ரத்த மகுடம்-149
சுருட்டி வைக்கப்பட்டிருந்த அந்த சீனப் பட்டை எடுத்து சிவகாமி உதறினாள்.பெண்கள் அணியும் கச்சையாக அது விரிந்தது.பார்த்ததுமே சாளுக்கிய இளவரசனின் மனக்கண்ணில் எண்ணற்ற காட்சிகள் விரிந்தன. ‘கச்சை... இதுபோன்ற கச்சையை வைத்துதானே கரிகாலனும் சிவகாமியும் மதுரையில் இருந்து நம்மை அலைக்கழிக்கிறார்கள்... வாதாபியை எரித்து சாம்பலாக்கிய நரசிம்மவர்ம பல்லவரின் படைத்தளபதியான பரஞ்சோதி மூன்று அசுரப் போர் வியூகங்களை அமைத்ததாகவும், அதில் ஒன்றை மட்டுமே நரசிம்மவர்மர் மணிமங்கலம் போரில் பயன்படுத்திவிட்டு மற்ற இரண்டையும் எரித்துவிட்டதாகவும் கதையளந்தார்கள்.
அதுமட்டுமா? பரஞ்சோதி அந்த அசுரப் போர் வியூகங்களை வரைந்தபோது உடனிருந்தவர் அவற்றை உன்னிப்பாக கவனித்ததாகவும், போருக்குப் பிறகு அந்த நபரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் நரசிம்மவர்மர் அவரை காஞ்சியில் சிறை வைத்ததாகவும், பிறகு மன்னித்து நாடு கடத்தியதாகவும் நம்பும்படி சொன்னார்கள்.
அப்படி காஞ்சியில் இருந்து வெளியேறியவர், மதுரையில் அடைக்கலமானதாகவும் அங்கும் அவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டு மரணமடைந்ததாகவும் அப்போது அவர் சிறை சுவரில் நரசிம்மவர்மரால் எரிக்கப்பட்ட இரு அசுரப் போர் வியூகங்களை தன் நினைவில் இருந்து கிறுக்கி வைத்திருக்கிறார் என்றும், அவற்றை, தான் படி எடுத்து வருவதாகவும் சொல்லித்தானே இந்த சிவகாமி அங்கு சென்றாள்..? அதன்படியே தன் கச்சையில்தானே அந்த அசுரப் போர் வியூகங்களை நகல் எடுத்து வந்து சாளுக்கிய மன்னரிடம் காண்பித்தாள்..? அது போலியானது என போர் அமைச்சர் கண்டறிந்தது எல்லாம் இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறதே... இதுவரை நடந்த அனைத்து சம்பவங்களும் இந்த கச்சையை சுற்றித்தானே நடக்கிறது..?இப்பொழுதும் அதே சிவகாமி, கச்சையைத்தான் நம் முன் விரிக்கிறாள்... ஆனால், இது பருத்தி ஆடையால் நெய்யப்பட்ட கச்சை அல்ல. சீனப் பட்டு. இதிலென்ன சூது இருக்கிறது..?’விநயாதித்தனின் மனதில் கடந்தகால நிகழ்வுகள் அனைத்தும் அலை அலையாக எழுந்தன.
அவன் வதனத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சிவகாமி யும் இதை உணர்ந்தாள். அவள் உதடுகளில் புன்னகை பூத்தது.‘‘கச்சையைப் பார்த்ததும் தங்களுக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டதா இளவரசே... நியாயம்தான். இனி நடக்கவிருக்கும் பல்லவ - சாளுக்கிய போருக்கான அச்சாணி கச்சைதான். சாளுக்கியர்கள் இதை... கச்சையை மறக்கக் கூடாது என்பதற்காகத்தான் இதுவரை நடைபெற்ற சம்பவங்களில் எல்லாம் ஒரு துருப்புச்சீட்டாக கச்சை வந்துகொண்டே இருக்கிறது. இப்பொழுதும் அப்படித்தான்.
அச்சம் வேண்டாம் இளவரசே! ஒருபோதும் பெண்கள் அணிந்த கச்சையை சாளுக்கியர்களிடம் பல்லவர்கள் கொடுக்க மாட்டார்கள். அணியாத புத்தம் புது கச்சையின் வழியாகத்தான் செய்தியைத் தெரியப்படுத்துகிறார்கள். எனவே தைரியமாக வாங்கிப் பாருங்கள்...’’தயங்கிய சாளுக்கிய இளவரசன், பின் அந்த சீனப் பட்டை சிவகாமியிடம் இருந்து வாங்கினான். ஆராய்ந்தான்.
