சென்னையில் ரெஸ்டோபார்!



இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் இப்பொழுதெல்லாம் வார இறுதியில் செலிபிரேஷன் மோடுக்கு செல்லத் தொடங்கிவிட்டார்கள். இந்த கொண்டாடட்டம் வெள்ளி இரவு தொடங்கி ஞாயிறு மதியம் வரை நீள்கிறது. இந்நிலையில் வீக் எண்ட் கொண்டாட்டம் என்றால் ‘பப்’ கலாசாரம் என்பதை மாற்றி அமைத்துள்ளது ரெஸ்டோபார் உணவகங்கள்.
யெஸ். பெரும்பாலானவர்கள் வார இறுதியில் இன்று குடும்பத்துடன் ஏதாவது ஓர் உணவகத்துக்கு செல்கிறார்கள். பப்புக்கு குடும்பமாக செல்ல முடியாது. ஆனால், ரெஸ்டோபார்களுக்கு குடும்பமாகவும் நண்பர்களுடனும் செல்ல முடியும். இங்கு காக்டெயில், மாக்டெயில் போன்ற பானங்கள் இருந்தாலும், எல்லோரையும் கவரக்கூடிய உணவுகளும் வழங்கப்படுகின்றன.

அப்படி குடும்பமாக வார இறுதி நாட்களை சந்தோஷமாக கழிக்க சென்னை நந்தனத்தில் ‘பிக் புல்’ என்ற பெயரில் ரெஸ்டோபார் உணவகத்தை அமைத்துள்ளார் அரவிந்த் பாலாஜி. இந்த உணவகத்தின் தனிச் சிறப்பே அங்கு பரிமாறப்படும் ஃப்யூஷன் உணவுகள்தான். ‘‘இந்த மாதிரி ஒரு உணவகம் திறப்பேன்னு அஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி கூட நான் நினைச்சுப் பார்க்கலை. ஒரு ஐடி நிறுவனத்துல மனிதவளத் துறைல தலைமை நிர்வாகியா வேலை பார்த்து வந்தேன். பணில பெரிய ஈடுபாடு இல்ல. அதனால வேலையை ராஜினாமா செய்தேன்.

அப்ப பெங்களூர்ல என் மாமாவின் நண்பர் ஒருத்தர் ரெஸ்டோபார் உணவகத்தை பெங்களூர்ல திறக்கச் சொல்லி எனக்கு ஆஃபர் அளிச்சாரு. என்னதான் உணவுப் பிரியரா இருந்தாலும் உணவு உலகம் எப்படி செயல்படுதுனு எனக்குத் தெரியாது. ஆனாலும் இதை செய்து பார்க்கலாமேனு தோணிச்சு. ஆனா, பெங்களூர்ல ஆரம்பிக்கறதுக்கு பதிலா சென்னைல தொடங்க முடிவு செய்தேன்.

பொதுவா இது மாதிரி உணவகங்களுக்கு குடும்பமாதான் வருவாங்க. அப்படி வர்றவங்களுக்கு தரமான ஆரோக்கியமான உணவை வழங்கணும். அதேநேரம் எல்லா உணவிலும் எங்க சிக்னேச்சர் இருக்கணும்னு தீர்மானிச்சோம். இப்படியெல்லாம் உணவை கொடுக்க முடியுமானு மக்கள் வியக்கணும்னு ஓர் ஆசை!ஓர் உணவை எடுத்துக்கிட்டா அதை ரீகிரியேட்தான் செய்வாங்க. நாங்க அப்படி இல்லாம ஒரு புதிய மெனுவை வடிவமைச்சோம்.

ஒவ்வொரு உணவையும் புதுசா அமைச்சோம். இதுக்காகவே சிறப்பு செஃப் தலைமைல குழுவை டிசைன் செய்தோம். உணவுத் துறைலயே வெளியே தெரியாத திறமைசாலிங்க இருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். அந்த ஜெம் செஃப்கள்தான் இன்று எங்கள் பிளஸ்...’’ என்று சொல்லும் அரவிந்த், சிறு வயது முதலே தனக்கு கற்றுக்கொள்ள பிடிக்கும் என்றும், அதுவே இன்று இந்த உணவகத்தை நடத்த உதவுகிறது என்கிறார்.

