ரீமானிடைஷேசன்



கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை. ஆண்டிப்பட்டிக்கோட்டை டோல்கேட் அருகிலுள்ள கிராமத்து மேம்பாலத்தின் கிழக்குப் பக்கம் சர்க்கார் சீத்தை மரங்களின் இருட்டு புதர்மறைவில் ராஜா, பூமிநாதன், சையது மூவரும் டைமை அடிக்கடி பார்த்தவாறே நின்றிருந்தனர்.ஜார்ஜ் வர்கீஸ் இரவு 11 மணிக்கு பார்ட்டியோடு 25சி புது ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வருவதாகக் கூறியிருந்தான்.

ராஜாவின் அட்டவணையில் அடுத்தநாள் திண்டுக்கல்லில் பணமாற்றம் செய்வது, கமிஷனைப் பிரிப்பது, லெகர் பியர் அடிப்பது, விவேராவில் பிரபல‌ அமைச்சர் தங்கிய அதே அறையில் க்ராப் கட்டிங் பெண்ணுடன் டிக்டாக் எடுப்பது போன்றவை இருந்தன.

சையது, பத்து ஆண்டுகளாக ராஜாவிற்கு பழக்கம். பேகம்பூர்காரர். மூணு சீட்டு தொழிலில் தலை. ஒரு கட்டு பீடியை முடித்திருந்தார்.‘‘போலீஸ் கீலீஸ் மப்டில இருக்கப் போறாங்க மாப்ள‌...’’‘‘ச்செ இல்ல மாமா. கரூர்ல நேத்து நைட் பத்து சி மாத்திருக்காங்க. இந்த கார்ல பழைய ரெண்டாயிரம் அந்த கார்ல புது ஆயிரம் அஞ்சரை சி. அம்பது லட்சம் கமிஷன் கொடுத்துட்டு பார்ட்டி ஹேப்பியா கெளம்பிருச்சு...’’
நேரம் ரெண்டு பத்து.

ஜார்ஜின் செல்போன் சுவிட்ச் ஆஃப். ஆங்காங்கே நாய்கள் ஊளையிட ஆரம்பித்தன. மூவருக்கும் உள்ளுக்குள் நரம்பில் ஐஸ்பார் வைத்த‌ பயம் இருந்தது. இதில் யாரும் பழைய ரெண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைப் பார்த்ததில்லை. ஆனால், ஒருவருக்கொருவர் பார்த்துள்ளோம் என்று பொய் சொல்லியிருந்தனர்.

அச்சமயம் நீல‌ நிற ஆடம்பர சொகுசு கார் ஒன்று மெதுவாக டோல்கேட்டைக் கடக்காமல் இடதுபக்கம் ஊர்ந்து சர்வீஸ் ரோட்டில் ஓரங்கட்டியது.டிஎன் 37 ரெஜிஸ்டிரேஷன். முன்பக்க விளக்குகள் அணைக்கப்பட்டு பின்பக்கத்தில் சிவப்பு விளக்கு கெத்தாக நான்கு முனைகளிலும் ஒளிர்ந்தன.


கதவு திறக்கும் முன்பே டிக்கி திறந்தது. முன்பக்க கதவை திறந்த டக் இன் தொப்பை ஆசாமி இறங்கி பின்பக்கம் சென்றார். நடையில் மது கலந்திருந்தது. எதையோ தேடினார்.

‘‘டிக்கிலதான் பணம் இருக்கும்போல, வாங்க போலாம்...’’ என்றான் பூமிநாதன்.ராஜா, ‘‘வெயிட் ப்ளீஸ்...’’ என்றான்.ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து ஆசுவாசமாகி நின்று சிறுநீர் கழித்தான். சரியாக எட்டே பஃப் இழுத்த சிகரெட்டை அணைக்காமல் கீழே வீசிவிட்டு ஏறியதும் டிரைவர் காரைப் பறக்கவிட்டு மறைந்தான்.‘‘அடச்சீ... உச்சா விட வந்துருக்கான்...’’ என்றார் சையது.‘‘டே ராஜா இங்க ஒரு பார்ட்டி கைல 50சி வச்சிருக்கார். அவருக்கு புது நோட்டு பாதி தந்தா போதுமாம். மீதி வர்றதுல ஆளுக்கு பாதி. டீலா?’’ போனில் பூமி.‘‘எப்படி பாத்தாலும் தலைக்கு 10சி நிக்கும்...’’‘‘ம்...’’ போட்டான் ராஜா.

ராஜா அவனுடைய கல்லூரி நண்பன் சண்முகத்திடம் பேச, சண்முகமோ அவன் நண்பன் ஜார்ஜ் வர்கீஸிடம் பேசி தெரிந்துகொண்டு ‘‘புதுப்பணம் ரெடி, நீ போய் பழைய நோட்டு கரெக்டா இருக்கானு பாத்துட்டு வாட்ஸ்அப் அனுப்பு...’’ என ராஜாவிடம் பதிலுரைத்தான்.
பூமியிடம் ராஜா வீடியோ கேட்க, அவனோ பார்ட்டியிடம் பேசுவதாகச் சொல்லி இன்னொரு ஏஜென்டிடம் தகவல் பரிமாறினான். அந்த ஏஜென்டிடமிருந்து கைமாறி காதுமாறி வாட்ஸ்அப் மாறி பதில் வராமலே ஒரு வாரம் கடந்திருந்தது.

