புகைப்படத்துக்கான ஆஸ்கர் வென்ற முதல் தமிழர்!



மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர் செந்தில் குமரன். காமராஜ் பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முடித்தவர். இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்டில் கம்ப்யூட்டர் எஞ்சினியர் வேலையைத் துறந்துவிட்டு இவர் ஆழங்கால் பதித்த துறை புகைப்படக் கலை.
சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இந்தியா முழுதும் சுற்றிய செந்தில் முதலில் தெருப் புகைப்படம்; பிறகு நுகர்வுப் பொருட்களுக்கான புகைப்படம் என்று வணிக ரீதியாக எடுத்து பிறகு நண்பர்களின் தூண்டுதலால் சுற்றுச்சூழல் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். அதுவே அவரை புகைப்படத் துறையின் கடினமான ஒரு கிளையான ஆவணப் புகைப்படங்கள் (Documentary Photos) நோக்கி தள்ளியிருக்கிறது.

ஆவணப் புகைப்படம் என்பது ஒரு குறிப்பிட்ட தலைப்பில் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்னைகளைப் பேசும் அழகிலா, ஆனால் அர்த்தம் தோய்ந்த புகைப்படங்கள்.
இந்த அடிப்படையில் கடந்த 10 வருடங்களாக இவர் எடுத்த, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் புலிகளுக்கும், மக்களுக்குமிடையேயான பல்வேறு முரண்களைப் பேசும் புகைப்படங்களின் தொகுப்புக்காக புகைப்படத்துக்கான ஆஸ்கர் என்று சொல்லப்படும் நெதர்லாந்தின் ‘வேர்ல்ட் ப்ரஸ் ஃபோட்டோ’ (World Press Photo) விருது இவரைத் தேடி
வந்திருக்கிறது.

1950களிலிருந்து வழங்கப்படும் இந்த விருதை வாங்கும் முதல் தமிழர் இவர்தான். ‘‘கல்லூரியில் படிக்கும்போது டிராவல் செய்ய வேண்டுமென்று விரும்பினேன். அதுவும் புகைப்பட டிராவல். அப்படித்தான் கொல்கத்தா, வாரணாசி என்று மக்கள் கூட்டம் கூட்டமாக சேரும் இடங்களான கும்பமேளா, திருவிழாக்களை படமாக எடுத்தேன். பிறகு பிழைப்புக்காக சில நிறுவனங்களின் நுகர்வுப் பொருட்களை கேமராவில் சிறை செய்தேன். கூடவே பொழுதுபோக்காக தெருவோர புகைப்படம் (Street Photography), திருமணப் புகைப்படங்களையும் அவ்வப்போது எடுத்து வந்தேன்.

ஒரு கட்டத்தில் இது போரடிக்கவே போட்டோ ஜர்னலிசம் பக்கம் கவனத்தை திருப்பினேன்...’’ என்று சொல்லும் செந்தில்குமரன், ஜல்லிக்கட்டு, குலசேகரபட்டினம் தசரா விழா, குறவர்கள், சர்க்கஸ், மலம் அள்ளும் தொழிலாளர்கள், காவேரி, சுனாமி, குஸ்திச் சண்டை... என முக்கியமான பல வரலாற்றுத் தருணங்களை ஆவணப் புகைப்படங்களாகப்  பதிவு செய்திருக்கிறார்.‘‘காடுகளுக்கு டிராவல் செய்யலாமே என்று தோன்றியபோது முதுமலை யானைகள் காப்பகத்தின் வெட்னரி டாக்டரான கலைவாணனையும், விலங்கு ஆர்வலரான ராஜபாளையத்தைச் சேர்ந்த டி.எஸ்.சுப்ரமணிய ராஜாவையும் சந்திக்க நேரிட்டது. இவர்கள்தான் ‘ஒரு புகைப்படம் என்பது அழகியலை மட்டும் பேசினால் போதாது... அது சில பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் பேசவேண்டும்’ என்று புரிய வைத்தனர்.

