தீபாவளிக்கு பெருமை சேர்த்த தமிழன்!
எட்டயபுரம்! பாரதியாரை ஆதரித்த ஊர். பாரதியின் (கலைமகள்) அருள் நிறைந்த ஊர். அதனால்தானோ என்னவோ, பாவலரும் நாவலரும் அங்கே குவிந்து கொண்டே இருந்தார்கள். 1835ம் ஆண்டு. தீபாவளிக்கு சரியாக மூன்று மாதங்கள் முன்பு, அந்த ஊரை நோக்கி ஒரு சிறு கூட்டம் சென்று கொண்டிருந்தது. அந்த கூட்டத்தின் முன்னே நடு நாயகமாக ஒருவர் இருந்தார். 59 வயதிருக்கும். தேசு பொருந்திய தேகம். ஒரு கதர் வேட்டியை கச்சம் வைத்து இடையில் கட்டியிருந்தார். அவருக்கு அது கச்சிதமாக இருந்தது.
 தோளில் ஒரே ஒரு வஸ்திரம். கழுத்தில் அழகிய ருத்ராட்ஷ மாலை. அவரது நடையின் அசைவுக்கு ஏற்ப அவரது மார்பில் அது அசைந்தபடி இருந்தது. இசை பாடிப் பாடி சிவந்த இதழ் அவருக்கு. இன்றும் கடமையே கண்ணாக அது பாடிக்கொண்டுதான் இருந்தது.
அவர் பாடி இடைவெளி விட்டபோது அவரோடு வந்தவர்கள், அவர் பாடியதை திரும்பிப் பாடினார்கள். வானில் பறந்த கிள்ளைகளும் குயில்களும் யார் அது நமது குரலுக்கே போட்டியாக இருப்பது என்று ஒரு நொடி நின்று பார்த்துப் போயின. இந்தக் கூட்டம் ஊர் எல்லையை அடையவும், மேள வாத்தியங்கள் முழங்கின. எட்டயபுரத்து அரசன், ஞானத்தில் பூரணமான அந்த புங்கவரை பூரண கும்பம் கொண்டு வரவேற்றான்.
தடபுடலாக வரவேற்பு நடக்கும் சமயத்தில் யார் கண் திருஷ்டி பட்டதோ தெரியவில்லை... வந்திருக்கும் மகானுக்கு மரியாதை செய்ய அரசன் கொண்டுவந்த பட்டத்து யானைக்கு மதம் பிடித்துவிட்டது. அரசனுக்கோ குலையே நடுங்கியது. தனது உயிரினும் மேலாக அவன் மதிக்கும் மக்களுக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என அஞ்சினான். செய்வதறியாது திகைத்தான். மக்களும் நான்கு பக்கமும் சிதறி ஓட ஆரம்பித்தனர். யானை கண்ணில் பட்டதை எல்லாம் துவம்சம் செய்ய ஆரம்பித்தது.
ஊர் எல்லையில் இருந்த அந்த மகான் மெல்ல புன்னகை பூத்தார். பிறகு தனது இடுப்பில் இருந்த ஒரு பையில் கையை விட்டவர், அதிலிருந்த விபூதியை அள்ளிக்கொண்டார். விரதம் இருந்து, ஜெபம் செய்து, கீர்த்தனை பாடி மெலிந்து போன அந்த மகான் யானையின் முன்னே பெரிய வீரனைப் போல சென்று நின்றார். அவரைப் பார்த்தவுடன் யானை மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது போல, அவரை உதைக்க எடுத்த காலை அப்படியே தரையில் வைத்து விட்டது.
இந்த மகான் யானையின் முன்னே தனது வலது கையை நீட்டி, விரல்களை விரித்தார். அதில் விபூதி ஜொலித்தது. ஏதோ மந்திரம் சொல்லி விபூதியை யானையின் முகத்தில் ஊதினார். அவ்வளவுதான். யானையின் மதம் தணிந்து, அவரைப் பணிந்தது. அவர் கை தட்டி ஏதோ செய்கை செய்தார். யானை, ஏதோ பெரிதாகப் புரிந்தது போல தலையை அசைத்து விட்டு அவரை வணங்கி, ஊர் மயானத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் போய் அமர்ந்தது.
நடந்த இந்த அற்புதத்தைக் கண்டு திக்பிரமை பிடித்தது போல கூட்டம் பல நொடிகள் அமைதியாக இருந்தது. ஒரு வழியாக சுயநினைவுக்கு வந்த மக்கள் ‘‘முத்துசாமி தீட்சிதர் வாழ்க வாழ்க...’’ என்று கோஷமிட்டனர். ஆம்; சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர்தான் அவர். வைத்தீஸ்வரன் கோயில், தையல் நாயகி அருளால் ராமசாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மாளுக்கும் பிறந்தவர். சிதம்பர தாச சுவாமிகள் என்ற பெரிய மகானுக்கு தொண்டு செய்து அவரோடு காசிக்குச் சென்று பல அரிய மந்திர உபதேசம் பெற்றவர்.
