சடலத்தை சுமந்த பெண் எஸ்ஐ!
பொதுவாக பெண்களை சுடுகாட்டுக்குள் அனுமதிப்பதில்லை. இந்நிலையில் ஆந்திர போலீஸ் எஸ்.ஐ. சிரிஷா செய்த காரியம் மகத்தானது.
ஆதரவற்ற முதியவரின் சடலம் ஒன்று கிராமத்தில் இருப்பதாகவும், யாரும் உரிமை கோராமல் அது நடுரோட்டில் இருப்பதாகவும் அவருக்கு தகவல் வந்தது. கொரோனாவால் தாக்கப்பட்டவர் (அ) ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதி பொது மக்கள் அவர் உடலை அடக்கம் செய்யாமல் தவிர்த்தனர்.
உடனே தன் நண்பரான சின்னி கிருஷ்ணா என்ற சமூக சேவகரை அழைத்த சிரிஷா, தானே அந்த சடலத்தை கிராமத்தில் இருந்து 2 கிமீ தள்ளி யிருந்த மயானத்துக்கு சுமந்து சென்றார். அந்தப் பாதை வயல்வெளி, மேடு பள்ளமாக, ஜீப் போக முடியாத சாலையாக இருந்தது.
மயானத்துக்குச் சென்றபோது சடலத்துக்கு உரியவர் குடும்பம் பற்றி தகவல் தெரிந்தது. கொரோனா பயம் காரணமாக அவர்கள் வரவில்லை. சிரிஷாவும் அவரது நண்பரும் முன்னின்று அந்த முதியவரின் இறுதிச் சடங்கை நடத்தினார்கள். சிரிஷாவின் செயலை ஆந்திர போலீஸ் டிஜிபி பாராட்டி விருது வழங்கியுள்ளார்.
காம்ஸ் பாப்பா
|