ரத்த மகுடம்-153



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

கரிகாலன் திட்டப்படி ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன.பல்லவப் படைகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உபதளபதியாக நியமிக்கப்பட்டனர்.கரிகாலன் உணவைக் குறித்து சிந்திக்காமல் தன் தந்தையான சோழ மன்னருடன் சேர்ந்து படை அணிவகுப்பை பார்வையிட்டான்.
ஒவ்வொரு படையின் முன்னணியிலும் வில்லவரை நிறுத்தி, நால்வர் நால்வராக சீர்படுத்தினான்.முதலில், தான் செல்வதாகவும், தன்னைத் தொடர்ந்து மற்ற படைகள் வரிசையாக வரட்டும் என்றும் ஆணையிட்ட கரிகாலன், ‘‘பாதை கரடுமுரடாக இருக்கும் என்பதால் புரவிகளை எச்சரிக்கையுடன் நடத்துங்கள். அதிகப்படியான வேல்களையும், அம்புகளையும் தனித்தனி கட்டுகளாக, புரவிகள் தாங்கும் அளவுக்கு கட்டி, அவற்றின் இருபுறமும் தொங்க விடுங்கள்.

இந்தப் புரவிகளும் பண்டகசாலைப் புரவிகளும் நம் படைகளுக்குப் பின்னால் வரட்டும். அவை, ஆயுதங்கள், தானிய மூட்டைகள், பாத்திரங்கள் காரணமாக வெகுதூரம் பின்னால்
நின்று விடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்...’’ என தன் ஏற்பாட்டை நான்கு உபதளபதிகளுக்கும் புரிய வைத்தான்.திறமை வாய்ந்த அந்த நான்கு உபதளபதிகளும் கரிகாலனின் திட்டங்களை திறம்பட நிறைவேற்றினார்கள்.வேகமாக உணவு தயாரிக்கப்பட்டு வீரர்களுக்கு பரிமாறப்பட்டன. வீரர்கள் உண்டு முடித்ததும் தாமதிக்காமல் சன்னதம் எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.

எல்லோருக்கும் முன்பாக புரவியில் ஏறி அமர்ந்திருந்த கரிகாலன், தன் தந்தையை படைக்கு மத்திய பகுதியில் பாதுகாப்புடன் வரும்படி ஏற்பாடு செய்திருந்தான்.
கரிகாலன் தலைமையில் மாலையில் புறப்பட்ட பல்லவப் படை, குடகு மலைப் பகுதிக்குள் நுழைந்து அடர் கானகங்களில் பயணித்தது. இரவு ஓய்வெடுக்க தன் படைக்கு கரிகாலன் அனுமதி வழங்கவில்லை.துஷ்ட மிருகங்கள் அதிகமாக வாழும் அந்த மலைக்காட்டுப் பிரதேசத்தில் இரவு ஏற ஏற புலி, சிங்கம், கரடிகளின் உறுமல்களும் பொறுமல்களும் எட்டு திசைகளிலும் ஒலித்தன. ஒவ்வொரு இடத்திலும் நரிகள் ஊளையிட்டன. ஆந்தைகளின் அலறல்கள் எல்லா இடங்களிலும் செவிக்குள் ஊடுருவின.

மற்ற விலங்குகளும் பறவைகளும் உறங்கிக் கிடந்தாலும் படை அரவம் கேட்டதும் பயமுள்ள ஒலிகளைக் கிளப்பின. குஞ்சுகளுக்கு ஏதேனும் ஆபத்து நேருமோ என அஞ்சின.
இத்தனைக்கும் மத்தியில் கரிகாலன் தனது படைகளை அச்சமின்றி நடத்திச் சென்றான்.கடினமான பாறைகளில் ஏறி இறங்கி சமதளத்தை பல்லவப் படை அடைந்தபோது சூரிய உதயத்துக்கான அறிகுறிகள் வானில் தென்படத் தொடங்கின.சுற்றிலும் பார்வையால் அலசிய கரிகாலன், படைகள் ஓய்வெடுக்க உத்தரவிட்டான்.தேவையான பட்சிகளையும் மான்களையும் வேட்டையாடி உணவு சமைத்தார்கள். பகல் முழுக்க ஓய்வெடுத்த படை, இரவு மீண்டும் புறப்பட்டது.