உபதேசமாகிய மந்திரம் சித்தியானதா என்பதை அறிய குருவின் ஆணைப்படி கங்கையில் இறங்கினார். கற்ற மந்திரம் சொல்லி, கையில் கங்கையை அள்ளினார். இந்திரஜாலம் போல அந்த நீர் ஒரு வீணையாக மாறியது. அந்த வீணையின் பானையில் ‘ ராம’ என்ற தாரக மந்திரம் பொறிக்கப் பட்டிருந்தது. ஆனந்தமாக குருவிடம் வீணையை எடுத்துக்கொண்டு ஓடி அவரிடம் காட்டி, தண்டனிட்டார். புன்னகைத்தபடி குரு, ‘‘நீ மனதில் வீணையை எண்ணி மந்திரம் சொல்லி கங்கையை அள்ளினாய்.
கலைவாணியின் வீணையே உன் கைக்கு வந்துவிட்டது. இதுவே உனக்கு மந்திரம் சித்தியாகிவிட்டது என்பதற்கு அறிகுறி...’’ என்று வலது கையை உயர்த்தி தனது அருமை சீடனுக்கு ஆசி வழங்கினார் எட்டயபுரம் வரும் வழியில் பல ஊர்கள் மழையில்லாமல் வறண்டு வெறிச்சோடி இருந்தன. அதைக் கண்டு மனம் நொந்த தீட்சிதர், ‘‘ஆனந்தாம்ருதகர்ஷினி...’’ என்று அமிர்த வர்ஷினி ராகத்தில் பாடினார். ‘‘வர்ஷய வர்ஷய வர்ஷய...’’ ( மழை பொழிக! பொழிக! பொழிக!) என்று பாடியதுதான் தாமதம். மழை கொட்டித் தீர்த்தது. ஏரி, குளம் குட்டை எல்லாம் நிரம்பியது. ஆனாலும் மழை விட்ட பாடு இல்லை.
உத்தமரின் சத்திய சொல்லிற்காக பெய்யும் மழை அவர் சொல்லாமல் நிற்குமா? இப்போது அவர் ‘‘ஸ்தம்பய! ஸ்தம்பய! ஸ்தம்பய!’’ (நிற்க! நிற்க! நிற்க) என்று பாடினார். நொடியில் மழை நின்றது. சங்கீதத்தால் இயற்கையையே கட்டுப்படுத்திய வித்தகரை அந்த ஊரே போற்றித் துதித்து வணங்கியது. இசை என்னும் இன்னமுதால் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் ஏராளம். கீர்த்தனை பாடி மாணவனின் தீராத குரு கிரக தோஷத்தையும், அதனால் வந்த தீராத வயிற்றுவலியையும் தீர்த்ததை சொல்வதா? இல்லை, தங்க நகை வேண்டும் என்று கேட்ட மனைவிக்காக கீர்த்தனை பாடி திருமகளை அவளது கனவில் வரவைத்து, ஆஸ்தி செல்வத்தை விட பக்தி என்னும் ஆஸ்தீக செல்வமே உயர்ந்தது என்று உணர வைத்ததை சொல்வதா?
இப்படிப்பட்ட ஒரு மகான், தன் ராஜ்ஜியத்திற்கு வருகிறார் என்று தெரிந்தவுடன் மன்னன் அவரை வரவேற்க தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தான். அந்த ஏற்பாடு தீட்சிதரின் பெருமைக்கு மேலும் பெருமையே சேர்த்தது. பல வருடங்களுக்கு ஒரு முறைதான் இதைப் போன்ற மகான்கள் பூமியில் பிறக்கிறார்கள். அப்படி அரிதாகப் பிறக்கும் அவர்களை அடைந்து நம் கர்ம வினையைக் கழிக்க வேண்டும் இல்லையா? அதனால், தானும் தன் மக்களும் உய்ய அவர் எட்டயபுரத்தில் சிலகாலம் தங்கவேண்டும் என்று மன்னன் வேண்டிக்கொண்டான். மன்னனின் அன்பிற்குக் கட்டுப் பட்ட தீட்சிதர் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
தீட்சிதர் எட்டயபுரம் வந்து மூன்று மாதங்களானது. அவரது பாடலைக் கேட்டபடியே நாட்களைக் கழித்த அவ்வூர் மக்களுக்கு அது மூன்றே மூன்று நொடிகளைப் போல இருந்தது. தீபாவளி நன்னாளும் வந்தது. அனைவரும் காலையில் சீக்கிரம் எழுந்து கங்கா ஸ்நானம் முடித்து புத்தாடை உடுத்திக் கொண்டு தீட்சிதரின் இருப்பிடம் வந்தார்கள். அங்கே வழக்கம்போல கர்நாடக இசை செவிகளுக்கு இதமாக ஒலித்துக் கொண்டிருந்தது. செவிக்கு இதம் தந்த அது மனதுக்கு அமைதியையும் நெகிழ்வையும் தந்தது. சொக்கிப் போய் ஊரே அதைக் கேட்டு நின்று கொண்டிருந்தது.
