விநோத காதல்



உக்ரைனில் தொலைக்காட்சி சேனல்களில் ஹாட் நியூஸே அலெக்ஸாண்டர் - விக்டோரியா என்ற காதல் ஜோடியைப் பற்றித்தான்.

ரோமியோ - ஜூலியட், லைலா - மஜ்னு மாதிரி காதல் வரலாற்றில் இடம்பிடிக்க நினைத்தது இந்த ஜோடி. அதற்காக 24 மணி நேரமும் ஒன்றாக இருக்க நினைத்தனர். ஒரு நொடி கூட ஒருவரைவிட்டு இன்னொருவர் பிரியக்கூடாது. என்ன செய்தாலும் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும். இதன்படி பிப்ரவரி 14ம் தேதியன்று அலெக்ஸாண்டரின் வலது கையையும் விக்டோரியாவின் இடது கையையும் கைவிலங்கால் பிணைத்துக்கொண்டனர். தங்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் வீடியோவாக்கி இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளினர்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இருவருக்குமே சலிப்புத் தட்டிவிட்டது. ஒருவரின் அனுமதி இல்லாமல் இன்னொருவரால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை இருவருக்குமே கசப்பான
அனுபவத்தைத் தந்தது. ஒருவரை ஒருவர் கைது செய்து வைத்திருப்பதைப் போல உணர்ந்தனர். 123 நாட்களுக்குப் பிறகு கைவிலங்கை உடைத்ததோடு, காதலையும்
முறித்துக்கொண்டு பிரிந்துவிட்டனர்!

த.சக்திவேல்