பொருளாதார ஆலோசனைகள் வழங்கும் ஐவர் குழு!
தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஆரம்பித்திருக்கிறது. இதில் ஹைலைட், முதல்வருக்கு பொருளாதார ஆலோசனைகள் வழங்க உலகளாவிய நிபுணத்துவம் பெற்ற ஐவர் குழு அமைக்கப் பெற்றதுதான். இதை அறிமுக உரையிலேயே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவிக்க, யார் இவர்கள் என இணையமே பரபரக்க, நாமும் தேடினோம்.
 அரவிந்த் சுப்பிரமணியன்
ரகுராம் ராஜன் ஒன்றிய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்து இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக சென்றதும் அந்த இடத்துக்கு வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருளியலாளர் அரவிந்த் சுப்பிரமணியன்.அதற்கு முன்பு சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வுத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 2011ல் ‘ஃபாரின் பாலிசி’ என்ற அமெரிக்க இதழ் உலகின் சிறந்த நூறு உலகளாவிய சிந்தனையாளர்களில் ஒருவராக அரவிந்த் சுப்பிரமணியனை மதிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வளர்ச்சி நிபுணராக திகழ்ந்த அரவிந்த் சுப்பிரமணியன் கடைசியாக அரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணிபுரிந்தார்.
 ரகுராம் ராஜன்
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட பொருளாதார வல்லுநரான ரகுராம் ராஜன், 2008ம் ஆண்டு உலக பொருளாதார சரிவை மிக சரியாக கணித்ததன் வழியாக பிரபலம் அடைந்தவர். சர்வதேச நாணய நிதியம் (IMF) எனப்படும் சர்வதேச நிதி நிறுவனத்தில் மிகக்குறைந்த வயதில் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றிய பெருமை உடையவர். இதனால், மன்மோகன்சிங் அரசு இவரை பொருளாதார ஆலோசகராக நியமித்தது. பின்னர் இந்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2013ல் உலகத்தில் பல நிறுவனங்கள் கோடிக் கணக்கில் சம்பளம் கொடுக்கத் தயாராக இருந்தபோதும் அதை விட்டு விட்டு இந்திய பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கியமான இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் செய்த முக்கியமான பணிகள்:
* பதவி ஏற்றபோது இந்தியப் பொருட்களின் விலைவாசியைக் குறிக்கும் பணவீக்கம் 11% மேல் இருந்தது. அதை பாதிக்கு மேல் குறைத்தார்.
* வங்கித் துறையில் வாராக் கடன்கள் மிகவும் அதிகமாக உள்ளதை சரி செய்யும் துணிச்சலான நடவடிக்கைகளில் இறங்கினார். (Banks asset review).
* இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறந்த ஒரு நிபுணரின் கையில் உள்ளது என்று உலக நிதி நிறுவனங்கள் முதலீடு செய்யும் சூழலை உருவாக்கினார்.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல 2016ம் ஆண்டின் உலக முக்கியத்துவம் வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக ‘Time’ இதழால் தேர்வு செய்யப்பட்டார். இதே ஆண்டில் ஒன்றிய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜன், அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். இதை அவர் 2017ல் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘அப்போது ரிசர்வ் வங்கி, பணமதிப்புஇழப்பு நடவடிக்கை தவறானது, அது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என ஒன்றிய அரசை எச்சரித்தது’ எனத் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.
எஸ்தர் டஃப்லோ
எஸ்தர் டஃப்லோ 1972ம் ஆண்டு பாரிஸில் பிறந்தவர். 1999ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். இந்தப் பட்டத்திற்கான இணை கண்காணிப்பாளராக இருந்தவர் இவரது கணவரான அபிஜித் பானர்ஜி. 2019ல் உலகளாவிய வறுமை ஒழிப்பதற்கான பரிசோதனை அணுகு முறைக்கு கணவர் அபிஜித் பானர்ஜி யுடன் நோபல் பரிசை பகிர்ந்துகொண்டார்.
இப்போது எஸ்தர் எம்ஐடியில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புத் துறையின் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கணவர் அபிஜித் பானர்ஜி யுடன் சேர்ந்து எழுதிய ‘ஏழை பொருளாதாரம்’ (Poor Economics’) என்ற புத்தகம் உலகம் முழுவதும் 17 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
டாக்டர் எஸ்.நாராயண்
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் எஸ். நாராயண் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் ஆவார். மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களில், மேம்பாட்டு நிர்வாகத்தில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் பணியாற்றியவர். 2003 - 04ல் பிரதமர் வாஜ்பாயின் பொருளாதார ஆலோசகராகவும், பல துறைகளில் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்து வதற்கு பொறுப்பாகவும் இருந்திருக்கிறார்.
இதற்கு முன் 1997 முதல் இந்திய அரசியல் நிதி மற்றும் பொருளாதார விவகார செயலாளராகவும், வருவாய், பெட்ரோலியம், தொழில்துறை மேம்பாடு, நிலக்கரி துறைகளின் செயலாளராகவும் இருந்துள்ளார். 1989 - 1995ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டில் செயலாளராக இருந்தபோது ஊரக வளர்ச்சி மற்றும் கிராமப்புறங்களில் சிறு கடன் குழுக்கள் தொடங்குவதற்கு காரணமாக இருந்தார்.
2000 - 2003க்கு இடையில், ஒன்றிய அரசின் மேக்ரோ - பொருளாதாரக் கொள்கை, சுங்கவரி, வரிவிதிப்புக் கொள்கைகள், மூலதன சந்தைகளை நவீனமயமாக்குவதற்கான முன் முயற்சிகள் ஆகியவற்றிற்கான பொறுப்புகளுடன் நிதி அமைச்சகத்தில் இருந்தார். இவர் எழுதி 2018ல் வெளிவந்த ‘The Dravidian Years’ புத்தகம்தான், சமீப காலத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் திராவிட இயக்க ஆட்சிகள், ஆளுமைகள் குறித்த புத்தகங்களுக்கு தொடக்கமாக அமைந்தது.
ஜீன் ட்ரெஸ்
பெல்ஜியத்தில் பிறந்த இவர் இந்தியாவில் நிலவும் பசி, பட்டினி, பஞ்சம், ஆண் - பெண் ஏற்றத்தாழ்வுகள், குழந்தைகள் நலம், கல்வி ஆகியவை தொடர்பான சிக்கல்களை ஆராய்ந்து பல கட்டுரைகள் எழுதி வருபவர். நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுடன் இணைந்து சில நூல்களை எழுதியுள்ளார். தில்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் கவுரவ பேராசிரியராகவும், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் வருகைப் பேராசிரியராகவும் இருக்கிறார். தில்லியில் தன் மனைவி யுடன் சிறு ஓலைக் குடிசையில் வாழ்ந்து, வீடுகள் அற்ற ஏழை மக்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகை செய்தார்.
அன்னம் அரசு
|