வாடகைக்கு விடப்படும் சிறைச்சாலை!



உத்தரகாண்டில் உள்ள ஹல்த்வானி சிறையைப் பற்றித்தான் அங்கே ஹாட் டாக். 1903ல் கட்டப்பட்ட பழமையான சிறை இது. சில வருடங்களுக்கு முன்பு சிறையில் உள்ள பல பகுதிகள் பயன்படுத்தப்படாமல் அப்படியே கைவிடப்பட்டன. சமீபத்தில் கைவிடப்பட்ட இடங்களைப் புதுப்பித்திருக்கிறது ஹல்த்வானியின் காவல்துறை. இப்போது புது சிறையைப் போல காட்சியளிக்கும் ஹல்த்வானி சிறையில் குற்றவாளிகளைக் கைது செய்து அடைக்கப்போவதில்லை!

ஆம்; உத்தரகாண்டிற்கு வரும் சுற்றுலாவாசிகளைக் கவர்வதற்காக இந்த ஏற்பாடு. வாழ்க்கையில் ஒரு நாளாவது சிறையில் தங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் 500 ரூபாய் செலுத்தினால் போதும். ஓர் இரவு ஹல்த்வானி சிறையில் தங்கிக்கொள்ளலாம். உணவு, தண்ணீர் போன்ற அனைத்துவிதமான அடிப்படை வசதிகளும் உள்ளன.

சிறையில் தங்க விருப்பப்படுபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். ஜோதிடத்தில் தோஷம் கழிப்பதற்காக சிறையில் தங்குபவர்களுக்கும், வெளியிலிருந்து உத்தரகாண்டிற்கு சுற்றுலா வருபவர்களுக்கும் முன்னுரிமை! சிறை வாடகை மூலம் கிடைக்கும் நிதியை நற்பணிகளுக்காக பயன்படுத்தப்போவதாக சொல்லியிருக்கிறது ஹல்த்வானியின் காவல்துறை.

த.சக்திவேல்