77 வயது கணவனோடு 71 வயது மனைவி 30 ஆயிரம் கிமீ புல்லட்டில் சுற்றியிருக்கிறார்!



ராயல் என்ஃபீல்டில் நான்கு நெடுந்தூர ரோட் டிராவல். மொத்தம் 30 ஆயிரம் கிமீ பயணித்த தம்பதியின் கதை இது. எத்தனையோ ஜோடிகள் இப்படி டிராவல் செய்கிறார்களே... இவர்கள் மட்டும் அப்படிஎன்ன ஸ்பெஷல்..?நல்ல கேள்வி. இதற்கான பதில் சிம்பிள். 77 வயது கணவனோடு, 71 வயது மனைவி புல்லட்டில் சுற்றியிருக்கிறார்!

குஜராத்தில் வசிக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான மோகன்லால் பி சௌகான், 2011ம் ஆண்டு, மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை படிக்கட்டுகளில் கூட ஏறக் கூடாது என கட் அண்ட் ரைட் ஆக சொல்லிவிட்டார்கள். இதனையடுத்து, தான் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, 2015ம் ஆண்டிலிருந்து சிறு சிறு பயணங்களைத் தொடர ஆரம்பித்தார் மோகன்லால்.  

“ஓய்வு பெற்ற பிறகு, நான் பயணிக்கும் ஒவ்வொரு நொடியிலும் வாழ்வின் புதிய அர்த்தங்களை உணர்ந்தேன். அந்த நேரங்களில் ஒரு குழந்தையாக என் தந்தையுடன் ஸ்கூட்டரில் அருகிலுள்ள இடங்களுக்கு சென்ற தெல்லாம் நினைவுக்கு வந்தது...” என்று கூறும் மோகன்லால், மனைவி லீலாவையும் தன் பயணத்தில் இணைத்துக் கொண்டதுதான் ஹைலைட்.

“2010ல் என் மனைவி லீலா பென், விபத்தில் சிக்கினார். கால் எலும்பு முறிந்தது. இதனால் நடப்பதில் சிரமம் ஏற்பட்டு அவர் மாற்றுத்திறனாளியானார். இது மனதளவில் அவரைப் பாதித்தது. அவரைத் தேற்றும் விதமாகவும் என்னைப் போலவே அவரும் வாழ்வில் புதிய அர்த்தங்களை தரிசிக்க வேண்டும் என்பதற்காகவும் அவரையும் என் பயணத்தில் இணைத்துக் கொண்டேன்!

கால் எலும்பு முறிவு காரணமாக லீலாபென்னால் புல்லட்டின் பின்பக்கம் அமர முடியாது. எனவே அவரது உடல் நலனுக்காக என் புல்லட்டில் ஒரு மாற்றம் செய்தேன்.வேறொன்றுமில்லை. அந்தக் கால ஸ்கூட்டரில் ஒரு சைடுகேரை இணைத்து அதில் தன் நண்பர் அல்லது பெற்றோர் அல்லது மனைவியை அமர வைத்து செல்வார்கள் இல்லையா..? அப்படி ஒரு சைடுகேரை புல்லட்டின் பக்கவாட்டில் இணைத்தேன்...” கண்களைச் சிமிட்டுகிறார் மோகன்லால்.

இந்த ஜோடி குஜராத்தின் வதோதராவில் தொடங்கி, மகராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு வழியாக இலங்கைக்கு செல்ல திட்டமிட்டார்கள். அரசியல் சூழல் காரணமாக இலங்கைப் பயணம் ரத்தானது. ராமேஸ்வரத்தோடு நின்றுவிட்டனர்.“ராமேஸ்வரத்தில் சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் தனிச் சிறப்பு வாய்ந்தது. அதை அள்ள அள்ள அப்படி அனுபவித்தோம்...” பரவசத்தோடு சொல்லும் லீலாபென், இயற்கையின் மிகப்பெரும் சாட்சியாக காலம்காலமாகத் திகழும் இதை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது என்கிறார்.

வெற்றிகரமாக தங்கள் பயணத்தை முடித்து வீடு திரும்பியிருக்கும் இந்த ஜோடிக்கு இப்படி பயணப்படுவதுதான் பொழுதுபோக்கே! “எங்கள் பயணங்களில் திட்டமிடல் பிரச்னையாக இல்லை. ஆனால், கேள்விகளுக்கு பதில் அளிப்பதும், மக்கள் எங்கள் மீது கொண்டிருந்த அச்சங்கள் மற்றும் சந்தேகங்களைத் தீர்ப்பதுதான் பெரிய வேலையாக இருந்தது; இருக்கிறது.