அவன் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘என்ன இது..?’’ ‘‘நீங்கள் வினவியதற்கான விடை...’’‘‘புரியவில்லையே... இதில் தக்காணப் பிரதேசத்தின் வரைபடமல்லவா தீட்டப்பட்டிருக்கிறது..?’’‘‘அதுதான் தங்கள் கேள்விக்கான பதில் இளவரசே! நாடற்ற ஏதிலியாக அலையும் பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மர், எங்கு ஆயுதங்களை தயாரித்திருப்பார் என்று கேட்டீர்கள் அல்லவா..?’’ ‘‘ஆம்...’’
சாளுக்கிய இளவரசன் ஏந்தியிருந்த சீனப் பட்டை சிவகாமி சுட்டிக் காட்டினாள். ‘‘இங்குதான் தயாரித்து சேகரித்திருக்கிறார்...’’ ‘‘தக்காணத்திலா..?’’‘‘ம்... சாளுக்கிய தேசத்தில்!’’ சொல்லும்போது சிவகாமியின் முகம் ஜொலித்தது.விநயாதித்தன் அதிர்ந்தான். ‘‘தக்காணத்திலா... சாளுக்கிய தேசத்தில் தலைமறைவாக இருந்தபடியா பல்லவ மன்னர் ஆயுதங்களைத் தயாரித்திருக்கிறார்...''‘‘பல்லவ மன்னருக்கு வேறெந்த இடமும் பாதுகாப்பாக இல்லை இளவரசே! அகதியாக மறைந்து வாழ்பவருக்கு எதிரி நாட்டை விட பாதுகாப்பான இடம் கிடைக்காதே! தவிர தக்காணத்தின் தலையான சாளுக்கிய தேசத்தில் அல்லவா இரும்புச் சுரங்கம் இருக்கிறது!’’ அழுத்திச் சொன்னாள் சிவகாமி.கையறு நிலையில் ஊசலாடினான் விநயாதித்தன்.
சிவகாமியே தொடர்ந்தாள். ‘‘தங்கள் பாட்டனார் இரண்டாம் புலிகேசி, தன் வாளினால் பாரத தேசத்தில் கோடு கிழித்தபின் வரலாறே மாறிவிட்டது இளவரசே! குப்தர்களை அவர் எப்பொழுது வெற்றி கொண்டாரோ அந்த நொடியில் வட பாரதம், தக்காணம், தென் பாரதம் என இந்த பூமி மூன்று பிரிவுகளானது. அரசியல் ரீதியாக இதன் பிறகு வர்த்தமானர்கள், சாளுக்கியர்கள், பல்லவர்கள் என பாரதம் முப்பெரும் பேரரசுகளின் கீழ் வந்தது. அதனாலேயே அரசியல் சதுரங்க ஆட்டமும் சூடு பிடித்தது.
வட பாரதத்தைச் சேர்ந்தவர்கள் தக்காணத்தை வீழ்த்தாமல் தென் பாரதத்துக்குள் நுழைய முடியாது. அதுபோலவே தென் பாரதத்தைச் சேர்ந்தவர்கள் தக்காணத்தின் உதவியின்றி வட பாரதத்துக்குச் செல்ல முடியாது. அந்தளவுக்கு முக்கியத்துவமுள்ள நிலப்பிரதேசமாக இரண்டாம் புலிகேசி தக்காணத்தை மாற்றிவிட்டார். அதற்கு நிலமென்னும் நல்லாளும் பூரண ஒத்துழைப்பை நல்கி இருக்கிறாள்!
எப்படி இன்று பாரத தேசமே முப்பெரும் பிரிவாக இருக்கிறதோ அப்படி தக்காணமும் பீடபூமி, கரடுமுரடான நிலப்பகுதி, தாழ் நிலப்பகுதி என திரிசூலமாகத்தான் பிளவுபட்டுள்ளது.பீடபூமிப் பகுதியில் இருக்கும் அக்னிப் பாறைகள் காலவெள்ளத்தில் இயற்கை அரண்களாக, கோட்டைகளாக உருமாறின.
