கொரோனா காலத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்...
சமீபத்தில் மதுரையில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் இவை. முதலாவதாக, பிளஸ் டூ படிக்கும் மாணவிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க இருந்த நிலையில், ‘என் கட்டாயத் திருமணத்தைத் தடுத்து நிறுத்துங்கள் சார்...’ என மாவட்ட எஸ்.பிக்கு தகவல் கொடுத்து நிறுத்த வைத்தார். ஆனால், அடுத்த இருநாட்களில் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டாவதாக, குழந்தைத் திருமணத்தைத் தடுக்க முயன்ற தாயை மகன் கொல்ல முயன்றதால் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முற்பட்டார் என்பது.
 கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்றால் உலகமே ஊரடங்கில் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இந்த ஊரடங்கு நேரத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருவதுதான் வேதனையான தகவல். இதுகுறித்து கடந்த மே மாதமே சிஆர்ஒய் என்கிற குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு ஆய்வு செய்து அதன் முடிவை வெளியிட்டது. அதில், கடந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் குழந்தைத் திருமணங்கள் 40% அதிகரித்திருப்பது தெரிய வந்தது.

இதைக் கேள்விப்பட்ட சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், அதிகாரிகளுடன் இணையத்தில் மீட்டிங் நடத்தினார். குழந்தைத் திருமணங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், இதுபற்றி அறிக்கை அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இந்த ஆய்வு பற்றி சிஆர்ஒய் அமைப்பின் சீனியர் மேனேஜர் ஹாரி ஜெயகரனிடம் பேசினோம். ‘‘இதை ஆய்வுனு சொல்ல முடியாது.
 இது சேகரிக்கப்பட்ட தரவுகள். பொதுவா, நாங்க வேலை செய்கிற பகுதிகள்ல குழந்தைகள் பத்தின தரவுகளை சேகரிப்போம். அப்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான தரவுகளைப் பார்க்கும்போது குழந்தைத் திருமணம் அதிகமா இருந்தது தெரிஞ்சது. குறிப்பா, 2020 மே மாதத்தில் லாக்டவுன் நேரத்துல அதிகளவு குழந்தைத் திருமணங்கள் நடந்திருந்தது.
உடனே நாங்க 2019ல் எவ்வளவு குழந்தைத் திருமணங்கள் நடந்திருக்குனு எடுத்துப் பார்த்தோம். ரெண்டையும் ஒப்பிடும்போது, குழந்தைத் திருமணங்கள் 40% அதிகரிச்சிருப்பது தெரியவந்தது. ஏன்னு மக்களுடன் ஆலோசிக்கும்போது சில காரணங்கள் கிடைச்சது. முதலாவது, லாக்டவுன்.
இந்த நேரத்துல அரசாங்கம் கவனிக்க மாட்டாங்க. எல்லா அரசாங்கத் துறைகளும் கொரோனா விஷயத்தில் கவனம் செலுத்திட்டு இருந்தாங்க. ரெண்டாவது, பெற்றோர் வாழ்வாதாரம் இழந்திட்டாங்க. மூன்றாவது, குழந்தைகள் பள்ளிக்கூடம் போகல. பள்ளி எல்லாம் தூரத்துல இருக்கு. எல்லோரும் வீட்டுல உட்கார்ந்து இருக்காங்க. இது ஆணாதிக்க சமூகம். பசங்களை சொத்துக் காவலர்களாகவும், பெண்களை ஒரு செலவினமாகவும் பார்க்கிற மனநிலை அதிகமிருக்கு. அதனால, பத்தாம் வகுப்பு படிச்சிட்டு இருந்த குழந்தை ஒன்றரை வருஷமா பள்ளிக்கூடம் போகல. சும்மாவே வீட்டுல இருக்கு. பள்ளிக்கூடம் திறப்பாங்களானு தெரியல. அதனால, வயசு பிள்ளை இப்படி வீட்டுல இருந்தால் காதல் கீதல்னு பிள்ளை போயிடுவாளோனு பயம்.
இன்னொருபக்கம் சாதி ரீதியான வர்க்கம் இருக்கிறதால மேல்சாதியினர் கீழ்சாதிப் பெண்ணிடம் முறை தவறி நடந்திடக் கூடாதுனு பயம். ஒடுக்கப்பட்ட சமூக மக்களிடம் இந்த பயம் உள்ளூர இருந்திட்டே இருக்கும். அதனால, உடனே திருமணம் பண்ணிடணும்னு நினைக்கிறாங்க. இந்த ஆய்வு எல்லாமே தலித் மற்றும் பழங்குடி மக்கள்கிட்ட பண்ணினதுதான். எங்க அமைப்பும் அந்த மக்களுக்காகத்தான் வேலை செய்திட்டு வருது. தமிழகத்துல சென்னை, சேலம், தருமபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்கள்ல மட்டும் நாங்க வேலை செய்றோம்.
