இப்படித்தான் கஞ்சா ரெய்ட் நடக்குது! ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியின் அனுபவம்...
என் பெயர் லதானந்த். வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவன். சிலசமயம் பேப்பர்ல எங்க ஆபரேஷன் பத்தி வரும். பலசமயம் எந்த மீடியாவுலயும் எங்க ஆபரேஷன் பத்தி வராது.

ஆனா, தொடர்ந்து கஞ்சா ரெய்டுக்கு போயிட்டே இருப்போம். இந்த ஆப்பரேஷன் எப்படி நடக்குது..? சொல்றேன்.அப்பப்ப சீக்ரட் இன்ஃபர்மேஷன் ஒண்ணு வரும், குறிப்பிட்ட எடத்துல கஞ்சா பயிர் பண்ணியிருக்கறாங்கன்னு! ஒரு ஸ்பெஷல் டீம் ஏற்பாடு பண்ணினாங்க, ஆறு ரேஞ்சருங்களோட கூட்டுத் தலைமையில.
 ஒவ்வொருத்தருக்கும் தனிப் பொறுப்பு.கீழ்நிலைச் சிப்பந்திகளை ஒருங்கிணைக்கிறது, arms and ammunition பொறுப்பு எனக்கு. வேற வேற ரூட்ல மலை ஏறி குறிப்பிட்ட எடத்தில சேருவது ப்ளான்.மொதல்ல டீமில் இருந்தவங்களை எல்லாம் பொதுவா ஒரு எடத்துக்கு அசெம்பிள் ஆகச் சொன்னோம். கீழ்நிலையில இருக்கிற யாருக்கும் எங்கே போறோம்னு தெரியாது.
மொத்தம் அம்பது பேரு இருப்பாங்க. வரிசையா நிக்க வெச்சு மொதல்ல கவனமா அட்டண்டன்ஸ் எடுத்தோம். அப்புறம் லக்கேஜுங்களை தூக்குறவிங்க மற்றும் உதவிக்கு வந்த லோக்கல் இருளங்களுடைய பேரு, ஊரு, விலாசம் எல்லாம் குறிச்சுகிட்டோம். ஏன்னா ஆப்ப ரேஷன் முடிஞ்சு எல்லாரும் சேஃபா திரும்பிட்டாங்களானு உறுதிப் படுத்திக்கணுமே... அதுக்குத்தான்.ஆயுதங்களைக் குடுத்து முறையா அக்னாலட்ஜ்மென்டும் வாங்கியாச்சு.
எல்லாருக்கும் தெளிவா அவிங்கவிங்க செய்ய வேண்டிய வேலைகளை விளக்கினேன். Dos and do nots அப்படிம்பாங்களே... அதைத் தெளிவாச் சொன்னேன். மலை மேலிருந்து சமூக விரோதிங்க ஃபயர் பண்ணினா அல்லது பாறைகளை உருட்டி விட்டா என்ன விதமா counter பண்ணணும் அப்படிங்கிற மாதிரி…உதவிக்காக கூலிக்காரங்களையும் கூட்டிக் கிட்டோம். அவிங்களுக்கும் நெறைய அறிவுரை சொன்னேன். குறிப்பா கஞ்சா பயிரிடுறது உண்மையாயிருக்கிற பட்சத்தில அங்க நிச்சயம் அவிங்க தங்கிப் போக ஷெட் மாதிரி குடிசை எதுனா இருக்கும். அங்கே இருக்கிற தின்பண்டங்களைத் திங்கிறதோ தண்ணியைக் குடிக்கிறதோ கூடவே கூடாது.
நாம வர்றதைப் பாத்துட்டு வெசத்தைக் கலந்து வெச்சுப் போடுவானுங்க. பல மணிநேரம் மலை ஏறுன களைப்பில அப்பாடானு எதையும் யூஸ் பண்ணிடக் கூடாதுனு லோக்கல் ஆளுங்ககிட்ட கடுமையா எச்சரிச்சேன். சில சமயம் லிக்கர் பாட்டில்களும் இருக்கும். யாரும் நாக்கை நனச்சிடப் படாதுனும் சொன்னேன்.புறப்பட்டோம். வாகனங்க போற வரைக்கும் போயிட்டு அதுக்கப்புறம் நடக்க ஆரம்பிசோம். ஒரு 4 மணி நேரம் நடந்ததும் இருட்டு கட்டிப் போச்சு.பாறைகளுக்கு நடுவாந்திரத்துல சமதளமா இருக்குற எடமாப் பாத்து ஒக்காந்துட்டு நாங்க கொண்டு வந்த கட்டுச்சோறைத் தின்னோம்.
