சிறுகதை-சங்கரா சங்கரா



சங்கரானந்தா கணீர் குரலில், வசியக் குரலில், தெய்வீகக் குரலில் உபன்யாசம் செய்து கொண்டிருந்தார்.பல நாட்களுக்குப் பின் அவர் உபன்யாசம் என்பதால் மட்டுமல்ல, எப்போழுதும் போல அரங்கு நிரம்பி வழிந்தது.‘‘ஆதிசங்கர பகவத் பாதாள் இந்த உலகத்துக்கு அத்வைதியாக வந்தார்.
‘காக்கை குருவி எங்கள் ஜாதி, நீர் கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்க நோக்க களியாட்டம், நோக்கும் திசையெல்லாம் நாம் இன்றி வேறில்ல....’ என்று அத்வைதம் பேசிய ஆதிசங்கரன் புறப்பட்டுப் போகிறான். ‘அம்மா நீ சாகிற போது வருவேன்’ என்று சொன்னான். அம்மா கேட்டாள், ‘நான் சாவது எப்படிடா உனக்குத் தெரியும்’. அதற்கு சங்கரன் சொன்னான். ‘அதுகூடத் தெரியாவிட்டால் நான் என்ன சன்னியாசி?’
சாகக் கிடந்தாள்.

ஆதி சங்கர பகவத் பாதாள் ஓடிவந்தான். அன்னையை மடியிலே தாங்கிக்கொண்டான். தாங்கிக்கொண்டபோது அவளுடைய உயிர் பிரிகிறது. பிரிகிற நேரத்திலே கேட்டான். ‘அம்மா அம்மா, சங்கரன் வந்திருக்கிறேன் அம்மா. சங்கரனைத் தெரிகிறதா அம்மா’ என்று கேட்டான் ஆதிசங்கரன்.

அந்த அம்மாள் சொன்னாள். ‘சங்கரா, உன்னைத் தவிர எனக்கு வேறு ஒன்றுமே தெரியவில்லைடா’ என்று சொன்னாள். அவள் கதை முடிந்தது. ஆதி சங்கரன் இந்த உலகத்துக்கு நடத்தாத பாடமா இந்த உலகத்திற்கு கிடைத்து விடப்போகிறது?’’நடுவில் மூன்று மாதமாய் உபன்யாசம் இல்லை. சங்கரானந்தா அம்மாவுடன் வீட்டிலேயே இருந்தார்.காரணம் இல்லாமல் இல்லை.

மூன்று மாத காலமாய் இப்பொழுது அவரது தொண்ணூறு வயது அம்மா முடியாமல் கிடந்தாள்.இப்பொழுதுதான் கொஞ்சம் தேறியிருக்கிறாள். இந்த வயதிலும் அவள்தான் எல்லாம் செய்கிறாள். எப்பொழுதாவது அவர் காபி மட்டும் போடுவார்.இன்றும் தினமும் காபிக்கொட்டையை அரைத்து அலமாரியில் ஃபிக்ஸ் செய்திருக்கும் பிடி வைத்த கை அரவை மிஷினில் அரைத்து புதிய காபித் தூளை முதல் நாள் அலம்பி வைத்த வெண்கல ஃபில்டரில் போட்டு சுடச் சுட தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஊற்றி பாலைக் கொதிக்க வைக்கும் போது காபி டிகாக் ஷன் மணம்  நாலைந்து வீடுகளுக்கு பரவும். பாலை அதிகம் முறுகக் காய்ச்சாமல் ஏடு படியும் முன் நிறுத்தி அதில் டிகாக் ஷனை கலந்து மிதமாய் சர்க்கரையைப் போட்டு முதலில் அம்மாவிற்கு கொண்டு போய் கொடுப்பார்.

