கம்மாட்டிப் பாடம்
மனதை அதிர வைக்கும் ஒரு மலையாளப்படம், ‘கம்மாட்டிப்பாடம்’. ‘ஹாட் ஸ்டாரி’ல் இலவசமாகப் பார்க்க கிடைக்கிறது. கேரளாவில் எண்பதுகளின் ஆரம்பத்தில் படத்தின் கதை நிகழ்கிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் கங்கா. அவனுடைய நெருங்கிய நண்பன் கிருஷ்ணன். கங்காவின் அண்ணன் பாலன் சின்னச் சின்ன குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான். கள்ளங்கபடமற்ற குழந்தைகளான கங்கா, கிருஷ்ணாவின் ரோல் மாடலாகிறான் பாலன்.
 தவிர, சிறுவர்கள் இருவரின் பார்வையில் படுவதெல்லாம் கொலையும், வன்முறையும்தான். அதனால் பள்ளிப்பருவத்திலேயே கத்தியைப் பிடிக்கின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இளம் பருவத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குழுவை உருவாக்கி குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். நாற்பது ஆண்டுகளுக்கு மேல் கொலை, வெட்டு, குத்து என்று அவர்களின் வாழ்க்கை கழிகிறது.
ஒரு கட்டத்தில் கத்தியும் வெட்டும் சலித்துப்போகிறது. இதிலிருந்து விடுபட்டு சாதாரண வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். கங்கா, கிருஷ்ணாவின் விருப்பம் என்னவாகிறது என்பதே சுவாரஸ்யமான திரைக்கதை. ஒரு மனிதனின் உருவாக்கத்தில் வளரும் சூழல் எவ்வளவு முக்கியமானது என்பதை ஆழமாக சித்தரிக்கிறது இந்தப் படம். கிருஷ்ணனாக துல்கர் சல்மானும், கங்காவாக விநாயகனும் அதகளம் செய்திருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் ராஜீவ் ரவி.
|