தண்ணீரில் வாழும் குதிரை



குழந்தைகளுடன் கண்டுகளிக்க ஒரு படம், ‘த வாட்டர் ஹார்ஸ்: லெஜெண்ட் ஆஃப் த டீப்’.‘நெட்ஃபிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப் படம். ஒரு சிறுவனுக்கும் விசித்திரமான ஓர் உயிரினத்துக்கும் இடையிலான நட்பே படத்தின் கதை. இரண்டாம் உலகப் போர் காலகட்டம். ஸ்காட்லாந்தில் அம்மா, அக்காவுடன் வசித்து வரும் சிறுவன் ஆங்குஸிற்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை.

ஒரு நாள் கடலோரத்தில் அவனுக்கு விசித்திரமான ஒரு பொருள் கிடைக்கிறது. அதை எடுத்து வந்து ரகசியமாகப் பாதுகாக்கிறான். அந்தப் பொருள் தண்ணீர்க் குதிரையின் முட்டை. கொஞ்ச நேரத்தில் முட்டை உடைந்து அதிலிருந்து குட்டி வெளியாக, மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறான் ஆங்குஸ். அந்தக் குட்டி என்ன வகையான உயிரினம் என்று தெரியாமலே அதனுடன் நட்பாகிறான். சில நாட்களிலேயே அது வளர்ந்து பெரியதாகி விடுகிறது.

இதற்கிடையில் ஆங்குஸின் வீட்டை ஆக்கிரமித்து ஒரு முகாமை அமைக்கிறது இராணுவம். ராட்சத உருவிலிருக்கும் தண்ணீர்க் குதிரையின் ரகசியத்தை ஆங்குஸால் காப்பாற்ற முடிந்ததா என்பதே சுவாரஸ்யமான திரைக்கதை. பார்வையாளர்களை குழந்தைகளின் உலகத்துக்கு அழைத்துச் செல்லும் இப்படத்தின் இயக்குநர் ஜே ரஸ்ஸல்.