Climate Change... விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரஜினி நண்பர்!
‘‘கடந்த பதிமூன்று ஆண்டுகளா நான் காலநிலை மாற்றம் பற்றின விழிப்புணர்வுக்காக நடந்திட்டும், பேசிட்டும் இருக்கேன். இந்தக் காலநிலை மாற்றம் எல்லாத்தையும் பாதிக்கும். ஆனா, ஒரு தவறும் செய்யாத பாமர மக்கள் தான் இப்பவரை இதனால் அதிகம் பாதிக்கப்படுறாங்க. வெள்ளம் வந்தாலும் சரி, வறட்சி ஏற்பட்டாலும் சரி... ஏற்கனவே பலவீனமா இருக்கிற அவங்க மீதே அடிமேல் அடிவிழுது.
 அதனால்தான் காலநிலை மாற்றத்திற்கு நீதி வேண்டும்னு நடக்கறேன். நான் சுற்றுச்சூழல் நிபுணரோ, காலநிலை மாற்றம் பற்றின சயின்டிஸ்ட்டோ கிடையாது. நான் ஒரு ‘கிளைமேட் ஜஸ்டிஸ் வாக்கர்’ அவ்வளவுதான்...’’ அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் புஷ்பநாதன் கிருஷ்ணமூர்த்தி. 
பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும் படித்து வளர்ந்ததெல்லாம் கர்நாடகாவில். இப்போது இங்கிலாந்து சிட்டிசன். காலநிலை மாற்றத்திற்காகவும், பூமி வெப்பமயமாவதை தடுக்க வேண்டியும் தொடர்ந்து போராடி வருபவர்.கான்ஃபரன்ஸ் ஆஃப் பார்ட்டிஸ் எனப்படும் காலநிலை மாற்றம் சம்பந்தமான உலக நாடுகள் மாநாடு நடக்கும்போதெல்லாம் அதை நோக்கி நடைப்பயணம் செல்வார்.
 வழியில் காலநிலை மாற்றம் சம்பந்தமாகவும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மக்களுடன் உரையாடுவார். இதுவரை மூன்று கோடியே 30 லட்சம் ஸ்டெப்ஸ் நடந்திருப்பதாகக் குறிப்பிடும் புஷ்பநாதன் சுமார் ஆறு லட்சம் மக்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். 
‘‘ஒருவருக்குக் காய்ச்சல் 102 டிகிரிக்கு மேல் போனால் உயிருக்கு ஆபத்தான நிலை வந்திடும் இல்லையா? அதுமாதிரி நம்ம பூமி இப்ப இருக்கு. அடுத்த பத்தாண்டுகள்ல வெப்பம் இன்னும் 1.5 டிகிரி கூடிடும்னு சொல்றாங்க. இப்பவே வெப்பமயமாதலால் நமக்கு மழையும், வெயிலும் மாறிமாறி வருது.1.5 டிகிரியா கூடினபிறகு அடிக்கடி மழையும், வெயிலும் இருந்திட்டே இருக்கும்.
இதுக்காக என்ன பண்ணணும்? யார் பொறுப்பு? இதைப் பத்திதான் பேசிட்டு இருக்கோம். இதுக்கு மூலகாரணம் பணக்கார நாடுகள். அவங்கதான் எரிபொருட்களை அதிகளவில் பயன்படுத்தி நிறைய கார்பனை வெளியிடுறாங்க.

அதிக கார்பனை வெளியிடும் நாடுகள்ல சீனா முதல் இடத்துல இருக்கு. அடுத்து அமெரிக்காவும், மூன்றாவது இடத்துல இந்தியாவும் இருக்கு. சமீபத்துல இந்திய பிரதமர் மோடி 2070ல் இந்தியா கார்பன் வெளியிடுவதில் நடுநிலைக்கு வந்திடும்னு அறிவிச்சிருக்கார். ஆனா, அது அதிகமான காலம். அதுக்கு முன்னாடியே வேகமாக நாம் செய்தாகணும்.
இல்லனா, காலநிலை மாற்றத்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இப்பவே சென்னையின் கடல்மட்டம் 5 ஆண்டுகளில் ஏழு செமீ உயரும்னு அறிக்கை வந்திருக்கு...’’ என்கிறவரிடம், நடைப்பயணத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்றோம்.