அன்றிலிருந்து யானைகள், புலிகள், பவளப் பாறைகள்... உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்னைகள் தொடர்பாக புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன். என் வாழ்க்கைக்கான அர்த்தமும் நிறைவும் இதன் பிறகே எனக்குள் ஏற்படத் தொடங்கியது...’’ என்ற செந்தில்குமரன், வேர்ல்ட் பிரஸ் ஃபோட்டோ விருது பற்றி சொல்லத் தொடங்கினார்.

‘‘1955 முதல் இந்த விருதை நெதர்லாந்து நாடு கொடுத்து வருகிறது. இதில் கலந்துகொள்ளவே இந்தியப் புகைப்படக் கலைஞர்கள் யோசிப்பார்கள். காரணம், இந்தப் போட்டியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் புகைப்படங்கள் வரை பங்கேற்கும். அதன் தரத்தை அப்படி ஆராய்வார்கள். சின்னதாக மைக்ரோ அளவில் பிசிரு தட்டினாலும் ரிஜக்ட் செய்து விடுவார்கள்.
உதாரணமாக, ஆப்பிரிக்காவில் இருந்து யானையின் வெட்டப்பட்ட தலையின் புகைப்படம் வந்திருக்கும்.

ஆண்டுதோறும் வெற்றி பெறும் படங்களைப் பார்த்துப் பார்த்து அசந்திருக்கிறேன். எவ்வளவு துல்லியம்! முன்பு இந்த விருதில் பிரிவுகள் இல்லாமல் இருந்தது. இப்பொழுது ஆறு கண்டங்களாகப் பிரித்து வழங்குகிறார்கள்.இந்த விருது சிங்கிள் புகைப்படம், 10 புகைப்படங்கள் கொண்ட குறுங்கதைப் பிரிவு, 30 புகைப்படங்கள் கொண்ட நீண்ட கதைப் பிரிவு, மற்றும் வீடியோ என்று 4 வகையாக கொடுக்கிறார்கள். எனக்கு ஆசியாவிலேயே 30 புகைப்படங்கள் கொண்ட நீண்ட கதைப் பிரிவில் விருது கிடைத்திருக்கிறது. இவை, மனிதனுக்கும் புலிகளுக்கும் உள்ள முரண்களைப் பேசும் படங்கள்.  இதனைத் தொடர்ந்து நம் தமிழ்நாட்டு முதல்வர் டுவிட்டரில் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதைப் பார்க்கவே அவ்வளவு மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருந்தது...’’ என்று சொல்லும் செந்தில்குமரன், தனது தொகுப்பு பத்தாண்டுக்கால உழைப்பில் உருவானது என்கிறார்.

‘‘2005 முதல் டாக்டர் கலைவாணன், டி.எஸ்.சுப்ரமணிய ராஜா உள்ளிட்ட பல வெட்னரி டாக்டர்களும், விலங்கு ஆர்வலர்களும் என்னை வழிகாட்டியபடியே இருக்கிறார்கள்.
தமிழகத்தில் கடந்த 20 வருடத்தில் 4 ஆட்கொல்லி புலிகள் இருந்திருக்கிறது. இதில் முதல் புலி வால்பாறையில் ஒரு மாட்டை அடித்துவிட்டதாக 2012ல் புகார் வந்தது. அதைப் பிடித்து காட்டில் விட்டதும் அது பசியாலும் நோயினாலும் இறந்துவிட்டது.

