தல! sixers story - 17



முட்டை போட்ட டான்!

கரக்பூரில் பணியாற்றியபோது தோனி, ரயில்வேயில் வாங்கிய சம்பளம் மாதத்துக்கு ரூபாய் ஐயாயிரத்து ஐநூறு.பணிக்குச் செல்லும்போது கூடவே ஒரு டென்னிஸ் பாலையும் எடுத்துச் செல்வார்.வேலையில்லாத நேரங்களில் அந்த பந்தை சுவரில் எறிந்து, விக்கெட் கீப்பிங் பிராக்டிஸ் செய்துகொண்டே இருப்பார்.இங்கே வேலைக்கு வந்த ஆரம்ப நாட்களில் அவருக்கு ‘ஹோம்சிக்’ இருந்தது. எனினும், இந்தியாவில் மைதானம் இருக்கும் இடமெல்லாம் கிரிக்கெட்டும் இருக்கும் என்பதால், கொஞ்சநாளிலேயே சகஜமாகி விட்டார்.

ரயில்வே ஊழியரும், கிரிக்கெட் வீரருமான சுப்ரதா பானர்ஜிதான் அப்போது தென்கிழக்கு ரயில்வே கிரிக்கெட் அணிக்கு கோச். செல்லமாக அவரை
‘பகாடா’ என்று அழைப்பார்கள்.“மேட்ச்சுகளில் என்னை ஓப்பனிங் ஆட வையுங்க சார்!” என்று தோனி, அடிக்கடி பகாடாவை நச்சரித்துக் கொண்டே இருப்பார்.எனினும் அணியின் கேப்டன் அவரை மூன்றாவதாகவோ, நான்காவதாகவோதான் பேட்டிங் செய்ய அனுப்புவார்.
ஒருமுறை ஒரிஸ்ஸா அணியுடன் ஒரு போட்டி.அது 40 ஓவர் மேட்ச்.

முதலில் ஆடிய ஒரிஸ்ஸா, அடித்து நொறுக்கி விட்டது.தென்கிழக்கு ரயில்வே தட்டுத் தடுமாறித்தான் இலக்கை துரத்தியது.
பத்தாவது ஓவரில் முதல் விக்கெட் விழுந்தது. தோனி களத்துக்கு வந்தார். அப்போது ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது.

கிட்டத்தட்ட தோல்விதான் என்கிற நிலையில் பகாடா, “தோனி, உன்னாலே செஞ்சுரி அடிக்க முடியுமா?” என்று உசுப்பேத்தினார்.
“அடிச்சுட்டாப் போச்சு சார்!” என்று பேட்டை சுழற்றிக் கொண்டே மைதானத்துக்குள் நுழைந்தார்.ஒருமுனையில் விக்கெட், சரியான இடைவெளிகளில் விழுந்துகொண்டே இருந்தது.மறுமுனையிலோ புயல் கரையைக் கடப்பது மாதிரியான வேகத்தில் ஆக்ரோஷம் காட்டினார் தோனி.
யாருக்கு வெற்றி என்று கணிக்க முடியாத அளவுக்கு கடைசி ஓவர் வரைக்கும் ரிசல்ட் இழுத்துக்கொண்டே போனது.

நங்கூரம் மாதிரி நின்று இரண்டு பந்துகள் மிச்சமிருந்த நிலையில் தோனியின் அணி வென்றது.பகாடாவுக்கு கொடுத்த செஞ்சுரி வாக்குறுதியையும் நிறைவேற்றினார்.டென்ஷனான அந்த மேட்ச்சில் ஒரு கட்டத்தில் கூட பதற்றமே இல்லாமல் ஆடிய தோனி, அத்தனை பேரையும் ஆச்சரியப்படுத்தினார்.ரயில்வே பிளேயர் என்கிற பந்தாவெல்லாம் அவருக்கு எப்போதுமே இருந்ததில்லை.

கரக்பூரைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் டென்னிஸ் பால் டோர்னமென்டுகள் நடந்தால் அதிலும் கலந்துகொண்டு ஆட ஆர்வமாக இருந்தார்.
இதுபோல ‘ஸ்பெஷல்’ பிளேயர்களை நியமிக்கும் அணிகள் ஒரு போட்டிக்கு ரூ.100 முதல் ரூ.1000 வரை சன்மானமாகத் தருவதுண்டு.
தோனி, இதிலும் ஸ்பெஷல். அவருக்கு ஸ்பெஷல் ரேட்டு. ஒரு போட்டிக்கு 2,000 ரூபாய் வரை போட்டி போட்டு தர அணிகள் தயாராக இருந்தன.
ரயில்வேயில் வாங்கிய சம்பளத்தைவிட இதுமாதிரி டென்னிஸ் பால் மேட்ச்சுகளில் கணிசமாக சம்பாதித்துக் கொண்டிருந்தார் தோனி.

