சோறு இல்லைன்னு சொன்னதே இல்ல! மேலூர் சாலையில் ஒரு தர்மசாலை



‘‘அய்யா இலை வாங்கீட்டுப் போங்கய்யா!’’

கணீரென்று அவர் குரல் கேட்கிறது. உள்ளே நிறைய பேர் டைனிங் டேபிளின் முன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹோட்டல் போல, கல்யாண வீட்டு விருந்து போல் அன்னக்கூடை, சாம்பார் பக்கெட், அப்பளத்தட்டு, பாயாசக் குவளை என தூக்கிக்கொண்டு பலபேர் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இங்கே கல்லாவோ, மொய் டேபிளோ இல்லை. மாறாக ஒரு டேபிள். அதில் அடுக்கி வைக்கப்பட்ட பச்சைப்பசேல் வாழை இலைகள். அதன் பக்கத்தில் நடுத்தர வயதில் ஸ்டூல் போட்டு ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர்தான் உள்ளே நுழைபவர்களுக்கெல்லாம் வாழையிலையை எடுத்து நீட்டி, ‘அய்யா இலை வாங்கீட்டுப் போங்கய்யா!’ என்ற அந்த வார்த்தையை கணீர் குரலில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இலையை வாங்கிச் சென்றவர்கள் டைனிங்கில் அமர்ந்து இலை போட்டுக் கொண்டால் போதும், குடிக்கத்தண்ணீர், இலையில் உப்பு, பொரியல், கூட்டு, வடை, ஊறுகாய், இனிப்புப் பொங்கல், அப்பளம் எல்லாம் வைக்கப்படுகிறது. சோறு, சாம்பார், குழம்பு, ரசம், மோர், கூடவே பாயசம் எல்லாம் சுடச்சுட ‘போதும் போதும்’ என்னும் அளவுக்கு பரிமாறப்படுகிறது. அத்தனையும் இலவசம். இன்றைக்கு நேற்று அல்ல, கிட்டத்தட்ட 35 வருடங்களாக இப்படியொரு சேவையை இங்கே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

திருச்சியிலிருந்து மேலூர் செல்லும் மதுரை புறவழிச்சாலையில் மேலூருக்கு சரியாக மூன்று கிலோமீட்டர் முன்பு ரோட்டோரம் ஒரு பொற்றாமரைக் குளம் இருக்கிறது. அதன் ஓரத்திலேயே அந்த அறிவிப்புப் பலகை நம்மை வரவேற்கிறது. ‘அருட்பெருஞ்ஜோதி சத்ய தர்மசாலை - தினசரி பகல் 12 மணிக்கு பசித்தவர்களுக்கு உணவு வழங்கப்படும்!’ எண்ணெய் காணா பரட்டைத் தலையுடன் பலர்.

அழுக்கு நிறைந்த கைலியைத் தூக்கிப்பிடித்தபடி இன்னும் பலர். பளபளப்பான வேட்டி சட்டையுடன் சிலர்.  பேண்ட் சட்டை இன்செய்த கோலத்தில் மேலும் சிலர். சேலை, சுடிதார் கட்டிய ஆடைகளுடன், பள்ளி மாணவர்களுக்கான சீருடையுடன் பெண்கள், மாணவ - மாணவிகள். இப்படி பெரியவர்கள், இளைஞர்கள், வயோதிகர்கள், சிறுவர்கள் என ஒரு நாளைக்கு இங்கே 250 முதல் 300 பேருக்கும் குறையாமல் சாப்பிட வருகிறார்கள்.

அவர்கள் தவிர சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் காலை, மாலை, மதியம் நடக்கமுடியாத, கவனிப்பாரற்று கிடக்கும் முதியவர்களுக்கு வீடு தேடிச்சென்று டிபன், சாப்பாடு, இரவு உணவு வழங்குகிறார்கள் இவர்கள். அது மட்டுமல்ல, இங்கே இருக்கும் தருமசாலையைப் போலவே சுற்றுவட்டாரத்தில் உள்ள 27 கிராமங்களில் இதேபோல மதிய உணவு தரும் தருமசாலையை நிறுவியுள்ளார்கள் இவர்கள். அங்கே ,இங்கே சேவை செய்பவர்கள் போலவே பலர் இருந்து சேவை செய்து வருகிறார்கள்.   

