பாசிட்டிவ் உணர்வுக் குவியல்!



அசோக் செல்வன் உடன் ரீது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள்... அட! கலர்ஃபுல்லா இருக்கே காஸ்டிங் என நமக்கு ஆர்வத்தை உண்டாக்கியது ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் டீஸர். ‘‘மூன்று நாயகிகள் அல்ல... ஐந்து நாயகிகள் இருக்காங்க!’’ ஆச்சர்யங்களுடன் ஆரம்பித்தார் அறிமுக இயக்குநர் ஆர்.கார்த்திக்.

‘‘அசோக் செல்வன்... மூன்று நாயகிகள்னாலே ‘என்ன சார் படம் செம கிளாமரா’ என்னும் கேள்வி வருது. அப்படி எதுவுமே கிடையாது. குறிப்பா ஒரு முத்தக் காட்சி கூட இல்ல.

மனுஷன் தன்னைச் சுத்தி எத்தனை பேர் இருந்தாலும் ஏதோ ஒரு வகையிலே தனிமையாவே இருக்கான்.
அவனுக்குள்ள அஞ்சு நிமிஷத்துக்கு ஒருமுறை மனநிலை மாறிக்கிட்டே இருக்கும். திடீர்னு டவுனா இருக்க மாதிரி ஒரு ஃபீல்... ஃபிரண்ட்ஸ் கிட்டருந்து ஒரு கால் வந்தா போதும் அப்படியே மைண்ட் லேசாகிடும், கொஞ்சம் ரிலாக்ஸா மாறிடுவோம். அதுதான் மனித இயல்பு. நமக்குள்ள இருக்கும் மாற்றத்தை எப்படி பாசிட்டிவ்வா பார்ப்பது என்பதுதான் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் லைன்...’’ புன்னகைக்கிறார் ஆர்.கார்த்திக்.

முதல் படத்திலேயே கலர்ஃபுல் காஸ்டிங் எப்படி சாத்தியமானது?
சொந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம். சென்னை வந்து ரொம்ப நாட்கள் ஆச்சு. சினிமாதான் வாழ்க்கை, கனவு எல்லாமே. தமிழ்ல ஒரு ரெண்டு படங்கள், தெலுங்கிலே ஒரு நாலு படங்கள்ன்னு அஸிஸ்டெண்ட் இயக்குநரா வாழ்க்கையை ஆரம்பிச்சேன். நான் ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்ச உடனேயே முதல் சாய்ஸ்ல வந்தவர் அசோக் செல்வன்தான். கதை சொன்னேன். அவருக்குப் பிடிச்சது. அப்படிதான் என் பயணம் ஆரம்பிச்சது. படத்திலே அசோக் மூணு கெட்டப்ல வரப்போறார்.

மூணு நாயகிகள் தேவை. சுமார் முப்பது நாயகிகளுக்கு மேலே இந்தக் கதையை சொல்லியிருக்கேன். எல்லாருக்குமே கதை பிடிச்சிருந்தது. ஆனா, பிஸி கால்ஷீட், டைமிங் செட்டாகலை. ரெண்டு மூணு பெரிய ஹீரோயின்ஸ் தங்களுடைய கால்ஷீட் காரணமா நடிக்க முடியலையேன்னு வருத்தப்பட்டாங்க. ஐந்து நாயகிகள்னு ஆச்சர்யம் கொடுத்தீங்களே..? உங்க நாயகிகள் பற்றி சொல்லுங்க!

என் கதையிலே முதல் நாயகி இயற்கை. படம் ஆரம்பிக்கும் போதே ‘இயற்கைக்கு நன்றி’ என்கிற டேக் இருக்கும். நாம இயற்கையை நம்பினா என்னல்லாம் மேஜிக் நடக்கும்ன்னு பார்த்தேன். மழை வரணும்னு நினைச்ச இடத்திலே மழை, பனினு எல்லாமே ஒரு மாயாஜாலம் மாதிரி நடந்துச்சு.அந்த நான்காவது நாயகி ஷிவதா. அந்த மழை சீன் சொன்னேனே... அது அவங்களுக்குதான். ஒரு ஹீரோயின் நாலு மணி நேரம் கொட்ற மழையிலே நின்னு நடிச்சாங்க. கேப்ல கூட கேரவன் தேடலை.

