நான்... ஐசரி கே.கணேஷ்



ஒரு நிறுவனத்தின் சேர்மனாகவோ, பல்கலைக்கழக வேந்தராகவோ இருக்கிறதைவிட என் வாழ்நாள் முழுவதும் ஒரு மாணவனாக இருக்கிறதையே விரும்புறேன். அப்பதான் நிறைய கத்துகிடலாம். இந்த வாழ்க்கையில் கற்க வேண்டியது நிறைய இருக்கு. பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அப்பா ஐசரி வேலனுக்குச் சொந்த ஊர் அரக்கோணம். அம்மா புஷ்பாவுக்கு ஆற்காடு. அப்பாவின் நிஜப்பெயர் கதிர்வேலன். அவர் ஒரு நாடகத்துல, ‘அதுசரி’னு சொல்ற கேரக்டர்ல நடிச்சார்.

அப்ப கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அந்த நாடகம் முடிஞ்சு பேசறப்ப கதிர்வேலனுக்கு ‘அதுசரி’ வேலன்னு பெயர் வச்சிடுறேன்னு சொல்லியிருக்கார். அதே நாடகம் நூறாவது நாள் வந்தப்ப புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தலைமை தாங்கினார். அவர் ‘அதுசரி’ வேலனை ‘ஐசரி’ வேலன்னு அறிவிச்சிட்டார். அப்பா இறந்ததும் அவர் பெயர் எப்பவும் ஒலிச்சிட்டு இருக்கணும்னு என் பெயரை ஐசரி கே.கணேஷ்னு வச்சிகிட்டேன்.

அப்பா ஐசரி வேலன், எம்ஜிஆருடன் நிறைய படங்கள் நடிச்சிட்டு இருந்தார். 1972ல் எம்ஜிஆர் கட்சி ஆரம்பிச்சதும் அவருடன் அப்பாவும் இணைந்தார். அப்பா, அதிமுகவின் ஐந்தாவது உறுப்பினர். 1977ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். அந்தத் தேர்தல்ல அப்பா சென்னை ஆர்.கே.நகர் தொகுதி யில் நின்னார். அன்றைக்கு சென்னையில 14 தொகுதிகள் இருந்தன. அதில் திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரே ஒரு ெதாகுதியை மட்டும் அதிமுக கைப்பற்றியது. அது அப்பா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி.

அந்நேரம் நான் ஏழாவது படிச்சிட்டு இருந்தேன். அப்பா துணை அமைச்சரானார். அன்றைய ஆட்சியில் முதல்வர் எம்ஜிஆர் பத்து அமைச்சர்களுக்கும் துணை அமைச்சர்கள் போட்டிருந்தார். அதில், அப்பா செய்தி மற்றும் அறநிலையத்துறையின் துணை அமைச்சரா இருந்தார்.

1980ல் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடந்தது. அதில் மறுபடியும் அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஆனா, அதே ஆர்.கே.நகர் தொகுதியில் அப்பா தோத்துட்டார். அடுத்து, 1981ல் என்னுடைய உடன் பிறந்த அண்ணன் ஒரு விபத்துல இறந்துட்டார். நாங்க ரொம்ப உடைஞ்சிட்டோம்.
1984ல் நான் பிளஸ் டூ முடிச்சேன். அப்பாகிட்ட பச்சையப்பன் கல்லூரியில்தான் படிக்கணும்னு சொன்னேன். ஏன்னா, அங்க போனா மாணவர் தேர்தல்ல நிற்கலாம்னு நினைச்சேன். அது என்னுடைய ரொம்ப நாள் ஆசை.

இந்த ஆசை அப்பாவைப் பார்த்து வந்தது. காரணம், என்னுடைய பத்து வயசுல இருந்து நான் அரசியலைப் பார்த்திட்டு இருக்கேன். அதனால, பிளஸ் டூ படிக்கும்போதே என்னுடைய சீனியர் நண்பர்களைப் பார்க்கப் போகும்போது பச்சையப்பன் கல்லூரி தேர்தலைப் பார்த்திருக்கிறேன். அப்ப மாணவர்கள்கிட்ட ஓட்டுக் கேட்க வேட்பாளரா நிற்கிற மாணவர்கள் யானையிலும், குதிரையிலும் வருவாங்க.