இதற்கு முன்னணியாக நின்று சேவை செய்து வருபவர் சொக்கலிங்கம். அவர்தான் வருபவர்களை வரவேற்று இலை எடுத்துத் தருபவர். ‘‘இலையையும் அவங்களையே எடுக்கச் சொல்லலாங்க அய்யா. ஆனா, அதைப் பார்த்து எடுக்கணும். கிழிஞ்சது இருக்கக்கூடாது. எடுக்கறவங்க அதை கிழித்தும் விடக்கூடாது இல்லீங்களா? அதுதான் நான் எடுத்துப் பொறுப்பாக் கொடுக்கிறேன். அதேசமயம் இங்கே சாப்பிட்ட இலையை யாரும் எடுக்கக்கூடாது. ஊழியர்களான நாங்கள்தான் எடுக்கணும். இல்லாவிட்டால் அவர்கள் எடுக்கத்தெரியாமல் சிந்தி விடுவார்கள்!’’ என்று கருணை பொங்க சொல்கிறார் சொக்கலிங்கம்.

‘‘மேலூர் டவுன்ல 22 வருஷம் இப்படி உணவு கொடுத்துட்டு இருந்தோம். இங்க வந்து 2 வருஷம் ஆச்சு. அங்க இடமில்லை. பிளாட்பாரத்தில்தான் உணவு வச்சுக் கொடுக்க வேண்டிய நிலை வந்தது. அதனால நாங்க பத்துப் பேர் கொண்ட ட்ரஸ்ட்டிக சேர்ந்து சொந்தமா ஒரு இடம் வாங்கி இங்கேயே நாங்களே சமைச்சுத் தர்றோம்.

இதுபோல 27 இடத்துல நாங்க போய் ஆரம்பிச்சு அன்பர்கள் மூலமா நடத்திட்டிருக்கோம்ன்னு சொன்னேன் இல்லியா?  அதுவும் சும்மா ஆரம்பித்தது இல்லை. ரொம்ப ரிமோட்ல உள்ள கிராமங்களைப் போய்ப் பார்ப்போம். அங்கே இருக்கிற பெரியவங்க, பிரமுகர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள்கிட்ட எல்லாம் பேசுவோம். இப்படி உங்க ஊருக்கே வந்து ஒரு நூறு, இருநூறு பேருக்கு சோறு போடறோம். எல்லாமே தர்மகாரியம்தான்னு சொல்லுவோம்.

வள்ளலாருடைய அருமை பெருமையெல்லாம் எடுத்துச் சொல்லித்தான் இதைக் கேட்போம். அப்பவும் அவுங்க விடமாட்டாங்க. அது எப்படி உங்களால முடியும்? தோப்பு துரவு இருக்கா? நிலபுலம் இருக்கா? வேற தொழில் இருக்கா? எப்படி சாத்தியம்ன்னு ஆயிரம் கேள்வி கேட்பாங்க. ‘அதை இறைவன் கொடுப்பார். கொடுக்கிறார். அப்படித்தான் இதுவரைக்கும் நடந்திட்டிருக்கு. தானா, கொடையுள்ளம் கொண்ட இறை மனம் கொண்ட அன்பர்கள் உதவறாங்க. உதவுவாங்க’ன்னும் தெரிவிப்போம். அவங்களும் நம்புவாங்க.

அங்கே தருமசாலை ஆரம்பிக்கும் முதல் நாள் ஊர்ல எல்லோரையும் அழைப்போம். ஆயிரம் பேர் ஊர்ல இருந்தாலும் அத்தனை பேருக்கும் மண்டபத்துல சாப்பாடு. அப்படி செஞ்சாத்தானே நம்மூர்ல இப்படி ஒண்ணு இங்கே நடக்குதுன்னு எல்லோருக்கும் தெரியும்! அதுக்கு ஒரு நாள் மட்டும் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் செலவாகும். அப்புறம்தான் தினம் அங்கேயும் நூறு பேர், இருநூறு பேருக்கு சாப்பாடு போட்டுட்டே இருக்கிறோம். இதுதான் நடைமுறை. அப்படித்தான் இந்த தர்மசாலை மட்டுமல்லாமல் 27 கிராமங்கள்லயும் இந்த தர்மம் நடக்குது. அதுல இது முதல் தர்மசாலை...’’ என்றவரிடம் ‘எது உங்களை இப்படி செய்ய வைக்கிறது’ என்று கேட்டோம்.  

