சராசரி கட்சித் தொண்டனோட மனப்பான்மைதான் என் வீட்டுக்காரர்கிட்ட இருக்கு...
நெகிழ்கிறார் துர்கா ஸ்டாலின்
ஒரு வகையில நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படற ஆளுதான். டக்குன்னா கண்ணுல கண்ணீர் முட்டிக்கும். அம்மா இல்லாத பிள்ளைன்னு பெரிய கஷ்டங்கள் ஏதும் படவிடாதபடி செல்லமா வளர்த்துட்டாங்க... ஆனா, என்னதான் செல்லம்னாலும் சின்ன வயசில இருந்தே கட்டுதிட்டங்களோட எங்க பாட்டி ஒவ்வொண்ணையும் சொல்லி வளர்த்திருந்தாங்க... அதே கட்டுதிட்டங்களை என் பசங்ககிட்டேயும் எதிர்பார்த்துதான் சத்தம்போடுவேன்.
ஆனா, என் அழுகையும் சரி, கோபமும் சரி, எங்க வீட்டுக்காரங்க, என் பிள்ளைங்க தவிர எங்க குடும்பத்தில வேற யாருக்கும் தெரியாது! எங்க ரூம் தாண்டி எந்தச் சத்தமும் வெளீல போகாது. காரணம், வீட்டுப் பெரியவங்கன்னா எப்பவும் பயமும் மரியாதையும் வச்சு நடந்துக்கணும்னு பாட்டி சொல்லி வளர்த்ததை நான் எப்படி மறக்க முடியும்? தன்னுடைய டீன் ஏஜ் வயதில் இருந்தே எங்க வீட்டுக்காரங்க, கட்சிக் கூட்டங்கள், பிரசார மேடை நாடகங்கள், மாநாடுகள்னு ரொம்ப அர்ப்பணிப்போட பணியாற்றுவாங்க.
கட்சியில் தீவிர விசுவாசியா இருந்த எங்க வீட்டுக்காரங்களுக்கு முதன்முதலா சட்டசபை தேர்தலில் ஒரு சீட் தரணும் அப்படின்னு கட்சி சீனியர்கள் பலர் வலியுறுத்தினப்போ கூட, முடியாதுன்னு மறுத்து இருக்கிறார் மாமா கலைஞர். ‘‘ஸ்டாலின் என் மகன். அதனால நான் அவனுக்கு இந்த மாதிரி பொறுப்பு தந்தா, ‘வாரிசு அரசியல்’னு பேர் வந்துடும்’’னு மறுத்து இருக்கிறாராம்.
அப்புறம், பேராசிரியர் அன்பழகன் விடாமல், ‘யாரோ ஒரு பையன் சின்சியரா இத்தனை வருஷம் கட்சிக்காக உழைச்சு இருந்தாகூட, அவனை உற்சாகமூட்டுவதற்காக, சீட் தந்திருப்போம்... நீங்க உங்க மகன்கிற ஒரே காரணத்துக்காக ஸ்டாலினுக்கு சீட் தர மறுக்கிறது சரியில்ல. தந்துதான் ஆகணும்’னு வற்புறுத்தி தர வச்சதால்தான் 84 ல் இவங்களுக்கு சீட்டு தந்திருக்காங்க. அப்படி சீட்டு கிடைச்சப்போ, இவங்களோட சந்தோஷத்தை பார்க்கணுமே!!கட்சியும், கட்சியோட சீனியர் பிரமுகர்களும் தனக்கு ஒரு பெரிய அங்கீகாரத்தை இதன் மூலம் தந்ததா நினைச்சு பயங்கரமா பூரிச்சுப் போயிட்டாங்க.