வயதின் காரணமாக நாங்கள் சில நூறு கிலோமீட்டருக்கு மேல் பயணத்தை நீடிக்க மாட்டோம் என்றே பலரும் நம்பினர். ஆனால், அப்படி நாங்கள் பின்வாங்கியதே இல்லை!2018ல் மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், மேகாலயா வழியாக தாய்லாந்துக்குச் செல்ல முடிவெடுத்தோம். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் மேகாலயாவை அடைந்தபோது நிலச்சரிவு தொடங்கியதால் தாய்லாந்துக்குச் செல்ல முடியாமல் போனது...’’ என்கிறார் மோகன்லால்.

அந்த வருத்தம் இந்த தம்பதிகளுக்கு இருந்தாலும், பயண தூரங்களும், ஒவ்வொரு நிலப்பரப்பைக் கடக்கும்போதும் தூய்மையான காற்றும், கண்களுக்கு விருந்தளித்த இயற்கையும், பூத்துக் குலுங்கும் தோட்டங்களாக காட்சியளித்த பல்வேறு இடங்களின் அமைப்பும் தங்கள் வயதைக்குறைத்து இளமையாக்கி இருக்கிறது என்கிறார்கள்.

இந்தப் பயணத்தின்போதுதான் இன்னொரு விபத்தை சந்தித்திருக்கிறார் லீலா பென். மத்தியப் பிரதேசத்தின், சித்ரகூட் பகுதியைக் கடக்கும் போது தவறி அவர் கீழே விழுந்ததில் கணுக்கால் எலும்பு முறிந்துள்ளது. பதினைந்து நாட்கள் அங்கேயே தங்கி அறுவை சிகிச்சைக்குப் பின் உடல் தேறியதும் பயணத்தை தொடர்ந்திருக்கிறார்கள்!

“இரும்புப் பெண் என்றால் அது என் மனைவி லீலாபென்தான். தைரியமே அவரது ஆன்மா. ‘முடியலை... வீடு திரும்பிடலாம்... பயணம் போதும்’ என எப்பொழுதும் அவர் சொன்னதில்லை. என் புல்லட்டின் இரண்டாவது பேட்டரி அவர்தான்” நெகிழ்கிறார் மோகன்லால்.

பயணங்களில் வரவு, செலவுகளைப் பார்த்துக் கொள்வது லீலாபென்தான். “ஒரு நாளைக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை பட்ஜெட். உணவு, தங்குமிடம், பெட்ரோல் உட்பட அனைத்துச் செலவுகளும் இதில் அடங்கும். இதுவரை பயணத்திற்காக இரண்டு லட்சம் வரை செலவழித்திருக்கிறோம்...’’ என்கிறார் லீலா பென். 2018ல் தாய்லாந்துக்குச் செல்ல திட்டமிட்டு மேகாலயா வரை சென்றார்கள் என்றால், 2019ல் ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசத்தைக் கடந்து ஜம்மு வரை சென்றுள்ளனர்!

“இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் நாங்கள் கடந்துள்ளோம். எல்லா மாநிலங்களுமே எங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் தனக்கென பண்பாடு கலாசாரத்தைக் கொண்டிருக்கிறது...’’ என்றும் சொல்லும் மோகன்லால், ‘‘பெரும்பாலான மக்கள் ஏதோ ஒரு பிரச்னையின் காரணமாக வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கிறார்கள். இதை எல்லா மாநிலங்களிலுமே காண முடிந்தது...’’ என்கிறார்.  

2020ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆந்திராவின் ஸ்ரீசைலத்திற்கு கடைசியாக பயணம் செய்தது இவர்களது புல்லட். ‘‘கொரோனா பொது ஊரடங்கால் எங்கள் பயணம் தற்காலிகமாக தடைப்பட்டிருக்கிறது. சைவ உணவு உண்ணும் நாங்கள், ஒவ்வொரு இடத்திலும் எளிமையான உணவையே தேர்ந்தெடுக்கிறோம்.

வெங்காயம், உருளைக்கிழங்கு தவிர மற்ற அனைத்தையும் சாப்பிடும் எங்களுக்கு, பனீர் பரோட்டோ, தக்காளி சூப், காய்கறி புலாவ், மசாலா பட், தயிர் மற்றும் ஒரு முழு கிளாஸ் பால் ஒருநாளைக்கு போதும்...’’ என்று சொல்லும் லீலா பென் கடைசி யாகச் சொன்னதுதான் ஹைலைட். “இவர் என் கணவர். ஆனால், பயணத்தில் எனது நெருக்கமான நண்பர்! இந்த நண்பனோடு வாழ்நாள் முழுக்க பயணம் செய்ய விரும்புகிறேன்!’’ What a Love Story!  

அன்னம் அரசு