‘‘நான் கொஞ்சம் வெளிநாடு தொடர்பு உள்ளவன். சின்ன வயசிலயே கடல்கடந்து தொழிலாளியாகப் போயிட்டேன். சிங்கப்பூர், மலேசியா, சவூதி அரேபியா போன்ற நாடுகள்ல பத்து வருஷம் இருந்துட்டுதான் மேலூர் வந்தேன். அப்புறம் இங்கே நிறைய தொழில்கள்... லாரி, பஸ் எல்லாம் வாங்கி ஓட்டினேன். நெல் கமிஷன் கடைகளும் பார்த்தேன். காலமும், சந்தர்ப்ப சூழ்நிலையும் அந்த தொழில் என்னை வளர்ச்சிக்கான பாதைக்கு கூட்டிட்டுப் போகலை. அதுல பல தடைகள் ஏற்பட்டது.

அந்த சமயம் என் நண்பர்கள் சிலபேர் ஆன்மீகக்கூட்டம் வாராவாரம் நடத்திட்டு இருந்தாங்க. அங்கே நகரில் செல்வந்தர்கள் எல்லாம் வந்துட்டு இருந்தாங்க. எல்லாருமே சிம்பிளா இருப்பாங்க. சித்தர்கள் எல்லாம் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தாங்கன்ற விஷயங்கள் எல்லாம் பேசுவாங்க. ‘அதுல கலந்துக்குங்க. உங்களுக்கு மனப்பாரம் குறையும்’ன்னு என் நண்பர் ஒருத்தர் கூட்டிட்டுப் போனார். நானும் போனேன். அவங்க பேசுறதை கேட்டுட்டு இருப்பேன். ஒருநாள் வள்ளலார் பாதையில் அடியொற்றிய தொண்டர்கள் இரண்டு பேர் அங்க அறிமுகமானாங்க. அவங்கதான் என் நண்பர்கிட்ட ‘இப்படி அன்னதான தருமசாலை ஒண்ணு செய்யலாமே’ன்னு சொன்னாங்க. ‘என்ன செய்யணும்’னு கேட்டோம்.

‘வேற ஒண்ணும் இல்ல, உதவும் மனம் படைத்த உங்களுக்குத் தெரிந்தவர்கள் நாலு பேரை அறிமுகப்படுத்தி வையுங்க போதும்’ன்னாங்க. அவ்வளவுதானேன்னு அவங்களைக் கூட்டிட்டுப் போய் பல பேரை அறிமுகப்படுத்தி வச்சோம். பொதுவா அமாவாசை அப்ப மண்டபங்கள் சும்மா இருக்கும். அப்படி  ஒரு மண்டபத்தை இலவசமா ஒருத்தர்கிட்ட வாங்கி அதுல இரண்டாயிரம் பேரைக்கூட்டி வள்ளலார் குறித்த சொற்பொழிவு நிகழ்த்தி அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டாங்க. அந்த அளவுக்கு அன்பர்கள்கிட்ட உதவிகள் வந்துச்சு.

இந்த தருமகாரியத்தை செஞ்ச வள்ளலார் தொண்டர்கள் ரெண்டு பேரும் அண்ணன் தம்பிங்க. ரொம்ப தெளிவா பண்ணினாங்க. அதுக்கப்புறம் நாள்தோறும் ஊர்ல நாலு திக்குல உள்ள நாலு மண்டபத்துல வச்சு மக்களுக்கு கஞ்சி ஊத்துவோம்னு முடிவு செஞ்சோம். அதுவும் நடந்தது. ஆரம்பத்துல கஞ்சியும் ஊறுகாயும்தான் கொடுத்தோம். அடுத்து எட்டு வருஷம் கழிச்சு கலவை சாதம் போட்டோம். அப்புறம்தான் இப்படி வடை, பாயசம், கூட்டு, பொரியல்ன்னு முழு சாப்பாட்டுக்கு மாறினோம்.