அங்க பி.காம்ல அப்பா சேர்த்துவிட்டார். அவர்கிட்டயே மாணவர் தேர்தல்ல நிற்கப் போறேன்னு சொன்னேன். நில்லுனு அனுமதி கொடுத்தார். அங்கெல்லாம் முதல் ரெண்டு ஆண்டுகள் வேலை செய்யணும். மூன்றாம் ஆண்டு தேர்தல்ல நிற்கலாம். நான் கல்லூரியில் வகுப்புக்கு போறேனோ இல்லையோ… தினமும் கேட்டில் நின்னு வர்றவங்க, போறவங்களுக்கு வணக்கம் வச்சிகிட்டு ஆதரவு திரட்டுவேன். இரண்டாவது ஆண்டு படிக்கிறப்ப அப்பா மாரடைப்புல இறந்துட்டார். அதனால, குடும்பமே நொறுங்கிடுச்சு.

அப்புறம், நான் கல்லூரி தேர்தல்ல நிற்கலனு சொல்லிட்டேன். ஏன்னா, என்னுடைய குடும்பத்திற்கு நான்தான் எல்லாம். எனக்கு ரெண்டு தங்கைகள். அதுல ஒரு தங்கை இப்ப பியூட்டி பார்லர் நடத்திட்டு வர்றாங்க. இன்னொரு தங்கை டாக்டர். அவங்க ரேடியாலஜி படிச்சிட்டு ஸ்கேன் சென்டர் நடத்துறாங்க.  

அப்புறம், என்னுடைய நண்பர்களும் பேராசிரியர்களும் ரொம்ப கேட்டுக்கிட்டதால தேர்தல்ல நின்னு ஜெயிச்சேன். அப்ப புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முதல்வரா இருக்கார். அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கினேன். அதுக்குப்பிறகே நான் பச்சையப்பன் கல்லூரி மாணவர் சங்கச் செயலாளரா செயல்பட ஆரம்பிச்சேன். அங்கிருந்துதான் என்னுைடய அரசியல் பிரவேசம் தொடங்குச்சு.

கல்லூரி மாணவர் சங்கத் திறப்பு விழாவுக்கு புரட்சித் தலைவரை அழைச்சிட்டு வரணும்னு முடிவெடுத்தேன். அப்ப பச்சையப்பன் கல்லூரி திமுகவின் கோட்டையா இருந்துச்சு. அதனால, எம்ஜிஆரை கூப்பிட்டு வந்து திறப்பு விழாவை நடத்தணும்னு நினைச்சேன்.

அவர் உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்தார். தலைவர் வரலனு சொன்னதும் நான், கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா அம்மா
விடம் திறப்பு விழா பண்ணுங்கனு கேட்டேன். அவங்க, தலைவரைக் கேட்டு சொல்றேன்னு சொல்லியிருந்தாங்க. ஆனா, அதுக்குள்ள தலைவர் இறந்திட்டார்.

அதன்பிறகு அம்மாகிட்ட, நீங்கதான் வரணும்னு சொல்லி கேட்டேன். 1988 ம் வருசம்  பிப்ரவரி மாதம் சங்கத் திறப்பு விழாவுக்கு வந்து மாணவர் மத்தியில் பேசினாங்க. நிறைய பிரச்னைகளும் வந்தது. அதை சரிபண்ணி அந்த விழாவை சிறப்பா நடத்தி அனுப்பி வச்சேன்.

அதுல அம்மாவுக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதனால, என்னை சென்னை மாவட்ட மாணவர் அணித் தலைவரா நியமிச்சாங்க. அதுதான் என்னுடைய இரண்டாவது அரசியல் பிரவேசம். அன்றிலிருந்து அம்மாவுக்காகக் கட்சி வேலைகள் செய்ய ஆரம்பிச்சேன்.
அப்ப ஜானகி அம்மா அணி, ஜெயலலிதா அம்மா அணினு ரெண்டா பிரிஞ்சது. தேர்தல்ல ெஜயலலிதா அம்மா அணிக்காக பணி செய்தேன். அம்மா போடி தொகுதியில் நின்னாங்க. நானும் ஒரு பொறுப்பாளரா இருந்து பணியாற்றி அம்மாவை ஜெயிக்க வச்சோம். என்னுடைய செயல்பாட்டைப் பார்த்து அதிமுக மாநில மாணவர் அணி துணைச் செயலாளரா ஆக்கினாங்க.

