பயோ டேட்டா-முட்டை



வரலாறு : சுமார் 60 லட்சம் வருடங்களுக்கு முன்பிருந்தே மனிதன் முட்டையை உணவாக எடுத்துக்கொண்டு வருகிறான் என்கின்றனர் உணவு வரலாற்று ஆசிரியர்கள்.
ஆரம்ப நாட்களில் காட்டுப்பறவைகளின் கூட்டிலிருந்த முட்டைகளை எடுத்து அப்படியே சாப்பிட்டிருக்கிறான். பச்சை முட்டையை வேகவைத்து மனிதன் சாப்பிடத் தொடங்கியது தனிக்கதை.

கி.மு. 3200ம் வருடத்திலேயே இந்தியாவில் முட்டைகளுக்காக காட்டுக்கோழிகள் வளர்க்கப்பட்டன. கி.மு. 1400ல் பண்டைய சீனாவும், எகிப்தும் முதன்முதலாக கோழிகளை முட்டைகளுக்காக வளர்த்தன. கி.மு. 1420ல் எகிப்தில் கட்டப்பட்ட ஒரு கல்லறை உள்ளது. அதில் வரையப்பட்ட ஓவியத்தில், ஒருவன் கிண்ணம் நிறைய நெருப்புக்கோழி மற்றும் பெலிகனின் முட்டைகளை ஏந்திச் செல்வதைப் போல காட்சி உள்ளது. இதிலிருந்தே மனிதனுக்கும் முட்டைக்கும் இடையிலான தொடர்பு புரியும்.

கி.மு. 800ல்தான் கிரேக்கத்துக்கு கோழிகள் வந்தன. அதற்கு முன் அங்கே காடை முட்டைகள் பயன்பாட்டில் இருந்தன. கி.மு. 600லிருந்து ஐரோப்பியர்களும் முட்டைகளுக்காக கோழிகளை வளர்க்க ஆரம்பித்தனர். கி.மு. 300ல் எகிப்தியர்களும், சீனர்களும் வெதுவெதுப்பான களிமண் அடுப்புக்குள் வைத்து கோழிமுட்டைகளைச் செயற்கையாக அடைகாத்தனர். 1490களில் கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வந்தபோது கோழிகளைக் கொண்டு வந்ததாக சிலர் சொல்கின்றனர். கொலம்பஸ் வருவதற்கு முன்பே அமெரிக்காவில் நாட்டுக்கோழிகள் இருந்ததாக வேறு சிலர்  சொல்கின்றனர்.

1900களில் அமெரிக்காவில் கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு, குடும்பங்களுக்கு முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டன. குடும்பங்களுக்குப் போக மீதியான முட்டைகள் விவசாயிகளின் சந்தைகளில் விற்கப்பட்டன. முட்டை விற்பனை நல்ல லாபத்தைக் கொடுத்ததால், சில பண்ணைகள் 400 கோழிகள் வரை வளர்த்தன. அந்தக் காலத்தில் இவ்வளவு கோழிகளை வளர்ப்பது என்பது ஆச்சர்யம்.

1920ல் வேட்டைக்காரர்கள், நோய்கள், காலநிலையால் கோழிகள் பாதிக்கப்பட்டன. முட்டை இடவும், குஞ்சு பொரிக்கவும் ஆரோக்கியமான கோழிகளை மட்டுமே அமெரிக்கப் பண்ணைகள் தேர்வு செய்தன. இதனால் ஒரு கோழி வருடத்துக்கு 150 முட்டைகள் வரை இட்டன. இரண்டு உலகப்போர்களுக்குப் பின் உலகளவில் முட்டை முக்கிய உணவாக மாறியது. சில நாடுகளில் தினசரி உணவில் முட்டை சேர்க்கப்பட்டது.

உலகெங்கும் முட்டைகளின் தேவை அதிகரித்தது. அதனால் 1960களில் அமெரிக்காவில் கோழிப்பண்ணை என்பது பெரிய பிசினஸாக வளர்ந்தது. மற்ற நாடுகளும் பெரிய அளவில் கோழிப்பண்ணைகள் அமைப்பதில் ஆர்வம் காட்டின. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே முட்டைகளை கழுவி விற்பனை செய்கின்றன. இன்று முட்டை விற்பனை உலகின் முக்கிய தொழிலாகவே மாறிவிட்டது.

வகைகள் : உலகளவில் கோழி, வாத்து, காடை போன்றவற்றின் முட்டைகளே அதிகளவில் விரும்பிச் சாப்பிடப்படுகின்றன. சில நாடுகளில் நெருப்புக்கோழியின் முட்டைக்குத் தனி மவுசு.
சத்து : 100 கிராம் எடைகொண்ட கோழிமுட்டையில் கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், புரதச்சத்து 12.6 கிராம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி என பத்து வகையான வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட ஏழு வகையான தாதுச்சத்துகள் உட்பட ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன.

