கித்தார் கம்பி மேலே நின்று கிறுக்கும் கிளி!



எத்தனையோ கோடிகளைக் கொட்டி பல சூப்பர் ஸ்டார்களை வைத்து அற்புதமாக பல படங்களை தயாரிப்பாளர்கள் எடுத்தாலும் தம்மாத் துண்டு ‘மினியன்ஸ்’ நம்மை ஈர்த்து மண்டைக்குள் நுழைந்து மானாவாரியாக மயக்கிவிடும். அவ்வளவு பவர் உண்டு அனிமேஷன் மற்றும் கார்ட்டூன் கேரக்டர்களுக்கு. அப்படித்தான் எத்தனையோ கோடிகளைக் கொட்டி டிரெண்டான படங்கள், காட்சிகள், பாடல்கள் என அத்தனையையும் தன் இல்லஸ்ட்ரேஷனில் கொண்டு வந்து இன்ஸ்டா உலகில் அசால்ட் காட்டுகிறார் மதுரைப் பொண்ணு வர்ஷினி. கே.

@happysapien_doodles_ என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிடும் சினிமாட்டிக் அனிமேஷன் கேரக்டர்கள்தான் இப்போது அத்தனை சமூக வலைத்தளங்களிலும் டிரெண்டிங்.
‘‘சின்ன வயசுல இருந்தே எனக்கு ஆர்ட் மேலே ஆர்வம் அதிகம். அதிலும் இல்லட்ரேஷன் வரைய ரொம்பப் பிடிக்கும். வீட்டில் ஆர்ட் அடிப்படையிலானவங்க யாரும் கிடையாது. ஆனா, எனக்கு என்னவோ ஆர்ட் மேலே ஒரு ஈர்ப்பு...’’ என, சத்தமாகப் பேசும் தன் ஓவியங்களுக்கு நேர் மாறாக அமைதியாகப் பேசுகிறார் வர்ஷினி கே.  

‘‘அப்பா கிருஷ்ணமூர்த்தி ரிடையர்ட் டெபுட்டி பிடிஓ. அம்மா ஸ்ரீனாட்சி போஸ்டல் அக்கவுன்டன்ட். மதுரைதான் சொந்த ஊர். கல்லூரில பயோ டெக்னாலஜி படிச்சேன். ஆனா, கரியர்னு வரும்போது ஆர்ட்தான்னு முடிவு செய்தேன். நானா தேடி நிறைய ஓவிய நுணுக்கங்கள் கத்துக்கிட்டேன். ஆர்ட் அனாடமியை முறைப்படி கிளாஸ் போயி கத்துக்கிட்டேன். அனிமேஷன் எல்லாம் அதனுடைய தொடர்ச்சிதான்.

மீனாட்சியம்மன் கோயில்கிட்ட ஒரு ஆர்ட்டிஸ்ட் இருந்தார். அவர் கோயிலுக்கான ஆர்ட்டிஸ்ட்டா அங்க வரைஞ்சிட்டு இருப்பார். நிறைய சிற்பங்கள், சிலைகள், கோயில் கட்டடங்களை எல்லாம் வரைபவர் அவர்.அவர்கிட்டதான் நான் எப்படி பார்க்காம அனாடமி வரையணும்னு கத்துக்கிட்டேன். தொடர்ந்து எல்லாரும் செய்கிற பென்சில் டிராயிங், ஆயில் பெயிண்டிங், வாட்டர் கலர்... எல்லாம் கத்துக்கிட்டாலும், புதுசா என்ன செய்யலாம்னு யோசிச்சுக் கிட்டே இருந்தேன்.

அப்பதான் டேப் கைக்கு வந்துச்சு...’’ என்னும் வர்ஷினி, தொடர்ந்து தன் இல்லஸ்ட்ரேஷன் ஓவியங்களை எப்படி இணைய உலகுக்குக் கொண்டு வந்தார் எனவிவரித்தார்.‘‘என்னுடைய ஓவியங்கள் பேசினா, கண் சிமிட்டினா எப்படி இருக்கும்னு தோணுச்சு. அதனுடைய இன்னொரு வெர்ஷன்தான் அனிமேஷன். ஆரம்பத்துல போட்டோ மேல மூவிங் வீடியோக்கள்தான் உருவாக்கினேன். மேலும் இந்த விழாக்கால ஸ்பெஷல் இல்லஸ்ட்ரேஷன்கள்தான் செய்தேன். அன்னையர் தினம், தந்தையர் தினம், விநாயகர் சதுர்த்தி... இப்படித்தான் ஆர்ட் எல்லாம் போட்டுட்டு இருந்தேன்.