‘‘என்ன விட நீ காபி நல்லாப் போடறடா...’’ என்றபடியே குடிப்பாள்.‘‘எல்லாம் உன்னைப் பார்த்து கத்துண்டதுதான். இது நான் போட்டது இல்லே... நீ போட்டது...’’ என்று மனம் உருக சொல்வார். திருமணமே செய்துகொள்ளவில்லை.முகத்தில் அப்படியொரு தேஜஸ்.பார்த்தவுடனே அப்படியே கையெடுத்து கும்பிடத்தான் தோன்றும்.அரங்கில் அங்கங்கே நின்று கொண்டும் இருந்தார்கள்.ஏழு வயதில் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றினை மேடைகளில் தனது  மழலைக் குரலில் சொல்ல ஆரம்பித்தவர். அன்றிலிருந்து பல்லாயிரம் மேடைகளைக் கண்டு விட்டார்.
அவர் உபன்யாசத்தைக் கேட்காதவர் என்றால் அதிசயம்தான்.

அவர் செல்லாத நாடுகள் இல்லை.ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாற்றினைப் பேசாத வெளி நாட்டுக் கோயில்கள் இல்லை.
முப்பது வயதில் அவர் பெயரை சங்கரானந்தா என்று மாற்றியவர் மகாப் பெரியவா.ஆயிற்று.இப்பொழுது வயது ஐம்பத்தொன்பது.
மாம்பலத்தில் சொந்த வீடு. ஊரில் கொஞ்சம் நிலம். அதில் கொஞ்சம் வருகிறது. உபன்யாசத்திற்கு அவர் எந்தவித டிமாண்டும் செய்வதில்லை. கொடுப்பதை வாங்கிக் கொள்வார்.வெளிநாடு என்றால் கூட இரண்டாம் வகுப்பு டிக்கெட் போதும் என்பார். முதல் வகுப்பு போட்டு காசை வீணாக்காதீர்கள். அதை ஏதும் இல்லாதவர்களுக்கு கொடுங்கள் என்பார்.

ஆதிசங்கரனுடன் இழைந்து விட்ட வாழ்க்கை.பத்தாவது முடித்தபோது ரிசல்ட் வந்தது.மாநிலத்தில் முதல் மாணவன்.காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரரைப் பார்க்க அம்மாவுடன் போனார். நல்ல கூட்டம். காத்திருந்தார்.கூட்டத்துக்குப் பின்னால் அமைதியாய் உட்கார்ந்து விட்டார். மிகவும் முதிர்ந்த நிலையில் இருந்தார் பெரியவா.காரியதரிசியைக் கூப்பிட்ட பெரியவா, ‘‘பட்டணத்துல இருந்து சங்கரானந்தா வந்திருக்கிறான் தாயாரோடு. அவனை முன்னாடி அழைச்சுட்டு வாங்கோ’’ என்றார் மெல்லிய குரலில்.காரியதரிசி ‘‘சங்கரானந்தாவா... யாரது’’ என்று கேட்க, பெரியவா, ‘‘சங்கரன், ஆதி சங்கரர் வாழ்க்கை வரலாற்றை ஊர் ஊரா போய் உபன்யாசம் பண்ணிண்டு வரானே சங்கரன், அவன்தான் இன்னையிலிருந்து சங்கரானந்தா’’ என்றார்.

காரியதரிசி ஓடிப்போய் அழைத்து வர பெரியவா காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்.‘‘எழுந்திரு சங்கரானந்தா...’’ என்றார்.அவர் ஆச்சரியமாய் எழுந்து உட்கார்ந்து அவரைப் பார்த்து கைகளால் வாயைப் பொத்திக் கொள்ள-‘‘காலேஜ்ல சேரப் போறேன்னு சொல்ல வந்தே. வேண்டாம். இனி உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்கும். போ. ஊர் ஊரா நாடு நாடா போ. ஆதிசங்கரர் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கார்...’’ என்றவர் ‘‘இன்னைக்கு சாயந்திரம் மடத்துல உபன்யாசம்...’’ என்றார்.மாயம் போல் ஆனது சங்கரானந்தா வாழ்க்கை.

