என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி... பாடியவர் இந்த நடிகர்தான்!



வி.பி.நடராஜன் என்ற வெள்ள மரத்துப்பட்டி பொன்னையா மகன் நடராஜனை உங்களுக்குத் தெரியுமா?
இந்தப் பெயர் உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கும். ஆனால், தமிழ் சினிமா பார்க்கும் பழக்கமுள்ளவர்களுக்கு இவரைக் கட்டாயம் தெரிந்திருக்கும். எதிர்வீட்டுக்காரர் போல சினிமாக்களில் ஏதாவது ஒரு காட்சியில் அவர் வெளிப்படுவார்.தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் மூன்றாம் வகுப்பு வரை படித்த அந்த சிறுவன், வயல்வெளிகளில் பாடிய பாடல்கள்தான், தமிழ் நாடக உலகின் சக்கரவர்த்திகளாகத் திகழ்ந்த டி.கே.எஸ்.சகோதரர்கள் கம்பெனியில் நடிகராக அவரைக் கொண்டு போய்ச் சேர்த்தது.

பாடவும், முறையாக பரதநாட்டியமும் கற்றுக்கொண்ட நடராஜன், பெண் வேடங்களில் நாடகங்களில் ஜொலித்தார். அவரது அபிநயம் டி.கே.எஸ் குழு நடத்திய ‘ரத்தபாசம்’, ‘ஔவையார்’, ‘கள்வனின் காதலி’, ‘வித்யாசாகர்’ போன்ற நாடகங்களில் அவருக்கு நல்ல கேரக்டர்களைப் பெற்றுத்தந்தது.

1954ம் ஆண்டு டி.கே.எஸ் சகோதரர்கள், ‘ஔவை பிக்சர்ஸ்’ என்ற பெயரில் ‘ரத்தபாசம்’ படத்தை தயாரித்தனர். திரைக்கதை, வசனத்தை தர் எழுத ஆர்.எஸ்.மணி இயக்கிய இப்படத்தின் மூலம்தான் வி.பி.நடராஜன், டி.கே.எஸ்.நடராஜன் என்ற திரைப்பட நடிகராக அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து ‘கவலையில்லாத மனிதன்’, ‘எதையும் தாங்கும் இதயம்’, ‘நாடோடி’, ‘மறக்க முடியுமா?’, ‘கணவன்’, ‘அத்தை மகள்’, ‘தெய்வமகன்’, ‘மாணவன்’, ‘தேன்கிண்ணம்’, ‘புகுந்த வீடு’, ‘கண்காட்சி’, ‘இதோ எந்தன் தெய்வம்’, ‘அன்னமிட்ட கை’, ‘நான் ஏன் பிறந்தேன்’, ‘கண்ணா நலமா?’, ‘கட்டிலா தொட்டிலா’, ‘நல்ல முடிவு’, ‘ஏன்’, ‘திருமாங்கல்யம்’, ‘எங்கள் குல தெய்வம்’, ‘நேற்று இன்று நாளை’, ‘டாக்டரம்மா’, ‘சிரித்துவாழ வேண்டும்’, ‘நாளை நமதே’, ‘இதயக்கனி’, ‘சினிமா பைத்தியம்’, ‘பல்லாண்டு வாழ்க’, ‘நீதிக்கு தலைவணங்கு’,

‘உழைக்கும் கரங்கள்’, ‘இன்று போல் என்றும் வாழ்க’, ‘மீனவ நண்பன்’, ‘கவிக்குயில்’, ‘ஆடு புலி ஆட்டம்’, ‘பாலாபிஷேகம்’, ‘சதுரங்கம்’, ‘மங்களவாத்தியம்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘மாந்தோப்பு கிளியே’, ‘குரு’, ‘எல்லாம் உன் கை ராசி’, ‘தீ’, ‘போக்கிரி ராஜா’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘அலை ஓசை’, ‘சத்யா’, ‘நம்ம ஊர் நாயகன்’, ‘ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்’, ‘வருஷம் 16’, ‘உதயகீதம்’, ‘ராஜாதி ராஜா’, ‘வாத்தியார்’.... என அவர் நடித்த படப்பட்டியலைப் பார்த்தால் மூச்சு முட்டுகிறது. யாசகன், கம்பவுண்டர், கோயில் பூசாரி, போலீஸ்காரர், சர்வர், தபால்காரர், சேட், வாட்ச்மேன், அர்ச்சகர், பாகவதர்... என சின்னச்சின்ன வேடங்களில் அவர் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக கலைச்சேவை செய்துள்ளார்.

