ஜீரோ மைல்கல்
நம் பயணத்தின் வழிகாட்டியாகவும் திசைகாட்டியாகவும் இருப்பது, மைல்கல். ஊரின் பெயரும் அதன் தூரமும் அளவிடப்பட்ட மைல்கல்கள்தான் பலருக்கு கூகுள் மேப். அதே நேரத்தில் ஊரின் பெயருடன் ‘0’ கிலோமீட்டர் என்று பொறிக்கப்பட்ட மைல்கல்கள் இருக்கின்றன. அவை வெறும் மைல்கல் அல்ல; அது ஒரு வரலாற்றுச் சுவடு.
இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மைல்கல் யாருடைய கவனத்தையும் பெறாமல் சென்னை முத்துசாமி சாலையில் நின்று கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள தலைநகரங்களின் மையப்பகுதி அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தை பூஜ்யம் கிலோமீட்டர், பூஜ்ய கல், பாயின்ட் ஜீரோ அல்லது ஜீரோ மார்க்கர் போன்ற பெயர்களால் அழைக்கின்றனர். இங்கிருந்துதான் மற்ற இடங்களுக்கான தூரம் அளவிடப்படுகிறது.
இதுபோன்ற அடையாளங்கள் ஒரு சதுர வடிவத்திலோ, மைல்கல்லாகவோ, சுவர் அல்லது தரையில் பொறிக்கப்பட்ட தகடாகவோ, சிற்பமாகவோ இருக்கலாம். இந்த அடையாளங்கள் கிமு 20ஆம் நூற்றாண்டில், பண்டைய ரோமானிய சாம்ராஜ்யத்திலேயே அறிமுகமாகிவிட்டன. சனி கோவிலுக்கு அருகே பேரரசர் அகஸ்டஸ் சீசர் எழுப்பிய தங்கத்தூண் குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று நினைவுச் சின்னம்தான் ரோமப் பேரரசின் அனைத்து தூரங்களையும் அளவிடுவதற்கான ஆரம்பப்புள்ளியாக இருந்தது.
இதுபோல சென்னையில் அமைந்திருக்கிறது இந்த பூஜ்ய மைல்கல். தெற்கு நோக்கிய திருச்சி N.H 45, மேற்கு நோக்கிய பெங்களூரு N.H 4, கடற்கரை வழியே எல்லா சாலைகளையும் இணைத்து கொல்கத்தா வரை செல்லும் N.H 5 ஆகிய மூன்று முக்கிய சாலைகளும் இங்கிருந்து தான் துவங்குகின்றன. சென்னை ஈ.வெ.ரா பெரியார் சாலையிலிருந்து முத்துசாமி சாலைக்கு வலதுபுறம் திரும்பும்போது, 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த அடையாளத்தை பெரிதாக யாரும் கவனிப்பதில்லை.
பொதுவாக இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தடயங்கள் தனித்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். அப்படித்தான் இந்தியாவின் பிரபலமான ‘0 கி.மீ மார்க்கர்’ நாக்பூரில் அமைந்துள்ளது. இது ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. காலனித்துவ இந்தியாவின் புவியியல் மையத்தைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது. இந்த அடையாளம் நான்கு குதிரைகள் மற்றும் ஒரு கல் தூணைக் கொண்டுள்ளது. இதனை முக்கிய நினைவுச்சின்னமாக அங்குள்ள மாநகராட்சி பராமரித்து வருகிறது. சுதந்திரத்திற்குப் பின், மாநில எல்லைகள் மீண்டும் வரையப்பட்டிருந்தாலும், ‘0 கி.மீ மார்க்கர்’ இன்னும் பிரமாண்டமாய் அங்கு நின்று கொண்டிருக்கிறது.
ஆனால், சென்னையின் பூஜ்ய கல்லோ, நடைபாதையில் அமைந்திருப்பதால் சாதாரண மைல்கல்லைப் போலவே காட்சி தருகிறது. இதற்கென்று தனியாக ஒரு நிறம் கொடுத்தோ அல்லது அதன் அருகில் உள்ள சுவரில் பிரமாண்டமாக வரைந்தோ அல்லது பெரிய கட்அவுட்டினை பொருத்தியோ இதை போற்றவேண்டும் என்பது வரலாற்றுப் பாதுகாவலர்களின் முக்கிய வேண்டுகோள்.
அன்னம் அரசு
|