஆரம்பத்துல ரூபஸ்ரீ மேடம் பண்ணினாங்க.
அவங்களால தொடர்ந்து பண்ணமுடியாத சூழல். அவங்களுக்குப் பதில் யாரை ரீப்ளேஸ் பண்ணலாம்னு நினைக்கிறப்ப, ‘ரோஜா’ சீரியல்ல கல்பனாவாக நடிச்ச காயத்ரியைப் போடலாம்னு பி.வி.ஆர் மேடம் முடிவெடுத்து கூப்பிட்டாங்க. நானும் ஏதாவது நல்ல புரொஜெக்ட் வந்தால் பண்ணலாம்னு இருந்தேன். இதன் ஸ்டோரி லைன் நல்லாயிருந்தது. உடனே ஏத்துக்கிட்டேன்.
இதுல ப்ரியா பிரின்ஸ், ஹீமா பிந்து கூட முதல்முறையாக வொர்க் பண்றேன். எல்லாருமே சிறந்த ஆக்டர்ஸ். காயத்ரி ப்ரியா, பரத் கல்யாண், சதீஷ் இவங்களை எல்லாம் ஏற்கனவே தெரியும். அவங்களுடன் நிறைய புரொஜெக்ட்ஸ் பண்ணியிருக்கேன். நல்ல டெக்னீசியன்ஸ்; நல்ல டீம். இப்பவரை நல்லா போயிட்டு இருக்கு.
‘ரோஜா’வுல வெகுளித்தனமான ஒரு கேரக்டர். இதுல ஒரு நல்ல அம்மாவாக நடிக்கிறேன். ஆரம்பத்துல அடிக்கடி பி.வி.ஆர் மேடத்திற்கு மெசேஜ் பண்ணி இது ஓகேவானு எபிசோட் பார்த்து சொல்லச் சொல்லிக் கேட்பேன். அவங்க நிறைய கைடு பண்ணினாங்க. இயக்குநர் ஸ்டாலின் சாரும், ஆர்ட்டிஸ்ட்களும் ரொம்ப உதவி பண்ணினாங்க. சந்தோஷமாக இருக்கு...’’ எனச் சிரித்தார் காயத்ரி. பிறகு, நெகட்டிவ் ரோலில் பைரவி கேரக்டரில் அசத்தும் ப்ரியா பிரின்ஸிடம் பேசினோம். ‘கண்ணான கண்ணே’ மேனகாவாக நமக்கு பரிச்சயமானவர். ‘‘முதல்ல இந்தக் கேரக்டரை வேறொரு ஆர்ட்டிஸ்ட் பண்ணிட்டு இருந்தாங்க. நானும் ரீப்ளேஸ்மென்ட்டாகத்தான் வந்தேன். இதுக்கு முன்னாடி ‘கண்ணான கண்ணே’ல வில்லியாக பண்ணினேன். அது முடியும்போது எனக்கு இது கிடைச்சது. நான் பெர்ஃபாமன்ஸ் ஓரியண்ட் உள்ள கேரக்டர்னாதான் செய்வேன். இதுல பெர்ஃபாமான்ஸ் பண்ற வாய்ப்பு இருக்கிறதால இந்தக் கேரக்டரை ஏத்துக்கிட்டேன்.
பொதுவாக, எனக்கு நெகட்டிவ் ரோல்தான் பிடிக்குது. ஏன்னா, அதுலதான் பெர்ஃபாமான்ஸ் பண்ணமுடியும். இந்த இண்டஸ்ட்ரியில் என் முதல் கேரக்டரே வில்லிதான். இதனால, நெகட்டிவ் கமெண்ட்ஸ் நிறைய வரும். எனக்கு உங்கள பிடிக்காதுனு நேர்லயே வந்து சொல்றவங்களும் இருக்காங்க. அதை என் கேரக்டருக்கும், என் நடிப்பிற்குமான வெற்றியாக நினைக்கிறேன்.
இந்த ‘இலக்கியா’ குடும்பம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. காயத்ரி ப்ரியா, பரத் கல்யாண், நந்தன், காயத்ரினு எல்லாரும் என் ஃப்ரண்ட்ஸ்தான்...’’ என அவர் மகிழ்ச்சியாக சொல்லும்போதே, அவருடன் இணைந்து நெகட்டிவ் ரோலில் அஞ்சலியாக நடிக்கும் சுஷ்மா நாயர் வந்தார். ‘‘என் முதல் சீரியல் சன் டிவியில் வந்த ‘நாயகி’. மறுபடியும் சன் டிவியில் இன்னொரு நல்ல புரொஜெக்ட் பண்ணணும்னு நினைச்சிட்டு இருந்தேன். அப்பதான் ‘இலக்கியா’ வாய்ப்பு வந்தது. இந்த சீரியல்ல முதல்ல தேர்ந்தெடுக்கப்பட்டது நான்தான்.
