குழந்தைகளுக்கு டயட்... நல்லதா? கெட்டதா?



‘‘என் பையன் இப்போல்லாம் இவ்வளவுதான் சாப்பிடணும்னு ஸ்டிரிக்டா ஆர்டர் போட்டுட்டேன்!’’‘‘என் பொண்ணு லைட்டா குண்டாகிட்டா... உடனே நான் பக்கா டயட் ஷீட் போட்டு அவளை ஃபாலோ பண்ண சொல்லிட்டேன்...’’அம்மாக்கள் மத்தியில் சமீபத்திய ஊரடங்கு உரையாடல்கள் இவைதான்.
குழந்தைகளுக்கு டயட், உணவுக் கட்டுப்பாடு நல்லதா... கெட்டதா... என்ற கேள்வியை நிபுணர்களிடம் முன்வைத்தோம். ‘‘குழந்தைகளுக்கு டயட்டோ உணவுக் கட்டுப்பாடோ எதுவும் விதிக்கவே கூடாது...’’ என அழுத்தம்திருத்தமாக பேசத் தொடங்கினார் நியூட்ரிஷன் மற்றும் டயட் கண்ட்ரோல் நிபுணரான மரியா பிரியங்கா.‘‘குறிப்பா 12 வயது வரை உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் உணவு மிக மிக அவசியம்.

இதுதான் டிரைவ் ஃபோர்ஸ். அதனால இந்த வயசுல டயட் கண்ட்ரோல் பண்றது அக்குழந்தைகளோட எதிர்காலத்தை பாதிக்கும். உடல் / மன அளவுல மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்ஆக்சுவலா 12 வயது வரை குழந்தைகளை நல்லா சாப்பிட வைக்கணும். ஏற்கனவே கொரோனா பொது ஊரடங்கு காரணமா கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலா குழந்தைங்க வீட்லயே அடைப்பட்டு கிடக்கறாங்க. அவங்களால வெளில விளையாட முடியலை... ஸ்கூலுக்கு போக முடியலை. இது போறாதுனு குழந்தைகளுக்கு அறிமுகமாகாத ஆன்லைன் வகுப்புகள் வேற. இதெல்லாம் ஏற்கனவே அவங்களை மனதளவுல பாதிச்சிருக்கு.

இந்தச் சூழல்ல உணவு மட்டும்தான் குழந்தைகளுக்கு இருக்கற ஒரே சந்தோஷம். இதிலும் கட்டுப்பாடு, அட்டவணைப்படி தான் சாப்பிடணும்னா அவங்க நிலைகுலைஞ்சு போயிடுவாங்க...’’ என்னும் மரியா, எப்படிப்பட்ட ஊட்டச்சத்து உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதையும் விளக்கினார்.  ‘‘கோடைகாலத்துலதான் நம்ம நாட்டைப் பொறுத்தவரை கொரோனா ஆதிக்கம் அதிகமா இருக்கு. வீட்ல அடைப்பட்டு இருக்கிற காலமும் இதுதான். கேட்ஜெட்ஸ், மொபைல், டிவி, கம்ப்யூட்டர் பயன்பாடு இக்காலத்துல அதிகரிச்சிருக்கு.

இதனால நம்ம உடல்ல அதிக வெப்பம் ஏற்படுது. இதுக்கு இளநீர், சிட்ரஸ் அமிலம் அதிகம் இருக்கும் ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்கள், சீசனுக்கு கிடைக்கும் மாம்
பழம், தர்பூசணி, கிர்ணி, நுங்கு போன்ற பழங்களை குழந்தைகளின் உணவில் சேர்ப்பது நல்லது. பொட்டாசியம் இருக்கும் வாழைப்பழம் அத்தியாவசிய ஒன்று.

இது தவிர வெறுமனே சாதம், இட்லி, தோசைனு கொடுக்காம காய்கறிகள், கீரைகளை அதிகம் சேர்ப்பது நல்லது. முட்டை, பால், இறைச்சி வகைகளும் அதிகம் சேர்க்கலாம். இறைச்சி வேண்டாம்னா பனீர், நெய், வெண்ணெய் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கலாம்.குறிப்பா குழந்தைகளுக்கு வெளி உணவுகளை வாங்கிக் கொடுக்கக் கூடாது.