அடுத்து, 1991ல் அம்மா காங்கேயம், பர்கூர் ெதாகுதிகள்ல நின்னாங்க. நான் காங்கேயம் தொகுதியில் ஒரு பொறுப்பாளரா இருந்தேன். அம்மா ெஜயிச்சு முதல்வரானாங்க. என்னை ரொம்பப் பாராட்டி மாநில மாணவர் அணி செயலாளரா நியமிச்சாங்க. 1991ல் இருந்து 1996 வரை நிறைய பணியாற்றினேன். இதுக்கிடையில் 1992ல் ‘வேல்ஸ் கல்லூரி’ தொடங்கினேன்.

நான் பி.காம் முடிச்சதும், பச்சையப்பன் கல்லூரியிலேயே எம்.காம் முடிச்சேன். அங்கிருந்து வெளியே வந்ததும் எங்கேயாவது வேலைக்குப் போகணும்
அல்லது பிசினஸ் ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். அப்ப என்னுடைய பேராசிரியர்கள், ‘நீ ஏன் கல்லூரி தொடங்கக் கூடாது’னு கேட்டாங்க.
ஒரு அறக்கட்டளையை உருவாக்கி மயிலாப்பூர்ல ஒரு வாடகை கட்டடத்துல பார்மஸி கல்லூரியை ஆரம்பிச்சேன். அப்ப சுகாதாரத் துறை அமைச்சரா ஈரோடு முத்துச்சாமி இருந்தார். 1992ல் டிப்ளமோ பார்மஸி தான் இருந்துச்சு. இளங்கலை பார்மஸி கிடையாது. அதனால, அமைச்சர் முத்துச்சாமிகிட்ட ஒரு கல்லூரி தொடங்குறேன்னு சொன்னதும் அவர்தான், ‘நீ பார்மஸி கல்லூரி தொடங்கு. இப்ப அதுக்கு நிறைய டிமாண்ட் இருக்கு. நாங்களும் அதுக்கு அப்ரூவல் கொடுக்கப் போறோம்’னு சொன்னார்.

அதுக்குப்பிறகு ஒரு பத்து பேருக்கு பார்மஸி கல்லூரி ஆரம்பிக்க அனுமதி கொடுத்தாங்க. அதுல நானும் ஒருத்தன். அங்கிருந்து என்னுடைய கல்விப் பணி ஆரம்பிச்சது. அப்படியே பிசியோதெரபி கல்லூரி, கலைக்கல்லூரி, பள்ளிக்கூடங்கள்னு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கல்வி நிறுவனம்னு இப்ப 25 ஆண்டுகள்ல 25 கல்வி நிறுவனங்கள் ஆரம்பிச்சி நடத்திட்டு இருக்கேன். 25 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் படிச்சிட்டு இருக்காங்க.
எல்லாமே என்னுடைய அப்பா பேர்லயே ஆரம்பிச்சேன். லோகோவும் அப்பாவின் போட்டோதான். ஏன்னா, அவருடைய ஆசீர்வாதமும் புரட்சித் தலைவரின் ஆசீர்வாதமும் சேர்ந்ததுதான் நான். இல்லன்னா, இந்தளவுக்கு என்னால வந்திருக்கவே முடியாது.
 
1993ல் இருந்தே கல்லூரிக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தேன். 1996ல் அதிமுக தோற்றதும் அரசியலில் இருந்து விலகி முழுக்க கல்லூரி பக்கமா திரும்பினேன். இந்நேரம், ஏ.சி.சண்முகம் அனைத்து முதலியார் பேரவைனு ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். நானும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவன் என்கிறதால என்னை அந்த அமைப்புல இருக்கணும்னு சொன்னார்.