அது கோடைக்காலம் என்பதால் இரவில் உஷ்ணம் தெரியவில்லை. எனவே, பகலில் ஓய்வெடுத்த படை, இரவில் விழிப்புடன் பயணப்பட்டது.மூன்று நாட்களுக்குப் பின் சாளுக்கிய தேசத்தின் மத்திய பகுதிக்கு வந்த பல்லவப் படை, வந்த வேகத்தில் சாளுக்கியர்களின் பொக்கிஷங்களைக் கைப்பற்றின.

அவை அனைத்தும் முன்பே சிவகாமி களவாடி மறைத்து வைத்தவை. தன்னிரு பாதங்களாலும் பொக்கிஷம் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களை கரிகாலனுக்கு அவள் இடம் சுட்டி பொருள் விளக்கம் காட்டியிருந்ததால் சுலபமாக கரிகாலனால் அவற்றை எடுக்க முடிந்தது.

இடையில் இருந்த கிராமங்களையும் சிறுநகரங்களையும் கைப்பற்றிய பல்லவப் படை அம்மக்களின் உதவியுடன் அங்கு தங்கின.எதிர்ப்பு தெரிவித்த சாளுக்கிய வீரர்களுடன் மட்டுமே பல்லவப் படை மோதியது. மற்றபடி மக்களை பல்லவர்கள் துன்புறுத்தவில்லை. போலவே பெண்களிடம் இருந்த ஆபரணங்களைக் கைப்பற்றவில்லை. மாறாக, வீட்டுக்கு இவ்வளவு எனக் கணக்கிட்டு கப்பத் தொகையை மட்டுமே வசூலித்தார்கள்.சில சிறு நகரங்களில் மட்டும் எதிர்ப்புகள் கிளம்பின. அவற்றை அடக்க பல்லவர்களுக்கு அதிக நேரமாகவில்லை.

இப்படி மூன்று நாட்கள் கிழக்கிலும் மூன்று நாட்கள் தெற்கிலும் பயணம் செய்த பல்லவப் படை ஏழாம் நாள் துங்கபத்திரையின் வடகரையில் தங்கியிருந்த விநயாதித்தன் தலைமையிலான சாளுக்கிய படைக்குப் பின்புறம் வந்து சேர்ந்தது.அப்போது இருட்டிவிட்டதால் எதிரிப் படைக்கு சிறிது தூரத்திலேயே பாசறை அமைத்துக் கொண்ட கரிகாலன், தன் உபதளபதிகளை அழைத்து சாளுக்கிய படையை நோட்டமிடக் கட்டளையிட்டான்.உபதளபதிகள் கொண்டு வந்த செய்தி கரிகாலனை மகிழ்வித்தது.

ஆனால், சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனுக்கு எந்த மகிழ்ச்சியும் ஏற்படவில்லை. உக்கிரத்துடன் காட்சியளித்தான்.அவனது பாசறை பார்ப்பதற்கு வசீகரமாக இருந்தது. நல்ல கெட்டித் துணியாலும் உயரப் பறந்த சாளுக்கியர்களின் வெற்றிக் கொடியாலும் சமைக்கப்பட்டு உள்ளும் புறமும் கவர்ச்சிகரமாகக் காட்சியளித்தன.

அவன் அமர்வதற்கும் படுப்பதற்கும் பஞ்சணைகள் போடப்பட்டிருந்தன. கூடாரத்தின் மூலையில் துணியை அண்டாமல் வைக்கப்பட்டிருந்த அண்டா விளக்கு ஒன்று ஜ்வாலையை வெளியிட்டுக் கொண்டிருந்தது.அவனது வேலும் வாளும் தனி மஞ்சத்தில் சீராகவும் எடுப்பதற்கு வசதியாகவும் வைக்கப்பட்டிருந்தன.

எந்தக் குறையுமில்லை. என்றாலும் விநயாதித்தன் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான். துங்கபத்திரா நதியின் தென் கரையை கண்காணிக்கும்படி தன் ஒற்றர்களுக்கு விநயாதித்தன் உத்தரவிட்டிருந்தான். ஒற்றர்களும் அதன்படியே அப்பகுதியைச் சுற்றி வந்தனர். ஒரு வாரம் வரை அப்பகுதியில் ஈ, எறும்புகள் தவிர வேறு விலங்குகளின் நடமாட்டம் கூட இல்லை.ஆனால், இன்று..? விநயாதித்தனால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் இயலவில்லை.

எப்படி சாத்தியம்..? வானத்தில் இருந்து குதித்தது போல் எப்படி சட்டென பல்லவப் படை அங்கு முளைத்தது..?