உதவிக்கு கூட்டிட்டு வந்த ஒரு ஆளு சூடா டீ காச்சிக் குடுத்தான். ஆகாயம் பூரா நச்சத்திரமா மினுக்குது. ராத்திரி நேரம். நெலாவையுங் கூடக் காணோம். வெத வெதமாச் சத்தம். ரெண்டு கூலிக்காரங்க டர்ன் போட்டு முழிச்சுகிட்டு நாங்க படுத்திருக்கிற எடத்துகிட்ட ஊர்ந்துகிட்டிருக்குற பூச்சி பொட்டுங்களைப் புடிச்சி நசுக்கிகிட்டு இருக்காங்க. பாறை நெறஞ்ச எடமாப் போச்சா... தேளுங்க ரொம்ப ஊருது.
சில்லி வண்டு ஒண்ணு என்ர காதுக்குள்ளாற பூந்துருச்சு. சுடுதண்ணி ஊத்தி அத காதுக்குள்ளாற இருந்து புடுங்கிப் போட்டார் ஒரு இருளர்.நெனச்சுப் பாருங்க என்ன மாதிரி சிச்சுவேஷன்ல நாங்க வேல பாக்கிறோம்னு! எந்நேரமும் கஞ்சா பார்ட்டி அட்டாக் பண்ணலாம். வெசப் பூச்சிங்க, மிருகங்க ஆபத்து, குளுரு...இப்படியும் வேல பாக்குற மனுசங்க இருக்காங்கனு சொல்றதுக்காகவும்தான் இதை எழுதறேன். நெறைய சமயங்களிலே எங்க கஷ்டங்க யாருக்குமே தெரியாது. நாங்களும் இத ஒரு தொண்டு - சேவை அப்படின்னு கர்வமோ பெருமையோ படலை. இது எங்க தொழில். அரசு குடுக்கிற சம்பளத்துக்கு நாங்க செய்யுற வேலை... அதை சரியாச் செய்யோணும். அந்த நெனப்புதான் மேலோங்கி இருக்கு.
‘கிடைச்ச இன்ஃபர்மேஷன் சரிதானா? குத்துமதிப்பா இந்த அடர்ந்த கானகத்துல எப்பிடியாச்சும் கண்டுபிடிச்சாகணுமே... அப்பிடி கண்டுபிடிச்சதும் எப்படி ஆபரேஷனை நல்லபடியா முடிக்கிறது’னு யோசனை மனசுல ஓடிக்கிட்டிருக்குது. ‘யாருக்கும் உயிரிழப்போ காயங்களோ இல்லாம நல்ல படியா எல்லாம் நடக்கணுமே சாமி’னு மனசு வேண்டிக்குது. அப்பிடியே கோழித் தூக்கம் போட்டுகிட்டு காலைல ஆறு மணி சுமாருக்கு மறுக்காவும் நடை. 9 மணி நேரம் நடந்தோம். கொஞ்சநேரம் கொண்டுவந்த எதையோ தின்னுபோட்டு சித்த நேரம் ஒக்காந்திருந்திட்டு மறுபடியும் தேடுதல் வேட்டை.
இப்பிடியே மூணு நாளு மலை மடுன்னு திக் ஃபாரஸ்டிலே பொதருங்களை வெட்டி வழி உண்டாக்கிட்டு அலையோ அலைனு அலைஞ்சோம்.ஒருவழியா தூரத்தில ஒரு ஷெட்டைப் பாத்தோம். பக்கத்திலேயே கொஞ்சம் ஏரியாவ க்ளியர் பண்ணி கஞ்சா பயிர் பண்ணியிருக்காங்க.இப்ப கஞ்சாவைப் பத்தி லேசா பாப்பம். இது ஒரு புதர் மாதிரியான செடி. பாக்கிறதுக்கு புளிச்ச கீரை மாதிரி இருக்கும். குறுகிய காலப் பயிர். போதைப் பொருள். இதை பக்குவப்படுத்தி பீடி சிகரெட் மாதிரி யூஸ் பண்ணுவாங்க.
