நயன்தாரா நடித்தாலும் கதையை மாற்ற மாட்டேன்! அடித்துச் சொல்கிறார் இயக்குநர் லீனா மணிமேகலை



‘‘நான் தேடிக் கண்டடைகிற விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதைத்தான் கலையாகப் பார்க்கிறேன். ஒன்றைத் தேடுகிறேன்… கண்டுபிடிக்கிறேன்… அது என்னை மாற்றுகிறது; சிந்திக்க வைக்கிறது; கேள்வி கேட்க வைக்கிறது; மேம்படுத்துகிறது. அந்த அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள சினிமா ஒரு கருவியாக உள்ளது...” என்கிறார் திரைப்பட இயக்குநர், கவிஞர் லீனா மணிமேகலை.
தனது படைப்புகள் மூலம், மறைக்கப்படும் வரலாறுகளையும், அநீதிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறார் லீனா. இவர் இயக்கிய ‘மாடத்தி’ திரைப்படம், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து பாராட்டுகளை அள்ளி வருகிறது. இப்போது ‘நீஸ்ட்ரீம்’ என்கிற ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

“சினிமா என்பது ஒரு முதலாளித்துவ கலை வடிவம். இதற்கு மூலதனம் தேவை. இலக்கியத்திற்கு எழுத்தாளரின் கற்பனைதான் மூலதனம். ஒரு பேப்பரும், பேனாவும் இருந்தால் எழுதலாம். அதனால்தான் பெரிய இயக்குநர்கள் எல்லாம், ‘சினிமா எடுப்பது பேனாவால் பேப்பரில் எழுதுவது போல் எளிமையாக வேண்டும்; அது எல்லோருக்குமான கலையாக இருக்கணும்’ என்று தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்...” என்கிற லீனா, திரைப்படத்துறையைத் தேர்வு செய்ததற்கான காரணங்களைப் பகிர்ந்தார்.

‘‘நான் ஒரு இன்ஜினியர். எங்கள் வீட்டின் முதல் தலைமுறை பட்டதாரி பெண். திரைப்படக் கல்லூரிக்குப் போகாதவள். பொருளாதார ரீதியாக சொந்தக் காலில் நின்ற பின்தான், ‘இப்படி ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என வீட்டில் சொன்னேன். என்னுடைய அரசியலில் இருந்துதான் சினிமா என்கிற விஷயம் எனக்குள் வந்தது.

அப்பா தமிழ்ப் பேராசிரியராக இருந்தாலும், அவருடைய ஆய்வு சினிமா சார்ந்ததாக இருந்தது. அதனால் விவரம் தெரியாத நாட்களிலேயே கலை, இலக்கியம், சினிமா என்று பார்த்து வளர்ந்தேன். இவை எல்லாமே அப்பா மூலம்தான் அறிமுகமானது. மார்க்சிய வளர்ப்பு ஒரு தேடலைக் கொடுத்தது. நாம் யோசிக்கிற, கேட்கிற கேள்விகள் எல்லாம் கலையின் மூலம் இருக்க வேண்டும் என்பது புலப்பட்டது.

மாணவர் இயக்கத்தில் இருந்த போது நிறைய வீதி நாடகங்கள் போடுவோம். மக்களையும் அதில் பங்கெடுக்க வைக்கையில் வேறொரு விஷயமாக அது மாறுவதைக் கண்டேன். இதன் அடுத்த கட்டமாக டிஜிட்டல் கேமராக்கள் வருகின்றன. எடிட்டிங் சாஃப்ட்வேர் கிடைத்தது. ஒரு டூவீலரில் சிறு குழுவோடு போய் கேமராவில் இருக்கும் மைக்கோடு எடுத்து வந்த வீடியோக்களை, வீட்டிலேயே எடிட் செய்ய முடிந்தது. அரசியல் பூர்வமாகவும், சுதந்திரமாகவும் செய்வதற்கு புனைவு அல்லாத கதை சொல்லல் எளிதாக இருந்தது.

நான் யோசித்த ஒரு விஷயத்தை பல பேரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தின் வெளிப்பாடாக, ஆவணப்படம் எடுத்த போது என் வயது 21. பெரிய பின்புலம் இல்லாமல், எங்கிருந்தோ வந்தவள் நான். என் படைப்பை ‘திரைப்பட விழாக்களுக்கு அனுப்பலாம்’ என்று வழிகாட்டினர் இயக்குநர் அருண்மொழி, நிழல் திரைப்பட இயக்கம் போன்றவர்கள்.

அனுப்பிய இடங்களில் என் படங்கள் தேர்வானது. மக்களை படமாக எடுக்கிறோம், மக்களுக்குப் போட்டுக் காட்டுகிறோம் என்பதைத் தாண்டி இன்னொரு பண்பாட்டு மக்களும் பார்க்கும் போது, அவர்களும் அதை தங்களோடு அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

அப்போது மொழியைத் தாண்டி பல எல்லைகள், தேசங்கள், பண்பாடுகள் என்று ஏதோ ஒரு சரடு எல்லோரையும் இணைக்கிறது என்பதை உணர ஆரம்பித்தேன். அந்தப் பயணம் பிடிக்க ஆரம்பித்தது...” என்கிற லீனா, ஒரு திரைப்படம் எடுப்பதற்கும், அதை வெளியிடுவதற்கும் உள்ள சவால்கள் பற்றியும் பேசினார்.‘‘திரைப்படம் எடுப்பதே வாழ்வா சாவா என்கிற பிரச்னையில்தான் இருக்கு. எப்படியோ எடுத்து, அதை வெளியே கொண்டு வருவது, கொண்டு போய் காட்டுவது இன்னொரு சவால். எல்லாமே அதிகாரத்திடமும், சந்தையிடமும்தான் இருக்கிறது. அதில் சுதந்திரமாக இயங்குவதற்கான இடம் குறைவு.