அதுக்கு அவர் தலைவராகவும், நான் பொதுச் செயலாளராகவும் ஆனோம். பிறகு, முதலியார் பேரவை ‘புதிய நீதிக் கட்சி’யா மாறுச்சு. 2001ல் திமுகவின் கூட்டணியில் ‘புதிய நீதிக்கட்சி’ தேர்தல்ல போட்டியிட்டது. நான் தேர்தல்ல நிற்காமல் பணியாற்றினேன். அந்தத் தேர்தல்ல திமுகவும், புதிய நீதிக்கட்சியும் தோற்றது. அப்போதிலிருந்து இப்ப வரை எந்தக் கட்சிக்கும் போகல. எந்தக் கட்சியிலும் உறுப்பினராகவும் இல்ல. முழுக்க கல்விப் பணி மட்டும்தான்.

ஆனா, அப்ப கலைஞருடன் நல்ல அனுபவம் கிடைச்சது. அவர் முதல்வரா இருக்கிறப்ப 2011ல் பச்சையப்பன் கல்லூரி போர்டு தேர்தல் வந்தது. அதுல நான் முன்னாள் மாணவர் என்கிற முறையில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

அப்ப கலைஞர் என்னை அழைச்சு, ‘நீதான் கல்லூரி எல்லாம் நடத்திட்டு இருக்க. அதனால, நீதான் சேர்மனா இருக்கணும்’னு சேர்மன் ஆக்கினார். மூன்றாண்டு காலம் சேர்மனா இருந்தேன். அப்போதிலிருந்தே திமுகவுடன் நல்ல உறவு தொடர்ந்திட்டு இருக்கு. என்னைப் பொறுத்தவரை நான் ஒரு கல்வியாளர். எந்தக் கட்சியும் சாராதவன். இன்னைக்கு எல்லா கட்சித் தலைவர்கள் கூடவும் பழகிட்டும் பேசிட்டும் இருக்கேன். எல்லோருமே என் நண்பர்கள். அவ்வளவுதான்.

எனக்கு 1995ல் திருமணமாச்சு. மனைவி பெயர் ஆர்த்தி. அவங்கதான் எல்லா பள்ளிகளையும் பார்த்துக்கிறாங்க. நான் கல்லூரிகளையும், யுனிவர்சிட்டியையும் பார்த்துக்கிறேன். எங்களுக்கு ரெண்டு பெண் குழந்தைங்களும் ஒரு பையனும் இருக்காங்க. மூத்தவள் ப்ரீத்தா. பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ்ல தங்கப் பதக்கம் வாங்கினாங்க. அப்புறம், மெரிட்ல லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்ல பிஜி முடிச்சாங்க. இப்ப வேல்ஸ் பல்
கலைக்கழக துணைத் தலைவரா இருக்காங்க. ரெண்டாவது பொண்ணு குஷ்மிதா. இப்ப விஐடி சென்னையில் சட்டம் படிக்கிறார். அப்புறம், பத்து வருஷம் கழிச்சு ஒரு பையன் பிறந்தான். அவர் பெயர் சர்வேஷ் ஐசரி கணேஷ். ஆறாம் வகுப்பு படிக்கிறார்.

அடிப்படையா நான் ஒரு தடகள வீரர். பள்ளியில் படிக்கும்போது சாம்பியனா இருந்தேன். தடகளமும், கபடியும் ரொம்ப பிடிக்கும். அரசியலுக்குள்ள போயிட்டதால எல்லாமே விட்டுப்போச்சு. அதனாலதான், எங்க கல்வி நிறுவனங்கள்ல விளையாட்டுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து பண்ணிட்டு இருக்கேன். அத்துடன் நான் தமிழ்நாடு ஒலிம்பிக் கூட்டமைப்பின் துணைத் தலைவரா இருக்கேன். தவிர, ேடக்வாண்டோ விளையாட்டுக்கு இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் தலைவரா இருக்கேன்.