நான் பார்த்த வரைக்கும் எங்க வீட்டுக்காரங்க கிட்ட ஒரு சராசரி கட்சித் தொண்டனோட மனோபாவம்தான் இருந்திருக்கு. இப்பவும் அப்படித்தான் இருக்காங்க. கட்சிக்காக உழைக்கிற இவங்களோட உழைப்பை மதிச்சு, அதற்கான அங்கீகாரம் தந்தா பயங்கர உற்சாகம் ஆயிடுவாங்க. ஆரம்ப காலத்திலிருந்தே கட்சியில் அப்படி கிடைக்கிற சின்னச்சின்ன கௌரவத்தைக் கூட பயங்கர பெருமையா எடுத்துப்பாங்க. எனக்கும் சந்தோஷமா போன் அடிச்சு அந்த விஷயத்த ஷேர் பண்ணிப்பாங்க.
‘‘துர்கா, ஒரு சந்தோஷமான செய்தி. நான் செயற்குழு உறுப்பினராகி இருக்கேன்....’’ அப்படிம்பாங்க. இல்லன்னா வேற ஏதாவது ஒரு பொறுப்பு சொல்லி, ‘‘இப்படி தேர்வாகி இருக்கேன், இந்தந்த மாவட்டங்களிலிருந்து அவங்க பிரதிநிதிகள் ஓட்டுப்போட்டு என்னை தேர்வு பண்ணி இருக்காங்க...’’ அப்படின்னு குஷியா சொல்வாங்க.
அரசியல்ல இப்படி தன்னோட ஒவ்வொரு ஸ்டெப் வளர்ச்சியையும் அத்தனை ஆர்வமா, அத்தனை பெருமையா எடுத்துட்டு, என்கிட்டே பகிர்ந்துப்பாங்க. ஆனா, எனக்கு அப்போ கட்சி பற்றியோ, அதிலிருக்கிற பொறுப்புகள் பற்றியோ, பெருசா தெரியாது. அதனால இவங்க சொல்ற பொறுப்புகள் பற்றி எதுவும் எனக்குப் புரியாது.
ஆனா, இவங்க பரவசமா பேசுற அந்த பேச்சுகள் மட்டும் புரியும்!!எங்க கோபாலபுரம் வீட்ல பெண்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து சமைக்கிறப்போவோ அல்லது வேலையெல்லாம் முடிச்சிட்டு ஒண்ணா உட்கார்ந்து பேசறப்போவோ எங்க வீட்டுக்காரங்க பத்தி அவங்க அம்மா, அதாவது எங்க அத்தை எப்பவுமே ஒரு அபிப்ராயம் சொல்வாங்க…“ஸ்டாலின் பொறுமைன்னா அவ்வளவு பொறுமையா இருக்கும்… சின்ன வயசுல இருந்தே அது குணம் அப்படி...”ன்னு சொல்வாங்க.
“ஆமாமா… சின்னப் பிள்ளைங்களா இருந்தப்போ வெளீல விளையாட அனுப்புறப்போகூட உங்க வீட்டுக்காரருக்கு வெள்ளை சட்டை போட்டு விட்டா விளையாடி முடிச்சப்புறம்கூட அந்தச் சட்டை அப்படியே வெள்ளை மாறாம, அழுக்குப் படியாம இருக்கும்!… அதிர்ந்து எதுவும் பண்ணாது”ன்னு மல்லிகா அண்ணிகூட அடிக்கடி சொல்வாங்க.ஒரு மனைவியா எங்களோட இத்தனை வருஷ தாம்பத்தியத்தில் நான் எங்க வீட்டுக்காரங்களைப் பத்தி அபிப்ராயம் சொல்றதா இருந்தாலும் இவங்களை பொறுமைசாலின்னுதான் சொல்வேன்.
அதுக்காக எங்களுக்குள்ள சண்டை சச்சரவு வராதுன்னு எல்லாம் நினைச்சுடாதீங்க. நிறைய வரும். பசங்களைக் கண்டிச்சு வளர்க்கணும்பேன் நான். சில விஷயங்கள்ல பசங்களைத் திட்டிடுவேன். நல்லா அடிக்கக்கூட அடிச்சிடுவேன்.