ஓடிடி தளங்கள் வந்திருக்கின் றன... எளிதாக அதில் வெளியிட்டுவிடலாம் என்கிறார்கள். ஆனால், அதுவும் ஸ்டார் வேல்யூ கொண்ட சந்தையாகத்தான் இருக்கிறது.
அடுத்து பெரிய கார்ப்பரேட் ஸ்டூடியோ எல்லாம் ஃபெஸ்டிவல் படம் பண்றோம் என்கிறார்கள். அப்படி ஃபெஸ்டிவலுக்கு என்று தனி படம் கிடையாது. இது எல்லாம் ஏமாற்று வேலை. ஒரு கலைஞனுக்கு ஒரு எக்ஸ்பிரசன்தான் இருக்க முடியும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று பண்ணிட்டு இருக்க முடியாது.

‘மாடத்தி’னு ஒரு படம் பண்றேன். அதில் நயன்தாரா நடிக்கிறாங்கனா, அதுக்காக கதையை மாற்ற மாட்டேன். வணிக ரீதியாக மாற்ற ஆன்மாவை சிதைப்பது கலை கிடையாது. தியேட்டருக்கு ஒன்று, ஃபெஸ்டிவலுக்கு ஒன்று என்று செய்வது வியாபாரி களின் வேலை...” என்கிற லீனா, தனது ‘மாடத்தி’ திரைப்படம் வெளியாகும் ‘நீஸ்ட்ரீம்’ பற்றியும் பகிர்ந்தார்.
‘‘‘த கிரேட் இந்தியன் கிச்சன்’ என்கிற மலையாளத் திரைப்படத்தால் அறியப்படுகிற ஓடிடி தளம் இது. அந்த பண்பாட்டில் மிகப்பெரிய கேள்வி எழுப்பிய படம் அது. அதைத்தான் நாம் இங்கு செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன். ‘நீஸ்ட்ரீமி’ல் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் ‘மாடத்தி’.

இதற்குப்பின் பல தமிழ் சுயாதீன திரைப்படங்கள் அதில் வெளியாகும் என்று நம்புகிறேன். காரணம், ‘நீஸ்ட்ரீம்’ பெரிய கார்ப்பரேட் கிடையாது...” என்கிற லீனா, ‘மாடத்தி’ குறித்தும் விவரித்தார்.

“ஒரு சாதியில், ஒரு பாலினத் தில் பிறக்கிறோம்… இது எதுவுமே நம் கையில் இல்லை. அடுத்து நம்மை வளர்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் சொந்தமாகவும், வாசிப்பினாலும், சுற்றி இருக்கும் வாழ்க்கையைப் பார்த்தும், அனுபவங்கள் மூலமாகவும்… நாம் சிந்திக்க ஆரம்பிக்கிறோம். அவ்வாறு சிந்திக்கையில் பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன.

அதே நேரத்தில் நமக்கே தெரியாமல், இங்கு இருக்கிற பல விஷயங்களுக்குத் துணை போகிறோம். புதிரை வண்ணார்கள் பற்றியே தெரியாது என்றால் என்னுடைய அறியாமையினால், இவ்வளவு சமூக ஒடுக்குமுறைகளுக்கு நானும் பங்காளியாக இருக்கிறேன் என்று அர்த்தம்.

ஒரு கட்டத்தில் அது என்னவென்று தெரிய வரும்போது அதை கேள்வி கேட்க, முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்று நினைத்தேன். இன்னொருவர் வாழ்க்கையை நாமும் கொஞ்ச நேரம் வாழ்ந்து பார்ப்பதற்கான ஒரு சிறு கதவைத் திறந்து விடுவதுதான் கலை. அதனால் அவர்களுடைய விஷயத்தை வாழ்ந்து புரிந்து கொள்ள, அவர்களோடு இருக்க, நானும் உங்களோடு இருக்கிறேன்… என்று இந்தப் படத்தில் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்.

பெரிய புரட்சி எல்லாம் செய்ய வரவில்லை. மாற்றம் ஏதும் ஃபாஸ்ட் புட் டெலிவரி மாதிரி பண்ணிட முடியாது. என் கிட்ட அருவா, துப்பாக்கி… எல்லாம் கிடையாது. நினைத்தால் உடனே போய் மாற்றுவதற்கு பெரிய ஹீரோவும் கிடையாது. இந்த சமூகத்தில் பிறந்த சூத்திரப் பெண் நான். கலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அந்த இடத்தில் நான் என்ன கண்டடைகிறேனோ அதைக் கடத்த விரும்புகிறேன். அதன் மூலம் ஓர் உரையாடலைத் துவங்குகிறேன்...” என்று அழுத்தமாக முடித்தார் இயக்குநர் லீனா மணிமேகலை.

அன்னம் அரசு