இலுப்பை மனிதரான வங்கி மேலாளர்!



‘‘இனிப்பு இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை...’’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்த இலுப்பை மரத்தைப் பற்றி ஓர் அகராதியே போடுமளவுக்கு விஷயங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார் திருமாறன். திருவையாறில் உள்ள ஒரு வங்கியின் மேலாளர் இவர். கும்பகோணத்திலிருந்து காரைக்காலுக்குப் போகும் வழியில் உள்ள வடமட்டம் என்ற கிராமம்தான் திருமாறனின் பூர்வீகம்.
கடந்த 10 வருடங்களாக இலுப்பையைத் தேடி இவர் அலையாத இடமே இல்லை. இந்தத் தேடலில் கிடைத்த அனுபவம் அவரது பெயரை இலுப்பை திருமாறன் என்று மாற்றிவிட்டது. இலுப்பையைப் பற்றிய அரிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் திருமாறன்.‘‘இலுப்பை மரம் பற்றிய குறிப்புகள் சங்க காலப் பாடல்களிலேயே உண்டு. அப்போது இலுப்பைக்கு ‘இருப்பை’ என்று பெயர். இலுப்பையைச் சுற்றி கரடிகள் படுத்துக்கொண்டிருக்கும் என்று சில பாடல்கள் சொல்கின்றன.

ஒருகாலத்தில்… அதாவது 40, 50 வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரைச் சுற்றியிருந்த பல கிராமங்களில் இலுப்பைத் தோப்புகள் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இன்று அதன் சுவடுகள் கூட இல்லை. சைவ கோயில்கள், பொது இடங்களில் எல்லாம் இந்த மரங்கள் பரவலாக இருந்தன. குறிப்பாக சிவன் கோயில்களில் விளக்கு எரிக்க பயன்படும் எண்ணெயை இலுப்பை மரக்கொட்டைகளில் இருந்தே பெற்றிருக்கிறார்கள்...’’ என்று ஆரம்பித்த திருமாறன், இலுப்பையைப் பற்றிய தேடல்களுக்கு எது உந்துதலாக இருந்தது என்பதை சொல்லத் தொடங்கினார்.

‘‘நான் இளைஞனாக இருந்தபோது சிவன் கோயில்களின் கருவறையில் ஒரு வாசனையை உணர்ந்தேன். அது இலுப்பை எண்ணெயில் எரிக்கப்படும் விளக்கிலிருந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொண்டேன்.

பிறகு ஒவ்வொரு முறையும் சிவனைப்பற்றி நினைக்கும்போது எல்லாம் இலுப்பை எண்ணெயின் வாசனையே என்னுள் வந்தது. இதுதான்  இலுப்பை மரத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்கான ஆர்வத்தை தூண்டியது. பிறகு இலுப்பையை அறிந்துகொள்வதற்காக பல்வேறு பயணங்களை மேற்கொண்டேன்...’’ என்கிற திருமாறன், இலுப்பை குறித்து தான் கற்றவற்றைப் பகிர்ந்தார்.
‘‘இலுப்பை மரம்தான் இந்தியாவின், தமிழகத்தின் பாரம்பரியமான மரம். கடந்த 800 வருடங்களாக வெளிநாடுகளில் இருந்து பல மரங்கள் இங்கே வந்துள்ளன. அந்த மரங்கள்தான் நம்முடைய பாரம்பரிய மரங்களாக பலருக்கு காட்சி தருகின்றன.

உதாரணமாக மிளகாய் கூட ஓர் அயல் நாட்டுச்செடி தான். ஆனால், இலுப்பை நம் இந்தியாவுக்கே உரிய மரம். இந்தியாவில் இரண்டு வகையான இலுப்பை மரம் உண்டு. ஒன்று வடநாட்டில் உள்ள இலுப்பை. இதன் இலைகள் அகன்றிருப்பதால் இதனை அகன்றிலை இலுப்பை மரங்கள் என்றும், தமிழ்நாட்டில் உள்ளவை நீட்டு இலையை உடையதால் நெட்டிலை இலுப்பை மரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒடிசாவில் உள்ள ‘கோண்டு’ இன பழங்குடியினர் இலுப்பை மரத்தை ‘இருப்பாச்சி’ என்று அழைக்கின்றனர். இது சங்க காலத்தில் அழைக்கப்பட்ட ‘இருப்பை’க்குச் சமம். ஆகவே இந்தியாவில் இலுப்பை மரம் மிகவும் தொன்மையான மரமாக இருந்ததை இந்த வரலாறுகள் சொல்கின்றன...’’ என்ற திருமாறன், இலுப்பையின் பல்வேறு பயன்களைப் பட்டியலிட்டார்.