‘‘அதுக்குமுன்னாடி என் லைஃப் ஜர்னியை சொல்லிடுறேன். அப்பதான் இந்த நடைப்பயணக் கதை புரியும். என் அப்பா பெயர் கிருஷ்ணமூர்த்தி. அம்மா பெயர் கோகிலம். அவங்களுக்கு பூர்வீகம் தஞ்சாவூர். ஆனா, இந்தியா சுதந்திரம் அடைஞ்சப்ப பெங்களூர் வந்திட்டாங்க. அப்பா காப்பி பிசினஸ்மேன்.
என் ஏழு வயது வரை ரொம்ப நல்லாயிருந்தோம். பிறகு அப்பாவுக்கு பிசினஸ் நஷ்டமாகி பத்தாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். நாங்க வீட்டுல ஐந்து பேர். நான் நான்காவது பையன். அம்மாதான் காப்பி பவுடரும், சாப்பாடும் வித்து எங்களை படிக்க வச்சார். ரொம்பக் கஷ்டப்பட்டு வளர்ந்தோம். அதனால ஏழை எளிய மக்களின் கஷ்டங்கள் எனக்கு நல்லா தெரியும். நான் பெங்களூர் ஆச்சார்யா பாடசாலையில் படிச்சப்ப சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் என்னுடன் படிச்சார். நாங்க ரெண்டு பேரும் நிறைய டிராமாவுல நடிச்சிருக்கோம். கிளாஸை கட் அடிச்சிட்டு நானும் அவரும் நடிகர் ராஜ்குமார் படங்கள் எல்லாம் பார்த்திருக்கோம். அதுஒரு காலம். இப்ப அவர் தொடர்புல இல்ல. பிறகு நான் பியூசி முடிச்சிட்டு பி.எஸ்சி அக்ரி படிச்சேன். அடுத்து, ஆந்திரா மாநிலத்துல ஒரு என்ஜிஓவுல 150 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்தேன். அந்தக்காலத்துல என்ஜிஓனு சொல்லமாட்டாங்க. சமாஜ்னு சொல்வாங்க. அதை டேனிஷ் சர்ச் ஒண்ணு நடத்தினாங்க. நான் வேளாண் உதவியாளரா போய் நிறைய கத்துக்கிட்டேன்.
அந்நேரம், பிரதமர் இந்திராகாந்தி வங்கிகளைத் தேசியமயமாக்கினார். அப்ப அக்ரிகல்ச்சர் லோன் கொடுக்க, ஃபீல்டு ஆஃபீசர் போஸ்ட்டுக்கு எடுத்தாங்க. அதுல தேசிய அளவுல தேர்ந்தெடுக்கப்பட்டேன். பிறகு, அவங்க சிண்டிகேட் வங்கியில் பணி நியமனம் செய்தாங்க. அப்படியாக, பீஜப்பூர் பகுதியில் வேலை செய்தேன். அங்க நிறைய பணிகளை முன்னெடுத்தோம். அப்ப இங்கிலாந்துல இருந்து ஆக்ஸ்ஃபாம்னு (Oxfam) வறுமை, வறட்சி சார்ந்து இயங்கக்கூடிய என்ஜிஓ வந்தாங்க.
இங்க வந்து என் பணியைப் பார்த்திட்டு அவங்களுடன் இணைய சொன்னாங்க. பிறகு ஆக்ஸ்ஃபாம் என் வங்கியில் பேசி ரெண்டு ஆண்டுகள் வாடகைக்கு எடுத்தாங்க. அவங்க பணி, ஏழை மக்களுக்கு உதவுறது என்பதால் எனக்கு பிடிச்ச விஷயம்னு ஓகே சொன்னேன்.அந்நிறுவனத்துக்காக தமிழ், கன்னடா, தெலுங்குனு மூணு மாநிலங்கள்ல பணிகள் செய்தேன். தமிழ்நாட்டுல நம்மாழ்வார் கூட சேர்ந்து பணிகளை முன்னெடுத்திருக்கேன். அவரும் நானும் சைக்கிள் எடுத்திட்டு ராமநாதபுரம் முழுவதும் அலைஞ்சிருக்கோம். அவர்தான் எனக்கு ‘கோச்’ மாதிரி. நிறைய கற்றுக் கொடுப்பார். அப்ப அவர் ‘குடும்பம்’னு ஒரு அமைப்பை நடத்திட்டு இருந்தார்.