ஆனா, பசங்களை ஃப்ரீயா சிந்திக்க விடும்பாங்க இவங்க. பசங்களுக்குத் தேவைப்படற உதவியைத் தன் தூக்கத்தைக்கூட தொலைச்சுட்டு பக்கத்திலேயே உட்கார்ந்து செஞ்சு தருவாங்க. என்னால அதெல்லாம் முடியாது.பசங்களை வளர்க்கிற இந்த விஷயத்தில் ஆரம்பிச்சு நாங்க சேர்ந்து வெளியில போறதுன்னு பல விஷயங்கள்ல நாங்க ரெண்டு பேரும் அப்பப்போ முட்டிக்கிட்டு சண்டைக்கு நிப்போம். ஆனா, அதில பார்த்தீங்கன்னா, நிலைமை சீரியஸாகாம பொறுமையா அதை ஹேண்டில் பண்றது கடைசியில் எங்க வீட்டுக்காரங்களாத்தான் இருக்கும். விட்டும் தருவாங்க... பெரும்பாலான சமயங்களில் பொறுமையாப் பேசி எனக்குப் புரியவும் வச்சிடுவாங்க.இவங்களோட இந்தப் பொறுமையும், சகிப்புத் தன்மையும்தான் மிசா சமயங்கள்லகூட அந்தக் கஷ்டங்களை இவங்க சுலபமாக தாங்கிக்க வச்சதுன்னு நெனைக்கிறேன்…
உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அத்தனை கஷ்டங்கள் பட்டுட்டு இருந்த அந்த நேரத்தில்கூட முதன்முதலா இவங்களை நாங்க சந்திக்கப் போனப்போ இளைத்து சோர்ந்துபோன அந்த நிலையிலும் இவங்க அதே இனிமையான சிரிச்ச முகத்தோட எங்களைப் பார்க்க வந்ததை நான் அடிக்கடி நினைச்சுப் பார்ப்பேன்.இவங்க பொறுமை பத்தி சொல்றப்போ எங்க அத்தை இவங்களோட சின்ன வயசுல நடந்த ஒரு விஷயம் பத்தியும் சொல்வாங்க.
எங்க வீட்டுக்காரங்க நாலஞ்சு வயசா இருந்தப்போ இவங்க விளையாட்டுத்தனமா ஊக்கை வாயில் போட்டு விளையாடிக்கிட்டே இருந்தப்போ அப்படியே அதைத் தெரியாம விழுங்கிட்டாங்களாம்… அதிலே என்ன பெரிய விஷயம்னா, ஊக்கு திறந்திருந்த நிலையில் விழுங்கியிருக்காங்க. அதோட கூர்ப்பான பாகம் குழந்தையோட குடலைக் கிழிச்சுட்டா என்ன பண்றதுன்னு வீட்டுல எல்லோரும் டென்ஷனாயிட்டாங்க. அப்போ எங்க வீட்டுக்காரங்களோட ஆத்தா, அதாவது மாமாவோட அம்மா உயிரோட இருந்த சமயம்… அவங்கதான் குழந்தையான இவங்களைக் கவனிச்சுப் பதறிப்போய் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு ஓடியிருக்காங்க… உள்ளே ஊக்கோட கூர்ப்பான பாகம் நீட்டிட்டு இருக்கிறது ஆபத்தான விஷயம்தான். இருந்தாலும் இப்போ எதுவும் பண்ண வேண்டாம்… தொடர்ந்து வாழைப்பழம் தந்து கிட்டே இருங்கன்னு சொல்லியிருக்காங்க. அதேபோல வாழைப்பழம் தந்ததில் 2 நாள்ல அந்த ஊக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாம மலம் வழியா வெளீல வந்திடுச்சாம்.