அவங்களுக்கு கொஞ்ச சீன்ஸ்தான். ஆனா, ரொம்ப முக்கியமான சீன்ஸ். ஸ்டைலிஷ் பளிச் பொண்ணு சுபாவா ரீது வர்மா; அராத்து, ரகளை பொண்ணு மதியா அபர்ணா பாலமுரளி; பக்கத்து வீட்டு பொண்ணு சாயல்ல மீனாட்சியா சிவாத்மிகா ராஜசேகர். ரீது வர்மாவுக்கு சென்னையிலே சீன்களே இல்ல. எப்போதும் டிராவல்தான். கொரோனா டைம் வேற. எல்லா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாம எங்க கூட டிராவல் செய்தாங்க. சத்தமா பேசக்கூட மாட்டாங்க. ‘இது ஓகேவா?’ அவ்ளோதான் அவங்க டோன். அத்தனை நாட்கள் டிராவல், விதவிதமா வெதர் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டாங்க.

அபர்ணா பாலமுரளி... என்ன சொல்ல... அவங்களுக்குக் கொடுத்தது 10 நாட்கள். 8 நாட்கள்ல அவங்க போர்ஷன் முடிஞ்சது. காரணம், சிங்கிள் டேக் எல்லாமே. இதிலே ஒரு நாள் அவங்களுக்கு அப்படி ஒரு காய்ச்சல்... அதைக்கூட பொருட்படுத்தாம நடிக்க வந்து நின்னாங்க.

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வந்து சொல்றாங்க ‘சார், அவங்க முகம் அப்படி சுடுது சார்’ன்னு. அதையும் மீறி அவங்க அத்தனை எமோஷன்களை வெளிப்படுத்தியிருக்காங்க.
சிவாத்மிகா ராஜசேகர்... ஆரம்பத்திலே ரெண்டு மூணு டைம் அவங்க போட்டோ எனக்கு வந்திச்சு. செட்டாவாங்களா இல்லையான்னு ஏகப்பட்ட கேள்வி. ஆனா, முதல் ஷாட் வந்து நின்ன உடனே முடிவு செய்திட்டோம், அந்த கேரக்டர் அவங்கதான்னு. ரொம்ப ஆர்வமா கத்துக்கத் துடிக்கற ஒரு ஆர்ட்டிஸ்ட். என்னதான் பெரிய ஃபேமிலின்னாலும் அதெல்லாம் காட்டிக்கவே மாட்டாங்க.  

உங்க நாயகன் அசோக் செல்வன் பற்றி சொல்லுங்க?

இந்தக் கதை எனக்கு ரொம்ப முக்கியம். அதிலே ஒரு காரணம் இருக்கு. ஆனா, என்னைப் போலவே ஸ்க்ரிப்ட் மேலே அதீத ஆர்வம் கொண்ட இன்னொரு நபரைப் பார்க்கறது எவ்வளவு பெரிய சந்தோஷம்! நிமிஷத்துக்கு நிமிஷம் கூப்பிட்டு அவ்வளவு ஆர்வமா கேட்பார். மெனக்கெட்டு நடிச்சிருக்கார்.  இவங்க கூட காளி வெங்கட், அபிராமி, இன்னும் நிறைய கேரக்டர்கள்... எல்லாருக்குமே மனசிலே நிற்கற மாதிரியான ரோல். ‘ஓ மை கடவுளே’, ‘மண்டேலா’, ‘மேயாத மான்’ உள்ளிட்ட பல படங்கள்ல வேலை செய்த வித்து அயன்னா சினி
மாட்டோகிராபி. நேச்சுரல் டோனை ரொம்ப அழகாக் கொண்டு வந்திருக்கார்.

யாருக்குமே ஹெவி மேக்கப் கூட கிடையாது. ஆனாலும் அவ்வளவு அழகா காண்பிச்சிருக்கார். ‘பொய் சொல்லப் போறோம்’, ‘பெங்களூர் நாட்கள்’ உள்ளிட்ட பல தமிழ், மலையாளப் படங்களுக்கு மியூசிக் செய்த கோபி சுந்தர் இந்தப் படத்திலே மியூசிக். மொத்தம் அஞ்சு பாடல்கள். அருமையா வந்திருக்கு. தயாரிப்பு விநியோகம் 18 ஸ்டூடியோஸ்... பெரிய சப்போர்ட் கொடுத்திருக்காங்க.

‘நித்தம் ஒரு வானம்’ ஆடியன்ஸ்க்கு எப்படிப்பட்ட அனுபவம் கொடுக்கும்?

100% எல்லாம் வேண்டாம். படம் முடிஞ்சு வெளியேறும்போது குறைஞ்சது 1% பாசிட்டிவ் மைண்ட் செட் ஆடியன்ஸ்க்கு வந்தாலே எனக்கு வெற்றிதான். நிறைய வன்முறை, நிறைய 18+ வெப் சீரிஸ்கள், கொலை, கிரைம்ன்னு விஷுவல் மீடியம் முழுக்க இதைத்தான் பிரதிபலிக்குது. அதுக்கு நடுவிலே கொஞ்சமாவது உணர்வுகளைப் பேச முயற்சி செய்திருக்கேன்.  

ஷாலினி நியூட்டன்