1980ல் இருந்து 1987 வரை இங்க வேலைகள் செய்தேன். இடையில் வங்கி வேலையை விட்டுட்டேன். அடுத்து நான் ஆக்ஸ்ஃபாம்ல இந்தியா ஹெட்டா வந்திட்டேன். பிறகு தென்னாப்ரிக்கா, ஜாம்பியா, மலாபினு தென்பகுதி ஆப்ரிக்க நாடுகளுக்கு தலைமையேற்றேன். அடுத்து கிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியானு வேலைகள் செய்தேன்.
உகாண்டாவில் ஒரு ஏழை அம்மாவை சந்திச்சப்பதான் எனக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் தெரிஞ்சது. அந்த அம்மா பசிக்குதுனு சொன்னாங்க. உணவு கொடுத்தேன். அவங்க குடும்பத்துலயும் சாப்பாடு கிடையாது. அவங்களுக்கு அரசு உதவி செய்தாலும் அது போதுமானதா இல்ல. அவங்க எல்லாரும் சேர்ந்து பயிர் செய்தப்ப மழை வரல. அதனால, வறட்சியாகிடுச்சு. பட்டினியால் வாடினாங்க.
நாங்க அந்த மக்களுக்காக ஏதாவது செய்தாலும் பருவநிலை மாற்றத்தால் அடிபட்டுக்கிட்டே இருந்தாங்க. வெள்ளம், வறட்சி, நோய்னு வரும்போது அதை தாங்க முடியாமல் இறப்புகளும் நடந்தது. அது என் மனசை பாதிச்சது. இதனால நான் வறுமை, வறட்சி, காலநிலை சார்ந்து போகும் நாடுகள்ல இதுபற்றி பேசினேன். எட்டு ஆண்டுகள் உலகளாவிய பிரசாரம் செய்தேன். நியாயமான வர்த்தகம் பற்றி பேசினேன். 2009ல் இருந்து கிளைமேட் ஜஸ்டிஸ் வாக்கரா மாறினேன்.
அந்நேரம், டென்மார்க் கோபன்ஹேகன்ல காலநிலை மாற்றம் சம்பந்தமான மாநாடு நடந்தது. ஒபாமா எல்லாம் வந்தார். அதனால, என் ஊரான ஆக்ஸ்போர்டுல இருந்து கோபன்ஹேகன் வரை சுமார் 600 கிமீ தூரம் நடந்தேன். அதுதான் என் முதல் நடைப்பயணம். அப்ப என்னை யாருக்கும் தெரியாது. இங்கிலாந்துல இது ஆப்ரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான பிரச்னைனு நினைச்சு பரிதாபப்பட்டாங்க. பிறகு என்னைப் பத்தி ரேடியோவில், பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ‘கார்டியன்’, ‘பிபிசி’ எல்லாம் செய்திகள் வெளியிட்டதால ராக் ஸ்டார் மாதிரி ஆகிட்டேன். அதைப் பார்த்து நிறையப் பேர் சப்போர்ட் செய்தாங்க.
நடக்கும்போது, ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை’னு பாரதி பாடலைப் பாடினேன். அதனால, தமிழ் மக்களும் சப்போர்ட் செய்தாங்க. என்னை எல்லோரும் புஷ்னுதான் அழைப்பாங்க. அப்ப பலரும் கோ புஷ் கோனு அப்ளாஸ் செய்தாங்க. அந்த மாநாட்டுப் பகுதிக்குப் போய் நிறையப் பேரை சந்திச்சுபேசினேன்.
