இஸ்ரோவுக்கு பொருட்களை சப்ளை செய்யும் தொழில் அதிபர்!



கேரளாவில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் ராதாம்பிகா. மொத்தம் ஏழு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ஆறாவதாக பிறந்தார்.பிறந்தபோது நல்ல உடல் ஆரோக்கியத்துடன்தான் இருந்தார்.
அவரது இரண்டாவது வயதில் போலியோவின் தாக்குதலால் வலது கால் பெரிதும் பாதிக்கப்பட்டது. எங்கு சென்றாலும் தவழ்ந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலை. பெற்றோருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதில் சபதம் எடுத்தார் ராதாம்பிகா. திருவனந்தபுரத்தில் உள்ள அம்பலமுக்குவில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

எண்பதுகளில் உலக சுகாதார நிறுவனம் முதல் முறையாக சர்வதேச ஊனமுற்றோர் தினத்தை கொண்டாடியது. அப்போது  இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் அரசின் கல்வி நிறுவனங்களில் ஊனமுற்றோருக்கான தொழிற்கல்வியைக் கொண்டு வந்தார். இஸ்ரோவின் பயிற்சி முகாமில் பங்குபெற ராதாம்பிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்வு அவரது வாழ்க்கையையே மாற்றியது. ஆம்; திருவனந்தபுரத்தில் ‘சிவவாசு எலெக்ட்ரானிக்ஸ்’ எனும் நிறுவனத்தை ஆரம்பித்தார் ராதாம்பிகா.

இந்நிறுவனம்தான் கடந்த 40 வருடங்களாக இஸ்ரோவுக்குத் தேவையான முக்கிய உபகரணங்களை சப்ளை செய்து வருகிறது. இப்போது இருநூறுக்கும் மேலானவர்கள் இந்நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ; 40 சதவீதத்தினர் ஊனமுற்றவர்கள். ராதாம்பிகாவின் தொழிலுக்குக் கணவரும், மகனும், மகளும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.  

த.சக்திவேல்