பயணங்களின் காதலர்!



‘‘நமக்காக இந்த சமூகம் பல விஷயங்களைத் தந்திருக்கிறது. நாம் என்ன திருப்பித் தருகிறோம் என்பதற்காகத்தான் என்னுடைய சைக்கிளில் பயணத்தை ஆரம்பித்தேன். என்னுடைய ஒவ்வொரு பயணமும் சமூகம் சார்ந்துதான் இருக்கும். சமூகத்தில் நடக்கும் விஷயங்களில் என்னால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால், அது குறித்து மக்களைச் சிந்திக்க வைக்க முடியும். இதன் மூலம் ஒரு சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் என்னுடைய இந்த பயணங்கள் ஒரு சக்சஸ்தான்...’’ நிதானமாகச் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த விஷ்ணுராம்.

இவர் தன்னுடைய சைக்கிள் பயணம் மூலம் மக்களுக்கு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். கோவையில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தாலும் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘6த் கியர் ஃபிட்னஸ்’ என்ற கிராஸ்பிட் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார்.
‘‘சின்ன வயசில் ரொம்பவே குண்டாக இருப்பேன். ஸ்கூல் படிக்கும்போது 92 கிலோ இருந்தேன். கல்லூரிக்கு போன பிறகுதான் குண்டாக இருப்பது குறித்து எனக்கு கவலை ஏற்பட்டது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். 1999ல் இருந்து என் ஃபிட்னஸ் பயணம் ஆரம்பமானது.

ஜிம்மில் போய் பயிற்சி எடுப்பதைக் காட்டிலும் ஏதாவது ஒரு விளையாட்டுத் துறையில் இருக்க வேண்டுமென நினைத்தேன். அதற்காக விளையாட்டுப் போட்டிகளில் எல்லாம் பங்கேற்று மெடல் வாங்கிக் குவிக்க வேண்டுமென்று நினைக்கவில்லை.என் உடல் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. அதன் முதல் கட்டமாக மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். 2010 முதல் சைக்கிளிங்.

கோவையைப் பொறுத்தவரை ரோட் சைக்கிளிங் செய்வதற்கான சைக்கிள், கடைகளில் விற்பனைக்கு இருக்காது. சாதாரண சைக்கிள்தான் கிடைக்கும். காரணம், இந்த சைக்கிள்களின் விலை அதிகம். அதனால், மக்கள் அதனை வாங்கத் தயங்கினார்கள். சென்னை, பெங்களூர், மும்பையில்தான் அப்போது இந்த மாதிரியான சைக்கிள்கள் கிடைத்தன. 2016க்குப் பிறகுதான் அந்த சைக்கிள் கோவையிலும் கிடைக்கத் தொடங்கியது.

சைக்கிளிங் செய்ய நினைத்தபோது சென்னையில் இருந்து வாங்கினேன். கோவை சாலையில் இந்த சைக்கிளை அப்போது ஓட்டியபோது பலரும் கிண்டலடித்தார்கள்.2011ல் எனக்கு திருமணமானது. ஒரு நாள் திடீரென்று எனக்கு முதுகு வலி ஏற்பட்டது. டாக்டர்கள் சைக்கிள் ஓட்டுவதை நிறுத்தச் சொன்னார்கள். ஓட்டுவதை நிறுத்தி, வாங்கிய சைக்கிளையும் விற்றுவிட்டேன். ஆனாலும் சைக்கிள் ஓட்டு வது ஒரு வித உடற்யிற்சிதானே... ஏன் எனக்கு முதுகுவலி ஏற்பட்டது என யோசித்தேன். அப்போதுதான் இதுபோன்ற சைக்கிளை நம் உடல்வாகுக்கு ஏற்ப வாங்கவேண்டுமென்று தெரிந்தது.

ஒவ்வொருவரின் உயரம், எடைக்கு ஏற்ப ஸ்மால், மீடியம், லார்ஜ் என சைக்கிள்கள் இருக்கின்றன. இதில் எது நமக்கு சரிப்படுமோ அதைத்தான் பயன்படுத்த வேண்டும்.
இந்த உண்மை தெரிந்ததும் எனக்கான சைக்கிளை 2015ம் ஆண்டு மீண்டும் வாங்கி முதலில் 50 கிலோமீட்டர் வரை பயணம் செய்தேன்...’’ என்ற விஷ்ணுராம், இதன்பிறகே விழிப்புணர்வுப் பயணமாக தன் சைக்கிள் சவாரியை வடிவமைத்திருக்கிறார்.

