பிம்பல்



புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, சிறந்த படம் உட்பட நான்கு விருதுகளை அள்ளிய மராத்தியப் படம் ‘பிம்பல்’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது.ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார் முதியவர் அரவிந்த். சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி சீமா இறந்துவிட்டார். அவரது மகன்கள் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர். அவருக்கு சமைத்துப்போட துக்காராம் என்ற வேலைக்காரர் இருக்கிறார். ஒரு மகள் போல அரவிந்தைக் கவனித்துக் கொள்கிறார் மருத்துவர் மேக்னா.

இருந்தாலும் மனைவி இல்லாத தனிமை அவரை வாட்டுகிறது. காலையில் எழுந்தவுடன் மேக்னாவுடன் வாக்கிங், வீட்டுக்கு வந்து மனைவியைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது, இரவானதும் அமெரிக்காவில் இருக்கும் பேரக்குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசுவது என அரவிந்தின் அன்றாட நாட்கள் நகர்கிறது.

ஒரே மாதிரி நாட்கள் செல்வதால் ரொம்பவே சோர்வடைகிறார். அமெரிக்காவுக்கு வரச் சொல்லி மகன்களும் மருமகள்களும் கெஞ்சுகின்றனர். அரவிந்த் என்ன முடிவு செய்தார் என்பதே நெகிழ்ச்சியான திரைக்கதை. ஒரு முதியவரின் தனிமையையும்,  உறவுகளைப் பிரிந்து விர்ச்சுவலில் வாழ்ந்துகொண்டிருக்கும்  டிஜிட்டல் வாழ்க்கையையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தப் படம். இதன் இயக்குநர் கஜேந்திரா அஹிரே.

தொகுப்பு: த.சக்திவேல்