கூடுதலாக குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஏன் சீனா சொல்கிறது..?
இந்த வாரம் இரண்டு முக்கிய செய்திகள். இரண்டுமே சீனாவை மையமாகக் கொண்டவை. ஒன்று- சீனா விண்வெளியில் கட்டமைக்கும் ஆய்வு மையப் பணியைத் துரிதப்படுத்த மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பி வைத்த நிகழ்வு. சீனாவில் விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
 இரண்டாவது- அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் ரஷ்யாவை secondary எதிரியாகவும் சீனாவை primary எதிரியாகவும் கருதி தமது கொள்கைகளை மறுவரையறை செய்கிறது எனும் அனுமானங்கள். அவற்றில் உண்மை உண்டு. இதை ட்ரம்ப் காலத்திலேயே அமெரிக்கா முன்னெடுத்தது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர்களுக்கு இடையேயான உறவு மேலும் மேலும் சீர்கேடு அடைந்தது. பைடன் அதை இப்போது சரிசெய்து ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வர முயல்கிறார்.

எப்படிப் பார்த்தாலும் சீனா வலுவான இடத்தில் இருப்பதாக ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கருதுவதன் அடையாளங்கள் தென்படத்துவங்குகின்றன. அதில் ஒன்றும் ரகசியமோ ஆச்சர்யமோ இல்லை. இந்தப் பின்னணியில் வைத்துதான், கூடுதல் குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு தமது குடிமக்களை சீனா அனுமதித்திருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆதிக்கத்துக்கும் சந்தைக்குமான உறவு என்பது வரலாற்றில் முன்பு எப்போதும் இருந்ததை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறது. மனித வளத்தை நேர்மறையான ஆற்றலாகப் பயன்படுத்தினால் அது ஒரு நாட்டை ஏகாதிபத்தியமாகக் கட்டமைக்கும் சாத்தியத்தை வழங்குகிறது. சீனாவை இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கையில் ஏகாதிபத்தியம், பொருளாதாரக் கட்டுமானம் போன்ற விஷயங்களில் புதிய பார்வை கிட்டுகிறது.
சீனா விண்வெளி ஆய்வுகளுக்கு செலவிடும் தொகை மலைக்க வைக்கக் கூடியதாக இருக்கிறது. இந்தியா ஆராய்ச்சிக்கு செலவு செய்யும் தொகை கடந்த பதினான்கு ஆண்டுகளாக ஒரே அளவாக இருக்கிறது என்பதை ஐ.நா முகமை ஒன்று கவலையுடன் சுட்டியிருக்கிறது. எவ்வளவு விமர்சனங்கள், கோளாறுகள் இருந்தாலும், சீனாவின் கனவுத் திட்டமான Belt and Road Initiative தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. இலங்கையில் செய்வது போல துறைமுக விரிவாக்கத்தில் மற்ற நாடுகளில் அது செய்யும் முதலீடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் அது மேற்கொள்ளும் எண்ணெய் வள முதலீடுகள் போன்றவற்றையெல்லாம் கூட்டிப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது எப்படி இவ்வளவு முதலீடுகளை சீனா திரட்டுகிறது?
பதினெட்டாம் நூற்றாண்டின் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்தியங்களுக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்க , ரஷ்ய ஏகாதிபத்தியங்களுக்கும் இருந்த வேறுபாட்டை ஆராய்வதன் வழியாக நாம் சீனாவுக்கு வந்தடைந்தால், மக்கள் தொகைக்கும் சந்தைக்குமான தொடர்பு எப்படி ஏகாதிபத்தியத்துக்கு உதவுவதாக மாறியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதை எங்ஙனம் சீனா சாதிக்கிறது என்பதுதான் முக்கியம். அப்போதுதான் அதை இந்திய யதார்த்தத்துடன் பொருத்திப் பார்த்து பெருமூச்சு விட ஏதுவாக இருக்கும்.
முதலில் உள்நாட்டுச் சந்தையை சீனா வலுவாகப் பயன்படுத்துகிறது. பன்னாட்டு நிறுவனங்களை அதைக் கொண்டு கட்டுப்படுத்துகிறது. அவர்களது சந்தையை மற்றவர்கள் சார்ந்து இருக்கும்போது நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்கிறது சீனா. டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற விஷயங்களில் பாருங்கள். எளிதாகத் தடை செய்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறது. எப்படி? வலுவான மாற்று இருக்கிறது எனும் தைரியம்தான். படிப்படியாக அதை சாதித்துவிட்டுத்தான் முறைக்கிறார்கள்.
