ஸ்கேட்டர் கேர்ள்
கடந்த வாரம் ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் இந்திப்படம், ‘ஸ்கேட்டர் கேர்ள்’. தமிழ் டப்பிங்கிலும் பார்க்கலாம். ராஜஸ்தானில் உள்ள ஒரு குக்கிராமம். அங்கே வசித்து வரும் பள்ளி மாணவி பிரேர்ணாவின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. அவளது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கான இடமே இல்லை.
 இந்நிலையில் லண்டனில் இருந்து ஜெஸிகா என்ற இளம்பெண் அந்த கிராமத்துக்கு விசிட் அடிக்கிறார். ஜெஸிகாவின் மூலம் பிரேர்ணா உட்பட அந்த ஊரில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஸ்கேட்டிங் விளையாட்டு அறிமுகமாகிறது. ஸ்கேட்டிங் எப்படி அந்த கிராமத்து குழந்தைகளின் வாழ்க்கையில் வெளிச்சத்தையும் கொண்டாட்டத்தையும் கொண்டு வருகிறது என்பதே இன்ஸ்பிரேஷன் திரைக்கதை.
இந்தப் படத்துக்காக ராஜஸ்தானில் உள்ள கெம்பூர் என்ற கிராமத்தில் நிஜமாகவே ஒரு ஸ்கேட்டிங் பூங்காவை கட்டியிருக்கிறார்கள். டெஸர்ட் டால்பின் ஸ்கேட்பார்க் என்பது அதன் பெயர்.
இதுதான் ராஜஸ்தானின் முதல் ஸ்கேட்டிங் பூங்கா மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்கேட்டிங் பூங்காவில் ஒன்று. தினமும் இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஸ்கேட்டிங் விளையாடி வருகிறார்கள். கனவுகளைத் துரத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது. கதாபாத்திரங்கள் அப்படியே மனதில் பதிவாகிறார்கள். இதன் இயக்குனர் மஞ்சரி மகிஜானி.
|