‘‘சைக்கிளிங் என் பொழுதுபோக்காக மாறியது. கோவிட் சமயத்தில் சைக்கிளிங் செய்பவர்களை மட்டும் வெளியில் அனுமதித்தார்கள். இந்தியா முழுக்க சைக்கிளிங் பிரபலமானது இதனைத் தொடர்ந்துதான். கோவிட் வாரியர்களுக்காக நானும் என் நண்பனும் சேர்ந்து காரில் பயணிக்க திட்டமிட்டோம். எங்களைப்போல் 24 மணி நேரத்தில் 1950 கிலோமீட்டர் தூரப் பயணத்தை இரு நண்பர்கள் மேற்கொண்டிருந்தனர். நாங்கள் 20 மணி நேரம் 40 நிமிடத்தில் பெங்களூரில் ஆரம்பித்து நாக்பூர்... அங்கிருந்து மீண்டும் பெங்களூர்... என 2152 கிலோமீட்டர் கடந்தோம். இதனை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை.

அதைத் தொடர்ந்து, தனிநபராக 24 மணி நேரத்தில் சைக்கிளில் எவ்வளவு தூரம் செல்ல முடியுமென்று பார்க்க ஒரு பயணம் மேற்கொண்டேன். இதையும் வேறொருவர் 590 கிலோமீட்டர் பயணம் செய்து சாதித்திருந்தார். நான் கோவையில் தொடங்கி சேலம், மதுரை, கன்னியாகுமரியை 23 மணி நேரம் 53 நிமிடத்தில் அடைந்தேன். மொத்தம் 623 கிலோ மீட்டர். மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன், உடல் பருமனை எதிர்த்துப் போராடி இருதயம் சார்ந்த நோயில் இருந்து பாதுகாகாத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை
இப்பயணத்தில் ஏற்படுத்தினேன்.

பிறகு 100% கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதை வரவேற்கும் விதமாக 100 கிமீ தூரத்தை 2 மணி 55 நிமிடங்களில் கோவை முதல் திருச்சூர் வரை சைக்கிளில் கடந்தேன்.
100 மைல் தூரத்தை 4 மணி நேரம் 28 நிமிடங்களில் கோவை முதல் சேலம் வரை குளோபல் வார்மிங்கை முன்னிட்டு செய்தேன். தொடர்ந்து கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு 99 மணி நேரத்தில் சுமார் 6000 கிமீ தூரத்தை காரில் கடக்க திட்டமிட்டேன். இதனை சென்னையில் உதயநிதி தொடங்கி வைத்தார். கொல்கத்தா, தில்லி, மும்பை, அங்கிருந்து சென்னை என 82 மணி நேரம் 30 நிமிடங்களில் 5870 கிமீ தூரத்தை முடித்தேன்.

இதன் மூலம் ஒரு தனிநபர் காரில் க்வாடிலேட்டரல் பயணத்தை மேற்கொண்டதற்காக லிம்கா, ஆசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றேன்...’’ என்றவர் அக்டோபர் 28ம் தேதி போதைப் பொருளை எதிர்க்கும் விதமாக சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.‘‘போதைப் பழக்கம் உலகம் முழுக்க பரவி வருகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் இளைய தலைமுறையினர்தான். குறிப்பாக பெண்கள். இதைக் கண்டித்து 1000 கிமீ தூரத்தை சைக்கிளில் கடக்க முடிவு செய்திருக்கிறேன்.

இந்தப் பயணம் ஹைதராபாத்தில் தொடங்கி தெலுங்கானா, கிருஷ்ணகிரி, சேலம், கோவை... என முடிக்கிறேன். இந்தப் பயணத்தில் என் பத்து வயது மகள் ரக்‌ஷாவும் உடன் வருகிறாள். அவளால் 1000 கிமீ பயணிக்க முடியாது என்பதால், கோவையில் 50 கிமீ தூரம் வரை என்னுடன் பயணிப்பாள். இதற்காக நானும் அவளும் சேர்ந்து பயிற்சி எடுத்து வருகிறோம்...’’ என்ற விஷ்ணுராம் சைக்கிள் பயணத்தில் சந்திக்கும் பிரச்னைகளை விவரித்தார்.