‘‘உணவு எனக்கு பிடிக்கும். அதனாலயே அது குறித்து நிறைய கத்துக்கிட்டேன். கோவிட்டுக்கு முன்னாடியே உணவகத்தை திறக்க நினைச்சோம். முடியல. ஆனா, அந்த இரண்டு ஆண்டுகளை உணவு குறித்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக்கிட்டேன்.எனக்கொரு ஐடியா பிறக்கும். செஃப் கார்த்திக்குக்கு ஒரு யோசனை தோன்றும். சில உணவுகளை வெளில நான் சுவைத்திருப்பேன். அதை வேறு மாதிரி கொடுக்கலாமேனு சிந்திப்பேன்.

இதையெல்லாம் நானும் செஃப் கார்த்திக்கும் டிஸ்கஸ் செய்வோம். செய்து பார்த்து கடைசியா ரெசிபியை டிக் செய்வோம். இப்படித்தான் எங்க உணவகத்துக்கான ஸ்பெஷல் மெனுவை உருவாக்கியிருக்கோம். மூன்று விதமா இந்த உணவகத்தை வடிவமைச்சிருக்கோம். முதல் தளம் ரெ்ஸ்டோபார் உணவகம். இரண்டாவது தளம், டான்சிங் ஃபுளோர். மூன்றாவது ரூஃப் டாப். அங்க வைன் அண்ட் டைன் பரிமாறப்படும்.

அதற்கான உணவுகள் மட்டும் ஐரோப்பிய முறைல கொடுக்க முடிவு செய்திருக்கோம். இரண்டு மாதங்கள்ல அது செயல்பாட்டுக்கு வந்துடும்.அடுத்து 60 அறைகள், பார்ட்டி ஹால், பேன்க்கே ஹால் வசதிகொண்ட 3 அல்லது 5 ஸ்டார் ஹோட்டல் ஒண்ணை ஆரம்பிக்கும் திட்டமிருக்கு...’’ என அரவிந்த் முடிக்க, தொடர்ந்தார் செஃப் கார்த்திக்.

சென்னைவாசியான இவர், பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களில் 20 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.‘‘நான் வேலை பார்த்த ஒரு ஹோட்டலின் மானேஜர் வழியாதான் அரவிந்த் அறிமுகமானார். புதுசா உணவுகளைக் கொடுக்கணும்னு தீவிரமா இருந்தார். அதே எண்ணத்துல நானும் இருந்ததால உடனே இரண்டு பேரும் ஜெல் ஆகிட்டோம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த மெனுல இருக்கும் அத்தனை உணவுகளும் புதுசா, புதுமையா இருக்கும். வேறு எங்கயும் எங்க உணவை உங்களால சுவைக்கவே முடியாது...’’ என அடித்துச் சொல்லும் செஃப் கார்த்திக், அது குறித்து விவரித்தார்.

‘‘எல்லா மெனுக்களையும் போல இங்கும் ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ், டெசர்ட்ஸ் எல்லாம் உண்டு. ஸ்டார்ட்டர் உணவுகளில் ‘8/6 சிக்கன்’ என்ற ஐட்டம் இருக்கு. இந்த பில்டிங்கின் நம்பர் அது! அந்தப் பெயர்லதான் இந்த சிக்கனை அமைச்சோம். மெக்சிகன் ஸ்பைஸிகளான பேசில், கொரியாண்டர், பார்ஸ்லே, சில்லி ஃபிளேக்ஸ், எலுமிச்சை சாறு, பார்மிசன் சீஸ் எல்லாம் சேர்த்து மாரினேட் செஞ்சு தந்தூரி அடுப்புல வைச்சு சிக்கனை கொடுப்போம்.

டிரிப்பில் எம், கடுகு சாஸ், கொல்கத்தாவின் சிறப்பு மஞ்சள், மிளகாய்த் தூள் சேர்த்து மீனை பிரட்டி கிரில் செய்து தருவோம். சைவத்துல நட்டி என் சீஸ் கிகார், சிகாரா போகிரே... என்ற கிரேக்க நாட்டு உணவை நம்மூர் மக்களின் சுவைக்கு ஏற்ப தர்றோம். இதுக்குத் தேவையான ஃபைலோ பஃப் ஷீட்டை கிரேக்க நாட்ல இருந்தே வரவைக்கிறோம். பார்க்க மெல்லிசா இருக்கும். அந்த ஷீட்ல பாதாம், பிஸ்தா, ஜலாபெனோஸ், இதர நட்ஸ், நான்கு வகையான சீஸ் சேர்த்து ரோல் செஞ்சு எண்ணெய்ல பொரிச்சு தருவோம்.

