ஃபிட்னஸ் முக்கியம் பாஸ்!



இரண்டு மாஸ்க் அணியுங்கள், அடிக்கடி கை கழுவுங்கள், முடிந்தளவு வீட்டிலேயே இருங்கள்... என்று கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பல விதிமுறைகளை மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இவற்றுடன் ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம் என்று சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்து வருகிறார் அரவிந்த்.

பாண்டிச்சேரியைச் சேர்ந்த அரவிந்த், கடலுக்குள் டைவிங் அடிப்பதில் கைதேர்ந்தவர். சென்னை, பாண்டிச்சேரியில் பல டைவிங் முகாம்களை நடத்தியிருக்கிறார். கொரோனா காலத்தில் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்களுக்குச் சொல்வதற்காக வித்தியாசமாக ஒரு செயலை செய்து வைரலாகியிருக்கிறார்.

ஆம்; தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் 14 மீட்டர் ஆழத்துக்குள் டைவ் அடித்து கடற்பரப்பின் மீது நின்று உடற்பயிற்சி செய்திருக்கிறார். கடலுக்குள் அவர் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் ஹிட் அடிக்கின்றன.  ‘‘தினமும் 45 நிமிடங்கள் சுவாசம் சார்ந்த பயிற்சி
யுடன் உடற்பயிற்சியும்  செய்துவந்தால் நுரையீரல் வலிமையுடன் இருக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...’’ என்கிறார் அரவிந்த்.

த.சக்திவேல்