பின்பு பூமி யாருடைய‌ அழைப்புகளையும் எடுக்காத மோடுக்கு சென்றுவிட்டான்.அதன்பின் 50சியை, தான் நேரில் பார்த்து அன்றைய செய்தித்தாளை பணக்கட்டின் மேல் வைத்தெடுத்திருந்த‌ வீடியோவையும் காண்பித்தான் பூமி. அவசர அவசரமாக அன்றைய‌ பேப்பரைப் பார்த்தான் ராஜா. அதே செய்தி!சண்முகத்திடம் பேசினான். அவனோ ‘‘நோட்டை பாத்துட்டு வீடியோ அனுப்புடா...’’ என்றான் வழக்கம்போல,‘‘நான் பார்த்துட்டேன். எல்லாம் முல்லைப் பூ பந்து மாதிரி ஃப்ரெஷ்பா...’’ என்று வாட்ஸ்அப் அனுப்பினான் ராஜா.

அந்த வாட்ஸ்அப் மெசேஜ் புளூ டிக் காண்பித்தது. பின்பு சண்முகம் யார் போனையும் எடுக்கவில்லை.அடுத்தநாள் காலை ஜார்ஜ் போனில் ‘‘திண்டுக்கல் வந்துட்டோம். புதுசு ரெடி. நைட் பழச‌ கொண்டு வாங்க மாற்றிடுவோம். நேத்து லேட் ஆயிருச்சு, மன்னிக்கவும்...’’ என்று கட் பண்ணினார்.டோல்கேட் ஸ்பாட்டை ராசியில்லை என்று இன்று மாற்றினர்.பகல் முழுவதும் வீட்டில் ஓய்வெடுத்து இருட்டியதும் அவனது 125சிசி வண்டியில் சின்ன‌ டார்ச், வாட்டர் பாட்டில், கோணிச் சாக்கு தவிர பாதுகாப்புக்கு ஆக்ஸா பிளேடு, சைக்கிள் செயின் இத்யாதிகளுடன் கிளம்பினான் ராஜா.

மதுரை புறவழிச்சாலை தோல் ஃபேக்டரி கழிவுகள் மணம் வீசும் கும்மிருட்டு பிரதேசத்தில் மூவரும் ஆஜர். ஜார்ஜும் அழைத்தவுடன் கிளம்பிடுவோம் என்று மெசேஜ் செய்துவிட்டார்.சையது ‘பழைய நோட்டு’ பார்ட்டியிடம் பேசினார். ‘வந்துட்டிருக்கோம்’ என்றனர் மறுமுனையில்.

அரைமணி நேரத்தில் தூரமாக‌ சைரன் சவுண்ட் கேட்டது. ‘‘போலீஸ்...’’ என்று கத்திய‌ பூமி நொடிப்பொழுதில் பின்னங்கால் தலையில் அடிக்க ஓட்டம்பிடித்தான். ராஜாவும் பின்னாலேயே ஓடினான். சையது அப்படியே சகதியில் படுத்துக்கொண்டார். தூரமாக‌ச்  சென்று மூச்சுவாங்க திரும்பிப் பார்த்ததில் ஒரு ஆம்புலன்ஸ் கடந்து சென்றது.

ராஜாவின் செருப்பு சென்ற தடம் தெரியவில்லை. பூமிநாதனின் தடமும்தான்.முள் ஆங்காங்கே குத்திக் கிழித்திருந்தது. பெரும் வலி. தன்னை கேவலமாக நினைத்துக்கொண்டான்.சையது பொறுமையாக தாங்கித் தாங்கி எழுந்து வந்து, ஆம்புலன்ஸில் போனதுதான் பழைய‌ பார்ட்டி என்றார்.இன்று வரை பழைய‌ நோட்டையும் பார்த்ததில்லை. புது நோட்டையும் பார்த்ததில்லை.கடும் கடுப்பில் ராஜா, ‘‘வாங்க மாமா கிளம்பலாம்...’’ என்று டாஸ்மாக் கடை நோக்கி 125 சிசி வண்டியை விட்டான்.

லெகர் பியரை அருந்திவிட்டு ‘‘கவர்மன்ட் செஞ்ச ஒரே உருப்படியான காரியம் இந்த நெதர்லாந்து பீரைக் கொண்டாந்ததுதான்டா...’’ என்று உளறியபடியே தூங்கச் செல்கையில் இரவு நேரம் பதினொன்றைத் தாண்டியிருந்தது.ஒரு யானையால் மிதுத்து தூக்கியெறியப்பட்ட களைப்புடன் படுத்த ராஜா, சூரியன் நடுவானிற்கு வந்தும் எந்திரிக்க‌வில்லை.‘‘டேய்... பேப்பரைப் பாருடாாா...’’ தட்டி எழுப்பினார் அவன் அம்மா.

கண்பூளையைத் துடைத்துக்கொண்டே எழுந்தான். ‘பூவிருந்தவல்லி அருகே 48 கோடி மதிப்பில்லாத பழைய 2000 ரூபாய் நோட்டுகளுடன் மூன்று நபர்கள் பிடிபட்டனர். T12 காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அவர்களது கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.

பிடிபட்ட சுரேஷ் தன்...’பேப்பரை எரிச்சலுடன் எறிந்துவிட்டு மீண்டும் படுக்கையில் விழுந்தான். பெருமூச்சை வெளியேற்றினான். சில விநாடி களில் குப்புறத் திரும்பிப்படுத்தான்.செல்போனில் பூமிநாதன் அழைப்பு வந்தது.‘‘100 கோடிக்கு 2000 ரூபாய் நோட்டு இருக்கா? தொடர்பில் எதும் ஆர்பிஐ ஆஃபீசர்ஸ் இருக்காங்களா ராஜா?’’‘‘போனை வைடா...’’ கத்திவிட்டு சுவிட்ச் ஆஃப் செய்தான்.
                                    
ஜி.தமிழ் இனியன்