இப்பகுதியிலுள்ள பல பக்க மலைத்தொடர்கள், ஒரு சமவெளிப்பகுதியை மற்றொன்றில் இருந்து பிரிக்கின்றன. அப்படித்தான் தபதி பள்ளத்தாக்கையும், கோதாவரி பள்ளத்தாக்கையும் ஷயாத்ரி மலைத்தொடர் பிரிக்கிறது. அதேநேரம் ஜால்னா, மகாதேவ மலைத்தொடர்கள் ஒழுங்கற்று சிதறியிருக்கின்றன; இவற்றின் உயரமும் குறைவு என்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லை. தவிர கோதாவரியும் கிருஷ்ணாவும் படகுப் போக்கு வரத்துக்கும் வாணிபத்துக்கும் உதவுகின்றன.
தக்காணத்தின் மலைகளும் ஆறுகளும் காடுகளும் வட பாரதத்தில் இருந்து பிரிக்கின்றன. நர்மதை, கோதாவரி பள்ளத்தாக்குகளைப் பாதுகாக்கும் மலைகளையும் வனங்களையும் கடப்பது வட பாரத பேரரசுகளுக்கு கடினமாக இருப்பதாலேயே அவர்களால் தென் பாரதத்தை வெற்றி கொண்டு ஆட்சி செலுத்த முடியவில்லை.
அதேபோல் பண்டைய யவன தேசத்துக்கும் தக்காணத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை என்று சொல்வார் எனது குருநாதரான புலவர் தண்டி. தங்கள் ஆசானான ராமபுண்ய வல்லபரும் இதையே தங்களிடம் தெரிவித்திருப்பார் என உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் வரலாற்றைக் கற்றுத் தருபவர்கள் அனைவருமே இந்த உண்மையைத்தான் காலம் காலமாகச் சொல்லி வருகிறார்கள்.
அதாவது யவன தேசம் போலவே தக்காணமும் ஒன்றுடன் மற்றொன்று வேறுபட்ட பல சமூக, கலாசாரப் பிரிவுகளைக் கொண்டது... மலைத்தொடர்களும் ஆறுகளும் இத்தொகுதிகள் ஒன்றுடன் மற்றொன்று தொடர்பு கொள்ள தடையாக இருப்பதால் சிற்றரசுகள் அதிகம்... அனைத்தையும் ஒருங்கிணைத்து பேரரசை உருவாக்குவது இதுவரை கடினமாக இருந்தது என சரித்திரப் பாடம் எடுப்பார்கள்; எடுத்தார்கள்.
தங்கள் பாட்டனார் இரண்டாம் புலிகேசி காலத்தில்தான் இந்நிலை மாறத் தொடங்கியது. தக்காணத்தில் முதன் முதலில் பேரரசுக்கான விதையை அவரே தூவினார். அது விருட்சமாக வளராதபடி நரசிம்மவர்ம பல்லவர் தடுத்தார். இப்பொழுது தங்கள் தந்தையார் அதே முயற்சியைச் செயல்படுத்தும் பொருட்டு பல்லவர்களுடன் போர் புரியத் தயாராக இருக்கிறார். பரமேஸ்வரவர்மரும் தன் பாட்டனார் நரசிம்மவர்மர் போலவே சாளுக்கியர்களை ஒடுக்க படையுடன் காத்திருக்கிறார்.
இளவரசே... தக்காணத்தின்... சாளுக்கிய தேசத்தின் வடபுலத்தை மலைகளும் வனங்களும் ஆறுகளும் காக்கின்றன. ஆனால், தென்புலத்தில் அப்படி எந்த இயற்கைப் பாதுகாப்பும் இல்லை. அதனால்தான் கிருஷ்ணா, துங்கபத்திரா ஆறுகளுக்கு இடைப்பட்ட ஆற்றிடைப் பகுதியில் தென்பாரதமும் தக்காணமும் தொடர்ந்து போர் புரிந்து வருகின்றன. தென் பாரதத்தையும் தன் குடையின் கீழ் கொண்டுவரவேண்டுமென்பது தக்காணத்தின் ஆசை. தக்காணத்தையும் தன் ஆட்சியின்கீழ் கொண்டுவரவேண்டும் என்பது தென் பாரதத்தின் விருப்பம்.
அதனால்தான் கடந்த சில தலைமுறைகளாக தொடர்ந்து தக்காணமும் தென் பாரதமும் கிருஷ்ணா, துங்கபத்திரா ஆறுகளுக்கு இடைப்பட்ட ஆற்றிடைப் பகுதியில் தொடர்ந்து போர் புரிந்து வருகின்றன.இந்த யுத்த காண்டத்தின் நீட்சிதான் விரைவில் நடக்கவிருக்கும் பல்லவ - சாளுக்கிய போர்!