இதுக்கு பைனாப்பிள் சாஸ் சுவையா இருக்கும். அடுத்து ப்ரோக்கோலி சிம்லா மிர்சி. ப்ரோக்கோலியை கிரில் செஞ்சு அதுல காஷ்மீரின் கலர் குடைமிளகாயைச் சேர்த்து தருவோம். இந்த குடை மிளகாய் காஷ்மீர்ல மட்டும்தான் கிடைக்கும். மல்லி சாதம் பிரிட்டர்ஸ் - கொத்தமல்லி சாதத்தை மசிச்சு, உருண்டையா பிடிச்சு, மாவுல முக்கி அதை பான்கோ கிரம்ப்ஸ்ல சில்ல பிரட்டி, எண்ணெய்ல பொரிப்போம்.கே.எஃப்.சி சிக்கன் மேல இருக்கும் மொறுமொறுப்பு போலவே பான்கோ கிரம்ப்ஸை வறுக்கும்போது ஏற்படும்.

அடுத்து மெயின் கோர்ஸ் உணவுகள். பரோட்டா சிக்கன் லசானியா. காய்கறிகளை சாசுடன் கலந்து அதன் மேல சீஸ் துருவி பேக் செய்து தரப்படும் இத்தாலியன் உணவுதான் லசானியா. அதை நம்மூர் பரோட்டால இன்கார்ப்பரேட் செய்திருக்கோம். இதுல பரோட்டாவை லேயரா வைச்சு ஒவ்வொரு லேயர் பரோட்டாவுக்கும் நடுவுல சிக்கன் சால்னா, சிக்கன் 65, சிக்கன் சுக்கா, சிக்கன் பொடிமாஸ் வைச்சு அதுமேல சீஸ் துருவி பேக் செய்து கொடுப்போம். சாப்பிடறப்ப மூணு வகையான சிக்கனை சுவைத்த உணர்வு கிடைக்கும்.

மூலி மீட்ஸ் மாரி - மூலினா தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து செய்யப்படும் கேரள சாஸ். கேரளால கிடைக்கக் கூடிய ஒருவகை மீன்தான் மாரி. இந்த மீனை சாசில் மேரினேட் செஞ்சு கிரில் செய்து தேங்காய் சாதத்துடன் சேர்த்து கொடுப்போம்.

பார்க்க கான்டினென்டல் உணவு மாதிரி இருந்தாலும் நம்மூர் ஃப்ளேவர்களை இதுல சேர்த்திருக்கோம்.  எங்களின் அடுத்த ஸ்பெஷல் உணவு, ஓயோ ஹாப்பி ஷேரிங். இரண்டு பேர் தாராளமா சாப்பிடக்கூடிய உணவு. கிராக்ட் பிரட், பிரட் ஸ்லைஸ் மேல வறுத்து இடித்த பூண்டு, இத்தாலியன் சீஸ் மற்றும் சிக்கன் சேர்த்து பேக் செய்து கொடுப்போம். பிரட்டை சீஸுடன் சாப்பிடறப்ப சுவையா இருக்கும்.

சிகாகோ டிப் டிஷ் பீட்சா. இந்த பீட்சா மற்ற கடைகள்ல கிடைப்பது போல் இருக்காது. இதன் பிரட் லேயர் ரொம்ப மெல்லிசா இருக்கும். அதன் மேல நான்கு வகையான சீஸ், தக்காளி பேசில் சாஸ், சிக்கன், பெப்பரோனி சேர்த்து பேக் செய்து தருவோம். இதுல சீஸ் லேயர் மட்டுமே ஒரு திக் லேயர் போல இருக்கும்.நாண்நாச்சோஸ் - நாச்சோஸ் என்பது ஒரு வகையான சிப்ஸ். அதை நாங்க நாண் பிரட்ல கொடுக்கறோம்.

நாண் பிரட்டை நாச்சோஸ் சிப்ஸ் வடிவத்துல கத்தரிச்சு அதுக்குள்ள மக்கானி சாஸ், சீஸ், சால்சா பன்னீர் டிக்கா அல்லது சிக்கன் டிக்கா வைச்சு சாண்ட்விச் அமைப்புல தர்றோம்.இவை தவிர ஃபிரைட் ரைஸ், பாஸ்தா, நூடுல்ஸ் போன்ற உணவுகளும் கொடுக்கறோம். எங்களுடையது ரெஸ்டோபார் என்பதால், விரும்புபவர்களுக்கு காக்டெயில் மற்றும் மாக்டெயிலும் வழங்கறோம்...’’ என்கிறார் செஃப் கார்த்திக்.

செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்