சமீபத்தில் கோடம்பாக்கம் பாலம் திறந்து வச்சப்போகூட மாமாவுக்கு அந்த பாலத்தைப் பார்த்ததும் இந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது போல.“என் குழந்தை ஊக்கை விழுங்கின அந்த ஆபத்தான நிலையில் நாங்க அவனைத் தூக்கிட்டு மருத்துவமனைக்காக இதே ஏரியாவில ஓடினப்போ, கோடம்பாக்கம் ரெயில்வே கேட் போட்டுட்டாங்க... பாலம் இல்லாத அப்பல்லாம் அப்படித்தான் காத்திருந்து போக வேண்டி இருந்தது.
இப்போ அதே சிறுவன் வளர்ந்து இந்தத் துறைக்கு அமைச்சரா இருக்கிற இந்த நிலையில இதைத் திறந்து வைக்கிறேன்”ன்னு தன் ஞாபகங்களைச் சொன்னாரு மாமா!“அத்தனை நேரத்துக்கும் வேறொரு பிள்ளையா இருந்தா அழுதே கெடுத்திருப்பாங்க... ஸ்டாலின் பொறுமையா இருந்ததாலதான் பெரிய ஆபத்து ஏதுமில்லாம அது வெளீல வந்தது”ன்னு அன்னிக்கு சம்பவம் பத்தி வீட்ல எல்லோரும் சொல்வாங்க!
(மிசா காலத்தில்) அப்போ சிறையில யாராவது ஒருத்தர் உடம்பு சரியில்லேன்னு ஜி.ஹெச்.க்கு வருவாங்க. அவங்ககிட்டே எங்க வீட்டுக்காரங்க லெட்டர் தந்தனுப்புவாங்க. அவங்ககிட்டே இருந்து என் கொழுந்தனார் வாங்கி வந்து எனக்குத் தருவார்!இப்படியே நான் எழுதற கடிதம் எங்க வீட்டுக்காரங்களுக்கும், அவங்க எழுதற கடிதம் எனக்கும் வந்து சேரும்! யாருக்கும் தெரியாம அதை வாங்கிட்டு என் ரூமுக்குப் போய் கதவை மூடிட்டு படிப்பேன்... ஐயோ.. அந்த நிமிஷங்கள் நெகிழ்ச்சியும், அழுகையும் பரவசமும், காதலும் பொங்கி வழியும் ஆனந்த நிமிஷங்களா இருக்கும்!
பகல்ல என் ரூம் கதவைத் தாழ் போட்டுட்டு படிச்சா சரியா வராதுன்னு ராத்திரியில்தான் நிதானமா படிப்பேன். படிச்ச அதே பரவசத்தில் உடனே திரும்ப அவங்களுக்கு அடுத்த லெட்டர் எழுத உட்கார்ந்திடுவேன். அதேபோல எழுதிக் கிழிச்சு, மறுபடியும் எழுதி கவர் மேல் கவர் போட்டு ரெடியா வச்சிடுவேன். கொழுந்தனார் போறப்போ மறக்காம வாங்கிட்டுப் போயிடுவாங்க.
பொதுவாக ஒரு ஆணோ, பெண்ணோ மாத்தி மாத்தி ஒருத்தருக்கொருத்தர் லெட்டர்லாம் எழுதி லவ் பண்ணிட்டுத்தான் அப்புறம் கல்யாணம்னு பண்ணிப்பாங்க. ஆனா, எங்க வாழ்க்கையில் நாங்க கல்யானம் ஆனப்புறம் காதலர்களா மாறிட்டோம். மாத்தி மாத்திக் கடிதங்கள் எழுதி, அடுத்த கடிதம் எப்போ வரும்... அடுத்து எப்போ இனி இவங்களை சந்திக்கிறதுன்னு காதல் வாழ்க்கைக்குரிய அந்த த்ரில்லை அந்தப் பிரிவு நேரத்தில் அனுபவிச்சோம்.