இளவரசே! வட பாரத சுரங்கங்களுக்கு சமமான கனிமச் சுரங்கங்கள் தக்காணத்தில் உண்டு. அவற்றைப் பாதுகாக்க உங்கள் தந்தை உட்பட அனைத்து தக்காண அரசர்களும் கோட்டைகளை நிறுவியிருக்கிறார்கள்; படைகளை நிறுத்தியிருக்கிறார்கள்.
ஆனால், ஓரிடத்துக்கும் மற்றொரு இடத்துக்கும் தொடர்பு அறுபட்டிருக்கிறது. தக்காணத்துக்கு கனிம சுரங்கங்களை வழங்கிய அதே இயற்கைதான் மலைகள், வனங்கள், ஆறுகளாக முப்பெரும் பிரிவுகளாக தொடர்பு எல்லையை அறுக்கின்றன.சாளுக்கியர்களுக்கு இயற்கை சாதகமாக இருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்... அதே இயற்கையை தனக்கு சாதகமாக்கி உங்கள் நிலத்தில் மறைந்து வாழ்ந்தபடியே தன் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்திருக்கிறார் பல்லவ மன்னர்!
தொழிலாளர்களுக்குத் தேவை கூலி. அதை யார் வழங்கினாலும் ஆயுதங்களைத் தயாரித்துக் கொடுப்பார்கள். சாளுக்கியர்களின் பொக்கிஷத்தைக் கொள்ளையடித்து அதையே சாளுக்கிய கைவினைக் கலைஞர்களுக்கு கூலியாக வழங்கி சாளுக்கியர்களை எதிர்ப்பதற்கான வாட்கள், குறுவாட்கள், ஈட்டிகள், வேல், அம்பு... என சகல ஆயுதங்களைச் சேகரித்துவிட்டார் பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மர்...’’
நிறுத்திய சிவகாமி, இரண்டடி எடுத்து வைத்து சற்றே விநயாதித்தனை நெருங்கி நின்றாள். ‘‘தயாரித்த ஆயுதங்களை மனிதர்கள் அடங்கிய படைகள் மட்டும் பயன்படுத்தப் போவதில்லை இளவரசே! யந்திரப் பொறிகளும் அவற்றைக் கையாளப் போகின்றன! அதுவும் இமைக்கும் பொழுதில் நூற்றுக்கணக்கான ஈட்டிகளும் வேல்களும் சாளுக்கியப் படைகள் மீது பாயப் போகின்றன... கரிகாலருடனும் பல்லவ இளவலான இராஜசிம்மருடனும் ஒரு சீனன் சுற்றிக் கொண்டிருக்கிறானே... அவன்தான் இந்த யந்திரப் பொறிகளைத் தயாரித்து வருகிறான்... இங்கல்ல... பல்லவ தேசத்திலும் அல்ல...
பாண்டியர்களின் தலைநகரான மதுரையில்!’’ ‘‘நீ சொல்வதை நான் எப்படி நம்புவது..?’’ ‘‘நடைபெற்று வரும் போரே அதற்கு சாட்சி!’’ விநயாதித்தனின் நயனங்களில் விவரிக்க இயலாத உணர்வுகள் படர்ந்தன.
‘‘போர் தொடங்கிவிட்டது இளவரசே! ஆனால், பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் அல்ல! பாண்டியர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில்! என்னை இங்கு கைது செய்யலாம் என கனவு காணாதீர்கள். படையுடன்தான் வாதாபிக்குள் நுழைந்திருக்கிறேன்! காளைகளுடன் நான் செல்லாவிட்டால் மீண்டும் வாதாபி பற்றி எரியும்!’’
சொன்ன சிவகாமி ஒற்றைக் கொம்புக் காளையின் மீது ஏறினாள். ‘‘எதையும் சொல்லிவிட்டுச் செய்வதே கரிகாலரின் வழக்கம். அந்த வகையிலேயே இங்கு வந்தேன்... யுத்த களத்தில் சந்திப்போம்... அப்பொழுது கச்சைகளை ஏன் நாங்கள் செய்தி பரிமாற பயன்படுத்துகிறோம் என்பதற்கான விளக்கம் தங்களுக்குக் கிடைக்கும்!’’ சிவகாமி செல்வதையே அசைவற்று பார்த்துக் கொண்டிருந்தான் விநயாதித்தன்.கரிகாலனின் வாயை கச்சையால் பொத்திவிட்டு கலகலவென நகைத்தாள் சிவகாமி!விநயாதித்தனிடம் அவள் கொடுத்த கச்சை போலவே அதுவும் இருந்தது!
(தொடரும்)
கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்
|