யார் இந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்..?
இந்திய வரலாற்றில் மூன்றாவதாக ஒரு நபர் -பொருளாதாரம், சந்தை விவரம் தெரிந்து அத்துறையின் (நிதி அமைச்சர்) அமைச்சராகியிருக்கிறார்.
1991ம் ஆண்டு பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங், மேற்கு வங்கத்தில் மம்தா முதல்வரானபின் அமித் மித்ரா ஆகியோரைத் தொடர்ந்து தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.
கட்சியின் இரண்டாம் இடத்தில் இருக்கும் சீனியர்களுக்கே வழங்கப்படும் நிதித்துறை, இந்த முறை இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் நடத்தி வந்த நிதிநிலையினை இனி இவர் கையாளப்போகிறார்.
கிட்டத்தட்ட சுமார் ரூ.5 லட்சம் கோடி கடனை எட்டியுள்ளது தமிழகம். இதற்கிடையே கொரோனா காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. இதனை மாற்றி வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தைக் கொண்டு செல்லும் திறன் வாய்ந்த ஒருவரை நிதித்துறைக்கு நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாய்ஸாக பழனிவேல் தியாகராஜனே இருந்துள்ளார்.
அமைச்சர் பதவிக்கு மட்டுமே இவர் புதியவர். ஆனால், நீண்ட திமுக அரசியல் பாரம்பரியத்தையும், நிதித்துறையில் உலகளாவிய அனுபவமும் பெற்றவர். ஆம். நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான பி.டி.ராஜனின் பேரனும், முன்னாள் சபாநாயகர், அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் ராஜனின் மகனுமே இந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.
அமெரிக்காவின் ஆசியன் பசிபிக் வங்கியின் உயரதிகாரியாக மாதத்துக்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்த இவர், கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதே மதுரை மத்திய தொகுதியில் இந்த முறையும் போட்டியிட்டு 34,176 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தனது தொகுதிப் பிரச்னை களுக்கு தீர்வு கண்டதோடு, தொகுதிக்குச் செய்த பணிகளை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கையாகவும் வெளியிட்டு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட முழு நிதியையும் பயன்படுத்தியவர்.
திருச்சி என்.ஐ.டி.யில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பொறியியல் பட்டம் முடித்த இவர், முதுநிலைப் பட்டப்படிப்பை அமெரிக்காவில் முடித்தார். நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தில் பொறியியல் உளவியலில் முனைவர் பட்டமும், எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்டில் நிதி நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். தன் வகுப்புத் தோழியான அமெரிக்கப் பெண் மார்கரெட்டை மணம் முடித்தார். இவர்களுக்கு பழனிதேவன் ராஜன், வேல் தியாகராஜன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
படிப்பை முடித்ததும், 1990ல் செயல்பாடுகள் மற்றும் அமைப்பு மேம்பாடு தொடர்பான தொழிலில் ஈடுபட்ட அவர், 2001ம் ஆண்டில் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கித்துறை நிறுவனங்களில் ஒன்றான லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டுச் சேவை மேலாளராக பணிபுரிந்தார். அதிலிருந்து விலகி 2008ம் ஆண்டு ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். பின்னர் சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார்.
அதன்பிறகு பணியில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்ட இவர், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணிக்கு தலைமை தாங்கி வந்தார். நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் சர்வதேச அளவிலான அனுபவத்தை சுமார் 20 ஆண்டுகள் கொண்டவர் என்பதால், கடந்த ஐந்து ஆண்டுகளும் பட்ஜெட் மீதான விவாதத்தில் தொடர்ந்து உரையாற்றும் வாய்ப்பை திமுக தலைமை இவருக்கே வழங்கி வந்தது.
மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் ஐந்து உத்தரவுகளில் கையெழுத்திடப்பட்டன. முதல் நான்கு கையெழுத்துகளை இட்டவர் முதல்வர்
ஸ்டாலின். ஐந்தாவது கையெழுத்தை இட்டவர் நிதித்துறை அமைச்சரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.
கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக சிகிச்சை பெறலாம் என்பதற்கான கையெழுத்துதான் அது. இன்றைய தேதியில் சர்வதேச நிதி நிலவரங்களை அறிந்த ஒருவரையே... அதுவும் அனுபவம் வாய்ந்தவரையே தமிழக நிதி அமைச்சராக அமர்த்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அன்னம் அரசு
|