யோசிக்க யோசிக்க விநயாதித்தனின் கண்கள் பளிச்சிடத் தொடங்கின. யாரும் எதிர்பார்க்காத குடகு மலையில் ஏறி இறங்கி சுற்றிக் கொண்டு பல்லவப் படைகள் வந்திருக்கின்றன.
உண்மையிலேயே கரிகாலன் திறமை வாய்ந்தவன். இல்லையெனில் கரடுமுரடான அப்பாதையில் பல்லவப் படையை சேதாரமின்றி வழிநடத்திச் சென்றிருக்க மாட்டான். தவிர சிவகாமி வேறு கரிகாலனுடன் இருக்கிறாள்.சிவகாமி... விநயாதித்தன் பெருமூச்சு விட்டான். அறிவும் அழகும் ஒன்றுசேர்ந்த பெண்களைப் பார்ப்பது அபூர்வம்.

சிவகாமி அப்படியான அபூர்வ மலர். என்ன சாதுர்யமாக சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவியாக நடமாடியபடியே பல்லவர்களுக்கு விசுவாசமாக இருந்திருக்கிறாள்..? அவளும் கரிகாலனும் இணைந்து நடத்திய நாடகத்தின் கதாபாத்திரங்களாக அல்லவா சாளுக்கிய மன்னரான தன் தந்தையும்; தங்கள் போர் அமைச்சரும் தன் குருநாதருமான ஸ்ரீராமபுண்ய வல்லபரும் செயல்பட்டிருக்கிறார்கள்..? அனைத்து ராஜ தந்திர சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்த ஸ்ரீராமபுண்ய வல்லபரையே அவள் ஏமாற்றியிருக்கிறாளே..?கெட்டிக்காரியான சிவகாமியும் கெட்டிக்காரனான கரிகாலனும் இணைந்திருக்கிறார்கள். இவ்விரு கெட்டிக்காரத்தனங்களையும் உடைக்கும் புத்திக்கூர்மை தன்னிடம் இருக்கிறது. ஒன்றும் பிரச்னையில்லை. கசடற நாம் கற்ற போர்த் தந்திரங்களை அமல்படுத்தி இந்த துங்கபத்திரா நதிக்கரையிலேயே கரிகாலனுக்கும் சிவகாமிக்கும் சமாதி கட்டுவோம்...

முடிவுக்கு வந்த விநயாதித்தன், கூடாரத்தின் வெளியே காவலுக்கு நின்ற வீரனை அழைக்க வாயைத் திறந்தான்.அதற்குள் அந்த வீரனே நுழைந்து சாளுக்கிய இளவலை வணங்கினான். ‘‘தங்களைக் காண உபதளபதி வந்திருக்கிறார்...’’விநயாதித்தனின் புருவங்கள் ஏறி இறங்கின. ‘‘வரச் சொல்...’’மீண்டும் தலைவணங்கி வீரன் சென்றான்.

அடுத்த கணம் உபதளபதி நுழைந்து சாளுக்கிய இளவலை வணங்கினான். ‘‘ஒரு செய்தி...’’‘‘சொல்...’’மென்று விழுங்கிய உப தளபதி அச்செய்தியைச் சொன்னான். ‘‘இந்தப் போரில் கங்கர்கள் பங்கேற்கவில்லை...’’

விநயாதித்தனின் கண்கள் இடுங்கின. ‘‘ம்...’’‘‘கங்கர்கள் நடுநிலை வகிக்கப் போகிறார்கள்... இதற்கு நம் சாளுக்கிய மன்னரும் ஒப்புதல் அளித்துவிட்டார்...’’ என்ற உப தளபதி தன் கையில் இருந்த ஓலையைக் கொடுத்தான்.

பெற்று படித்த விநயாதித்தன், எழுதியது தன் தந்தைதான் என்பதை உணர்ந்தான். பல்லவர்களுடனான யுத்தத்தை விட தன் தந்தைக்கு ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையுமான சிவகாமி அம்மையார் இட்ட சாபம்தான் முதன்மையாக இருக்கிறது... அதனால்தான் அறம் குறித்து அதிகமும் கவலைப்படுகிறார்...