அடுத்து 2013ல் ஊட்டியில் 3 பேரை அடித்துவிட்ட புலியையும் சுட்டுத்தான் பிடிக்கமுடிந்தது. 2015ல் கூடலூரில் ஒருவரைத் தாக்கிய புலியையும் சுட்டுத்தான் பிடிக்கமுடிந்தது. ஆனால், கடந்த வருடம் டி-23 என்ற புலியை மட்டும் வனத்துறை உயிரோடு பிடித்தது. இதுமாதிரி மக்களைப் பாதுகாப்பதற்காக புலிகளைப் பிடிப்பதற்கான ஆயத்தங்கள், முறைகள், அது ஏற்படுத்திய விளைவுகள், மக்கள் அனுபவித்த துன்பங்கள், வனத்துறை எதிர்கொள்ளும் சவால்கள்... என அத்தனையை யும் பிரதிபலிக்கும் வகையில் 30 புகைப்படங்களை 3 விதமான பார்வையில் சமர்ப்பித்தேன்.

இவை நீண்டகால விலங்கு மற்றும் மனிதனின் பிரச்னையைப் பேசியதால் இந்த விருதை எனக்கு வழங்கினார்கள்...’’ என்ற செந்தில்குமரன், இந்தியாவில் புலிகளின் நிலை, ஏன் புலிகள் ஆட்கொல்லிப் புலிகளாக மாறுகின்றன, அரசும் மக்களும் இந்தப் பிரச்னைகளை சமாளிக்க என்ன செய்யவேண்டும் என்பதையும் விவரித்தார்.

‘‘1939ல் இந்தியாவில் சுமார் 40 ஆயிரம் புலிகள் இருந்தன. இது 1970களில்  வெறும் ஆயிரம் புலிகளாக சுருங்கிப் போனது. காரணம், பிரிட்டிஷ் ஆட்சியில் பிரித்தானிய அதிகாரிகள் புலி வேட்டையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர். புலியை சுட்டு அதன் தோலை உரித்து பாடம் செய்து வீட்டுச் சுவரில் மாட்டி வைப்பதை பெருமையாகக் கருதினார்கள்.சுதந்திரத்துக்குப் பின்பு நம் ஊர் ஜமீன்கள், பண்ணையார்கள் எல்லாம் தங்கள் பங்குக்கு வேட்டையாடினார்கள்.

இதனால் புலிகளின் எண்ணிக்கை குறைந்தது. இதைத் தடுக்க அன்றைய பிரதமரான இந்திரா காந்தி ‘ப்ராஜக்ட் டைகர்’ (Project Tiger) எனும் திட்டத்தைக் கொண்டுவந்தார். இதனால் 70களுக்குப் பிறகு ஓரளவு புலிகளின் எண்ணிக்கை சற்றே உயர்ந்து வந்தது. ஆனால், 2000 ஆண்டுகளில் மீண்டும் ஒரு சரிவு வந்தது.

காரணம், பாரம்பரிய மருத்துவத்துக்காகவும், வயாகராவுக்காகவும் புலிகள் கொல்லப்பட்டு அதன் எலும்புகள் சீனாவுக்கு கடத்தப்படத் தொடங்கின.ஒரு கட்டத்தில் அரசால் இதுவும் தடுக்கப்பட்டது. அத்துடன் புலிகள் காப்பகம் தொடர்பாக அரசு மும்முரம் காட்டியதால் இப்போது சுமார் மூன்றாயிரம் புலிகளாக உயர்ந்துள்ளது. என்றாலும் இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப செயல்பாடுகளை அரசு செய்யாததால்தான் மனிதன் Vs விலங்கு போன்ற முரண்கள் தலைதூக்குகின்றன.  

இருக்கும் மூன்றாயிரம் புலிகளில் சுமார் 65% நம் நாட்டிலுள்ள சுமார் 50 புலிகள் காப்பகத்தில் உள்ளன. காப்பகம் என்பது பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசம். இதற்குள் ஒருவர் ஒரு சிறு கல்லைக்கூட கொண்டு செல்லமுடியாது. ஆனால், இந்த பாதுகாக்கப்பட்ட காடுகளில்தான் சுமார் 56 ஆயிரம் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களை அந்த காடுகளில் இருந்து அப்புறப்படுத்தினால்தான் அந்த மக்களுக்கும் புலிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்த அரசு, சுமார் 14 ஆயிரம் பேரை அருகிலுள்ள பாதுகாக்கப்படாத காட்டில் மறுகுடியேற்றம் செய்தது. ஆனால், காப்பகத்தையும் தாண்டி எஞ்சியுள்ள 35% புலிகள் காடுகளில் நடமாடுவதை நாம் மறந்துவிடக்கூடாது.