இதுதவிர, 2008ல் ஐசரி வேலன் மிஷன் மருத்துவமனைனு ஓஎம்ஆர்ல ெதாடங்கினேன். 150 படுக்கை வசதிகள் கொண்ட இலவச மருத்துவமனை அது. இப்ப நான் கோவிட் வாரியர்களின் குழந்தைகளுக்காக முந்நூறு இலவச இடங்களை அறிவிச்சு என் கல்லூரிகள்ல படிக்க இடம் கொடுத்திருக்கேன். என் தங்கையின் பையன் வருண் ஒருநாள், ‘மாமா, நான் சினிமாவில் நடிக்கணும்’னு சொன்னார். நான் கல்லூரியில் படிக்கும்போதே படங்கள்ல நடிச்சிருக்கேன். அரசியல்ல வந்ததால நடிக்கல. வருணுக்காக மறுபடியும் சினிமா துறைக்குள்ள வந்தேன். என்னுடைய நெருங்கிய நண்பர் பிரபுதேவா பெயர்ல ‘பிரபுதேவா ஸ்டூடியோஸ்’னு ஆரம்பிச்சு அவரை வச்சு ‘பரிமளா திரையரங்கம்’னு படம் எடுத்தேன்.

அதுக்குப் பிறகு, ‘போகன்’, ‘தேவி’ எடுத்தேன். அப்புறம், என்கிட்ட சிலர் வேல்ஸ் என்பதே பெரிய பிராண்ட். அந்தப் பெயரிலேயே எடுக்கலாமேனு சொன்னாங்க. அதனால, ‘வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்’னு ஆரம்பிச்சு அதுல ‘எல்கேஜி’, ‘கோமாளி' எடுத்தேன். ரெண்டுமே நல்ல ஹிட். அடுத்து ‘பப்பி’, ‘சீறு’ எடுத்தேன். அதில்லாம ஓடிடிக்கு சில படங்கள் பண்ணி வச்சிருக்கேன்.

இப்ப, ‘சுமோ’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘ஜோஷ்வா’னு மூணு படங்கள் ரெடியா இருக்கு. ‘ஜோஷ்வா’ படத்தை கௌதம்மேனன் இயக்கி இருக்கார். இதுல என் தங்கை பையன் வருண் ஹீரோவா நடிச்சிருக்கார். தியேட்டர் திறந்ததும் இந்தப் படங்கள் ரிலீஸாகும். அதில்லாம நாலஞ்சு படங்கள் தயாரிப்புல இருக்கு.

நான் இருபது வருஷமா நடிகர் சங்கத்துக்கு உதவி பண்ணிட்டு இருக்கேன். ஏன்னா, எங்க அப்பா நடிகர் சங்க உறுப்பினர். நானும் நடிகர் சங்கத்துல உறுப்பினர். அதனால, நலிந்த கலைஞர்கள் இருநூறு பேருக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் கொடுத்திட்டு இருக்கேன். தவிர, ஒவ்வொரு ஆண்டும் அப்பாவின் நினைவு நாள்ல ஆயிரம் நாடக நடிகர்களைக் கூப்பிட்டு வேட்டி, சேலை, சாப்பாடு எல்லாம் போட்டு அனுசரிப்பேன்.

விஷால் டீம் வந்து கேட்டதால அவங்களுடன் சேர்ந்து பணியாற்றினேன். வெற்றி பெற்றதும் என்னை ஒரு அறக்கட்டளை உறுப்பினரா ஆக்கினாங்க. கட்டடம் கட்ட ஆரம்பிச்சு அதுக்கான பணிகள் எல்லாம் பண்ணிக் கொடுத்தேன்.

இந்நேரம் நடிகர் விஷால் தயாரிப்பாளர் கவுன்சிலுக்குப் போயிட்டார். அங்கிருந்து ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் போனார். ஓர் இடத்துல கவனம் செலுத்தாம அங்க இங்கனு போனதால நிறைய பேருக்குப் பிடிக்கல. அவரை எதிர்த்து என்னையே நிற்க வச்சிட்டாங்க. அப்புறம், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்ல என்னை நிற்க சொன்னாங்க. ஒரே இடத்துல கவனம் செலுத்து வோம்னு வேண்டாம்னு மறுத்துட்டேன்.

இது ஒருபக்கம் இருந்தாலும் எப்பவுமே கல்விதான் என்னுடைய முதல் பணி. என்னுடைய குறிக்கோளே, வேல்ஸ் பல்கலைக்கழகத்தை மிகச்சிறந்த பல்கலைக்கழகமா எடுத்திட்டு வரணும் என்பதுதான். எல்லா ஊர்லயும் வேல்ஸ் பிராண்ட் இருக்கணும்!  

செய்தி:  பேராச்சி கண்ணன்

படங்கள் :ஆ.வின்சென்ட் பால்