சீன டாய்ஸை வீழ்த்திய இந்திய பொம்மைகள்!



எல்லைப் பிரச்னையில் இந்தியாவும் சீனாவும் முட்டி மோதி, முறைத்துக் கொண்டிருக்கையில் சத்தமில்லாமல், சீனாவை ஒரு விஷயத்தில் இந்தியா வீழ்த்தியேவிட்டது.

அது, இந்திய சந்தையில் குழந்தைகளுக்கான பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள்.
சீனப் பட்டாசு, சீன எலட்ரானிக் பொருட்கள், சீன மொபைல்கள் என்று ஏகப்பட்ட சீனப் பொருட்கள் இந்தியாவின் சந்து பொந்துகளில் எல்லாம் கோலோச்சிக் கொண்டிருக்கையில், பொம்மைகள் விஷயத்தில் சீனாவை அடித்துத் துவைத்திருக்கிறது இந்தியா. உள்நாட்டில் மட்டுமல்ல... வெளிநாடுகளிலும் என்பதுதான் ஹைலைட்.

பொம்மை மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியில் பல இந்தியக் கம்பெனிகள் களத்தில் நிற்கின்றன. அதில் முதன்மையாக நிற்பது சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஃபன்ஸ்கூல் (funskool) என்ற நிறுவனம். இந்தியாவில் டயர் பிஸினசில் முன்னணியில் இருக்கும் எம்ஆர்எஃப் நிறுவனத்தால் 1986ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் கோவா மற்றும் நம்ம ஊர் ராணிப்பேட்டையில் பிரம்மாண்டமான 3 தொழிற்சாலைகளுடன் இயங்குகிறது.

‘‘ஒருகாலத்தில் இந்தியாவில் புழங்கிய சுமார் 70% டாய்ஸ்கள் சீனாவில் இருந்துதான் இறக்குமதியானது. விலை குறைவு, வெரைட்டி என்பதுதான் சீன டாய்ஸ்களின் மீதான ஈர்ப்புக்கு காரணம்...’’ என்றபடி பேசத் தொடங்கினார் ஃபன்ஸ்கூலின் தலைமைச் செயல் அதிகாரியான  ஜெஸ்வந்த். ‘‘2017 முதல் இந்திய அரசாங்கம் ‘மேக் இன் இந்தியா’ தொடர்பாக பல முயற்சிகளை மேற்கொண்டது. இந்தக் காலத்தில் இறக்குமதிக்கான சுங்க வரியை ஏற்றியது என்றாலும் சீனப் பொருட்கள் இந்தியாவுக்குள் வந்தபடிதான் இருந்தது.

இந்நிலையில் 2021 ஜனவரியில் நம் அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யவேண்டும் என்றால் அந்தப் பொருட்களுக்கு மட்டுமல்ல... அதை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கும், இந்திய தர நிர்ணயச் சட்டத்தின்படி ( பீரோ ஆஃப் இண்டியன் ஸ்டேண்டர்ட்) சான்றிதழ் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.

இந்த நேரத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தது. ஆகவே, சீனாவுக்கு இந்திய அதிகாரிகள் செல்லவோ அல்லது சீன அரசாங்கம் இந்தியர்களுக்கு விசா கொடுப்பதோ மறுக்கப்பட்டதால் சீன பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களின் இறக்குமதியில் பெரும் சரிவு ஏற்பட்டது. இந்த நேரத்தில்தான் எங்களைப் போன்ற உள்ளூர் நிறுவனங்கள் வளர்ந்தன...’’ என்ற ஜெஸ்வந்த்திடம் சீன டாய்ஸ்களுடன் இந்திய நிறுவனங்களின் டாய்ஸ்கள் எப்படி போட்டி போட முடியும்? வரவேற்பு எப்படி இருக்கிறது? என்று கேட்டோம்.

‘‘இந்தியாவுக்கு மட்டுமல்ல... பல உலக நாடுகளுக்கும் பல்வேறு பொருட்களை சீனா ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால், சீனப் பொருட்கள் மலிவானதாக, வெரைட்டியாக இருந்தாலும் அது மண்ணுக்கு ஏற்ற பொருட்களாக இல்லை என்ற குறை உலகெங்கும் இருந்தது. உதாரணமாக பொம்மை மற்றும் விளையாட்டுப் பொருட்களைப் பொறுத்தளவில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மரபு இருக்கும். இது சீன பொம்மைகளில் பிரதிபலிக்காது. இச்சூழலில் இந்திய நிறுவனங்கள் நம் மரபுக்கு ஏற்ற பொம்மைகளை உற்பத்தி செய்தன.

உதாரணமாக எங்களது ஃபன்ஸ்கூல் பல்வேறு தலைப்பு களில் விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. இவை வயதுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகின்றன. ஆரம்ப அரிச்சுவடி, எண்களைக் கற்றுக்கொள்ளும் விளையாட்டு முதல் நாம் பொதுவாக வெளியே சென்று விளையாடும் கபடி, கோ கோ போன்ற விளையாட்டுக்களை வீட்டினுள் விளையாடுவதற்கு ஏற்ப போர்ட் கேமாக (Board Game) கொண்டு வந்திருப்பது வரை பலவற்றை சொல்லலாம்.

இத்தோடு இந்திய சரித்திரங்களை குழந்தைகள் அறிந்து கொள்வதற்காக ஜான்சி ராணி கதை, நாட்டின் தலைவர்களின் கதைகள் என்று வரலாறுகளைச் சொல்லும் புதிர் விளையாட்டுகளையும் உற்பத்தி செய்திருக்கிறோம். மொத்தத்தில் வருடந்தோறும் சுமார் 100 விளையாட்டுகளையாவது புதிதாகக் கொண்டு வருகிறோம். எனவே எங்கள் தயாரிப்பு பொம்மை மற்றும் விளையாட்டுப் பொருட்களுக்கு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

தவிர அரசின் ஆதரவால் இந்திய பொம்மைகளின் விலை, சீன டாய்ஸ்களை விட மலிவாக இருக்கிறது. அத்துடன் இந்திய பொருட்கள் இன்று குக்கிராமம் உட்பட அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை. உங்களைத் தேடி இந்திய பொம்மைகளும் விளையாட்டுப் பொருட்களும் வருகின்றன. இது மிகப்பெரிய ப்ளஸ்.

எங்கள் ஃபன்ஸ்கூல் கூட 150 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரைக்குமான பொருட்களைத் தயாரிக்கிறது. தஞ்சாவூர், சென்னப்பட்டினம் பொருட்களைப் போல மரத்தால் செய்யப்பட்ட பொருட்களையும் ஃபன்ஸ்கூல் மிகத் தரமுள்ளதாகச் செய்வதால் எங்களைப் போன்றவர்களுக்கு சீனாவோ அல்லது உள்ளூர் பொருட்களோ போட்டி இல்லை. உண்மையில் இந்திய பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களின் வெளிநாட்டு ஏற்றுமதி ஆண்டுதோறும் அதிகரித்தபடி இருக்கிறது. நாங்கள் 30 நாடுகளுக்கு எங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம்...’’ என்கிறார் ஜெஸ்வந்த்.  

செய்தி: டி.ரஞ்சித்

படங்கள்: ஆர்.சந்திரசேகர்