அவர் நடிகர் மட்டுமல்ல, மிகச்சிறந்த தெம்மாங்குப் பாடகர். ‘உதயகீதம்’ படத்தில் தேங்காய் பாம் காமெடி ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்த்தது. அந்தப் படத்தில், தேங்காயில் வெடிகுண்டு வைத்ததாக கவுண்டமணி ஒரு அர்ச்சகரிடம் கிளப்பி விடுவார். அப்போது அர்ச்சகர், ‘ஏர்போர்ட்டில வைப்பா... பிளைட்ல வைப்பா... டிரைன்ல வைப்பா... தேங்காயில் வப்பாளோ..? சிதறுகாய் அடிக்கிறப்போ சின்னக் குழந்தைகளெல்லாம் சுத்தி வந்து நின்னுக்கிட்டிருக்குமே... நாடு ரொம்ப கெட்டுருச்சு... முருகா...’ என கதறிக் கொண்டு ஓடுவார்.

டிகேஎஸ் குழுவில் நடிகராக இருந்து பின்னாளில் தமிழகத்தின் மிகச்சிறந்த இயக்குநராக மாறிய ஏ.பி.நாகராஜன்தான், வி.பி.நடராஜன் என்ற தன் பெயரை சினிமாவிற்காக டி.கே.எஸ்.நடராஜன் என்று மாற்றினார் என்று ஒரு பேட்டியில் டி.கே.எஸ்.நடராஜனே கூறியிருக்கிறார்.மூன்றாம் வகுப்பு வரையே படித்துள்ள டி.கே.எஸ்.நடராஜன், அற்புதமாக பாடல் எழுதும் திறமை வாய்ந்தவர். அவருக்குள் இருக்கும் பாடல் திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள் சங்கர்- கணேஷ் இரட்டையர்கள்தான்.

1984ம் ஆண்டு சிவசங்கர் கதாநாயகனாக நடித்து இயக்கிய படம் ‘வாங்க மாப்பிள்ளை வாங்க’. இப்படத்தில் சங்கர்- கணேஷ் இசையில் டி.கே.எஸ்.நடராஜன் பாடகராக அறிமுகமானார்.என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்...

- என டி.கே.எஸ்.நடராஜன் பாடிய அந்தப் பாடல் அவரை தமிழகம் முழுவதும் புகழ் பெற்ற பாடகராக அறிமுகப்படுத்தியது. இதே பாடல் 2006ம் ஆண்டு ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அர்ஜுன், மல்லிகா கபூர் நடிப்பில் வெளியான ‘வாத்தியார்’ படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. டி.கே.எஸ்.நடராஜனுடன், கார்த்திக் இணைந்து பாடிய இந்தப் பாடலுக்கு டி.இமான் இசையமைத்தார். இப்பாடல் காட்சியிலும் டி.கே.எஸ்.நடராஜன்  ஆடிப்பாடியிருப்பார். காலம் கடந்தாலும் தெம்மாங்குப் பாடல் வெற்றி பெறும் என்பதற்கு ‘வாத்தியார்’ படத்தில் இடம் பெற்ற இப்பாடல்
சான்றாக உள்ளது.

இதே ஆண்டு ராமநாராயணன் இயக்கத்தில் கார்த்திக், அம்பிகா நடிப்பில் வெளியான படம், ‘பேய் வீடு’. இப்படத்தில் டி.கே.எஸ்.நடராஜனுக்கு புகழ் பெற்ற பாடலை சங்கர்- கணேஷ் வழங்கினர்.

அத்த பெத்த மல்லியப் பூ என்
ஆசைக்கேத்த முல்லைப்பூ
மாம்பழக் கன்னத்திலே
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
நான்  மாறி மாறி முத்தம் தாரேன்
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா...

- அவர் ‘மல்லம்மா செல்லம்மா’ என உச்சரிக்கும் அழகே அழகு. எளிய வரிகளில் சந்தம் பிசகாமல் டி.கே.எஸ்.நடராஜன் எழுதிப்பாடிய இந்த பாடல், கிராமத்து பஸ்களில் இன்றளவும் ஒலிக்கிறது.