இதையும் நிறைய பேர் செய்துட்டு இருந்தாங்க. அதனால தனிச்சு தெரியணும்... மொத்தமா வேற ஒண்ணு உருவாக்கணும்னு நினைச்சேன். அதுதான் சினிமா. சின்ன வயசுல இருந்தே எப்படி ஆர்ட் மேலே ஆர்வமா இருந்தேனோ அப்படி சினிமா மேலயும் ஈர்ப்போட இருந்தேன்; இருக்கேன். திரைப்படங்களை ரசிச்சுப் பார்ப்பேன். படம் மொக்கையா இருந்தாலும் முழுசா பார்த்துட்டுதான் எழுந்திருப்பேன். ஸோ, நாம ஏன் இல்லஸ்ட்ரேஷன்ல சினிமாவைக் கொண்டு வரக் கூடாதுன்னு தோணுச்சு. ‘மூக்குத்தி அம்மன்’ நயன்தாராவைத்தான் முதல் இல்லஸ்ட்ரேஷனா வரைஞ்சேன். அதை தயக்கத்தோடு இன்ஸ்டால போஸ்ட் செய்தேன்.

எதிர்பாராத அளவுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. உற்சாகத்தோடு ‘மாஸ்டர்’ பவானி கேரக்டரை போஸ்ட் செய்தேன். டிரெண்டானார். அப்பறம்தான் ‘கித்தார் கம்பி மேலே...’ பாடலில் வரும் சூர்யா, பிரக்யா மார்ட்டின் ஜோடியை இல்லஸ்ட்ரேஷன் ஆக்கினேன். தொடர்ந்து நிறைய டிரெண்டிங் பாடல்களுடைய டான்ஸ் ஸ்டெப்ஸை ஃபிரேம் ஃபிரேமா இல்லஸ்ட்ரேஷன்ல கொண்டு வந்து அனிமேட் செய்தேன்.

அதிலே ‘மாஸ்டர் த பிளாஸ்டர்’ விஜய் செம டிரெண்டானார். தொடர்ந்து ‘அத்ராங்கி ரே’ பட ‘ஹாய் சக்கச்சக்க...’ பாட்டு, ‘கே.ஜி.எஃப்’ ‘மெஹபூபா...’ பாடல் வைரல் ஆகி மத்த சோஷியல் மீடியா தளங்கள்லயும் எதிரொலிச்சது.இப்ப ‘திருச்சிற்றம்பலம்’ பட ‘மேகம் கருக்காதா...’ பாடல் செம டிரெண்டிங்...’’ என்னும் வர்ஷினி, இதனையே அடுத்து பிஸினஸாகவும் மாற்றி தனக்கென ஒரு தனி இணையதளத்தையும் உருவாக்கிவிட்டார். ‘‘‘சீதா ராமம்’, ‘மெஹபூபா’ மாதிரியான சினிமாட்டிக் இல்லஸ்ட்ரேஷன்களைப் பார்த்துட்டு நிறைய பேர் இதை விலைக்கு கேட்க ஆரம்பிச்சாங்க. பேராசைப் படாம நியாயமான விலைக்கு விற்க ஆரம்பிச்சேன்.

அடுத்து ஹீரோயின் முகங்களுக்குப் பதிலா தங்களுடைய முகத்தை வரைஞ்சு கொடுக்கச் சொல்லி ஆஃபர்ஸ் வரத் தொடங்கிச்சு. ஒருமுறை ‘ஃபிரோஸன்’ பட எல்ஸா, ஆன்னா மாதிரி தங்களை வரைஞ்சு தரச் சொல்லி சகோதரிகள் கேட்டாங்க. வரைஞ்சு கொடுத்தேன். பார்த்துட்டு அப்படியே துள்ளிக் குதிச்சாங்க!இப்ப நிறைய அந்த மாதிரி காப்பி இல்லஸ்ட்ரேஷன்கள், ரியல் டூ கார்ட்டூன் இல்லஸ்ட்ரேஷன் ஆர்டர்கள் வருது. நிறைய பேர் இந்த அனிமேஷன் வீடியோக்களை உருவாக்கவும், ஆர்ட் சொல்லித்தரவும் கூட கேட்கறாங்க. கூடிய சீக்கிரம் அதையும் ஆரம்பிக்கணும்.

ஆனா, இன்னமும் நானும் கத்துக்கற ஸ்டேஜ்லதான் இருக்கேன். நிறைய தேடிட்டு இருக்கேன்... ஆனா, ஒண்ணு... நமக்குப் பிடிச்சதை பிடிச்ச மாதிரி செய்தா பிடிச்ச வாழ்க்கையை பிடிச்ச மாதிரி வாழலாம்!’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் இந்த மதுரைப் பொண்ணு வர்ஷினி.கே.

ஷாலினி நியூட்டன்