நாயைப் போல் எல்லைக்கு உட்பட்ட வாழ்க்கையை வாழக் கூடியதுதான் புலியும். ஒரு நாயின் சுற்றுவட்டாரத்தில் வெளி நாய் ஒன்று வந்தாலும் மற்ற நாய்கள் அதைச் சூழ்ந்து வெளியேற்றி விடும்.புலிகளும் அப்படித்தான். சிங்கம் மாதிரி புலி கூட்டமாக வாழாது. ஒரு புலி சுமார்  6 சதுர கிலோ மீட்டரிலிருந்து 120 சதுர கிலோ மீட்டர் வரை தன் எல்லையை வரையறுத்துக்
கொள்ளும். இது உணவு கிடைக்கும் தன்மையைப் பொறுத்தது. புலியின் முக்கிய உணவு மனிதர்கள் அல்ல. மான், கீரி, பன்றி போன்ற தாவர உண்ணிகள்தான்.

இவை தம் எல்லையில் போதுமான அளவு இல்லாதபோதுதான் அந்த புலி தன் எல்லையை விரிவாக்கும். அப்படி தன் எல்லையை அதிகப்படுத்தும்போது இன்னொரு புலியைக் கண்டால் அதனுடன் சண்டையிடும். வயதான அல்லது பலவீனமான புலி பலமுள்ள புலியிடம் தோற்கும். காயம்பட்ட புலியால் அதற்குப் பின் வேட்டையாடி உணவைத் தேடமுடியாது. வேறு வழியின்றி பக்கத்தில் உள்ள ஆடு, மாடு அல்லது மனிதர்களைத் தாக்க ஆரம்பிக்கும்.

ஆடு, மாடுகளையாவது பொறுமையாக வைத்துச் சாப்பிடும். மனிதர்களைத்  தாக்குவது ஒரு தற்காப்புக்குத்தான். காரணம், மனித உடலில் சதையைவிட எலும்புகள் அதிகம்...’’ என்று சொல்லும் செந்தில்குமரன், ஒரு நாட்டிலுள்ள புலிகளின் எண்ணிக்கையை வைத்து அந்த நாட்டின் நன்மைகளைப் பட்டியலிடலாம் என்கிறார்.

‘‘புலியின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்தக் காடு ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். காடு ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் அங்கு தாவர உண்ணிகள் அதிகம் என்று அர்த்தம். தாவர உண்ணிகள் அதிகம் இருக்கிறது என்றால் தாவரங்கள் ஏராளமாக விளைகின்றன என்று பொருள். தாவரங்கள் அதிகம் விளைந்தால் அந்தப் பகுதியில் நீர் நிலைகள் அதிகம் இருக்கின்றன என்று அர்த்தம்.

உதாரணமாக, பெரியார் புலிகள் காப்பகத்தில் பெரியாறு ஓடுகிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தாமிரபரணி ஓடுகிறது. மேகமலை  புலிகள் காப்பத்தில் வைகை ஆறு ஓடுகிறது. காடு இருந்தால்தான் மழை பெய்யும், ஆறுகள் நிரம்பும். ஆறுகள் நிரம்பி ஓடினால் விவசாயம் செழிக்கும்.ஆக, புலிகளின் எண்ணிக்கையை வைத்து அந்த நாட்டின் உணவுச் சங்கிலியை மதிப்பிடலாம். எனவேதான், காடுகளை விரிவுபடுத்தி புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்கிறோம்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் செந்தில்குமரன்.

டி.ரஞ்சித்