தீயாய் பற்றிக் கொண்டது சங்கர சிந்தனைகள்.போகும் இடமெல்லாம் வசியம் போல் கூட்டம் வந்தது.பல நாடுகளில் வசிக்கும் பெரும் பணக்காரர்கள் சங்கரனின் பின்புலம், பெரியவா தொடர்பு அனைத்தையும் அறிந்து தங்கள் பெண்ணை மணமுடித்துத் தர தயாராய் இருந்தார்கள். கேட்கவும் செய்தார்கள். ஆனால் சங்கரன் மறுத்து விட்டார்.எல்லாம் தனக்கல்ல, ஆதி சங்கரனுக்கு என்ற அவருக்கு பக்குவம் எப்பொழுதோ வந்துவிட்டது.
காலில் விழ வந்தவர்களைத் தடுத்தார்.அவரைப் பார்த்தாலே பூரித்துப் போனார்கள்.

இமையோரங்களில் கண்ணீர் பெருக காலட்சேபம் கேட்டார்கள்.நாளுக்கு நாள் சங்கரானந்தா புகழ் பரவ ஆரம்பித்து.அவருக்கு கல்யாணம் பண்ணலாம் என்று அம்மா யோசித்துக் கேட்டபோது சிரித்துக் கொண்டே சொன்னார்.‘‘அம்மா எனக்கு அது வேண்டாம்...’’ ஒரே வாக்கியத்தில் முடிந்தது அவர் பேச்சு.அம்மா அவனிடம் பின் அதைப் பற்றி பேசுவதில்லை.பலரோ அவனை ஆதிசங்கரராகவே பார்த்தார்கள்.

அன்று கிளம்பும்போதுகூட அம்மாவிடம் கேட்டார்.அம்மாவுக்கு காது இப்பொழுதும் நன்றாகக் கேட்கிறது.பேச்சில்தான் கொஞ்சம் குழறல். இருந்தாலும் தெளிவாகச் சொல்லி விடுவாள். வார்த்தைகள் தட்டுத் தடுமாறி வெளிவரும்.‘‘அம்மா நான் வேணும்னா இன்னைக்கு நிகழ்ச்சியை ரத்து பண்ணிடட்டுமா?”தெளிவாகச் சொன்னாள்.

‘‘வேண்டாம்பா... ரத்து எல்லாம் பண்ண வேண்டாம். ஆதிசங்கரர் சரித்திரத்தைக் கேட்க எத்தனை நாளா அவா எல்லாம் தவம் கிடக்கா. இன்னைக்கும் என்னைக்கும் போல ஆர்வமா காத்திருப்பா. திடீர்னு நீ ரத்து பண்ணா நன்னா இருக்குமா?” என்றாள்.‘‘இல்லேம்மா. இப்பதான் நீ உடம்பு சரியில்லாம கொஞ்சம் தேறியிருக்கே...”‘‘கொழந்தே எனக்கு ஒண்ணும் ஆகாது. போயிட்டு வா. நீ திரும்பி வரச்சே உனக்கு பிடிச்ச ரவா கேசரி, பச்சைப்பட்டாணி போட்டு சுடச்சுட இருக்கும், தேங்காய் சட்னியோட...’’ என்றாள்.

அம்மா சொன்னால் மறுப்பாரா? கிளம்பி விட்டார்.இரண்டரை மணி நேரம் தங்கு தடையில்லாமல் பொங்கிப் பிரவாகமாய் வழிந்தது ஆதிசங்கரனின் வாழ்க்கைச் சரித்திரம்.சங்கரானந்தா ஒரு நிமிடம் கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து சொல்லி முடித்தபோது கைதட்டல் ஒலி முடிந்தது.சபா காரியதரிசி மேடையேறி வந்தார்.‘‘அண்ணா சந்தோஷம். பெரிய கொடுப்பினை எங்களுக்கு...’’ என்றார்.அவரின் உதவியாளன் ஓடி வந்து காரியதரிசியிடம் போனைக் கொடுத்தான்.

‘‘இருப்பா என்ன அவசரம்?”
அவன் அவரின் காதருகில் கிசுகிசுத்தான்.அவர் வாங்கிக் கொண்டு போய் கொஞ்சம் தள்ளி நின்று பேசினார்.தன் காரில் சங்கரானந்தாவை அழைத்துக் கொண்டு அவரின் வீட்டை காரியதரிசி அடைந்த போது வீட்டு வாசலில் பத்து பதினைந்து பேர் நின்றிருந்தனர்.

சுப்ரஜா