1984ம் ஆண்டு பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில் ராமநாராயணன் இயக்கத்தில் விஜயகாந்த், சசிகலா நடிப்பில் வெளியான படம் ‘சபாஷ்’. சங்கர்- கணேஷ் இசையில் இந்தப் படத்திலும் பட்டையைக் கிளப்பும் பாடலைப் பாடினார் டி.கே.எஸ். நடராஜன்.
கல்லோட கல் ஒரச கடலோட மீன் ஒரச

உன்னோடு நான் ஒரச
ஓடி வாரேன் உன்னைத்தேடி
நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி
மாமரத்து குயிலே உன்ன
    தொடர்ந்து வாரேன்டி...
1988ம் ஆண்டு ‘யார்' கண்ணன் இயக்கத்தில் ராமராஜன், கவுதமி நடிப்பில் வெளியான ‘நம்ம ஊரு நாயகன்’ படத்தில் டி.கே.எஸ்.நடராஜனுக்கு ஒரு வித்தியாசமான பாடலை இசையமைப்பாளர் ராஜேஷ் கண்ணா வழங்கினார். உமா ரமணனுடன் சேர்ந்து டி.கே.எஸ்.நடராஜன் அந்தப் பாடலைப் பாடினார்.

வாடிப்பட்டி சந்தையிலே
வாங்கினேன் இரண்டு காளை மாடு
ஏரை பூட்டப் போகையில
ஒத்த மாட காணலையே...

தமிழ் மணம் மாறாத அச்சு அசலான கிராமத்து மணம் வீசும் குரலுக்குச் சொந்தக்காரரான டி.கே.எஸ்.நடராஜனுக்கு சங்கர்- கணேஷுக்குப் பிறகு ராஜேஷ் கண்ணா தொடர்ந்து பாடுவதற்கு வாய்ப்பளித்தார். 1990ம் ஆண்டு ‘யார்’ கண்ணன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளியான படம் ‘காவலன்’. ராஜேஷ் கண்ணா பாடல்கள் எழுதி இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அத்தனையும் ஹிட். ஆனால், ஒரு பாடல் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. அந்தப் பாடலைப் பாடியவர் டி.கே.எஸ்.நடராஜன்தான். அவருடன் இணைந்து பாடியவர் சுனந்தா.

வைக்கிறேன் வைக்கிறேன்னு சொன்னீங்களே
வைக்காமத்தான் போனீங்களே
என்னாத்த அடியே என்னாத்த
பூவ வைக்கிறேன் வைக்கிறேன்னு
சொன்னீங்களே
வைக்காமத்தான் போனீங்களே
ராசாவே என் ராசாவே....

மிட்நைட் மசாலாதனத்துடன் வெளியான இந்தப் பாடல், பெரும் கண்டனத்திற்குள்ளானது. பாடல்கள் வெளியானதோடு சரி, ‘காவலன்’ படம் வெளியாகவில்லை.அதே ராஜேஷ் கண்ணா 1991ம் ஆண்டு பாடல், இசை, இயக்கம் என அவதாரமெடுத்த படம், ‘நான் வளர்த்த பூவே’. குருராஜன், ரூபிணி நடிப்பில் வெளியான இப்படத்தில் டிகேஎஸ்.நடராஜன் பாடிய ‘ரயிலேறி வந்த புள்ள ரவிக்கை போடவில்லை...’ என்ற பாடல் கல்லூரி மாணவர்களிடையே மிகப்பிரபலம்.

‘குங்குமப் பொட்டுக்காரியே குழந்தை போல் கண்ணழகியே...’, ‘நாட்டில வீட்டில நல்ல பேரு வாங்கணும்...’, ‘எட்டு மேலே எட்டு வச்சு...’ என ஏராளமான தனிப்பாடல்களும், பக்திப் பாடல்களும், தனி ஆல்பங்களும் டிகேஎஸ்.நடராஜன் பாடியுள்ளார்.  

ஒரு குக்கிராமத்தில் பிறந்து தமிழகம் முழுவதும் தனக்கான ரசிகர் பட்டாளத்தைச் சம்பாதித்த தெம்மாங்குப் புகழ் டி.கே.எஸ்.நடராஜன் மே 5ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவர் உடல் மறைந்தாலும், குரல் என்றென்றும் நிலைத்து வாழும்.

ப.கவிதா குமார்