பொட்டி ரெடியாகுது..!
டீ க்கடை, பேக்கரி, சாப்பாட்டுக் கடை என எத்தனை தளர்வுகள் கொண்டு வந்தாலும், அட சினிமா தியேட்டரை எப்ப சார் திறப்பீங்க... என்னும் மாபெரும் கேள்விதான் கடைக்கோடி ரசிகன் ஆழ்மனத்தில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. ரைட்... தியேட்டர் ஓபன் ஆனதும் எந்தெந்த படங்கள் எல்லாம் வந்து நம் சில்லறைகளை சிதற வைக்கும்..? பார்ப்போமா..?
 அண்ணாத்த
இந்த வருடத்தின் மாஸ் எதிர்பார்ப்பு லிஸ்ட்டில் முதலில் இருக்கும் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த, நயன்தாரா, மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசை டி.இமான். மறைந்த மாபெரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடைசியாக ரஜினிக்குப் பாடிய பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆக்ஷனும் மாஸும் ஃபேமிலி சென்டிமென்ட்டும் கலந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருப்பதால் ரசிகர்கள் பட வெளியீட்டுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றனர்.
 டாக்டர்
சிவகார்த்திகேயன் நடிப்பில், ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் டைரக்ஷனில் உருவாகும் படம், ‘டாக்டர்’. தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்தி கேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
 லாபம்
எஸ்.பி.ஜனநாதன் எழுதி இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, தன்சிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி ஒரு சமூக ஆர்வலராக நடிக்கும் இப்படத்தை 7சிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிட் டெட்டுடன் இணைந்து விஜய் சேதுபதியும் தயாரித்திருக்கிறார். படம் முடிவதற்குள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்துவிட்டதால் அவர் கடைசியாக இயக்கிய படம் என்ற வகையில் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன. இப்படத்தின் பட்ஜெட் ரூ.40 கோடிக்கு மேல் என்கிறது சினிமா வட்டாரம்.
 இந்தியன் 2
‘இந்தியன்’ முதல் பாகத்தின் வெற்றி அனைவரும் அறிந்ததுதான். எனவே பல ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் இந்த இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், நெடுமுடி வேணு, சித்தார்த், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை அனிருத். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கிளாசிக் ரசிகர்கள் உட்பட பலரும் வெயிட்டிங்.
 பேச்சுலர்
ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், திவ்யபாரதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகஇருக்கும் படம். இசையும் ஜிவிபிதான். படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி வாவ் என ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. முக்கியமாக 2K கிட்ஸை ஈர்த்திருக்கிறது.கொஞ்சம் 18+ ரகமாக தென்படும் இப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். படத்தின் பட்ஜெட் சுமார் 15 கோடி என்கிறது நிபுணர் குழு.
கோப்ரா
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், நிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘தும்பி துள்ளல்...’ பாடல் வெளியான நாள் முதல் டாப் டிரெண்ட். பல கெட்டப்களில் விக்ரம் நடிக்க, திரில்லராக உருவாகி வரும் இப்படம் பட்டையைக் கிளப்பும் என்கிறார்கள்.
துருவ நட்சத்திரம்
எஸ்கேப் மார்டிஸ் மோஷன் பிக்சர்ஸ், ஒன்றாக என்டர்டெயின்மென்ட், வேல்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்களின் தயாரிப்பில் பிரம்மாண்ட ஸ்பை திரில்லராக உருவாகும் இப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியிருக்கிறார். விக்ரம், ரீது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். ‘ஒரு மனம்...’ பாடல் இல்லாத மியூசிக் லிஸ்ட்டே இல்லை என்னும் அளவுக்கு ஏற்கனவே பாடல் ஹிட்.
விக்ரம்
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில்; லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்; கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆண்டனி வர்கீஸ், அமலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் வித்யாசமான டீசர் ஏற்கனவே வைரல் ஆகிவிட்ட நிலையில் இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் ‘ஐ’யம் வெயிட்டிங்’ மோட் காட்டுகிறார்கள். 1986ல் வெளியான ‘விக்ரம்’ படத்திற்கே ஒரு கோடி பட்ஜெட் ஒதுக்கிய நிலையில் 2021ல் கேட்க வேண்டுமா..? படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடிக்கு மேல் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
வலிமை
‘வலிமை அப்டேட் என்ன..?’ என அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் மட்டும்தான் இன்னமும் தல ரசிகர்கள் கேட்கவில்லை. அந்த அளவுக்கு #ValimaiUpdate என இப்போது வரை டிரெண்டில் இருக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகம். போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹியூமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இப்படத்தின் பட்ஜெட் ரூ.180 கோடி என்கிறார்கள்.
மாநாடு
சிம்பு - எஸ்.ஜே.சூர்யா - வெங்கட் பிரபு காம்போ என்பதாலேயே படத்திற்கு எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி இருக்கிறது. வி ஹவுஸ் புரொடக்ஷன் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசை யுவன் ஷங்கர் ராஜா. ஆத்தீ! கொஞ்சம் சர்ச்சையா இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு டீஸர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு பட்ஜெட் சுமார் 65 கோடி ரூபாய் என்கிறார்கள். இதில் ‘இந்தியன் 2’ பட விபத்தை அடுத்து எச்சரிக்கையுடன் இந்தப் படத்தின் பணியாளர்களுக்கு ரூ.30 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டதும் அடக்கம் என்பது உபதகவல். கேஜிஎஃப் - 2
மாஸ் காட்சிகள், தமிழில் பளிச் வசனங்கள்... என இந்த கன்னடப் படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய அதிர்வு, இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு போய் உள்ளது.
முந்தைய பாகத்திற்கு ரூ.80 கோடி, இந்தப் படத்திற்கு ரூ.100 கோடி என கன்னட சினிமாவிலேயே இல்லாத வகையில் பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை ஹோம்பேல் ஃபிலிம் தயாரிக்க, பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். யாஷ், சஞ்சய் செட்டி, நிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை ரவி பஸ்ரூர்.
ஷாலினி நியூட்டன்
|