த ஷஷாங்க் ரிடம்ப்ஷன்
பல வருடங்களாக ஐஎம்டிபி தளத்தில் முதல் இடத்தில் இருக்கும் படம், ‘தி ஷஷாங்க் ரிடம்ப்ஷன்’. சமீபத்தில் ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது இந்த ஆங்கிலப்படம். மனைவியையும் அவளின் காதலனையும் கொலை செய்துவிட்டான் என்று குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான் ஆன்டி.  நீதிமன்றம் அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையை வழங்குகிறது. சிறையில் ரெட் என்ற நண்பன் கிடைக்கிறான். வங்கி வேலைகளில் கைதேர்ந்தவன் ஆன்டி. அதை அறிந்த சிறை அதிகாரிகள் தங்களின் கருப்புப் பணத்தை வெள்ளை ஆக்குவதில் ஆன்டியைப் பயன்படுத்துகிறார்கள். ஆன்டியும் வேறு வழியில்லாமல் சிறை அதிகாரிகளின் வரி ஏய்ப்புக்கு உதவுகிறான். காலங்கள் வேகமாக உருண்டோடுகிறது. சிறையிலிருந்து தப்பித்து புது வாழ்க்கையை விரும்புகிறான் ஆன்டி. சிறையிலிருந்து அவன் எப்படி தப்பிக்கிறான் என்பதே சுவாரஸ்யமான திரைக்கதை. தனிமைச் சிறையின் குரூரங்கள், சிறை வாழ்வின் அவலங்கள், அதிகாரிகளின் ஊழல்கள், சிறைக்குள் எப்போதாவது கிடைக்கும் சின்னச் சின்ன மகிழ்ச்சிகள், ஆன்டிக்கும் ரெட்டுக்கும் இடையிலான நட்பு... என இப்படம் பல இடங்களில் தன் சுவடை வலிமையுடன் பதிக்கிறது. ஸ்டீபன் கிங்கின் சிறுகதையைத் தழுவி படத்தை இயக்கியவர் ஃப்ராங்க் டாராபான்ட்.
|