அப்போ நான் இவங்களுக்கு எழுதின கடிதங்களையும் சரி, இவங்க எனக்கு எழுதின கடிதங்களையும் சரி அப்படியே பத்திரமா இப்போ சமீப காலம் வரைக்கும் வச்சிருந்தேன். அப்பப்போ எடுத்து படிச்சுப் பார்த்துட்டு இருப்பேன். வேளச்சேரி வீட்ல இருந்து ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு மாறினப்போதான் ‘பிள்ளைங்க எல்லாம் வேற பெரிசாயிடுச்சே! அரசியல் குடும்பத்திலே வீட்டுக்கு வர்ற வேற யார் கண்ணுலயும் நம்ம பர்சனல் கடிதம் பட வேண்டாமே’ன்னு மனசே இல்லாம கிழிச்சுப் போட்டேன்! மற்ற கடிதங்கள் எல்லாம் இன்னும் இருக்கு!
அந்த சமயம் இவங்க எழுதின பெரும்பாலான லெட்டர்கள்ல எல்லாம் ‘நீ சந்தோஷமா இரு...’ அப்டீங்கறதைத்தான் மாத்தி மாத்தி எழுதியிருப்பாங்க.சின்னப் பொண்ணாச்சே… ஏற்கனவே வேற பொசுக்குன்னா அழுகை முட்டிட்டு வரும். எப்பிடியிருக்கோன்னு நினைச்சு கவலைப்பட்டு என்னை சந்தோஷமா இருன்னு சொல்லுவாங்க போல!
பர்சனல் லெட்டரா இருந்தாலும்கூட ஒவ்வொரு லெட்டர்லேயும் ‘எங்கம்மாவுக்கு துணையா இரு... எங்க அண்ணி பாவம்... குழந்தை உண்டாயிருக்காங்க... அவங்களுக்கு உதவி பண்ணு...’ அப்டீங்கிற வாசகங்கள் எப்பவும் இருக்கும்.மாதிரிக்கு எனக்கு இவங்க எழுதின ஒரு கடிதம் இதோ…“அன்புள்ள துர்க்காவிற்கு,நான் நலம். அதுபோல் உன் நலத்தையும், வீட்டிலுள்ள அனைவர்களின் நலத்தையும் அறிய ஆவலாய் உள்ளேன். நான் உனக்குக் கடிதமே போடவில்லையென்று வருத்தப்பட்டதாக அறிந்தேன். எழில்மொட்டைக்கு நான் எழுதியிருக்கிற கடிதத்தைப் படித்துப் பார். அவை அனைத்தும் உனக்குப் பொருந்தும்.
உன் அத்தைக்கு நல்ல ஓய்வு கொடுக்கிறாயா? உன் அருமை அக்காவுக்கும், பெரிய அண்ணிக்கும் நல்ல துணையாக இருப்பாய் என்று கருதுகிறேன். உன் சின்ன அண்ணிகள் (வசந்தா, செல்வி) இருவரையும் மிகவும் கேட்டதாகச் சொல்லவும். மற்றும் புகழ், அன்பு, கலை, எழில்மொட்டை, வெண்ணிமொட்டை முதலியோர்க்கு என் அன்பு முத்தங்களை இந்த மடலின் மூலம் அனுப்புகிறேன்.
இந்த மடலின் மூலம் உன்னைக் கேட்டுக் கொள்வதெல்லாம் உன் துயரத்தை வெளிப்படுத்தி உன் அருமை மாமாவிற்கு இருக்கிற துன்பத்தை மேலும் அதிகப்படுத்தாமல் இருக்க வேண்டியது உன் கடமையாகக் கருதி செயல்படுவதுதான் உன் கணவனுக்கு செய்கின்ற தலையாய கடமை என்பதை உணர்வாய் என்று நான் திடமாக நம்புகிறேன். மற்றவை உன் மடல் கண்டு.
இப்படிக்கு மு.க.ஸ்டாலின்
குறிப்பு : அண்ணன் சிட்டி (பாபு) வீட்டிலுள்ள அண்ணிகளை மிகவும் கேட்டதாகச் சொல்லவும். (நன்றி: ‘உயிர்மை’ பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘அவரும் நானும்’ புத்தகம்)
|