‘‘இலுப்பைப் பூக்களில் இருந்து எண்ணெய் எடுத்தது போக, மீதமாகும் புண்ணாக்கை பொடி செய்தனர். இந்தப் பொடியை அரப்பு என்று அழைத்தார்கள். குளிப்பதற்கும், பாத்திரங்களைக் கழுவுவதற்கும் அரப்பை பயன்படுத்தியிருக்கிறார்கள். சித்தர்கள் ஓய்வு எடுப்பதற்காகவும், தூங்குவதற்காகவும் இலுப்பை மரங்களை நாடியதாக செவிவழி செய்திகள் உண்டு. சித்த வைத்தியத்திலும் இலுப்பையின் காய்கள், பட்டைகள், பூவைப் பயன்படுத்தியிருப்பதற்கான குறிப்புகள் இருக்கின்றன.

உடல் சோர்வு, அரிப்பு, கெட்ட நீரை அகற்றுவதற்கு இலுப்பை உதவியிருக்கிறது. ஒடிசாவிலும், நமது கல்வராயன் மலை பழங்குடிகளும் இலுப்பை பூவிலிருந்து ஒருவகை மதுவைத் தயாரிப்பதாகச் சொல்கிறார்கள். இலுப்பை எண்ணெய் எரியும்போது வெளியாகும் புகை, காற்றில் உள்ள நச்சு வாயுவான கரியமில வாயுவை அழித்து காற்றை சுத்தமாக்குகிறது...’’ என்கிற திருமாறன், இலுப்பை மரத்தின் சுற்றுச்சூழல் அவசியம் பற்றி விளக்கினார்.

‘‘நீர்பிடிப்புப் பகுதிகளாக இலுப்பைத் தோப்புகள் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் நிலத்தடி நீரைப் பிடித்து வறண்ட காலத்தில் ஏற்படும் நீர் தேவையை இந்த மரங்கள்தான் பூர்த்தி செய்திருக்கின்றன. உண்மையில் வறண்ட பூமியில்தான் இலுப்பைத் தோப்புகளே இருந்தன. அதேபோல வவ்வால்கள் குடியிருக்கும் மரமாகவும் இது இருந்தது. வவ்வால்கள் இருந்தால் கொசு இருக்காது என்பார்கள். ஆனால், இன்று இலுப்பை மரங்கள் இல்லாததால் வவ்வால்களும் இல்லை; கொசுவின் பெருக்கமும் அதிகம்.

இலுப்பை அரப்பைப் பயன்படுத்திக் குளிக்கும்போது சாக்கடை நீர் உண்டாகாது. அந்த நீர் நுண்ணுயிர்களை வளர்த்து, மண்ணை வளப்படுத்தும் செயலை செய்தது. அதேபோல இலுப்பையின் பூ, காய்கள் மண்ணில் விழும்போது அவை மக்கி, மண்ணை இலகுவாக்கி தாதுமணலாக மாற்றும் ஆற்றல் வாய்ந்தது. இந்த மரங்கள் அங்காளம்மாள், அம்பாள் எனும் சிறுதெய்வ கோயில்களில் இருந்து, பெருந்தெய்வ கோயில்களுக்கு இடம் மாறின. இதன் மூலம் ஒரு பண்பாட்டைக் காப்பாற்றியது இந்த மரம். \

ஆனால், இன்று இந்த மரங்களில் பெரும்பான்மை அழிந்துவிட்டன. மேலும் இவற்றை சிறுதெய்வ கோயில்களில் மட்டுமே காண முடிகிறது. இது நமது பண்பாட்டின் அழிந்த நிலையையே காட்டுகிறது. அதே நேரத்தில் இந்தக் காலத்தில் ஆன்மீக நாட்டம் கொண்ட சிலர் இலுப்பை மரத்தை வளர்த்து வருவது ஆறுதலாக உள்ளது. ஆனால், நாம் போகவேண்டிய தூரம் இன்னும் அதிகம்...’’ என்றார் இந்த இலுப்பை மனிதர்.

டி.ரஞ்சித்