தீட்சிதர் பூஜை செய்து கொண்டிருந்தார். அவர் எதிரே அழகாக ஒரு மீனாட்சி அம்மன் விக்ரகம். அதற்கு செம்பட்டு உடுத்தி, அரசன் சமர்ப்பித்த, வைரம், வைடூரியம், முத்து, கோமேதகம் இழைத்த நகைகளைச் சூட்டியிருந்தார். அவை அம்மையின் மேனியை அடைந்ததும் புதுப்பொலிவை அடைந்து மின்னின. ஜாதி, மல்லி, முல்லை, இருவாச்சி, அரளி என்று விதவிதமாக மலர்மாலைகளை அணிவித்திருந்தார். அவர் ஏற்றிய குங்கிலிய வாசமா, இல்லை அவர் அம்மைக்கு சூட்டிய மலர்களின் வாசமா, இல்லை அவர் அம்மையை அர்ச்சிக்கும் தாழம்பூ குங்குமத்தின் வாசமா... தெரியவில்லை. ஆனால், அங்கே இன்னது என்று சொல்ல முடியாத ஒரு தெய்வீக வாசம் மனதைப் பிடித்து இழுத்தது. அம்மையின் திருமேனியோ கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அனைவரும் மனம் லேசானது போல உணர்ந்தார்கள்.
அர்ச்சித்து முடித்த தீட்சிதர் பூஜை அறையை விட்டு வெளியில் வந்து ஆசனத்தில் அமர்ந்தார். அவரது முகத்தில் என்றும் இல்லாத ஒரு அமைதியும் சந்தோசமும் அன்று நிலவியது. மெல்ல தனது கையை அசைத்து ‘‘மீன லோசனி பாப மோசனி...’’ எனத்தொடங்கும் தனது கீர்த்தனையைப் பாடச் சொன்னார். சீடர்கள் பாட ஆரம்பித்தார்கள். தீட்சிதர், தான் பூஜிக்கும் மீனாட்சி விக்ரகத்தை உருக்கமாக ஒரு முறை பார்த்தார். பிறகு மெல்ல கை குவித்து கண்களை மூடினார். அவரது உள்ளத்தில் வீசும் பக்தி அலை அவரது விழி வழியே நீர்த் துளியாக சிந்தியது. அப்போது பாட்டும் உச்சத்தை அடைந்தது. தீட்சிதரே பாட ஆரம்பித்தார்!
‘‘சிவே பாஹி! சிவே பாஹி! சிவே...’’ (மங்கள ரூபிணியே ரட்சிப்பாய்!) என்று கைகளை சிரத்தின் மேல் குவித்து உருகி உருகிப் பாடினார். ‘‘சிவே...’’ என்று அடுத்த சங்கதியை எடுக்க வந்தார். அதை முடிப்பதற்கு முன் அவரது உடல் பூமியில் சரிந்தது. அவரது சிரத்தில் இருந்து கிளம்பிய ஒளி சொல்லி வைத்தது போல பூஜை அறைக்குள் நுழைந்து, மீனாம்பிகை பாதத்தில் சென்று கலந்தது.
அன்புக் குழந்தையின் மழலை பாடலை இனியும் பூமிக்கு வந்து கேட்க அவளுக்கு விருப்பமில்லை போலும். என்னுடனேயே எனக்கருகிலேயே இருந்து பாடிக் கொண்டே இரு... நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்... என்று அம்பிகை தீட்சிதரை அழைத்துக் கொண்டாள். தமிழகத்தில் பிறந்து இசையில் பல சாதனைகள் செய்து, இசையால் இறைவனை மயக்கி, இசையால் இறைவனை அடையலாம் என்று காட்டிய தீட்சிதர் பெருமையைச் சொல்ல ஆயிரம் பேர் வந்தாலும் முடியாது.
இன்றும் அவரது பாடல்களை அடிப்படையாக வைத்து பல திரை இசைப் பாடல்கள் வந்து சக்கைப்போடு போடுவதை இசைக் கலைஞர்கள் நன்கு அறிவார்கள். இப்படி இசைக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த இந்தத் தமிழர் இறைவனடி சேர்ந்த தீபாவளி அன்று அவரை வணங்கி நல் அருள் பெறுவோம்.
- ஜி.மகேஷ்
|