பெண்கள் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணம்!



மக்கள் என்ன நினைக்கிறார்கள்..?

வாழ்வையே மாற்றப்போகிற தொடக்கம்!


அதிஷா: ஊரில் ஓடும் சாதாரண பஸ்கள் ரொம்ப ரொம்ப கம்மி. Free for women and transgender என ஸ்டாலின் அறிவிப்பால் பலன் இருக்காது என சங்கிகள் சிலர் உருட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அது உண்மை இல்லை. சென்னையில் ஓடும் பலவித பேருந்துகள் எண்ணிக்கை 3233. அதில் 1362 பேருந்துகள் சாதாரணமானவைதான். இதுபோக 210 பேருந்துகள் மகளிர் மட்டும். இவை போக இன்று 220 சொகுசு பஸ்களை சாதாரண பஸ்களாக மாற்றி இருக்கிறது அரசு. கிராமப்புறங் களில் முழுமையாக ஓடுவது சாதாரண பேருந்துகள் மட்டும்தான்.

பஸ் பாஸால், சத்துணவு திட்டத்தால் மட்டுமே படிப்பு சாத்தியமான பலருக்கும் தெரியும் இந்த ஒரு அறிவிப்பு எத்தனை முக்கியமானது என்று. பிறருக்கு இது வெறும் இன்னுமோர் இலவசமாக தெரியலாம். ஆனால், பயனாளிகளுக்கு இது வாழ்வையே மாற்றப்போகிற ஒரு தொடக்கமாக இருக்கும்.

ஆறுதலான, பயனுள்ள திட்டம்!

ஷோபனா நாராயணன்: என் தோழி ஒருத்தி ஒருசமயத்தில் கடும் வறுமையில் இருந்தாள். அவள் தபால் வழியில் தனது டிகிரியை படிக்கும்போது பஸ் கட்டணத்திற்கு வழியின்றி காலையில் பஸ்சில் சென்றுவிட்டு திரும்பும் போது நடந்து வருவாள்.ஒன்றல்ல ரெண்டுல்ல, பத்து கிலோ மீட்டர் தூரம் வரை. அலுவலக தற்காலிக உதவியாளர் லாக்டவுன் நேரத்தில் ரயில் இல்லாதபோது மிகுந்த அல்லலுற்றார். அவர் தினக்கூலி பணியாளர். பஸ் கட்டணம் நாள் ஒன்றிற்கு நாற்பது ரூபாய் வரை ஆனது.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பது எத்தனை சவுகரியமானது..? கூட்டம் சற்று குறைவான பேருந்தில் செல்லலாம். நேரத்தோடு வீடு செல்லலாம். சீக்கிரம் சமையலை முடித்து  சற்று அக்கடா என உட்காரலாம். ஆறுதலான, பயனுள்ள திட்டம்.

பெண் கல்விக்கும் பெண் விடுதலைக்கும் வலிமை சேர்க்கும்!

யுவான் சுவாங்: கொத்தடிமையாக இருந்து அரசால் மீட்கப்பட்ட பழங்குடியினத் தம்பதியரின் மகள்தான் வீரணாமூர் சங்கீதா. அந்தக் குடியிருப்பிலிருந்து பத்தாவது, பன்னிரெண்டாவது தேர்ச்சி பெற்ற முதல் பெண் மற்றும் இப்போது கல்லூரிக்கும் செல்லும் முதல் நபர்.
அவர் தனியார் கல்லூரியில் படிப்பதால் இலவச பஸ் பாஸ் வழங்க இயலாது எனப் போக்குவரத்துக்கழகத்திலிருந்து பதில் அளிக்கப்பட்டது.