இதற்கிடையில் நான் வேலையிலிருந்து சுத்தமா வந்துட்டேன். அண்ணன் தம்பிகள் ரெண்டு பேரும் வெளிநாடு போறேன்னு என்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சுட்டுப் போயிட்டாங்க...’’ என்றவர் இதற்கான புரவலர் இறைவன்தான் என்கிறார்! ‘‘யாராவது வருவாங்க. உங்களுக்கு ஒரு மூட்டை அரிசி கொடுக்கச் சொல்லி உத்தரவாயிருக்கும்பாங்க. இப்படித்தான் எல்லாமும். நாங்க யாருகிட்டவும் இதற்காகப் போய் யாசகம் கேட்கறதில்லை. நம்பறது கஷ்டமாத்தான் இருக்கும். இங்கேயே நீங்க இருந்து பார்த்தால்தான் தெரியும்.

இப்பக்கூட ஒரு அய்யா வந்து 20 நாளைக்கு சாப்பாடு போடுங்க, ஒரு நாளைக்கு ஐயாயிரம் ரூபாய்ன்னு கையில் ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தார். நம்ம செய்யக்கூடிய காரியத்தில் உள்ள ஒழுக்க நெறி இருக்கு பார்த்தீங்களா... தர்மத்தை தர்மமாகவே செய்யணும்ங்கிறது... அதுதான் இப்படி அன்பர்களைத் தேடி வரவைக்குது. இங்கே சர்வ் பண்றவங்க முதற்கொண்டு இலை எடுக்கறவங்க வரைக்கும் தர்மகாரியமாவே பண்றாங்க. அதுல நகைக்கடைக்காரங்க, ஜவுளிக்கடைக்காரங்க, பல்வேறு தொழிதிபர்கள் கூட இருக்காங்க...’’ என்ற சொக்கலிங்கம், தன் குடும்பத்தைப் பற்றி சொன்னார்.

‘‘படிச்சிட்டிருக்காங்க. வேலையில இருக்காங்க. சம்பாதிக்குதுக. பெரிய லெவல்ல எதுவும் இல்லை. வாடகை வீட்லதான் இருக்கேன். தேவைகளைக் குறைச்சிட்டாலே போதும். நமக்கு கஷ்டம்ங்கிறதே இல்லைன்னு உருவாகிப் போயிரும்!250 பேருக்கு சமைப்போம். திடீர்னு கூடுதலா ஆட்கள் வந்துடுவாங்க. அப்ப வீட்ல நாம என்ன செய்வோமோ அதை செய்வோம். அதாவது திடீர்னு ராத்திரியில வீட்டுக்கு விருந்தினர்கள் வந்துட்டாங்க... நாம சாப்பிட்டு பாத்திர பண்டமெல்லாம் கழுவி கவிழ்த்துட்டோம்... இந்த சூழல்ல வந்தவங்களை பட்டினியோட படுக்க வைப்பமா?

வீட்ல ரவையோ அல்லது வேறு பொருளோ வைச்சு உப்புமாவோ, சப்பாத்தியோ செஞ்சு போடுவோம் இல்லையா..? அதுபோலத்தான் கூடுதலா வர்றவங்களுக்கு தினமும் சமைச்சு போடுவோம். ஒருபோதும் சோறு இல்லைனு திருப்பி அனுப்ப மாட்டோம்...’’ அழுத்தமாக சொல்கிறார் சொக்கலிங்கம்.அனைவரும் உணவருந்தும் பெரிய அரங்கத்துக்கு உள்ளே வள்ளலார் தியான மண்டபம் இருக்கிறது. நடுவே கண்ணாடிக் கூண்டில் அணையா தீபச்சுடர். அதன் முன்னே பலரும் அமர்ந்து தியானம் செய்கிறார்கள். சுடர் வலமோ இடமோ சாயாமல் அசையாமல் எரி்ந்து கொண்டிருந்தது. இவர்களின் தருமசிந்தனையும் அப்படித்தான்.

கா.சு.வேலாயுதன்