‘‘சைக்கிளிங் அவ்வளவு ஈசி கிடையாது. காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்தால் மாலை வரை சைக்கிளிங் செய்வோம். 200 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கவே எட்டு மணி நேரமாகும். இதனால் உடல் மற்றும் மனதளவில் வலிகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக வெயில் காலத்தில் உடல் மட்டுமல்ல மனதும் சோர்வடையும். அடுத்து டிராஃபிக். இங்கு பலருக்கு டிராஃபிக் சென்ஸ் கிடையாது. சைக்கிளில் செல்பவர்களை மதிக்கவே மாட்டார்கள். ஹைவேயில் போகும்போது, நம்மைக் கடக்கும் வண்டிகள் 100 கிமீ வேகத்தில் பறக்கும். அது நமக்குள் ஒரு ஆட்டத்தை ஏற்படுத்தும். பெரிய டிரக் வண்டி 40 கிமீ வேகத்தில் செல்லும். இவர்களை ஓவர் டேக் செய்ய முடியாது.

அடுத்து வண்டியில் இருந்து வெளியாகும் புகை. அதைத் தவிர்க்க முகத்தில் துணி மாஸ்க் அணிகிறேன். ஹைவேயை எளிதாகக் கடக்கலாம். ஆனால், சிட்டிக்குள் சைக்கிளில் செல்லும் போது பல குண்டும் குழியுமான சாலைகளில் பயணிக்க வேண்டும். இதில் உள்ள நல்ல விஷயம் வயது வித்தியாசமின்றி நண்பர்கள் கிடைப்பார்கள் என்பதுதான். எனக்கு ஐந்து வயது முதல் 70 வயது வரை சைக்கிள் நண்பர்கள் உள்ளனர்.

உண்மையில் சைக்கிளிங் எளிமையான உடற்பயிற்சி. ஸ்ட்ரெஸ் பஸ்டரும் கூட. பத்து கிலோமிட்டர் சைக்கிளிங் செய்யும் போது, மனது ரிலாக்ஸாகும். இயற்கையும் நல்ல காற்றும் மனதையும் உடலையும் ரம்மியமாக்கும்...’’ என்ற விஷ்ணுராம், தன்னுடைய ஜிம் பயிற்சி முறைகளைப் பற்றி விவரித்தார்.‘‘நான் நடத்துவது கிராஸ்ஃபிட் ஜிம்.

அதாவது ஹைஇன்டென்சிட்டி பயிற்சி. தினமும் 45 நிமிடங்கள் மேற்கொண்டால் போதும். உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். உடற்பயிற்சி மட்டுமில்லாமல் விளையாட்டு சார்ந்த பயிற்சிகளும் உண்டு. 2016ல் இந்தப் பயிற்சிக் கூடத்தை ஆரம்பித்தேன். இதில் பயிற்சியளிப்பவர்கள் எல்லாரும் தகுதி பெற்றவர்கள்...’’ என்றவரின் ஆசை கின்னஸில் இடம்பிடிக்க வேண்டும் என்பது.
 
‘‘காரில் இந்தியாவின் நான்கு மூலைகளையும் (கன்னியாகுமரி, ஆந்திரா, காஷ்மீர் மற்றும் குஜராத்) 18 நாட்களில் - சுமார் 14 ஆயிரம் கிமீ தூரத்தை கடக்க திட்டமிட்டிருக்கிறேன். நாள் ஒன்றுக்கு 800 கிமீ கடந்தால்தான் 18 நாட்களில் நினைத்தபடி முடிக்க முடியும். இந்தப் பயணம் கின்னஸ் சாதனையில் இடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னுடைய இந்த சாதனைப் பயணங்களுக்கு என் மனைவி ஸ்வாதி மற்றும் மகள் ரக்‌ஷா உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்றும் அன்பு... நன்றி...’’ நெகிழ்கிறார் விஷ்ணுராம்.

செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்