இந்த கொரோனா தொற்றை முன்னிட்டு இன்னொன்றும் சொல்லலாம். சீனாவின் virology சார்ந்த ஆய்வுகள். விண்வெளி ஆய்வுகளைப் போல அதிலும் நீண்ட தூரம் போயிருக்கிறார்கள். இருக்கட்டும்.ஆட்டோமொபைல், மின்னணு, கனரக வாகனம், மருத்துவம் போன்ற துறைகளிலும் அவர்கள் தற்சார்பை எட்டியிருக்கிறார்கள். அதனால் உலக நாடுகள் சீனாவை எளிதாக மிரட்ட முடியாது என்கிற இடத்தை நோக்கி அவர்கள் நகர்ந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தங்களது பொருட்களின் வழியாக உலகச் சந்தையையும் நிரப்புகிறார்கள். பணக்கார நாடுகள் கையைப் பிசையும் இடம் அது.
குறைந்த விலையில் அதிக எண்ணிக்கையிலான பொருட்களை குறைந்த நேரத்தில் உற்பத்தி செய்ய முடிந்த நாடு என்றால் உலக அளவில் அது இன்று சீனாதான். Pandemic போன்ற சூழலில் கூட என்னதான் சீனாவை குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தாலும் அவர்களது பொருட்கள் இல்லாமல் அதை எதிர்கொள்ள முடியாது என்பதே உண்மை. மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரை.மனித வளம் + டெக்னாலஜி + கம்யூனிசம்- இது மூன்றும் கலந்த ஒரு deadly comboவாக உருவாகும் சீனா எப்படிப் பார்த்தாலும் வலுவான தரப்புதான்.
வழக்கமான யுக்திகள் வழியாக அல்லது மரபான யுக்திகளின் வழியாக பழைய ஏகாதிபத்தியங்கள் சீனாவை எதிர்கொள்ள முடியாது என்பதே உண்மை.
மனித வளம் + டெக்னாலஜி + கம்யூனிசம் என்ற கூட்டின் வழியாகவே அவர்கள் மூலதனப் பெருக்கத்தை செய்கிறார்கள். அதை சிறப்பான விதத்தில் முதலீடாக மாற்றுகிறார்கள். நம்மிடம் இருப்பது போன்ற, காலனி ஆதிக்க கால மனத்தடைகள் அவர்களிடம் இல்லை. எங்கு டிமாண்ட் இருக்கிறதோ அதை எதிர்கொள்வதில் அவர்கள் காட்டும் முனைப்பு அசாத்தியமானது. சீனா சாதிக்கும் எல்லாவற்றையுமே இந்தியாவால் செய்ய முடியும் என்பதே உண்மை.
பிறகு ஏன் நாம் அந்த வேகத்தில் செல்ல முடியவில்லை..? காரணம், மனித வளம் + டெக்னாலஜி + கம்யூனிசம் என்ற இந்த வெற்றிகரமான இணைவுக்கு மாற்றான ஒரு வழிமுறையை இந்தியா கண்டடைய முடியாமல் திணறுகிறது என்பதுதான். திணறுவது மட்டுமல்லாமல் மேலும் மேலும் சகதியில் மாட்டிக்கொள்ளும் காரியத்தையே செய்கிறது. மிக முக்கியமாக மன உளைச்சலைத் தரும் ஒரு விஷயம் என்றால், அது இந்தியா வீணடிக்கும் மனித வளம்தான்.
மனித வளங்களை அடையாளம் காண்பது, சந்தையின் தேவையை ஒட்டி அவற்றை வகைப்படுத்துவது, அவற்றிற்கு இடையேயான ஒருங்கிணைப்பைத் துரிதப்படுத்துவது என்பதுதான் அடிப்படையானது. ஆனால், அதற்கு ஓர் அரசியல் நிலைப்பாடு தேவையாக இருக்கிறது. அது பரந்துபட்டதாக, தொலைநோக்குப் பார்வை கொண்டதாக இருக்க வேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தில் அரசு தடுமாறுகிறது.
நகல் செய்யும் காரியத்தைச் செய்கிறது. கம்யூனிசத்துக்கு மாற்றாக வலதுசாரி இறுக்கத்தை முன்வைக்கிறது. அந்த இறுக்கம், பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டன் தனது காலனி நாடுகளின் மீது கையாண்ட வழிமுறை. மனிதர்களை மேல், கீழாகக் கட்டமைக்கும் காலாவதியான வழிமுறை.