‘சார், பஸ் டிக்கெட்டுக்கே மாசாமாசம் ரெண்டாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகுது சார்...’ என்று அந்த ஏழைத் தகப்பன் பார்க்கும்போதெல்லாம் வருத்தப்படுவார்.இப்போது பெண்களுக்கு உள்ளூர் பேருந்தில் கட்டணமில்லை என்ற தமிழக அரசின் உத்தரவு பெண் கல்விக்கும் பெண் விடுதலைக்கும் வலிமை சேர்க்கும். என்னிடம் இதுபோல் பல உதாரணங்கள் உண்டு.

பெண்களின் சுயமரியாதை அதிகரிக்கும்!

சுசீலா வசந்தா: விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு போட்ருக்காங்க. வந்து போக காசில்லாம வாய்தா மேல வாய்தா. ஒரு கட்டத்துல ‘maintenanceலாம் வேணாம் மேடம்... கேஸை முடிச்சி என்னை விட்றச் சொல்லுங்க... பஸ்ஸுக்கும் ஆட்டோவுக்கும் செலவழிச்சே ஓய்ஞ்சிட்டேன்’னு  போன மாசம் சொன்னாங்க.

நேத்து போன் போட்டு, ‘மேடம் இனிமே பஸ்ஸுக்கு free தான மேடம்... நான் வந்துக்குறேன். கேஸை லேசுல விடக் கூடாது... ஆறு வருசமா திரிய விட்டதுக்கு  அவனை எப்புடி அலைய வைக்கிறேன் பாருங்க...’ என்றாள்.பஸ்ஸுல free tripனு ஓர் அரசாங்கம் அறிவிச்சதும் தனக்கு இவ்ளோ வீரம் வரும்னு பொம்பளைங்களே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.

அர்த்தமுள்ள மகிழ்ச்சி!

நந்தன் ஸ்ரீதரன்: தனாம்மா தேவாரம் பக்கம் இருக்கிற ஒரு கிராமத்தில் இருந்து தினந்தோறும் தேனிக்கு வேலைக்கு வந்து போகிறார். அவரது கிராமத்திலிருந்து தேவாரம் வரவேண்டும். தேவாரத்தில் இருந்து தேனி வரவேண்டும். டவுன் பஸ்தான்.ஐந்தாறு வீடுகளில் வேலை பார்க்கிறார். அதிகபட்சம் போனால் எட்டாயிரம் ரூபாய் சம்பாதிப்பதே அரிது. இதில் தினமும் பஸ்ஸுக்கு 36 ரூபாய் போக வர செலவழிக்க வேண்டும். மாதம் அது மட்டுமே 1080 ரூபாய்.

கொஞ்சம் முன்னால்தான் வீட்டுக்குள் வந்தார். கையில் மருந்து (சானிட்டைசர்) போட்டுக்கொண்டு உற்சாகமாக என் மனைவி மீனாளைத் தேடினார்.

மீனாள் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். என்னிடம் வந்தார். ‘டவுன் பஸ்ல காசு வாங்கல சார்...’ அடுத்து மைத்துனர் டீ குடிக்க வீட்டுக்குள் வந்தார். தனாம்மா அவரிடம் போனார். ‘இன்னைக்கு பஸ்ல காசே வாங்கல சார்... பொம்பளையாளுகளுக்கு ஃபிரீயாம்...’இப்போது வீடு பெருக்கிக் கொண்டிருக்கிறார்.

டோடோ அவரிடம் வாலாட்டி மேலே தாவப் பார்க்கிறாள். ‘ஒன்னோட வெயிட்ட இந்தப் பாட்டி தாங்குவனா..? தள்ளிப் படுத்துக்க தங்கம்...’ என்று கொஞ்சியபடியே பெருக்கிக் கொண்டிருக்கிறார். அநேகமாக யாரும் இல்லாதபோது, டவுன் பஸ்ஸில் இலவசமாகப் பயணித்து வந்ததை டோடோவிடமும் கூட அவர் சொல்லக் கூடும்.

(நன்றி: சமூகவலைத்தளங்களில் பதியப்பட்ட கருத்துகள் இவை)