உற்பத்தி : 2020ம் ஆண்டில் ஒவ்வொரு நாடும் எவ்வளவு முட்டைகளை உற்பத்தி செய்தன என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 59,650 கோடி முட்டைகளை உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ளது சீனா. 11,440 கோடி முட்டைகளுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும்; 11,210 கோடி முட்டைகளுடன் இந்தோனேஷியா மூன்றாம் இடத்திலும்; 11,160 கோடி முட்டைகளுடன் அமெரிக்கா நான்காம் இடத்திலும் உள்ளன.

புனிதம்: எகிப்தியர்கள் முட்டைகளைப் புனிதமாகக் கருதினர். அதனால் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது முட்டைகளை கூடையில் வைத்து கோயிலுக்குள் பாதுகாத்தனர்.

உணவுகள் : ஆம்லெட், ஆஃப்பாயில், கலக்கி என முட்டையிலிருந்து நேரடியாக சில உணவுகள் தயாரிக்கப்பட்டாலும், புரோட்டா, கேக்... என நூற்றுக்கும் மேலான உணவுகளில் மறைமுகமாகச் செயல்படுகிறது முட்டை. கம்போடியாவில் வறுத்த முட்டையும், அரிசியும் சேர்த்து சமைக்கப்படும் ‘பாய் போங்க் மோன்’; இத்தாலியில் முட்டை, சீஸ், மிளகு கொண்டு செய்யப்படும், ‘கார்பொனாரா’; ஜப்பானில் முட்டை மற்றும் ஜிங்க்கோ விதைகளால் தயாரிக்கப்படும் ‘சவான்முஷி’; துருக்கியில் முட்டையுடன் யோகர்ட் மற்றும் பூண்டு சேர்த்து சமைக்கப்படும் ‘கில்பர்’... என ஒவ்வொரு நாட்டிலும் முட்டையால் சமைக்கப்படும் உணவுகளின் பட்டியல் நீள்கின்றது.

ஆம்லெட் : ஆம்லெட் கண்டுபிடிக்கப்பட்ட துல்லியமான நாள் குறித்த தகவல்கள் இல்லை. பண்டைய பாரசீகர்கள் ஆம்லெட்டைக் கண்டுபிடித்திருக்கலாம் என்று
நம்பப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து ‘ஆம்லெட்’ எனும் ஃபிரெஞ்ச் வார்த்தை பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் ஆம்லெட் சமைக்கப்படுகிறது. குறிப்பாக ஈரானில் மூலிகைகள் சேர்த்து ஆம்லெட்டை சமைக்கின்றனர்.

முட்டை பானம் : இத்தாலியில் தயாராகும் ‘பாம்பர்டினோ’ எனும் மதுபானத்தின் மூலப்பொருளே முட்டைதான். அமெரிக்காவில் நிறைய காக்டெய்ல்களில் முட்டைகளின் வெள்ளை பாகத்தை அழகுக்காகச் சேர்க்கின்றனர். வியட்நாமில் முட்டையின் மஞ்சள் கருவில் தயாரிக்கப்படும் ‘எக் காபி’ வெகு பிரபலம். சகே எனும் மது, சர்க்கரை, முட்டை சேர்க்கப்பட்ட ‘டமகோசகே’ எனும் பானம் ஜப்பானில் புகழ் பெற்றது.

வண்ண முட்டைகள் : சிலியைச் சேர்ந்த அரவ்கானா என்ற கோழி இனம் நீலம், பச்சை, பழுப்பு மற்றும் பிங்க் வண்ணங்களில் முட்டைகளை இடுகின்றது.

மஞ்சள் கரு : இயற்கையாகவே வைட்டமின் டி சத்து கொண்டது மஞ்சள் கரு.

பாக்டீரியா : 20 ஆயிரம் முட்டைகளில் ஒரு முட்டை மட்டுமே பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருக்கும். நீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவராக இருந்தால் 84 வருடத்துக்கு ஒரு முறை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட முட்டையைச் சாப்பிட நேரிடும்.

முட்டைப்பெட்டி: இப்போது முட்டைகளை எடுத்துச் செல்வதற்காக பிரத்யேகமான பெட்டிகள் விதவிதமாக கிடைக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள் வரை முட்டையை ஒரு கூடையில் வைத்து மட்டுமே எடுத்துச் சென்றனர். 1911ல் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த ஜோசப் காயல் என்பவர் காகிதத்தால் ஆன முட்டைப் பெட்டியை வடிவமைத்தார். இதை முன்மாதிரியாக வைத்துதான் பிற்காலத்தில் நவீன முட்டைப் பெட்டிகள் உருவாகின.

பெரிய முட்டை : 2010ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரியட் என்ற கோழி உலகிலேயே பெரிய முட்டையை இட்டது. இதன் விட்டம் 9.1 அங்குலம்.

த.சக்திவேல்