யோசித்துப் பாருங்கள், மனிதவளத்தை தர அடிப்படையில் மேல், கீழாகக் கட்டமைப்பதில், அதை ஒருங்கிணைப்பதில்தான் தனது நிர்வாக ஆற்றலின் பெரும்பகுதியை ஏகாதிபத்தியம் செலவழித்தது. இந்தியாவும் இதே ரீதியிலான தனது அணுகுமுறையில் இதிலிருந்து வெளியேறவே இல்லை. நீட் ஒரு சிறந்த உதாரணம்.
IAS, IPS போன்ற மற்ற காலனி கால நிர்வாக அடுக்குமுறைகள் மீது இருக்கும் கவர்ச்சி மற்றொரு உதாரணம். இந்த கொரோனா காலத்தில், ‘ஒரு தேசமாக இந்தியா புதிதாக உருவாக்கியிருக்கும் மருத்துவ முன் களப் பணியாளர்கள்’ என்பதை ஓர் உதாரண அலகாக வைத்து யதார்த்தத்தை மதிப்பிடுங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முன்களப் பணியாளர்கள் 50 லட்சம் என்றால் இப்போது எத்தனை பேர் என கணக்கிடுங்கள். ஆயாசமாக இருக்கும். மருத்துவக் கொள்கையில் என்னவிதமான நெகிழ்வு ஏற்படுத்தப்பட்டு, அல்லது முதலீடு செய்யப்பட்டு நிறைய மருத்துவர்களை, மருத்துவ உபகரணங்களை உருவாக்கும் செயல்திட்டம் அமுலுக்கு வந்திருக்கிறது? இது அடுத்த அலகு. இரண்டுமே ஏமாற்றம் தருவதாக இருக்கும். ஒரு பேரிடரை நிர்வாக ரீதியாக எதிர்கொள்வது என்றால் அதுதான். அது நடக்கவில்லை. இதுவேதான் மற்ற துறைகளிலும்.
நம்மிடம் இருக்கும் மனிதவளத்தை எதிலாவது பயன்படுத்திவிடவேண்டும் என்று அரசு நினைத்தாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால், அரசோ தரம் பிரிப்பதில் காட்டும் முனைப்பில் பாதி கூட வளங்களைப் பயன்படுத்தும் விஷயத்தில் காட்டுவதில்லை. மக்களை சொத்தாகப் பார்க்கும் மனநிலையே அரசுக்கு இன்னும் வரவில்லை. இதுவொரு காலனிய கால நோய்மை. இந்த அடிப்படையே மாறவேண்டும். எல்லோரும் பங்களிப்பதற்கான இடத்தை ஏற்படுத்துவதே அரசின் வேலை. அதை செய்யத் துவங்கினால் எஞ்சின் பிறகு அதன் போக்கில் நகரத் துவங்கும். அது நடப்பதே இல்லை.
ஒவ்வொரு முறையும் ‘மக்களுக்கான நலத்திட்ட உதவிகள்’ என்று அரசுகள் சொல்கையில் கேட்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. யாருக்கு பங்களிக்க வாய்ப்பு இல்லையோ அவர்களே சுமையாக மாறுகிறார்கள். இந்தியாவில் நடப்பது அதுதான். எல்லோருக்கும் எப்படி வாய்ப்பு தரமுடியும் என்று கேட்கலாம்.
நமது சந்தை, உலகத்தின் இரண்டாவது பெரிய சந்தை. இங்கு தரமுடியவில்லை என்றால் வேறு எங்கு தர முடியும்? ஐரோப்பா போல saturate ஆன சந்தை கிடையாது நம்முடையது. வறுமையில் இருப்பவர்கள், மத்திய தர வர்க்கம், மேல் தட்டு வர்க்கம் எனும் பெரிய volume கொண்ட மக்கள் மேலும் கீழுமாக சுழன்றுகொண்டே இருக்கும் சக்கரம் இது. தன்னெழுச்சியாக டிமாண்ட் உருவாகிக்கொண்டே இருக்கும் அமைப்பு நம்முடையது. அதை எதிர்கொள்வதற்கு அரசுகள் நீண்ட கால திட்டத்துடன் இல்லை என்பதே பிரச்னை.
ஜி.கார்ல் மார்க்ஸ்
|