இருண்ட அரசியல் சூழலில் ஒரு நம்பிக்கைக் கீற்று...
2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றிருக்கும் அன்னி எர்னோவின் வாழ்வும் எழுத்தும் உணர்த்தும் செய்தி இதுதான்...சமூகவியல் மற்றும் சமகால வரலாற்றைக் கலந்து வாழ்வை எழுதும் இலக்கியமாக, தன் எழுத்தைப் பற்றி, தன் வார்த்தைகளில் விவரிக்கும் அன்னி எர்னோ இலக்கியத்துக்கான நோபல் பரிசை இவ்வருடம் வென்றுள்ளார். 82 வயதான அன்னி, இலக்கியத்துக்காக இப்பரிசை வெல்லும் முதல் ஃபிரஞ்சுப் பெண்மணி. இந்த விருது தொடங்கப்பட்ட வருடமான 1901ல் இருந்து, இதைப் பெற்றுள்ள 119 பேர்களில் அன்னியைச் சேர்த்து 17 பேர் பெண்கள். தன்னைப் பாதித்தவர்களில் மிக முக்கியமானவர்களாக சிமோன் தி பூவ்வா மற்றும் பியே போர்தோவை குறிப்பிடுகிறார். 2019ல் இவரது ‘The Years’ (மொழிபெயர்ப்பு-அலிசன் ஸ்ட்ரேயர்) என்ற புதினம், மான் பூக்கர் இலக்கிய விருதுக்காக குறும்பட்டியலில் இடம்பெற்றது.
 கவித்துவ அலங்காரங்களை உரித்தெடுத்த, சிக்கனமான இவரது நடையை, எழுத்தை, நோபல் குழு, கத்தி போன்றது என்று குறிப்பிடுகிறது. 1974ல் அவரது முதல் புத்தகமான ‘Cleaned Out’ பிரசுரமானது. ஒரு பெண்ணாக தனது அனுபவங்களை மட்டுமல்லாமல் தனது தலைமுறையின் கூட்டு அனுபவங்களை, காமம், உடல், ஆண்- பெண் உறவு சார்ந்த சிக்கல்கள், வர்க்க வேறுபாடுகள், அதனால் உண்டாகும் சமூக ஏற்றத்தாழ்வுகள், உழைக்கும் பெண்கள் மற்றும் பெண் உடல் சார்ந்த வலிகள், சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்புகள் போன்ற மிக அந்தரங்கமான கருப்பொருட்களை, அந்தந்த காலத்தின் சமூக, அரசியல், கலை மற்றும் பண்பாட்டுத் தளத்தின் சூழலில் பொருத்தி 40 ஆண்டுகளாக எழுதி வருபவர்.
ஃப்ரெஞ்ச் நாட்டின் அதிபர் மாக்ரோன், அன்னியின் புத்தகங்களை “ நம் நாட்டின் (ஃப்ரான்ஸ்) 50 வருட கால கூட்டு நினைவுகளின் தொகுப்பு...” என்கிறார்.நார்மண்டியில் வீத்தோ என்ற சிறு நகரத்தில் 1940ம் ஆண்டு பிறந்தவர் அன்னி. அவரது பெற்றோர் ஒரு மளிகைக் கடையும் ஒரு சிறிய கஃபேயும் நடத்தி வந்தனர்.
அவரது தந்தை இறந்த அன்று அவரது தாய் கீழே தனது வாடிக்கையாளர்களை கவனித்த பின், இரவில்தான் இறுதிச் சடங்குகளை முடித்தார் என்று ஒரு பேட்டியில் உருக்கமாக சொல்கிறார். தாயாரது தன்முனைப்பான உழைப்பும் உந்துதலும்தான் அவர் படித்து பட்டம் பெற்று ஆசிரியராக பணிபுரிய முக்கிய காரணமென்று சொல்கிறார். 24 புத்தகங்களைப் பிரசுரித்துள்ளார். தான் சந்தித்த அவமானங்கள் மட்டுமே தன்னைத் தொடர்ந்து செலுத்துகின்றன என்றும், “என்னைப் போல ஒரு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த ஒரு பெண் எழுதுவதே இங்குள்ள சமூக படிநிலைகளை தலைகீழாக்கும் அரசியல்செயல்பாடு...” என்றும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சில விமர்சகர்கள் அவரது எழுத்துக்களை இலக்கியமல்ல... ஒரு வாழ்க்கை வரலாறு போன்றது என்று குறிப்பிட்டாலும் மேற்குலகில் பெரிதாகப் பேசப்படாத மதகுருமார்களின் அரசியல் செல்வாக்கினால் இன்றும் பின்பற்றப்படும் பெண்களுக்கு எதிரான பிற்போக்கான சட்டங்களும், இதுவரை இல்லாவிட்டாலும் இப்போது புதிதாக அமெரிக்காவில் கொண்டு வரப்பட்ட கருக் கலைப்பை குற்றமாக்கும் சட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கிற இந்நேரத்தில் அன்னிக்கு வழங்கப்படும் இவ்விருது ஐரோப்பிய முற்போக்காளர்களின் எதிர்க் குரலாகவே ஓங்கி ஒலிக்கிறது.
பாலியல் வன்முறைக்கு உண்டான சிறுமிகளுக்குக் கூட கருக்கலைப்பை அனுமதிக்காத மிகப் பிற்போக்கான ஒரு நிலைப்பாட்டை அமெரிக்காவின் பெரும்பான்மையான மாநிலங்கள் எடுத்துள்ளன. இப்படியான கருவுற்ற பெண்ணின் உயிரை மதிக்காத சட்டங்கள் அயர்லாந்தில் பல நூற்றாண்டுகளாக திருத்தம் செய்யப்படாமல் உள்ளன. (சில வருடங்களுக்கு முன் இந்திய பல் மருத்துவர் தனது பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் இரண்டு நாட்களுக்கு மேல் துடித்து இறந்தது நமக்கு நினைவிருக்கலாம். இங்கே இந்தியாவில் கருக்கலைப்பு செய்து அவரது உயிரை சுலபமாகக் காப்பாற்றியிருப்பார்கள்.)
ஈரான் நாட்டில் மாஹஸா என்ற பெண் தன் தலையை சரியாக மூடவில்லை (ஹிஜாப் அணிந்திருந்தாலும்) என்ற காரணத்துக்காக அங்குள்ள கலாச்சாரப் படையினால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார். இப்படி பெணகளுக்கு எதிராக உலகின் பல நாடுகள் செயல்படும் இந்தக் காலகட்டத்தில் பெண் எழுத்தாளர் என்று சுட்டுவதை விரும்பாத, எழுத்தாளர் என்று கூறுவதே போதுமானது என்று கருதும், தன்னை பெண்ணியவாதி என்று தயங்காமல் அறிமுகப்படுத்திக் கொள்ளும் -40 ஆண்டுகள் பெண்கள், சாதாரணர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கம் சார்ந்து எழுதும் அன்னிக்கு இவ்விருது கிடைத்திருப்பது இந்த இருண்ட அரசியல் சூழலில் நம்பிக்கை தருவதாக இருக்கிறது.
அனுராதா ஆனந்த்
|