இதைப் பயன்படுத்திப் பழகிட்டாங்கன்னா விடுறது ரொம்பக் கஷ்டம். நாளடைவில நரம்புத் தளர்ச்சி மாதிரி நோய்ங்க வந்து ரொம்பக் கஷ்டப் படுவாங்க. வயசுப் பசங்க இந்தப் பழக்கத்துக்கு அடிக்ட் ஆயிட்டாங்கன்னா தொள தொளனு ஆயி எதுக்குமே லாயக்கில்லாம ஆயிருவாங்க. இதை வளக்கிறதும் உபயோகிக்கிறதும் இங்கே சட்டப் படி குத்தம். சில சமூக விரோதிங்க இதைப் பயிரிட சில சமயம் ரொம்ப ரொம்ப ரிமோட்டான எடங்களைத் தேர்ந்தெடுத்து வளர்ப்பாங்க.
சரி! இப்ப ஏரியாவுக்கு வருவோம். ஷெட்டுல ஒருத்தரையுங் காணோம். ஓடிப் போனவிங்களை வேற ரூட்ல வந்த எங்களோட இன்னொரு டீம் புடிச்சிருச்சு.பாட்டில் பாட்டிலா விஸ்கியும், பொங்குன சோறும், மணக்குற கறிக் கொழம்பும், வெதைகளும், ஒரமும், பூச்சி மருந்தும் இருக்கு. வேட்டி துணிமணிங்க ஒரு பக்கம் இருக்கு. அட! சீல ரவிக்கைகளும் பொம்பளை பனியனுங்களுங்கூட இருக்கு! அந்த ஷெட்டுல இருந்த போன் நம்பருங்க, வேற சில குறிப்புங்க இதெல்லாம் கவனமாச் சேகரிச்சுகிட்டு மிச்சத்தையெல்லாம் எரிச்சிட்டோம்.
அப்புறம் அந்த கஞ்சா செடிகளை எரிச்சு பஸ்பமாக்கினோம். ரெண்டு பேர அங்கியே நிறுத்தி தீக்கங்கு எதும் மிச்சம் இருந்து காத்துல பத்திக்காம அணைச்சிட்டு வர ஏற்பாடு பண்ணினோம். வயர்லெஸ்ல உயர் அதிகாரிகளுக்கு flash news குடுத்திட்டு நிம்மதிப் பெருமுச்சு விட்டுட்டு திரும்பினோம். மறுக்காவும் நடை. காலெல்லாம் உட்டுப்போற மாரி இருக்கு. தாகம் நாக்க வரட்டுது. ஒரு கிளாஸ் டீ கெடச்சா பால் பாயசம் குடிச்ச மாதிரி இருக்கும்னு தோணுது.ஒரு வழியா ப்ளைன்ஸுக்கு வந்தோம்.
எல்லாப் பணியாளர்களுக்கும், உதவிக்கு வந்திருந்த இருளர்களுக்கும் பாராட்டு தெரிவிச்சிட்டு மறுக்காவும் அட்டண்டன்ஸ் எடுத்துச் சரிபாத்துட்டு ஆயுதங்களையும் சரிபாத்துட்டுத் திரும்பினோம்.நல்லா ரெஸ்ட் எடுத்துக்கிட்டு எதுமே நடக்காத மாதிரி அடுத்த நாள் ரெசிடென்ஸில ரிலாக்ஸ் பண்ணிட்டு பஃபே ஹாலுக்கு லஞ்சுக்காக வந்தோம்.கொஞ்ச நேரத்திலேயே ஜீப் ட்ரைவர் ஓடி வந்தார். ஜீப்பில் இருக்கிற வயர்லெஸ் செட்ல அடுத்த ஆப்பரேஷனுக்கான உத்தரவு வந்திருந்துச்சு!
லதானந்த்
|