‘நாயகி’யில் நான் நெகட்டிவ் செய்தேன். அதுல அனன்யா கேரக்டர் மக்களுக்கு நல்ல ரீச்சாகியிருந்தது. இப்பவரை பலரும் அனன்யானுதான் கூப்பிடுறாங்க. இப்ப மதியம் சீரியல் பார்க்கிறவங்க மட்டும் என்னை அஞ்சலினு ஞாபகத்துல வச்சிருக்காங்க. எனக்கு சொந்தஊர் பெங்களூர்.
காஸ்டியூம் டிசைனராக கன்னடப் படங்கள்ல என் ஜர்னியை தொடங்கினேன். ஃபேஷன் டிசைனிங் மாணவியாக இருக்கும்போது என்னுடைய ஃபைனல் இயர்ல ஒரு படம் பண்ணினேன். அதுல ரெண்டு ஹீரோக்கள் நடிச்சாங்க. அதுல ஒருவர் சன் டிவியில் தமிழ் சீரியல்ல நடிச்சிட்டு இருந்தார். அவர் 2018ல் சன் குடும்ப விருதுகளுக்கு என்னை அழைச்சிட்டு வந்தார்.
அப்ப எனக்கு எதுவும் தெரியாது. சும்மா வந்தேன். அந்நேரம், சத்யஜோதி பிலிம்ஸ்ல பார்த்திட்டு என்னை நடிக்க கேட்டாங்க. சரி, ஒரு புது அனுபவம் கிடைக்குமேனு வந்தேன். அப்புறம், அந்தக் கம்பெனி மேனேஜர் உள்ளிட்டவங்களுக்கு என் நடிப்பு பிடிச்சிருந்ததால மற்ற கம்பெனிகளுக்கு என் போட்டோஸ் எல்லாம் அனுப்பினாங்க.
அப்படிதான் ‘நாயகி’ பண்ணினேன். எனக்கு ஆக்டிங் அவ்வளவா தெரியாது. ஆனா, ஆர்வம் இருந்தது. காஸ்டியூம் டிசைனராக சினிமாவுக்குள்ள இருக்கணும்னுதான் நினைச்சேன். இப்ப நடிப்பு முழுநேரமாகவும், காஸ்டியூம் பகுதிநேரமாகவும் ஆகிடுச்சு.
சன் டிவியில் ‘நாயகி’க்கு பிறகு ‘திருமகள்’ பண்ணினேன். அந்நேரம், திருமணமாச்சு. என் கணவருடன் துபாய்ல செட்டிலாகுற மாதிரி இருந்தது. பிறகு, ரெண்டாவதாக கோவிட் வந்திடுச்சு. அதனால, ‘என்றென்றும் புன்னகை’, ‘செந்தூரப்பூவே’னு வேற சேனல்ல பண்ணினேன். எனக்கு பெரும்பாலும் ரீப்ளேஸ்மென்ட்டாகவே வந்தது. ஆனா, ‘இலக்கியா’வில்தான் அஞ்சலியாக முதல்ல இருந்தே நடிக்கிறேன்.மக்கள் கமெண்ட்ஸ் ரெண்டுவிதமாக இருக்கு. சிலர் நல்லா பண்றீங்கனு சொல்வாங்க. சிலர் கழுவி ஊத்துவாங்க. ஆனா, எல்லா வகையான கமெண்ட்ஸுக்கும் சந்தோஷப்படுவேன். என் நடிப்புக்கு கிடைக்கிற பாராட்டு இல்லையா..?
‘இலக்கியா’ எனக்கு புது டீம். இப்ப ப்ரியா மேடம், காய்தரி மேடம் எல்லாம் ரொம்ப க்ளோஸாகி இருக்காங்க...’’ என புன்னகைத்தார் சுஷ்மா நாயர். தொடர்ந்து ஹீரோவாக கௌதம் கேரக்டரில் நடிக்கும் நந்தனிடம் பேசினோம். ‘‘நான் காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போது பாலுமகேந்திரா சாரை மீட் பண்ணும் வாய்ப்பு கிடைச்சது.