இந்த விஷயத்துல பெரியவங்களும் கட்டுப்பாடா இருக்கணும். முக்கியமா ‘ஸ்கூல்தான் இல்லையே’னு காலை 10 - 11 வரை தூங்க அனுமதிக்கக் கூடாது. பள்ளி இருக்கோ இல்லையோ காலை ஏழு மணிக்குள் எழுப்பி 8 - 8.30க்கு காலை உணவைக் கொடுக்கணும். அதன் பிறகு குழந்தைகளை தூங்க வைக்கலாம்...’’ என பிரியா முடிக்க, தொடர்ந்தார் ஃபிட்னஸ் பயிற்சி யாளரும் ஆலோசகருமான அசோக் விஸ்வநாத்.‘‘எவ்வளவு சீக்கிரம் தூங்கி எவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கிறோமோ அவ்வளவு உடலுக்கு நல்லது.

ஆனா, எல்லாரும் இந்த கொரோனா பொது ஊரடங்கு நேரத்துல நைட் 12 -1 மணி வரை ஓடிடில படம் பார்க்க பழகிட்டோம். குழந்தைகளையும் பழக்கி இருக்கோம். இது ரொம்ப ரொம்ப தப்பு.சாப்பாடும், தூக்கமும் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியம். இந்த இரண்டும் சரியா இல்லைனா இதன் தாக்கம் உடல்ல எதிரொலிக்கும். குழந்தைங்க பருமனா ஆகறது குறித்தெல்லாம் கவலைப்பட வேண்டாம். ஸ்கூல் திறந்து அவங்க போக ஆரம்பிச்சதும் பழைய எடைக்கு வந்துடுவாங்க.திரும்பவும் சொல்றேன்... சரியான தூக்கம் வாரக் கணக்குல இல்லாம போனா உடல்ல அவ்வளவு பிரச்னைகள் உண்டாகும். முதல்ல கண்ணுல கருவளையம், தோல்ல வறட்சி, அலர்ஜி, மூளை செயல்படுவதில் தேக்கம்னு ஆரம்பிச்சு சிறுநீரகக் கோளாறு, வளர்சிதை மாற்றம் வரை எல்லாம் நிகழும்.

30 வயசுக்கு மேல வேலைப் பளுவால் என்னென்ன உடல் பிரச்னைகள் ஏற்படுமோ அதெல்லாம் குழந்தைகளுக்கு இப்பவே ஏற்படும். குழந்தைங்க பருமனாக தூக்கமின்மையும், நேரத்துக்கு சாப்பிடாததும்தான் காரணம். சில குழந்தைகளுக்கு சின்ன வயசுலயே தொப்பை போட்டிருக்கும். இதுக்கும் காலை உணவு எடுக்காம இருப்பதுதான் காரணம். அதிகபட்சம் குழந்தைங்க காலை 7 மணி வரை தூங்கலாம். எழுந்த 2 மணி நேரத்துக்குள்ள காலை டிபன் / சாப்பாட்டை சாப்பிடணும். ஏதாவது ஒரு எக்சர்சைஸை விளையாட்டு போல செய்ய வைக்கலாம். பெத்தவங்களும் இதுல கலந்துக்கணும். அதேமாதிரி நைட் 8 மணிக்கு டின்னரை முடிக்கணும். 10 மணிக்கெல்லாம் தூங்கப் போயிடணும்.

அப்புறம் கடினமான உடற்பயிற்சியை எல்லாம் குழந்தைகளை செய்ய வைக்க வேண்டாம். சின்னச் சின்ன கை / கால் அசைவுகள்... ஓட்டம், ஸ்கிப்பிங் போதும்.
கடைசியா ஒண்ணு. பெரியவங்களும் சரி... குழந்தைகளும் சரி... தண்ணீர் முடிஞ்சவரை அதிகம் குடிக்கணும்...’’ என்கிறார் அசோக் விஸ்வநாத்.

(படத்தில் இருக்கும் குழந்தைகள் மாடல்களே)                         

ஷாலினி நியூட்டன்