அதுல மூன்று மாவட்டங்கள்ல இந்தத் தரவுகளைச் சேகரிச்சோம். அந்தச் சமூகக் குழந்தைகளின் கல்வியை மேம் படுத்தணும்னு பணி செய்றதால எங்ககிட்ட குழந்தைகள் பத்தின ஒரு லிஸ்ட் இருக்கு. இந்த லாக்டவுன் தளர்வு முடிஞ்சு போற நேரம் சில குழந்தைகள் வீட்டுல இல்ல. சம்பந்தப்பட்ட வீட்டுல கேட்டால் சொல்லல. பிறகு, பக்கத்து வீடு, தெரிஞ்சவங்கனு கேட்கும்போது சொன்னதுதான் இந்தத் தகவல்கள் எல்லாமே. திருமணமாகிப் போயிட்டாங்கனு கேட்டதும் அதிர்ச்சியா இருந்துச்சு.
குறிப்பா, மே மாதத்தில் ஏன் குழந்தைத் திருமணங்கள் அதிகமாகுதுனா அப்ப நிறைய மூகூர்த்த நாட்கள் வர்றதாலதான். இதுல சேலம், தருமபுரி மாவட்டங்கள்ல அதிகமான குழந்தைத் திருமணங்கள் நடந்திருக்கு. இப்ப சேலத்தில் 2019ம் ஆண்டு மே மாதம் 60 குழந்தைத் திருமணங்கள் நடந்தது. கடந்த 2020ம் ஆண்டு அது 98 ஆக அதிகரிச்சிருக்கு. அடுத்து, தருமபுரியில் 2019ம் ஆண்டு மே மாதம் 150 குழந்தைத் திருமணங்கள் நடந்தது. கடந்த 2020ல் 192 குழந்தைத் திருமணங்களா உயர்ந்திருக்கு.
ராமநாதபுரத்தில் 60 திருமணத்திற்கும் உள்ளேதான் நடந்திருக்கு. அங்க கடலாடியைச் சுற்றியுள்ள பகுதிகள்ல் நாங்க பணிசெய்றோம். அங்குள்ள இடங்களே ரொம்ப தள்ளித் தள்ளி இருக்கிறதால எளிதாக தகவல்கள் சேகரிக்க முடியல. இந்தத் திருமணங்கள் 13 முதல் 18 வயதிற்குட்பட்ட, குறிப்பா ஒன்பது, பத்து, பதினொன்றாவது படிக்கிற குழந்தைகளிடையேதான் நடக்குது.
இப்ப இதை அரசின் கவனத்திற்கு எடுத்திட்டு வந்திருக்கோம். இந்த ஆண்டு எவ்வளவுனு தகவல் சேகரிச்சிட்டு இருக்கோம். அதையும் விரைவில் வெளியிடுவோம்...’’ என்கிற ஹாரி ஜெயகரன், ‘‘2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் 9 சதவீதம் குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக தரவுகள் இருக்கு. ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களையும் ஒப்பிடும்போது தமிழகம் பரவாயில்லைதான். ஆனாலும் குழந்தைத் திருமணங்களே நடக்கக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்...’’ என்கிறார்.
இதுகுறித்து குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயனிடம் பேசினோம். ‘‘பொதுவா, தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிச்சிட்டு வருவது வேதனையானது. குறிப்பா, பேரிடர் காலத்துல. உதாரணத்துக்கு, சுனாமிக்குப் பிறகு கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்ல குழந்தைத் திருமணங்கள் அதிகரிச்சது.
இந்தப் பேரிடரில் வீடு, நாடு மட்டுமல்ல, உலகமே பாதிக்கப்பட்டு கிடக்குது. அப்ப இந்தக் காலக்கட்டத்துல பெண் குழந்தை பாதுகாப்பா இருக்கணும்னா இயல்பாகவே திருமணத்தைப் பற்றி பெற்றோர் யோசிக்கிறாங்க. கூட்டம் கூடக்கூடாது. கல்யாண மண்டபத்துல நடத்தக் கூடாதுனு கட்டுப்பாடுகள் இருக்கிறதை சாதகமாக பயன்படுத்தி சின்னச் சின்ன கோயில்கள்ல இந்தக் குழந்தைத் திருமணத்தைப் பண்ணி செலவு மிச்சமாகுதுனு நினைக்கிறாங்க.
குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் முடிந்திருக்கணும்னு சொல்லுது. ஆனா, இச்சட்டத்தை சரியா நடை
முறைப்படுத்தல.