அந்தப் பயணத்துலதான் நிறைய சிந்தனை வந்தது. இனி எப்பெல்லாம் இந்த மாநாடு நடக்குதோ அப்பெல்லாம் நடக்கணும்னு நினைச்சேன். அப்படியே செய்திட்டும் வர்றேன். அதேமாதிரி மகாத்மா தண்டி யாத்திரை நடந்தப்ப 275 மைல் தூரம் நடந்தார். அதனால, குறைந்தபட்சம் அந்த அளவு தூரம் வரை நடப்பேன். அப்ப மக்களைச் சந்திச்சு பேசி காலநிலை மாற்றத்தைப் புரிய வைக்கிறேன். இதனாலயே நடையைத் தேர்ந்தெடுத்தேன்.
இந்த நடைப்பயணம் மூலம் உலக மக்களின் மனங்களில் மாற்றத்தை உருவாக்கலாம்னு நினைக்கிறேன். மக்கள்கிட்ட மாற்றம் வந்தால்தான் இதற்கு ஒரு வழி கிடைக்கும். இதன்பிறகு 2011ல் இந்தியாவுல கர்நாடக மாநிலம் பாபாபுடன் தொடங்கி மைசூர் வரை நடந்தேன். 2013ல், மாநாடுகள்ல தலைவர்கள் தந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதானு ஃபாேலா அப் மட்டும் பண்ணினேன்.
2015ல் பாண்டிச்சேரியிலிருந்து ஊட்டி வரை நடந்தேன். அடுத்து, இங்கிலாந்துல ஒரு ஷார்ட் வாக் பண்ணினேன். பிறகு, 2020ல் கிளாஸ்கோவில் மாநாடு நடந்தது. அப்ப 5 ஆயிரம் மாணவர்களைச் சந்திச்சேன். அவங்க தந்த கடிதங்களையும், சில மாணவர்களையும் அழைச்சிட்டு மாநாடு நடக்கிற இடத்துல இங்கிலாந்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் கோல்டு ஸ்மித்தைச் சந்திச்சு அளிச்சேன். இருந்தும் இப்பவரை ஏழை மக்களுக்கு நியாயம் செய்யப்படவே இல்ல. 2009ம் ஆண்டு மாநாட்டிலே பாதிக்கப்பட்டவங்களுக்கு நன்கொடையா வழங்க நூறு பில்லியன் ஒதுக்கணும்னு சொன்னாங்க. ஆனா, இப்பவரை ஒதுக்கப்படல...’’ என வேதனைபொங்க சொன்னவர், தொடர்ந்தார்.
‘‘இப்ப இந்தியாவில் 9 நகரங்கள் நியாயமான வணிகம் செய்ய ஆயத்தமாகிட்டு இருக்கு. ஒரு முழு நகரமே நியாயமான வணிகம் செய்ய முயற்சி எடுத்திட்டு இருக்கோம். அதாவது, ஃபேர் டிரேட். அப்படிச் செய்யும்போது இயற்கைக்குத் தீங்கு வராது. தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பளம் கிடைக்கும்.நியாயமான வர்த்தகம் பண்ணும்போது காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறையும். ஏன்னா இயற்கையை சார்ந்தும், இயற்கையை பாழாக்காதபடியும்தான் வணிகமே இருக்கும். அதனால, இதை வலியுறுத்தி டி.கல்லுப்பட்டியில் இருந்து மதுரை காந்தி மியூசியம் வரை நடந்தேன். இது ஆறாவது நடை.
எனக்கு சப்போர்ட்டா என் மனைவி உமாமகேஸ்வரியும், இரண்டு மகன்களும், மருமகள்களும் இருக்காங்க...’’ என உற்சாகமாகச் சொல்லும் புஷ்பநாதனுக்கு இப்போது 70 வயதாகிறது. ‘‘இந்த வெப்பமயமாதலைத் தடுக்க எரிபொருள் பயன்பாட்டை குறைக்கணும். நிலக்கரியை பயன்படுத்தவே கூடாது. சூரியஒளி, காற்று மூலம் நமக்குத் தேவையான விஷயங்களை முன்னெடுக்கலாம். இப்ப எல்லா நாடுகளும் பண்றாங்க. இருந்தாலும் வேகமாகப் பண்ணணும். அப்பதான் பூமிச்சூட்டை தணிக்க முடியும்...’’ உருக்கமாகச் சொல்கிறார் புஷ்பநாதன் கிருஷ்ணமூர்த்தி.
பேராச்சி கண்ணன்
|