அவருக்கு அப்போது சொந்தமாக மோட்டார் பைக் கூட இல்லை. ரயில்வே டீம் கேப்டன் ராபினுடைய பைக்கை வாங்கிக் கொண்டுதான்  மேட்ச்சுகளுக்குக் கிளம்புவாராம்.தோனிக்கு இங்கேயும் ரசிகர் மன்றங்கள் உருவாகத் தொடங்கின.தோனி விளையாடுகிறார் என்றால் நிறைய ரசிகர்கள் திரண்டு வந்து மேட்ச் பார்க்கத் தொடங்கினர்.டோர்னமென்ட் அமைப்பாளர்கள், தோனி விளையாடுவதற்கு என்றே டோர்னமென்டுகளை நடத்த ஆரம்பித்தார்கள்.

அங்கு அவர் இருந்தது வெகு சில ஆண்டுகளே என்றாலும், பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும் கரக்பூர், இன்றும் தோனியை தங்கள் மண்ணின் மைந்தனாகவே கொண்டாடுகிறது.2004ம் ஆண்டு இறுதியில் ரயில்வே வேலையை ராஜினாமா செய்தார் தோனி. கரக்பூரிலிருந்து கிளம்பிவிட்டார். கரக்பூரில் இருக்கும் தென்கிழக்கு ரயில்வே மைதானத்தில் இப்போது தோனி மியூசியம் அமைக்கப்பட்டிருக்கிறது. கரக்பூரில் இருந்தபோது தோனி விளையாட பயன்படுத்திய பேட், கிளவுஸ் உள்ளிட்ட உபகரணங்களோடு ரயில்வே அவருக்கு கொடுத்த அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் காப்பி போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

2005ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.முன்னதாக 2004ம் ஆண்டு ‘இந்தியா ஏ’ அணிக்காக விளையாடத் தொடங்கினார். விக்கெட் கீப்பிங் தெரிந்த அதிரடி பேட்ஸ்மேனாக பிரபலமானார்.அந்த காலக்கட்டத்தில் (2000 முதல் 2005 ஆண்டுக்குள்) இந்திய அணி, தனக்கு சரியான விக்கெட் கீப்பர் அமையாமல் திணறிக் கொண்டிருந்தது.

பதினோரு விக்கெட் கீப்பர்களை அறிமுகப்படுத்தி, யாரும் சரியாக சோபிக்க முடியவில்லை. ராகுல் டிராவிட்டும் கூட அப்போது பகுதிநேர விக்கெட் கீப்பராகப் பணியாற்றியதுண்டு.இந்த காலக்கட்டத்தில்தான் இந்தியா ஏ அணிக்காக தோனி பிரகாசிக்கத் தொடங்கியிருந்தார்.

தோனி பங்கேற்ற முதல் டூர் கென்யாவில் நடந்தது. கென்யா ஏ, பாகிஸ்தான் ஏ மற்றும் இந்தியா ஏ அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் அது.முதல் போட்டியில் தோனியால் 8 ரன்கள்தான் அடிக்க முடிந்தது. கென்யா ஏ, இந்தியா ஏ-வை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

எனினும் அடுத்த போட்டியில் சுதாரித்துக்கொண்டு பாகிஸ்தான் ஏ-வை வீழ்த்தியது. அப்போட்டியில் தோனியின் பங்களிப்பு 70 ரன்கள். தொடர்ந்து ஒரு போட்டியில் செஞ்சுரி, மற்றொரு போட்டியில் 5 ஸ்டம்பிங் என்று அத்தொடர் முழுக்கவே தோனி சாம்ராஜ்யம்தான்.

இச்சமயத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், பேட்டிங்கில் சற்றே சொதப்பிக் கொண்டிருக்க, ‘ஏ’ அணி வீரரான தோனிக்கு அடித்தது அதிர்ஷ்டம்.

வித்தியாசமான ஹேர்ஸ்டைலோடு சர்வதேசப் போட்டியில் விளையாட வங்கதேசத்தின் சிட்டகாங் நகர் மைதானத்தில் களமிறங்கினார்.
ஏழாவது வீரராக களமிறங்கிய தோனி முதல் பந்திலேயே ரன் அவுட்.ஆக -சிக்சர் மன்னனின் சர்வதேசத் தொடக்கம் முட்டையிலிருந்து ஆரம்பித்தது!
 
(அடித்து ஆடுவோம்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்