அதுவும் அறப்போரை மேற்கொள்ளாமல் அசுரப்போரை மேற்கொண்டு தங்கள் தலைநகரையே தீக்கிரையாக்கிய பல்லவர்கள் மீது... பெண் சாபத்திலிருந்து சாளுக்கியர்களைக் காப்பதே தன் கடமை என்று இருக்கும் அவரை அதிலிருந்து விடுவிப்பது கடினம்... தலைநிமிர்ந்த விநயாதித்தன், ‘‘அத்தனை உபதளபதிகளையும் அழைத்து வா...’’ என உத்தரவிட்டான்.

ஒரு நாழிகைக்குள் விநயாதித்தனின் கூடாரத்தில் அனைத்து உபதளபதிகளும் குழுமினார்கள். அனைவரது கண்களையும் சந்தித்த விநயாதித்தன் பேசத் தொடங்கினான்.
‘‘நம்முடைய போர்த் திட்டம் எதிரிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.

எனவே மலைப்பாதை வழியாக வடக்கில் சென்று துங்கபத்திரையின் உற்பத்தி இடத்தைக் கடந்து சாளுக்கிய தேசத்தின் எல்லைக்குள் நுழைந்திருக்கிறான். அதனால் நாம் நமது தலைநகரில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறோம்.இப்பொழுது நம் பின்னால் பல்லவப் படை நிற்கிறது.

நம் முன் இருக்கும் வாய்ப்பு இரண்டு தான். ஒன்று துங்கபத்ராவில் இறங்கி அக்கரைக்கு ஓட வேண்டும் அல்லது திரும்பித் தாக்க வேண்டும்.

நமது இன்னொரு படை அரைக்காதம் தள்ளியிருக்கிறது. இப்பொழுது நம்மால் படைகளை இணைக்க முடியாது...’’விநயாதித்தன் நிறுத்தியதும் அங்கிருந்த உபதளபதிகளின் வதனத்தில் ஈயாடவில்லை. ஊகித்ததற்கும் மேலாக நிலமை விபரீதமாகக் காட்சியளித்தது.

‘‘இப்பொழுது நம் முன் ஒரேயொரு வழிதான் இருக்கிறது...’’ அழுத்திச் சொன்னான் விநயாதித்தன்.‘‘அரைக் காத தொலைவில் இருக்கும் நம் படையுடன் இங்கிருக்கும் படையை உடனே இணைப்பது. என்ன விழிக்கிறீர்கள்... நம் படைகள் இணையக் கூடாது என பல்லவப் படை செயல்பட்டிருக்கிறது... அச்செயலை முறியடிப்பதே நமக்கான முதல் வெற்றி.

உங்கள் உள்ளத்தில் என்ன நினைக்கிறீர்கள் என்பது புரிகிறது. எப்படி இரு படைகளையும் இணைப்பது என்றுதானே..? கவலை வேண்டாம். அதற்கான பணியை முன்பே செய்துவிட்டேன்.

இரு படைகளின் உபதளபதிகளும் ஒன்று சேருங்கள். இந்த இரவின் மூன்றாம் ஜாமத்திலேயே படை நகரட்டும். நாளை எதிரி விழிக்கும் முன்பு நமது யானைப் படை முன்னணியில் சென்று அவர்கள் படைக்குள் புகுந்து நாசத்தை விளைவிக்கட்டும்.புரவிப் படைக்கு நான் தலைமை ஏற்கிறேன். காலாட் படைகள் பின்னால் பரவி அக்கம் பக்கத்திலுள்ள மலைப் பகுதியின் மேட்டு நிலங்களில் இருந்து அம்பு மழை பொழியட்டும்...’’

கண்களில் அனல் பறக்க விநயாதித்தன் இப்படிச் சொல்லி முடித்ததும் உபதளபதிகள் அனைவரும் சாளுக்கிய இளவலை வணங்கிவிட்டு விடைபெற்றனர்.
ஆனால், விநயாதித்தனின் திட்டத்தை உபதளபதிகள் செயல்படுத்துவதற்குள் பொழுது விடிந்துவிட்டது.

எனவே பல்லவப் படை அயர்ந்திருக்கும்போது தாக்க வேண்டும் என்று திட்டமிட்ட சாளுக்கிய இளவலின் யோசனை காற்றில் கரைந்துவிட்டது.இதையெல்லாம் குன்றின் உச்சியில் நின்றபடி கரிகாலன்  கவனித்தான். குறிப்பாக, சாளுக்கிய படையின் முன்னணியில் அணிவகுத்து நின்ற யானைகளை.கரிகாலனின் உதடுகளில் புன்னகை பூத்தது.  

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்