குழந்தைத் திருமணங்கள் நடக்காம இருக்க குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர்னு ஒருவரை நியமிக்கணும்னு சட்டத்துல சொல்றாங்க. அந்தச் சட்டத்தின்படி நம்மூர்ல மாவட்ட சமூக நல அலுவலரையே நியமிச்சிருக்காங்க. மாவட்ட சமூக நல அலுவலர்தான் அரசின் அனைத்து நலத் திட்டங்களுக்கும் பொறுப்பு. அதனால, அவர் பணிச்சுமையில் குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் பணிக்கு முன்னுரிமை கொடுப்பாரா என்பது தெரியாது. ராஜஸ்தான் மாதிரியான மாநிலங்கள்ல குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர்னே தனியா ஒரு அதிகாரியை நியமிச்சிருக்காங்க.அடுத்து, கிராம அளவுல இந்தக் குழந்தைகளைப் பாதுகாக்கணும்னு சொல்லி உச்சநீதி மன்றம் தீர்ப்புல சொன்னது. உடனே கிராம அளவுல கண்காணிப்புக் குழுனு போட்டாங்க. அது இயங்கவே இல்ல. 2012 - 13ல் கிராம அளவில் குழந்தைப் பாதுகாப்புக் குழுனு இந்தக் குழுவின் பெயரை மாத்தினாங்க. இது மாவட்ட குழந்தைப் பாதுகாப்புஅலுவலர் கட்டுப்பாட்டில் வரும்னு சொன்னாங்க.
இது எல்லா கிராமப் பஞ்சாயத்திலும் இருக்கு. இந்தக் குழுவுல அந்தப் பகுதியைச் சேர்ந்த தலைமையாசிரியர் தலைவரா இருப்பார். அந்தப் பகுதியைச் சேர்ந்த காவலர், அங்கன்வாடி பணியாளர், கிராம சுகாதாரப் பணியாளர், சுயஉதவிக்குழு உறுப்பினர், அந்தப் பகுதியைச் சார்ந்த சமூக அமைப்பினர் இருப்பாங்க.
இவங்கெல்லாம் ஆண்டுக்கு மூன்று முறை கூடி நம்மூர் குழந்தைங்க பாதுகாப்பா இருக்காங்களா? அந்தக் குழந்தைங்களுக்கு எதேனும் பிரச்னை இருக்கா? குழந்தைகள் பள்ளிக்கூடம் போறாங்களானு பேசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வழியா மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்கணும். இது ஒழுங்கா இயங்கியிருந்தா ஒரு குழந்தைத் திருமணம் கூட நடந்திருக்காது.
பள்ளியில் இடைநிற்கும் குழந்தைதான் பிறகு குழந்தைத் தொழிலாளராகும். பெண் குழந்தையாக இருந்தா அந்தக் குழந்தைதான் குழந்தைத் திருமணத்திற்கு உட்படுத்தப்படும். அப்ப இடைநிற்றலை கண்காணிக்கிறோமா? அதுக்கு அமைப்பு இருக்குதா என்கிற கேள்வியும் வருது. அதனால கல்வித்துறை, குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை நலக் குழு எல்லாம் ஒண்ணா சேர்ந்து வேலை செய்தால்மட்டுமே இந்தப் பிரச்னையைக் களைய முடியும்.
இந்தப் புதிய அரசு குழந்தைகளுக்கான அமைப்புகளை பலப்படுத்தணும். இப்ப மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்தான் மாநில அளவில் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதை கண்காணிக்கிற அமைப்பு. ஆனா, அதன் தலைவருக்கு குழந்தைகள் உரிமை பற்றியோ, சட்டம் பற்றியோ எதுவும் தெரியாது. அவர் ஒரு அரசியல்கட்சியைச் சார்ந்தவராக இருக்கார்.
அதனால், அரசியல் தலையீடு இல்லாம கள அனுபவமும், நிபுணத்துவமும் கொண்டவர்களை மட்டுமே நியமிக்கணும். தவிர, மாவட்ட அளவில் குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலரை தனியாக நியமனம் செய்யணும். குறைந்தபட்சம் அதிகரிக்கும் மாவட்டங்களிலாவது இந்தத் தனி அலுவலரை நியமிக்கலாம்.
கடந்த பத்தாணடுகளாக குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாகவே தமிழகம் உள்ளது! போக்சோ சட்டம், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம், இளம் சிறார் நீதிச் சட்டம், குழந்தைத் திருமணத் தடுப்பு சட்டம் ஆகிய சட்டங்களை அமலாக்கியதில் பீகாரைவிட மோசமாகவே தமிழகம் இருந்திருக்கு. தவிர, கடந்த பத்தாண்டுகளா குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் 60 சதவீதம் அதிகரிச்சிருக்கு. அதனால சட்டமன்றத்தில் குழந்தைகளுக்கென ஒரு நிலைக்குழு உருவாக்கி குழந்தைகள் பிரச்னை சம்பந்தமாக சிறப்பு விவாதங்களை நடத்தணும். அப்பதான் நிறைய பிரச்னைகள் கவனம் பெற்று பேசப்படும். அதிகாரிகளும் துரிதமா நடவடிக்கை எடுப்பாங்க. குழந்தைகள் சார்ந்த பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வும் கிடைக்கும்...’’ என்கிறார் தேவநேயன்.
(படத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் மாடல்களே)
பேராச்சி கண்ணன்
|