அவர் என்னை வைத்து ஒரு படம் தொடங்கும்படி இருந்தது. ஆனா, அது பூஜைக்கு முன்னாடி நின்னுடுச்சு. அப்ப அவருடன் பழகிய நாட்களும், அவர் சொல்லித்தந்த விஷயங்களுமே எனக்கு சினிமா ஃபீல்டுல ஆர்வத்தைத் தூண்டியது. அப்படியே சின்னத்திரைக்குள் வந்திட்டேன். நான் சன் டிவியில் இதுக்கு முன்னாடி ‘சித்தி 2’ சீரியல்ல நடிச்சேன். அதுல கவின் கேரக்டர் நல்ல பெயர் வாங்கித் தந்தது. அது முடிஞ்சதும் உடனே சரிகமவுல இருந்து, ‘அடுத்து ஒண்ணு ஆரம்பிக்கிறோம். நீங்க பண்ணணும்’னு கேட்டாங்க. அப்படித்தான் வந்தேன். நான் எதிர்பார்த்தமாதிரியே நல்ல டீம். நல்ல புரொஜெக்ட். சன் டிவி மாதிரி ஒரு பெரிய பிளாட் ஃபார்ம். நல்லபடியாக அமைஞ்சது சந்தோஷமாக இருக்கு.
‘சித்தி 2’ல என் கவின் கேரக்டர் ரீச்சானதால, இதுல என்னை கௌதம் கேரக்டராக பார்க்க கொஞ்ச நாட்கள் ஆகும்னு நினைச்சேன். ஆனா, மக்கள் எப்படி கவின் கேரக்டருக்கு அன்பு தந்தாங்களோ அதுக்கு சமமா இந்தக் கேரக்டருக்கும் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இவ்வளவு சீக்கிரம் இது கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல. ஏன்னா, நாங்க இன்னும் 200 எபிசோடுகள் கூட தொடல. அதுக்குள்ளயே இவ்வளவு வரவேற்பும், அன்பும் கிடைச்சிருப்பது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம். எல்லோருக்கும் நன்றி...’’ என்றார் நந்தன்.
பிறகு, கதாநாயகி ஹீமா பிந்துவிடம் ‘இலக்கியா’ பற்றிக் கேட்டோம். ‘‘என் முதல் சீரியல் ‘இதயத்தை திருடாதே’ பண்றப்ப நல்ல பாப்புலாரிட்டி கிடைச்சது. அதன்பிறகு நிறைய ஆஃபர்ஸ் வந்தது. அப்ப நான் மூவி பண்ணணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
அந்நேரம், சரிகமவுல இருந்து பி.ஆர்.வி மேடம் கால் பண்ணி ‘நல்ல சேலஞ்சிங்கான கேரக்டர்’னு ஊக்கப்படுத்தினாங்க. அப்படியாக நான் ‘இலக்கியா’ ஆனேன். இப்பவரை சிறப்பாகப் போயிட்டு இருக்கு. இதுல நாம் எந்த கருத்து சொன்னாலும் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்றாங்க. ஆர்ட்டிஸ்ட் டீமாகட்டும், டெக்னீசியன் டீமாகட்டும் எல்லாருமே முழு உழைப்பைக் கொடுத்து வேலை செய்றோம். நல்ல அவுட்புட் வரணும்னு நினைச்சு அவ்வளவு மெனக்கெடுறோம்.
வெளியில் போகும்போதும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. ‘இலக்கியா’னு கூப்பிடுறப்ப மக்களுடன் கனெக்ட்டாகிட்டோம்னு மகிழ்ச்சியாக இருக்கு. 180 எபிசோடுகள் போனதே தெரியல.
இதுல ஒரேமாதிரியான பேட்டர்ன் இல்லாமல் ஏதாவது புதுசா பண்ணினால்தான் நிறைவாக இருக்கும். அதுக்கான மாற்றங்கள் வரப்போகுது. இன்னும் இம்ப்ரூவ் பண்ணணும்னு மொத்த டீமும் வொர்க்ல கவனம் செலுத்தி வேலை செய்றோம். இனிமே ‘இலக்கியா’ இன்னும் நல்லா போகும். வெயிட் அண்ட் ஸீ...’’ என நம்பிக்கை மிளிர சொன்னார் இலக்கியா @ ஹீமா பிந்து.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|